மனம் போன போக்கில்

ஏதாச்சும் ரெண்டு மிருகம்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 3, 2009

வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை.

‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’

‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’

‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’

’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள்.

எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் நானோ என் மனைவியோ ஒரு கதை சொல்லவேண்டும், அதுவும் நங்கை தேர்ந்தெடுக்கிற இரண்டு மிருகங்கள் கதையின் முக்கியப் பாத்திரங்களாக வரவேண்டும்.

சாதாரணமாக ஆடு, மாடு என்றால் பரவாயில்லை, வேறு பிரபலக் கதைகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களைமட்டும் வேறுவிதமாக மாற்றிச் சமாளித்துவிடலாம். கதை முடிவதற்குள் தட்டு காலியாகிவிடும்.

ஆனால், வெகு சீக்கிரத்தில் நங்கைக்கு இந்தத் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஒட்டகமும் முதலையும்’ என்பதுமாதிரி கேனத்தனமான கூட்டணிகளையெல்லாம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.

அப்போதும் நான் சளைக்கவில்லை, ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துகிட்டிருந்தாளாம், அப்போ அந்த வடையை ஒரு ஒட்டகம் திருடிகிட்டுப் போச்சாம், அங்கே ஒரு முதலை வந்து, ‘ஒட்டகம், ஒட்டகம், ஒரு பாட்டுப் பாடேன்’னு கெஞ்சிக் கேட்டதாம்’ என்று சமாளிக்கத் தொடங்குவேன்.

’ஏய் அப்பா, நீ என்ன லூஸா?’

‘அதெப்படி உனக்குத் தெரியும்?’

‘முதலைக்குதான் பெரிய வால் இருக்கில்ல? அத்தனை ஷார்ப்பா பல்லெல்லாம் இருக்கில்ல? அப்புறம் எதுக்கு அநாவசியமாக் கெஞ்சிகிட்டிருக்கணும்? ஒட்டகத்துக் காலை அடிச்சு உடைச்சுக் கடிச்சுட்டா வடை தானாக் கீழ விழுந்திடுமில்ல?’

குழந்தைகளுக்கு வன்முறை எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக, நாங்கள் இன்றுவரை நங்கைக்கு ஒரு துப்பாக்கி பொம்மை, கத்தி, கபடா, வில், அம்பு எதுவும் வாங்கித்தந்தது கிடையாது. ஆயுத வாசனையே இல்லாத சமர்த்து பொம்மைகளாகதான் தேடித் தேடி வாங்குகிறோம், தொலைக்காட்சியிலும் அடிதடி, வெட்டு, குத்து சமசாரங்கள், மெகாசீரியல்கள் வைப்பது கிடையாது, பிறகு எப்படி அவளால் ஒட்டகத்தின் காலைக் கடித்துத் தின்னும் முதலைகளையெல்லாம் இப்படியொரு கொடூர நுணுக்கத்துடன் கற்பனை செய்யமுடிகிறது?

இன்னொரு பிரச்னை, நங்கை இப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சாப்பாடு உள்ளே இறங்காது. எப்படியாவது அவளை மீண்டும் கதைக்குள் இழுத்தாகவேண்டும். இதனால், நான் ஒவ்வொரு நாளும் (நிஜமாகவே) புதுப்புதுக் கதைகளை  கற்பனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.

உண்மையில், அவை எவையும் புதுக் கதைகளே இல்லை. நங்கை சொல்லும் இரண்டு மிருகங்களை வைத்துக்கொண்டு, நான் எங்கேயோ படித்த, யாரிடமோ கேட்ட சமாசாரங்களையெல்லாம் கலந்துகட்டிச் சமாளிக்கவேண்டியதுதான், வேறு வழி?

உதாரணமாக, காந்தி சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதையைக் கேட்டாரா? இனிமேல் எப்போதும் எதற்காகவும் பொய் சொல்வதில்லை என்று ஒரு சபதம் எடுத்தாரா? இந்தக் கதையில் காந்திக்குப் பதிலாக ஒரு குட்டி எலி அல்லது பெரிய ஆமையை Replace செய்து கடைசி வரியில் ஒரு ‘நீதி’யைச் சேர்த்தால் புதுக்கதை ரெடி.

இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.

இந்தக் கதைகளைச் சொல்வதற்கும் ஒரு டெக்னிக் இருக்கிறது. பரபரவென்று வேகமாகச் சொல்லிவிட்டால், கதை தீர்ந்துவிடும், சாப்பாடு மிச்சமிருக்கும், ரொம்ப நீட்டி முழக்கினால், சாப்பாடு காலியாகிவிடும், கதை முடிந்திருக்காது, இந்தப் பிரச்னைகள் இன்றி இரண்டும் சரிசமமாகக் காலியாகும்படி கதையை நீட்டி, குறுக்கி ஒழுங்குபடுத்திக்கொள்ளவேண்டும்.

கிட்டத்தட்ட, பஜ்ஜி போடுவதுபோல்தான். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டங்கள், இன்னொன்றில் கரைத்துவைத்த கடலை மாவு, ஒவ்வொரு துண்டமாகத் தோய்த்துத் தோய்த்து எண்ணெயில் போட, கடைசி பஜ்ஜி உள்ளே விழும்போது, வாழைக்காயும் காலியாகியிருக்கவேண்டும், மாவும் மீதமிருக்கக்கூடாது. அவ்வளவுதான் விஷயம்.

இப்படி நான் மனத்துக்குத் தோன்றிய சமாசாரங்களையெல்லாம் நங்கைக்குக் கதைகளாக மாற்றிக்கொண்டிருக்க, என் மனைவிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை, ‘குழந்தைக்கு நல்லதா நாலு கருத்துள்ள விஷயம் சொல்றதை விட்டுட்டுக் கண்டபடி கதை சொல்றியே’ என்று கண்டிக்க ஆரம்பித்தார்.

’ப்ச், அவளுக்கு இதெல்லாம் புரியப்போகுதா என்ன?’ நான் அலட்சியமாகச் சொன்னேன், ‘அப்போதைக்குச் சாப்பாடு உள்ளே இறங்கணும், அதுக்குதான் ஏதோ ஒரு கதை, கொஞ்ச நேரம் கழிச்சு அவளே அதை மறந்துடுவா’

ஆனால், நான் நினைத்தது தப்பு என்று பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்தது. இரண்டு நாள் முன்பாக நான் சொன்ன ஒரு கதையை, நங்கை அப்படியே அவளுடைய தங்கைக்குத் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கதையில் எலி சிவப்புச் சட்டை போட்டிருந்தது, போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டபோது, ‘ப்ளீஸ், ப்ளீஸ்’ என்று சரியாக ஏழு முறை கெஞ்சியது, கடைக்குச் சென்று மசால் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கை கழுவத் தண்ணீர் இல்லாமல் தொப்பியில் துடைத்துக்கொண்டது என்று அந்தக் கதையில் நான் அப்போதைக்கு யோசித்துச் சொன்ன விஷயங்களைக்கூட, அவள் மிகத் துல்லியமாக நினைவில் வைத்திருந்தாள். கடைசியாகச் சொன்ன நீதியையும், நான் பயன்படுத்திய அதே வாக்கிய அமைப்பில் சொல்லி முடித்தாள்.

நங்கை சொன்ன கதை, அவளுடைய ஒன்றரை வயதுத் தங்கைக்குச் சுத்தமாகப் புரிந்திருக்காது. ஆனால் தான் அறிந்ததை முழுமையாகச் சொல்லவேண்டும் என்கிற அக்கறையில் அவள் ஒரு குறை வைக்கவில்லை. இதைப் பார்த்த எனக்குதான் ரொம்ப வெட்கமாக இருந்தது.

அது சரி, நேற்றைய கதை என்ன ஆச்சு?

நங்கை ‘பாம்பும் பூனையும்’ என்று சொன்னாளா, இந்த இரண்டு மிருகங்களை வைத்துப் பொருத்தமான ஒரு கதையை நான் யோசித்துக்கொண்டிருந்தேனா, அதற்குள் என் மனைவி உதவிக்கு வந்தார்.

