மனம் போன போக்கில்

சின்னக் கடை, பெரிய கடை

Posted by: என். சொக்கன் on: ஜனவரி 5, 2009

நம் ஊரில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம்தான். ஆனால் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இல்லாதவர்கள் ரொம்பக் குறைவு.

இப்போதெல்லாம், எதற்கெடுத்தாலும் புகைப்படம் கேட்கிறார்கள். வங்கிக் கணக்கு, வீட்டுக் கடன், தொலைபேசி, செல்ஃபோன், தண்ணீர், மின்சார, இணைய இணைப்புகள், சமையல் எரிவாயு, சம்பள வரி, ஆயுள், மருத்துவக் காப்பீடு, சந்தை முதலீடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் என எல்லாவற்றிற்க்கும் புறநானூற்றுத் தமிழன்போல் நெஞ்சு நிமிர்த்திய மார்பளவு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்து தாவு தீர்கிறது.

தாவுமட்டும் தீர்ந்தால் பரவாயில்லை, புகைப்படமும் தீர்ந்து போகிறது. அதுதான் பெரிய பிரச்னை.

எங்கள் அலுவலகத்தில் பிரபாகர் என்று ஒரு கணக்காளர் இருக்கிறார். அவருக்கு இருபது நாளைக்கு ஒருமுறை போரடித்தால் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘சார், ரெண்டு ஃபோட்டோ வேணுமே’ என்பார்.

‘எதுக்கு ஃபோட்டோ?’ என்று காரணம் கேட்டால், நீளமாக ஏதாவது விளக்கம் சொல்வார். அதற்குப் பயந்து அவர் கேட்கும்போதெல்லாம் ஒரு ஃபோட்டோவை எடுத்து நீட்டிவிடுவேன்.

ஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கும்போதும், அதன் நெகடிவ் பிரதியை ஞாபகமாகக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற புண்ணியவான்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தனை சமர்த்துப் போதாது.

அப்போதைக்கு, எத்தனை ஃபோட்டோ வேண்டும்? இரண்டா? சரி, இரண்டுக்கு நான்காக எடுத்துக் கொடுத்துவிடுவேன், அதோடு கணக்குத் தீர்ந்தது. அடுத்தமுறை ஃபோட்டோ தேவையென்றால், புதிதாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

இப்படி ஒவ்வொருமுறையும் புதுப்புது புகைப்படங்கள் எடுப்பதில் ஒரு பெரிய பி்ரச்னை, நான் கண்டிப்பாக ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு நேரில் சென்றாகவேண்டும். ஆஃபீஸ் பையனை அனுப்பிச் சமாளிக்கமுடியாது.

தவிர, ஃபோட்டோ எடுக்கும் தினத்தன்று கண்டிப்பாக ஷேவ் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.

இப்படிப் பல காரணங்களால், நான் நினைத்த மாத்திரத்தில் புதிய புகைப்படங்கள் எடுக்கமுடியாமல் போகும், அப்போதெல்லாம் வேறு வழியில்லாமல் என் மனைவியின் உதவியை நாடுவேன். அவர் வீட்டையே புரட்டிப்பார்த்து எப்படியாவது ஒன்றிரண்டு புகைப்படங்களைத் தேடி எடுத்துவிடுவார்.

ஆனால், அந்தப் படங்களில் ஒன்று, 2003ல் எடுத்ததாக இருக்கும், இன்னொன்று, 1998 அல்லது 1995ம் ஆண்டுச் சரக்காகத் தோன்றும். இரண்டிலும் இருப்பது ஒரே நபர்தான் என்று நான் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.

அந்த இரண்டு புகைப்படங்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தபிறகு நான் பரிதாபமாகக் கேட்பேன்,  ‘ஒரேமாதிரி ரெண்டு ஃபோட்டோ இல்லையா?’

’இது கிடைச்சதே பெரிய விஷயம்’ என்பதுபோல் ஒரு பார்வை பதிலாகக் கிடைக்கும், அதன்பிறகு, ‘வேணும்ன்னா ஒரே ஃபோட்டோவை ரெண்டு ஜெராக்ஸ் எடுத்துக்கோ’

கிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்!

