Posted by: என். சொக்கன் on: April 27, 2011
சில வருடங்களுக்கு முன்னால், கலீல் கிப்ரன் எழுதிய பல குட்டிப் புத்தகளின் தொகுப்பாக ஒரு தலையணைப் புத்தகம் கிடைத்தது. துண்டு துண்டாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிலது புரிந்தது, பலது புரியவில்லை.
முக்கியமாக, அந்தத் தொகுப்பில் ஆங்காங்கே எதிர்ப்பட்ட குட்டிக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன – அரை பக்கம், ஒரு பக்கம், மிஞ்சிப்போனால் ஒன்றரைப் பக்க அளவே கொண்ட தக்கனூண்டு கதைகள் அவை.
உண்மையில், அவற்றைக் கதைகள் (Stories) என்று பொதுவாகச் சொல்வதுகூட சரியாகாது, ஆங்கிலத்தில் ‘Fables’ என்று குறிப்பிடப்படும் வகையிலான சின்னச் சின்ன குறுங்கதைகள். ஒவ்வொன்றையும் அரை அல்லது முக்கால் நிமிடத்தில் படித்துமுடித்துவிடலாம், ஆனால் அத்தனை சுலபத்தில் மனதிலிருந்து இறங்கிவிடாமல் ஒட்டிக்கொள்ளும் கதைகளும், அவை சொல்லும் ஆழமான கருத்துகளும்.
ஒருவிதத்தில் இவற்றை, பெரியவர்களுக்குமான நீதிக் கதைகள் என்று சொல்லலாம். இந்தக் கதைகளில் வெளிப்பட்டிருக்கும் கிப்ரனின் அலாதியான கதை சொல்லும் பாணிக்காகவே, அவருடைய பல நூல்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்து மொழிபெயர்த்தேன். கிழக்கு பதிப்பகம் அந்தக் கதைகளை ‘மிட்டாய்க் கதைகள்’ என்ற அட்டகாசமான தலைப்பில் புத்தகமாக வெளியிட்டது.
ஒரு பதிப்பு விற்றுத் தீர்ந்தபிறகு, அந்தப் புத்தகம் அச்சில் இல்லை. ஆகவே அநேகமாக எல்லோரும் அதைப்பற்றி மறந்துபோய்விட்ட நேரம், நேற்று ட்விட்டரில் நண்பர் மினிமீன்ஸ் (தவறுதலாக ‘மினிமீல்ஸ்’ என்று படித்துவிடவேண்டாம்
) அதனை நினைவுபடுத்தினார். அவருடைய கோரிக்கையின்படி, இப்போது ’மிட்டாய்க் கதைகள்’ புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வெளியிட்டிருக்கிறோம். அதைக் கீழே படிக்கலாம். டவுன்லோட் செய்துகொள்ள / நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்: http://www.scribd.com/doc/54032250/Mittaai-Kathaigal-Khalil-Gibran-Tamil
***
என். சொக்கன் …
27 04 2011
மிகவும் நன்றி.
என்னுடைய இந்த புத்தகத்தினை “நண்பர் ஒருவர்” படிக்க வாங்கி சென்றவர், இன்னமும் திரும்பி தரவில்லை. அட்லீஸ்ட் இப்படியாவது அந்த புத்தகத்தை படிக்க முடிகிறதே? நன்றிகள், நன்றிகள் மற்றும் இன்னும் அதிக நன்றிகள்.
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை – சென்னை சூப்பர் கோமிக்ஸ் – பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்
தமிழ் காமிக்ஸ் உலகம்
[...] கிழக்கு பதிப்பகம் அந்தக் கதைகளை ‘மிட்டாய்க் கதைகள்’ என்ற அட்டகாசமான தலைப்பில் [...]
1 | Jeyakumar
April 27, 2011 இல் 9:43 பிற்பகல்
அன்பு சொக்கன், படித்தேன்.. அருமையாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள். ஒரு மணி நேரத்தில் முழுதும் படிக்க முடிந்தது. கலில் கிஃப்ரானை முதலில் படித்தது தீர்க்கதரிசி யாக. புவியரசு மொழி பெயர்த்தது. அதன் பின்னர் முறிந்த சிறகுகள்.. அடுத்தது உங்களுடைய மொழிபெயர்ப்பில் மிட்டாய் கதைகள்.. அது சரி, ஏன் மிட்டாய் கதைகள் எனப் பெயர்? தக்குனூண்டு இருப்பதாலா?