Posted by: என். சொக்கன் on: மார்ச் 21, 2011
நண்பர் கிரி ராமசுப்ரமணியன் எழுதிய ‘கார்(ப்)பரேட் கனவுகள்’ புத்தகம் கடந்த சனிக்கிழமை (19 மார்ச் 2011) சென்னையில் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்துக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கே பதிவு செய்துவைக்கிறேன்.
நான் BPO ஊழியன் அல்லன். அதற்குச் சில படிகள் மேலே இருக்கிறவன்.
என்னடா எடுத்தஎடுப்பில் இப்படி ஓர் அடாவடி ஸ்டேட்மென்ட் விடுகிறானே என்று தப்பாக நினைத்துவிடவேண்டாம். எங்களுடைய அலுவலகம் ஒரு BPO அலுவலகத்தின் மேல்மாடியில் இருக்கிறது. அதைத்தான் அப்படி பந்தாவாகச் சொல்லிப்பார்த்தேன்
.
ஆக, நான் தினந்தோறும் பல BPO ஊழியர்களைப் பார்க்கிறேன். ‘ஹலோ’ சொல்கிறேன். அவர்களோடு மாடிப்படி ஏறுகிறேன். அவர்களோடு டீ குடிக்கிறேன். அவர்களோடு அரட்டை அடிக்கிறேன், அவர்களோடு (அல்லது அவர்களை) சைட் அடிக்கிறேன், ஆனால் இத்தனைக்குப்பிறகும் அவர்கள் அடிப்படையில் என்ன செய்கிறார்கள், மூடியும் மூடாத கண்ணாடிச் சுவர்களுக்குள் அவர்களுடைய வாழ்க்கை எவ்விதமானது என்கிற புரிதல் எனக்கு இல்லை.
அதனால்தான் BPO உலகத்தைப் பற்றிய நண்பர் கிரியின் இந்தப் புத்தகத்தை மிகுந்த ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன். எடுத்த வேகத்தில் படித்துமுடித்துவிடும்படி சுவையான நடையில் எழுதப்பட்டிருந்தாலும் கிரி விஷயகனத்தில் குறை வைக்கவில்லை. இது இவரது முதல் புத்தகம் என்று யாராவது சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு மனிதர் அடித்து ஆடியிருக்கிறார்!
இந்தியாவில் BPO ஊழியர்களைப் பற்றி உருவாகியுள்ள பொதுப்புத்தி பிம்பம் மிகவும் மலினமானது. சுலபமான வேலை, கை நிறைய சம்பளம், ராக்கோழிகளாகக் காரில் சுற்றலாம், நினைத்தால் பார்ட்டி, எந்நேரமும் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் தம், அன்லிமிட்டெட் செக்ஸ், அலட்சிய வாழ்க்கை … இப்படி உலகக் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் BPOவில்தான் மொத்தக் கொள்முதல் செய்யப்படுவதாக மீடியா சொல்கிறது. மக்கள் நம்புகிறார்கள், or vice versa!
ஆனால் இதுபோன்ற கணிப்புகளெல்லாம் ஒருநாள் முடிந்துவிடுகின்றன. BPO நமக்கொரு புனிதத்தலமாகத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அதன் மகிமைகளைப் போற்றிப் பாடவும்கூடத் தயாராகிவிடுகிறோம்.
எப்போது? நம் வீட்டுப் பையன் அல்லது பெண் ஒரு BPOவில் வேலைக்குச் சேர்கிறபோது!
இந்தப் போங்காட்டத்தைதான் கிரி நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டுகிறார். ‘நாங்களும் உங்களைமாதிரி மனுஷங்கதான். நேர்மையா உழைச்சுப் பிழைக்கறவங்கதான்’ என்று அந்தப் புது உலகத்தைக் கலகலப்பாக நமக்கு அறிமுகப்படுத்திவைக்கிறார்.
சமீபகாலத்தில் இப்படி ஒரு நகைச்சுவை பொங்கும் புத்தகத்தை வாசித்த நினைவில்லை. கிச்சுக்கிச்சு மூட்டுவதற்கென்று தனியே மெனக்கெடாமல் எழுத்தின்போக்கில் அவர் மின்னவிடுகிற பல துணுக்குகள் நினைத்து நினைத்துச் சிரிக்கவைக்கின்றன.
அதேசமயம் இந்தப் புத்தகம் வெறும் ஜோக் தோரணமாகவும் நின்றுவிடுவதில்லை. பாடப் புத்தகம்போல் போரடிக்கும் மொழியில் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை வாசகர்களைச் சிரமப்படுத்தாமல் எப்படிச் சொல்வது என்று கிரிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அப்படியும் கனம் கூடிவிடுகிற இடங்களில் ஒரு கதையையோ ஜாலி சம்பவத்தையோ செருகிச் சமாளித்துவிடுகிறார். அந்த வித்தியாச மிக்ஸ் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு.