இந்தக் கேலி ஒருபக்கமிருக்க, இப்படி ஒவ்வொருமுறையும் வீட்டைப் புரட்டிப் போட்டுத் தேடினால் புகைப்படங்கள் கிடைத்துக்கொண்டே இருப்பதற்கு, அது என்ன அமுதசுரபியா? போன வாரத்தில் ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டன. 1994ம் வருடம் நான் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்திற்காக எடுத்த புகைப்படம்வரை சகலத்தையும் பயன்படுத்தியாகிவிட்டது.

‘இன்னொருவாட்டி ஃபோட்டோ கீட்டோன்னு இந்தப் பக்கம் வரவேண்டாம்’ என்று அன்பாக எச்சரித்தார் மனைவி, ‘இனிமேல் நானே உட்கார்ந்து வரைஞ்சாதான் உண்டு.’

அந்த அவஸ்தைக்கு ஆளாகவேண்டாமே என்று ஒரு முடிவெடுத்தேன். இந்தமுறை இரண்டு, நான்கு புகைப்படங்களெல்லாம் போதாது, மொத்தமாக இருபதோ, முப்பதோ பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏழெட்டு மாதங்களுக்குத் தாங்கும்.

இன்று காலை ஷேவ் செய்ததும், ஸ்டூடியோவைத் தேடிப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து பன்னிரண்டு நிமிட நடை தூரம்.

அது ஒரு சின்னக் கடைதான். ஆனால் பெயர்ப் பலகையிலேயே ஒரு புதுமை செய்திருந்தார்கள்.

அந்த பெயர்ப் பலகையில் ஒரு கேமெராவின் ஓவியம் (அல்லது, உருவம்) சுமாராக வரையப்பட்டிருந்தது, அதன் ஃப்ளாஷ் பகுதியில் ஒரு சிறிய அலங்கார விளக்கு.

இந்த விளக்கு தொடர்ந்து எரிவதில்லை. மின்னி மின்னி அணையும் வகையைச் சேர்ந்தது. ஆகவே, தூரத்திலிருந்து அந்த பெயர்ப் பலகையைப் பார்க்கும்போது, சாலையில் நடந்து போகிற நம்மீது யாரோ ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிப்பதுபோல் தோன்றும்.

புதுமையான இந்தச் சமாசாரத்தை, நான் எப்போதோ கவனித்தது. இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொண்டு அதே ஸ்டூடியோவைத் தேடிச் சென்றேன்.

பெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது. அதன் அருகே இருந்த குறுகலான வழியில் புகுந்து, அதைவிடக் குறுகலான படிகளில் ஏறித் திரும்பினால், ஸ்டூடியோ.

உண்மையில், அது ஒரு சிறிய அறைமட்டுமே. அதை முக்கால் – கால் என்று தடுத்து, ஒரு பெரிய மேஜையை அலுவலகமாகவும், மிச்சத்தை ஸ்டூடியோவாகவும் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

’ஸ்டூடியோ’வில் மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றின் அம்மாவாகத் தோன்றியவர், ‘சும்மா இருங்கடா’ என்று பிள்ளைகளை அதட்டிவிட்டு என்னிடம் வந்தார், ‘என்ன வேணும் சார்?’

‘பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ’

‘எந்த பேக்கேஜ்ன்னு பாருங்க சார்’ என்று என்னிடம் சில அட்டைகளை நீட்டிவிட்டு அவர் மீண்டும் உள்ளே ஓடினார், குழந்தைகளை ஒழுங்குபடுத்தி ஓரமாக உட்காரவைத்துவிட்டு, சுவரோரத் திரைகளை இழுத்துக் காண்பித்து, ‘உங்களுக்கு என்ன பேக்ரவுண்ட் வேணும் சார்? மஞ்சள்? நீலம்? பச்சை? கறுப்பு? வெள்ளை?’ என்றார்.

அந்தக் கேள்வி என்னை வெகுவாகக் கலங்கடித்துவிட்டது, புகைப்படம் என்றால் புகைப்படம்தானே, அதன் பின்னணி நிறம்கூடவா முக்கியம்?

அப்போதைக்கு என் கண்ணில் தோன்றியது பச்சை நிறம், அதையே பின்னணியாக அமைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அவர் பச்சை நிறத் திரையை நன்றாக இழுத்துவிட்டார், மற்றவற்றை ஓரமாக விலக்கினார். பெரிய குடை பொருத்திய மஞ்சள் விளக்குகளை மூலைக்கு ஒன்றாக நிறுத்தி ஒழுங்குபடுத்தினார்.

