மனம் போன போக்கில்

படித்துக் களித்தல்

Posted on: June 17, 2013

Originally Published In http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html

விருட்டென்று எழுந்து நின்றேன்.

நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு?’ என்றார் பதற்றமாக.

‘ஒண்ணுமில்லை’ என்றபடி கண்டக்டரை நோக்கி நகர்ந்தேன், ‘நான் இறங்கணும்!’

‘அதெல்லாம் நீங்க நினைச்ச இடத்துல நிறுத்தமுடியாது’ என்றார் அவர், ‘அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோங்க’ என்று சொல்லிவிட்டு டிக்கெட் விசாரிக்கச் சென்றுவிட்டார்.

நான் பொறுமையாகக் காத்திருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். பஸ் வந்த திசையிலேயே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

உண்மையில், நான் இறங்கவேண்டிய இடம் இன்னும் நான்கைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி வந்துகொண்டிருந்தவன், ஒரு போர்டைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி, இங்கேயே இறங்கிவிட்டேன்.

அந்த போர்ட், ‘Book Fair’.

இங்குமட்டுமல்ல, ’Book Fair’, ‘Books Sales’, ‘Book Exhibition’ போன்ற வார்த்தைகளை எங்கே பார்த்தாலும் சரி, எனக்குச் சட்டென்று புத்தி கெட்டுவிடும். உடனடியாக உள்ளே நுழைந்தாகவேண்டும், பழைய வாசனையடிக்கும் புத்தகங்களைப் புரட்டியாகவேண்டும். வாங்குவதுகூட இரண்டாம்பட்சம்தான்.

பெங்களூரில் வருடம்முழுக்க எந்நேரமும் ஏதாவது ஓர் ஏரியாவில் இதுமாதிரி புக்ஃபேர்கள் நடந்துகொண்டிருக்கும். ஒரு பெரிய ஹால், அங்கே ஏழெட்டு நீள மேஜைகளைப் போட்டுப் பழையதும் புதியதுமாகப் புத்தகங்களைக் குவித்துவைத்திருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை க்ரைம் நாவல்கள், மில்ஸ் அண்ட் பூன் ரகப் புத்தகங்கள், பைரேட் செய்யப்பட்ட ‘பெஸ்ட் செல்லர்’கள், சுற்றுலாக் கையேடுகள், சமையல் நூல்கள்தாம். மிக அபூர்வமாக எப்போதாவது சில நல்ல புத்தகங்கள் சகாய விலையில் சிக்கும்.

அந்த ‘அபூர்வ’மான வாய்ப்புக்காக, ஒவ்வொரு புக்ஃபேரினுள்ளும் நுழைந்துவிடுவது. உள்ளே இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ காலாற நடந்து, குறைந்தபட்சம் இருநூறு புத்தகங்களையாவது புரட்டிப் போட்டு ஒன்றோ, இரண்டோ புத்தகங்களை வாங்குவதில் ஓர் அலாதியான சந்தோஷம் இருக்கிறது. அதற்காகதான் இப்படி ஓடும் பஸ்ஸிலிருந்து (கிட்டத்தட்ட) குதிப்பது.

அதென்னவோ, ஏஸி போட்ட வெளிச்சமான புத்தகக் கடைகளைவிட, இந்தக் குடிசைத் தொழில் ரேஞ்ச் கடைகள்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், பெரிய கடைகளில் இதற்கப்புறம் இதுதான் வரும் என்கிற ஓர் ஒழுங்கு இருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் தெரிந்த, மிகப் பிரபலமான சில புத்தகங்கள்தாம் பிரதானமாக அடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இதையெல்லாம் பார்க்கையில், அந்தக் கடைக்காரர்கள் என்னை ‘இதுதான் வாங்கவேண்டும்’ என்று கழுத்தைப் பிடித்து நெரிப்பதாக எனக்குத் தோன்றும்.

மாறாக, இதுபோன்ற பழைய புத்தகக் கடைகளில் இருக்கும் Randomness, வித்தியாசமான சுகம். எங்கே எந்தப் பொக்கிஷம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவற்றைப் புரட்டித் தேடுவதில் ஒரு சந்தோஷம் உண்டு. என்னிடம் இருக்கும் பெரும்பாலான நூல்கள் இப்படி ’எதேச்சையாகக் கண்ணில் பட்டு’ வாங்கியவைதான்.