குறைகள் என்று பார்த்தால், கிரி தனது வலைப்பதிவில் வெளியான கட்டுரைகளைப் புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். அப்போது சில பகுதிகளை ஒழுங்குபடுத்தி, சிலவற்றை மீண்டும் எழுதி நேர் செய்திருக்கலாம். அந்தக் குறை புத்தகம் படிக்கும்போது உறுத்துகிறது.
அதேபோல், உள்ளடக்கம். BPO பற்றிய ஒரு முழுமையான பதிவாக அன்றி ஓர் அனுபவப் பகிர்வாகவே இந்தப் புத்தகம் முடிந்துவிடுகிறது. விறுவிறுவென்று படிக்க முடிந்தாலும், ‘இன்னும் நிறையச் சொல்லியிருக்கலாமே’ என்கிற ஏக்கத்தோடு புத்தகத்தை மூடிவைக்கிறோம்.
கிரிபோல் துறைஞானம் கொண்டவர்கள் நன்கு எழுதத் தெரிந்தவர்களாகவும் அமைவது அபூர்வம். விரைவில் அவர் ஒரு முழுமையான BPO கையேட்டை எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு முடிக்கிறேன்.
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு,
இந்த புக் படித்துள்ளீர்களா? அருமை. சுதிந்திர மொகாஷியின் பி.பி.ஒ சூத்திரா.
http://www.flipkart.com/66-80-79-83-utra-book-8129114356
திரு கிரியின் புத்தகத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
அணிந்துரை என்றால் புகழுரை மட்டும் என்று எண்ணியிருந்தேன். உரையில் நிறையும் குறையும் இரைந்து கிடக்கிறது. ஆனாலும், புத்தகத்தை வாங்கி பட்டிக்க வேண்டும் என்று ஆவல் எழுப்புகிறது.
அணிந்துரைக்கும், அறிமுகத்திற்கும் நன்றி!
எல்லா வேளைகளிலும் பாலியல் உறவுத் தொடர்புகள். ஆனால் மக்கள் BPO வை மட்டும் அப்படி நினைப்பது மடமை எண்ணம். அதை இந்த புத்தகம் உடைத்தால் சரி.
எல்லா வேளைகளிலும் பாலியல் உறவுத் தொடர்புகளுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மக்கள் BPO வை மட்டும் அப்படி நினைப்பது மடமை எண்ணம். அதை இந்த புத்தகம் உடைத்தால் சரி. குறைகளையும் சுட்டியுள்ள அணிந்துரை அருமை.
good one sir
இங்கு கருத்து பதிவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.
@ஆண்டாள்மகன்
தங்கள் கருத்திற்கும் நன்றி!
அணிந்துரையில் அப்படிப்பட்ட பொருள் தொனிக்கவில்லை. பொதுமக்களின் கருத்து அப்படியிருப்பதைக் கூறுகிறது… அப்படியில்லை என புத்தகம் கூறுவதாகவும் அடுத்த பத்தியிலேயே அணிந்துரை தெரிவிக்கிறதே!
@பலே பிரபு
கண்டிப்பாக இந்தப் புத்தகம் உடைத்துள்ளது.
@சத்தியமுர்த்தி
சார்…உங்களுக்காகவும், புத்தகம் வாங்க விரும்பும் மற்றவர்களுக்காகவும் என் அடுத்த பின்னூட்டம்…
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க –
http://bit.ly/corpbuy
புத்தகம் வாங்க இதர முறைகளுக்கு:
http://www.sasariri.com/p/blog-page_21.html
(போஸ்டர் அனுமதித்த சொக்கன் சாருக்கு நன்றி)
Corporate – இது ஏன் அப்படியே தமிழில் எழுதப்படும் போது, கோர்ப்பரேட் என்றில்லாமல், கார்ப்பரேட் என எழுத வேண்டும்..? அண்மையில் புலம் பெயர்ந்த தெற்காசியர்களின் தடிமனான ஆங்கில குழப்ப உச்சரிப்பில் இந்த “கா” – “கோ/கொ” என்றில்லாமல் இருப்பதும், V & W தொடங்கும் சொற்களை ஒரே வகையாக உச்சரிப்பதும் பெரும் பங்கு வகிக்கின்றன.
எ கா : wordpress – இது தமிழில் (உ)வேர்ட்பிரஸ் என உச்சரிக்கப்பட வேண்டும்.
எதோ எழுதத் தோன்றியது, தேவை இல்லை என்றால் தள்ளிவீடு விடுங்கள்.
1 | andalmagan
மார்ச் 21, 2011 இல் 10:04 மு.பகல்
அணிந்துரை பொருத்தமாகத்தான் இருக்கும் போல் தோன்றுகிறது.ஆனால் அன்லிமிடெட் செக்ஸ் என்றவார்த்தை வித்தியாசமாகவும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள துறை BPO மட்டும்தான் என்பதை நீங்களாகவே வலியுறுத்துவதாக உள்ளது.