இதற்குள் நான் அவர் கொடுத்த அட்டைகளைப் புரட்டிப் பார்த்து இன்னும் குழம்பியிருந்தேன், 24 பாஸ்போர்ட் சைஸ், 8 ஸ்டாம்ப் சைஸ், 1 போஸ்ட்கார்ட் சைஸ், 16 பாஸ் போர்ட் சைஸ், 20 ஸ்டாம்ப் சைஸ் என்று விதவிதமான கூட்டணிகளில் எது சிறந்தது என்று புரியவில்லை.

நிஜ வாழ்க்கையில் ஸ்டாம்ப், போஸ்ட்கார்ட் சைஸ் ஃபோட்டோக்களெல்லாம் எதற்கேனும் பயன்படுமா? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இவற்றுக்கு என்ன எண்ணிக்கையில் முக்கியத்துவம் தரலாம்? யோசித்தபோது என்னுடைய குழப்பம் மேலும் அதிகரித்தது.

இந்த வம்பே வேண்டாம், எனக்குச் சகலமும் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோக்கள் போதும்.

‘32 ஃபோட்டோ 60 ரூபாய் சார்’ என்றார் அந்தப் பெண்மணி.

பரவாயில்லையே, ரொம்ப மலிவாக இருக்கிறதே என்று யோசித்தபடி சம்மதமாகத் தலையாட்டினேன்.

அவர் அந்தச் சிறிய அறையின் மூலையைக் கை காட்டினார். அங்கே ஓர் ’அரை ஆள் உயரக் கண்ணாடி’, அதன்முன்னால் சீப்பு, பவுடர், மை டப்பா, இன்னபிற மேக்-அப் வஸ்துக்கள்.

என் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்முன்னால் அதைக் காட்டிக்கொள்ளவேண்டாமே என்று லேசாகத் தலை வாருவதுபோல் பாவ்லா செய்தேன், புகைப்படத்துக்குத் தயாராகிவிட்டேன்.

அவர் என்னை மையமாக நிறுத்திவைத்து மேலே, கீழே, வலது, இடது என எல்லாத் திசைகளிலும் தலையைச் சுழற்றவைத்தார். குடை வெளிச்சம் என்மீது படுகிறதா என்று பரிசோதித்தார்.

அதேசமயம் எனக்குக் கைகளை எப்படி வைத்துக்கொள்வது என்று குழப்பம்,  என்னதான் மார்பளவு புகைப்படத்தில் கைகள் தெரியாது என்றாலும், படம் எடுத்து முடிக்கும்வரை அவற்றைப் பிடுங்கி ஓரமாக வீசிவிடவா முடியும்? கைகளைக் கட்டிக்கொள்வதா, பின்னால் வைத்துக்கொள்வதா, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதா?

நான் யோசித்து முடிப்பதற்குள், அவர் தனது சிறிய கேமெராவை முடுக்கிவிட்டார். ’க்ளிக்’கிற்குபதில், ‘டொய்ங்’ என்று ஒரு சிறு சப்தம் கேட்டது.

’மன்னிக்கணும் சார், பேட்டரி தீர்ந்துடுச்சு’ என்றவர், நிலைக் கண்ணாடிக்குக் கீழே தாவினார், அங்கே மின்சாரம் ஏறிக்கொண்டிருந்த இரண்டு சிறு ‘செல்’களை எடுத்து கேமெராவுக்குள் போட்டார்.

மறுபடி நான் தலையை மேலே, கீழே, இடம், வலம் சுற்றித் தயாரானேன், அவரும் கேமெராவை இயக்கினார், மீண்டும் அதே ‘டொய்ங்’ சப்தம், கேமெரா அணைந்துவிட்டது.

‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’

‘இப்ப என்ன பண்றது?’

‘ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார், அதுக்குள்ள பேட்டரி சார்ஜ் ஆயிடும்’ என்றார் அவர்.

எனக்கு எரிச்சல், காலை நேரத்தில் நான் அலுவலகம் போகவேண்டாமா? இங்கே உட்கார்ந்து தேவுடு காக்கதான் எனக்கு சம்பளம் தருகிறார்களா?