‘நான் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தபோது நடந்த ஒரு கதையைச் சொல்றேன், கேட்கிறியாடீ?’

’அந்தக் கதையில பாம்பு வருமா?’

‘வரும்’

’சரி சொல்லு’

’ஒருத்தன் வயல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தானாம், அவனை ஒரு பாம்பு கொத்திடுச்சாம், சட்டுன்னு வண்டியில போட்டு எங்க ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்தாங்க’

’அங்கே எங்க டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சார். ஆனா, அவனைக் கடிச்சது எந்தப் பாம்புன்னு அவரால கண்டுபிடிக்கமுடியலை’

’அதனால, அவனைத் தூக்கிட்டு வந்தவங்ககிட்டே கேட்டார், ‘ஏம்ப்பா, இவனை எந்த வகைப் பாம்பு கொத்திச்சு? உங்களுக்குத் தெரியுமா?’’

’உடனே அவங்க ’எந்தப் பாம்புன்னு எங்களுக்குச் சரியாத் தெரியலை டாக்டர், எதுக்கும் நீங்களே ஒருவாட்டி பார்த்துச் சொல்லிடுங்க’ன்னு ஒருத்தன் பைக்குள்ள கையை விட்டு வெளிய எடுத்தா, உயிரோட ஒரு பாம்பு நெளியுது’

’அவ்ளோதான், நாங்கல்லாம் அலறிக்கிட்டே ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிட்டோம், டாக்டர்கூட பயந்துபோய் ரூமுக்குள்ளே மறைஞ்சுகிட்டார்’

நங்கை மனத்துக்குள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துச் சிரித்தாள். பிறகு, ‘அப்புறம்? பாம்பு கொத்தின ஆளுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.

’பாம்பை அரெஸ்ட் பண்ணி ஜூவுக்கு அனுப்பினப்புறம்தான் டாக்டர் நடுங்கிக்கிட்டே வெளியே வந்தார், அந்த ஆளுக்கு ட்ரீட்மென்ட் தந்து பிழைக்கவெச்சார்’

’சரி, இந்தக் கதையால நமக்குப் புரியற நீதி என்ன?’

’டாக்டரா இருக்கிறவங்க பாம்பைப் பார்த்துப் பயப்படக்கூடாது’

’ஏதோ ஒண்ணு, தட்டு காலியானா சரி!’

***

என். சொக்கன் …

03 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

17 பதில்கள் to "ஏதாச்சும் ரெண்டு மிருகம்"

சரி பூனை வராம எப்படி கதையை முடிச்சீங்க, தொடரும் போட்டீங்களா?

My son’s story mix

Vijayashankar, சத்யராஜ்குமார்,

நன்றி :)

//சரி பூனை வராம எப்படி கதையை முடிச்சீங்க//

அட, கவனிச்சுட்டீங்களா? ;)

அதுக்கென்ன, அந்த டாக்டர் ஒரு பூனைன்னு சொல்லி முடிச்சுடவேண்டியதுதான் :-P

தல

\\’ஏதோ ஒண்ணு, தட்டு காலியானா சரி!’\\

இதையே தலைப்பாக வச்சுருக்கலாம் ;) )

\\’ஏய் அப்பா, நீ என்ன லூஸா?’

‘அதெப்படி உனக்குத் தெரியும்?’
\\

கதையில் இந்த வசனங்கள் மிகவும் யதார்த்தமாக உள்ளது தல ;) )

//இப்படியே ……. பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.//

வலைல ஏகப்பட்ட கார்டூன் கேரக்டர் சிக்குமே ;)

… கதை சொல்லிய கதை …

Nice one..