கடும் உழைப்பாளியாகத் தோன்றிய அந்தப் பெண்மணியுடைய அப்பாவி முகத்தின்முன், என்னால் எரிச்சலை வெளிக்காட்டமுடியவில்லை, ‘பக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு, பத்து நிமிஷத்தில வந்துடறேன்’ என்று கிளம்பிவிட்டேன்.

குறுகல் படிகளில் இறங்கும்போது என்னுடைய கோபம் அதிகமாகியிருந்தது, இந்தமாதிரி சின்னக் கடையைத் தேடி வந்தது என்னுடைய தப்பு, கேமெராவை நம்பிப் பிழைக்கிறவர்கள், அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காகச் சேமித்துவைக்கவேண்டாமா? இவர்களெல்லாம் கடை நடத்திவில்லை என்று யார் அழுதார்கள்?

சாலையின் அடுத்த பக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்டூடியோ இருந்தது, கண்ணாடிக் கதவுகள், ஜிகினாக் கத்தரிப்புகளெல்லாம் போட்டு படுஜோராகப் பளபளத்த அந்தக் கடையில், இதுபோல ’பேட்டரி சார்ஜ் ஆகலை சார்’ பிரச்னையெல்லாம் நிச்சயமாக இருக்காது.

இனிமேல் இதுபோன்ற கடைகளுக்குதான் வரவேண்டும், அநாவசியமாகக் கண்ட கடைகளில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன், முன்னே உட்கார்ந்திருந்தவர் ‘வாங்க சார்’ என்று புன்னகையோடு வரவேற்றார், ‘என்ன ஃபோட்டோ எடுக்கணும்ங்க?’

‘பாஸ்போர்ட் சைஸ்’

அவர் வண்ண வண்ண அட்டைகளை எடுத்துக் காண்பிக்குமுன் அவசரமாக ‘32 பாஸ்போர்ட்’ என்றேன், ‘எவ்ளோ?’

’ஜஸ்ட் செவன்டி ருபீஸ்’

அந்தக் கடையைவிட பத்து ரூபாய் அதிகம். அதனால் என்ன, நல்ல தரமான சேவைக்கு நூறு ரூபாய்கூடக் கூடுதலாகத் தரலாம்.

இந்தப் புன்னகைக்காரர் உடனடியாகக் கேமெராவைக் கையில் எடுக்கவில்லை, கம்ப்யூட்டரில் பில் அச்சடித்து நீட்டிவிட்டுக் காசு கேட்டார்.

நான் நூறு ரூபாய் கட்டி மீதிச் சில்லறையைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து என்ன, ஃபோட்டோ எடுக்கவேண்டியதுதானே?

‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், உள்ளே கஸ்டமர் இருக்காங்க’ என்று கண்ணாடிக் கதவைக் காட்டினார் அவர்.

நான் நம்பிக்கையில்லாமல் எட்டிப் பார்த்தபோது, இந்த ஸ்டூடியோவினுள் பல வசதியான சோஃபாக்கள் இருப்பது தெரிந்தது. ராஜா காலக் கேடயங்கள், ஈட்டிகள், பூ ஜாடி, இன்னும் என்னென்னவோ வைத்திருந்தார்கள். அவர் சொன்ன ‘கஸ்டம’ரைதான் காணோம்.

ஆனால், ஸ்டூடியோ வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு கிளம்பும்வரை, வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.

நான் அங்கே மாட்டியிருந்த பல்விதமான புகைப்படங்களை நோட்டமிடத் தொடங்கினேன். கன்னத்தில் கை வைத்த ஒரு வளையல் பெண், போஸ்ட் கார்ட், 4X6, 6X8, 8X10 என்று பல அளவுகளில் ஒரேமாதிரி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார், அவருக்குக் கீழே நைந்துபோன ஒரு பாட்டி தாத்தா, புதுமைப்படுத்தப்பட்டுப் புன்னகைத்தார்கள். இன்னொரு சுட்டிப் பையன் பூங்கா, கடற்கரை, பாலைவனம், நிலா ஆகிய நான்கு இடங்களில் ஒரேமாதிரி போஸில் நின்றான்.

நான் அங்கே மாட்டியிருந்த விலைப் பட்டியலைத் தலைகீழ்ப் பாடம் செய்து முடித்தபோது, ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது, ‘நீங்க போலாம் சார்’

சந்தோஷமாக உள்ளே நுழைந்தேன், கண்ணியமாக உடுத்திய புகைப்படக்காரர் என்னைப் புன்னகைத்து வரவேற்றார்.

அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து தலையை இடம், வலம், மேலே, கீழே நகர்த்தியபோது நினைத்துக்கொண்டேன், ’இந்நேரம் எதிர்க் கடையில் பேட்டரி சார்ஜ் ஆகியிருக்கும், எனக்கும் பத்து ரூபாய் மிச்சமாகியிருக்கும்’

***

என். சொக்கன் …

05 01 2009

17 பதில்கள் -க்கு "சின்னக் கடை, பெரிய கடை"

இப்போ எல்லாம் கொஞ்சம் பணம் குடுத்தா இமேஜை சிடியில் தருகிறார்கள். அதை வாங்கி வந்தா ஆபீஸ் பையனிடம் குடுத்து அனுப்பினா ப்ரிண்ட் ரெடி. அதை அப்படியே தங்கமணி மெயில் ஐடிக்கு பார்வேர்ட் பண்ணி வெச்சா தொலைத்த சிடியைத் தேடாமல் அவங்களைத் திரும்ப மெயில் பண்ணி ஒரு ஜம்ப் ட்ரைவில் போட்டுக்கலாம். :)

//பெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது.//

எங்கேயோ இடிக்குது தல

:) :) :)

//‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’//

???

Unmaiya sonna, antha 10 mins idle timethaan prechanaiye. Wait panna manasukku pudikkathu. so adutha kadai eri irangalam, illati Tea Sappittu irukalam

இலவசக் கொத்தனார், புரூனோ, ILA,

நன்றி!

//எங்கேயோ இடிக்குது தல//

ஸ்டூடியோ குடை விளக்குகளும் நன்கு எரிந்துகொண்டிருந்தன, அப்போதுதான் மின்சாரம் வந்ததோ, என்னவோ :)

அல்லது, கடைக்காரர் பொய் சொல்கிறார், கஸ்டமரிடம் கெட்ட பெயர் வாங்காமல் இருப்பதற்காக!

//இப்போ எல்லாம் கொஞ்சம் பணம் குடுத்தா இமேஜை சிடியில் தருகிறார்கள். அதை வாங்கி வந்தா ஆபீஸ் பையனிடம் குடுத்து அனுப்பினா ப்ரிண்ட் ரெடி.//

இது நல்ல ஐடியாவா இருக்கே, இப்போ கைவசம் இருக்கும் பிரதிகளில் ஒன்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்கிறேன், வருங்காலத்தில் பயன்படும் ;)

//Wait panna manasukku pudikkathu. so adutha kadai eri irangalam, illati Tea Sappittu irukalam//

உண்மை, நான் சொல்ல வந்தது, மனத்துக்குள் நாம் சின்னக் கடைகள்மீது ஒருவித விருப்பமின்மையுடன் இருக்கிறோம் என்பதை!

//
உண்மை, நான் சொல்ல வந்தது, மனத்துக்குள் நாம் சின்னக் கடைகள்மீது ஒருவித விருப்பமின்மையுடன் இருக்கிறோம் என்பதை!
//
இந்த கருத்தை ரொம்ப நல்லாவே சொல்லியிருக்கீங்க.. :)

//ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது//

ஹா ஹா ஹா

என்ன ஒரு கற்பனை!!!

Bee’morgan, ஆதித்தன்,

நன்றி!

Nice post Chokkan.
We consider ourselves one level above when we enter into a large shop; that gives us a sense of pride and we pay extra for that :)

Vaandu,

நன்றி, நீங்கள் சொல்லும் ‘கூடுதல் கட்டண’த்தை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்!

ஹலோ உடான்ஸ் விடுவதற்கு அளவே இல்லையா அல்லது நகைச்சுவைக்காக கற்பனையா?

இப்பல்லாம் போட்டோ பிடித்து குறுந்தகட்டில் அல்லவா கொடுக்கிறார்கள்? ஒரு கிளிக், பிறகு் அது உங்கள் கடும் தகட்டில் (ஹி ஹி – hard diskஐ தமிழ் ”படுத்தி”னேன்) வந்துவிடும், பின் உலவி வழி அளவளாவி உலாவவிடலாமே! ப்ரிண்ட்டடித்தால் மாளாது என USB கட்டி போட்டோ அடிக்கும் காலமையா இது.