சொக்கன், என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? இப்பத்தாங்க சாப்பிட்டுட்டு (இன்னிக்குப் பார்த்து யதேச்சையா ஒரு பிடி கூடுதல்) வந்து உட்கார்ந்து, வலையைத் திறந்து முதல்ல உங்க பதிவைப் படிச்சேன். சிரிச்சுச் சிரிச்சு – உதாரணத்துக்கு இல்லை, நெஜம்மாவே ஙொப்புரான சத்தியமா இப்ப எனக்கு வயித்து வலி! இதுல குறிப்பா சில வரிகளை எடுத்துப் போட்டுப் பாராட்டணும்னு முதல்ல நெனைச்சுப் படிச்சுக்கிட்டே வந்தா, அத்தனை வரிகளையுமே போடணும்னு தோணுச்சு. சூப்பர்… சூப்பர்… பின்னிப் பெடலெடுக்குறதுன்னு வார்த்தையிலே கேள்விப்பட்டிருக்கேன். இன்னிக்கு அப்படீன்னா என்னன்னு எழுதியே காண்பிச்சுட்டீங்க!

கோபிநாத், பீர், Muruganantham Durairaj, ரவிபிரகாஷ்,

நன்றி :)

//கதையில் இந்த வசனங்கள் மிகவும் யதார்த்தமாக உள்ளது//

சட்டியில இருக்கிறதுதானே ஸ்வாமி அகப்பையில வரும்? ;)

//வலைல ஏகப்பட்ட கார்டூன் கேரக்டர் சிக்குமே//

அதுக்குக் குறைச்சலே இல்லை. வம்பு வேணாமேன்னு தவிர்த்திருக்கேன் ;)

//எழுதியே காண்பிச்சுட்டீங்க!//
:) )))

உங்ககிட்ட ஒரு சந்தேகம் – நடுவில நான் எழுதியிருந்த (சத்யராஜ்குமார் குறிப்பிட்டிருக்காரே அந்த) பஜ்ஜி உதாரணம் எங்கயோ படிச்சதுதான், அதைச் சொன்னவர் உங்க குருநாதர் சாவி-தான்னு ஞாபகம், சரியாத் தெரியலை, உங்களுக்கு நினைவிருக்கா?

கலக்கல்!!

/திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின்,/

‘சின்ன’ பட்டியலா இருக்கு! ம்ம்ம்…. என் பொண்ணுகிட்ட இந்த ‘பாட்சா’ பலிக்குதானு பாக்குறேன்…!! ;)

உங்களின் ஹமாஸ் புத்தகம் படித்தேன்
அருமை வாழ்த்துக்கள்

வெயிலான், SnapJudge, தென்றல், prabu, சதீஷ்,

நன்றி :) )

//‘சின்ன’ பட்டியலா இருக்கு!//

இது ஒரு சின்ன சாம்பிள்தான். முழுக்க எழுதினா என் ப்ளாக் தாங்காது, ஜஸ்ட் ஒரு நியூஸ் பேப்பரை எடுங்க, மினிமம் எட்டு கதை மாட்டும் – முந்தாநாள் நான் பார்த்த புதுக்கதை – தன்னுடைய கால்களை ஒரு பில்லியன் டாலருக்கும் இன்ஷூர் செய்துகொண்ட சிறுத்தை ;)

சார், ரெண்டாவது பொண்ணுக்கு நீங்க சொல்ற கதைய அதே லாங்க்வேஜுல எழுதுங்க ப்ளீஸ்!

உங்களுக்குள்ள ஒரு குழந்தை எழுத்தாளர் ஒளிஞ்சிருக்காரு. உங்க குழந்தைக்குள்ள ஒரு வருங்கால எழுத்தாளர் இருக்காரு.

R Sathyamurthy,

நன்றி :)

//ரெண்டாவது பொண்ணுக்கு நீங்க சொல்ற கதைய அதே லாங்க்வேஜுல எழுதுங்க ப்ளீஸ்!//

அந்தப் பொண்ணுக்கு இன்னும் கதை கேட்கிற வயசு இல்லை ;) அப்பால ‘பாட்’க்கலாம் (I mean, Podcast-லாம்)

[...] வந்து இறங்கியது. அவளுக்குக் கதை சொல்லிச் சாப்பிடச் செய்யவேண்டியது என்னுடைய [...]

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 109 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 196,103 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

ஆகஸ்ட் 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 109 other followers