Sathyamurthy,

நான் பார்த்தவரை எந்தக் கடையிலும் தானாக குறுந்தகடு தருவதில்லை, கேட்டால் தருவார்களோ என்னவோ …

என்னிடம் ஸ்கான் செய்த (வருடிய :) புகைப்படங்கள் உண்டு, ஆனால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் அப்படி வருடி வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் அச்சிடலாம் என்பது தெரியாது :)

இந்தப் பதிவு கற்பனையே இல்லை, 100% உண்மை, சாட்சிக்குக் கைவசம் 31 ‘ஒரேமாதிரி முறைக்கும்’ புகைப்படங்கள் வைத்திருக்கிறேன் ;)

//சாட்சிக்குக் கைவசம் 31 ‘ஒரேமாதிரி முறைக்கும்’ புகைப்படங்கள் வைத்திருக்கிறேன் // எப்படியும் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ந்துவிடும். அப்புறம் ஏது சாட்சி?

போட்டோ பேப்பர் a4 சைஸில் கிடைக்கும் அதை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டால், ஒரு பேப்பரில் 24 போட்டோ போடலாம். (என் பிரச்சினை அது தீருவதே இல்லை – புது போட்டோ எடுக்க வாய்ப்பே கிடைப்பதில்லை!)

நண்பர் ஒருவர் செல்போன் வாங்கினார் – நோக்கியா ஷோரூமில் – 1018 திர்ஹம் – சைனா தயாரிப்பு. இன்னொரு நண்பர் பின்லாந்து தயாரிப்பை 885க்கு வாங்கினார். அதே மாடல், அதே வாரண்டி எல்லாம்.. சிறிய கடையில், பேரம் பேசி :-) பெரும் கடையில் பேரம் பேச முடியாதது இன்னொரு அசௌகரியம்!

பினாத்தல் சுரேஷ்,

நன்றி!

//எப்படியும் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ந்துவிடும். அப்புறம் ஏது சாட்சி?//

வேண்டுமென்றால் இந்த 31 ஃபோட்டோக்களையும் செல்ஃபோனில் ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துவிடட்டுமா? ;)

//போட்டோ பேப்பர் a4 சைஸில் கிடைக்கும் அதை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டால், ஒரு பேப்பரில் 24 போட்டோ போடலாம்//

இது எல்லா ப்ரின்டரிலும் செல்லுமா? ஏன் கேட்கிறேன் என்றால், முன்பு எங்கள் ஆஃபீஸ் பிரின்டரில் ஒரு தடிமன் தாள் நுழைத்து அச்சிட முயன்று சிக்கிக்கொண்டு ஏக அவஸ்தையாகிவிட்டது :(

//பெரும் கடையில் பேரம் பேச முடியாதது//

ரொம்ப ரொம்ப உண்மை, இது தெரிந்தும் ‘மால்’களினுள் இருக்கும் மளிகைப் பிரிவில் இல்லத்தரசிகள் கூட்டம் ஏனோ தெரியவில்லை!

பெரிய கடைகளுக்குக் கூட்டம் வரவழைப்பதற்காகவே செய்யப்படும் இன்னொரு மோசடி, இந்த Food Coupons, இதைப்பற்றித் தனியே எழுதவேண்டும்!

கிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்!
****
என் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும்
****
இல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.
****
romba over

முகில்,

அப்ப நான் அழகா இருக்கேன்னா சொல்றீங்க, how sweet ;)

மறுமொழி இடுக

ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்


  • kggouthaman: Hi friends - google calendar is not working in my google chrome. All my efforts to bring it to life are gone futile. Welcome any help from anyone.
  • kggouthaman: அந்தக் காலத்துல நான் படிச்ச பாலிடெக்னிக் - கரும்பலகையி
  • Balaji Viswanathan: U hv got pretty good writing skills. A successful writer needs a sharp sense of observation and a deep sense of reflection. The best of the writers in

இதுவரை

  • 68,998 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

ஜனவரி 2009
தி செ பு வி வெ ஞா
« டிச   பெப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031