ஐந்து நிமிட நடையில் அந்த ‘புக் ஃபேர்’ வந்துவிட்டது. கும்பலுக்கு நடுவே சிக்கித் திணறி உள்ளே நுழைந்தேன்.

புத்தகக் கடையில் கும்பலா என்று சந்தேகப்படவேண்டாம். பெங்களூருவில் இதுமாதிரி பழைய புத்தகக் கடைகள் அனைத்துடனும் ஒரு துணிக்கடையை ஒட்டுப்போடுகிற விநோதப் பழக்கம் இருக்கிறது. அங்கே துணி எடுப்பதற்கென்று மக்கள் ஏராளமாகக் குவிவார்கள், பக்கத்திலேயே இருக்கும் புத்தகக் கடையில் என்னைமாதிரி நான்கைந்து ஜந்துக்கள்மட்டும் தென்படுவர்.

இந்த ‘புக் ஃபேர்’ரிலும் அதே கதைதான். கும்பலைத் தாண்டி உள்ளே வந்தால், எண்ணி நாலே பேர். மூலையில் பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தபடி எதிரே மினி டிவியில் சினிமா பார்க்கிற சிப்பந்தி.

அதைப்பற்றி நமக்கென்ன, புத்தகங்களைக் கவனிப்போம். கையைப் பின்னால் கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து எல்லா மேஜைகளையும் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டேன். வழக்கமான குப்பைகள்தாம், இவற்றில் எங்கே கவனத்தைக் குவிக்கலாம் என்று தீர்மானிக்க முயன்றேன்.

ரொம்ப யோசித்தபிறகு, ’எதை எடுத்தாலும் ரூ 30’ என்று எழுதியிருந்த குழந்தைப் புத்தகங்களின் குவியலில்மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் தெரிந்தது. உள்ளே குதித்தேன்.

அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் பன்னிரண்டு உருப்படிகள், அனைத்தும் வண்ணப் புத்தகங்கள், எளிதில் கிடைக்காத நல்ல நல்ல கதைகள், முப்பது ரூபாய் என்பது மிக மலிவு!

மினி டிவியில் பரபரத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியைக் கடைக்காரர் மென்னியைப் பிடித்து நிறுத்திவிட்டு நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பார்வையிட்டார், பொறுமையாக எண்ணிப்பார்த்து, ‘முந்நூத்தறுவது ரூபா’ என்றார். வாங்கிக்கொண்டு வந்த வழியில் நடந்தேன்.

சில மணி நேரம் கழித்து நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ரகசியமாக பையைத் திறந்து, வாங்கிவந்த புத்தகங்களைத் தலா ஆறு விகிதம் இருகூறாகப் பிரித்தேன்.

சாப்பிட்டு முடித்து எழுந்து வந்தவர்கள்முன் அந்தப் புத்தகங்களை நீட்டியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த வியப்புக்கும் உற்சாகத்துக்கும், முந்நூற்றறுபது ரூபாய் என்பது ஒரு சாதாரண விலை.

அதுமட்டுமல்ல, இரு மகள்களும் ஆளுக்கொரு சோஃபாவில் அமர்ந்து அன்று இரவே அந்த ஆறு சிறிய புத்தகங்களையும் படித்துமுடித்துவிட்டுதான் தூங்கினார்கள். மறுநாள் காலை இவளுக்குத் தந்த ஆறை அவளும், அவளுக்குத் தந்த ஆறை இவளும் பகிர்ந்துகொண்டு மொத்தத்தையும் படித்துவிட்டார்கள்.

அந்தச் செய்தியை அவர்கள் என்னிடம் சொன்னபோது, ‘வெரி குட்!’ என்றேன் நிஜமான மகிழ்ச்சியுடன். ‘நாளைக்கு வெளியே போகும்போது வேற புத்தகம் வாங்கி வர்றேன், ஓகேயா?’

’சரிப்பா’ என்று அவர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். கொஞ்ச நேரத்தில், ஷெல்ஃபிலிருந்து வேறு புத்தகங்களை எடுத்துப் படிப்பார்கள், மூன்று வேளைச் சாப்பாட்டுக்கும் துணை புத்தகங்கள்தான், எங்கேயாவது வெளியூர் சென்றாலும் படிப்பதற்குப் புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார்கள்…

இதெல்லாம் நானோ என் மனைவியோ வலுக்கட்டாயமாகத் திணித்த பழக்கங்கள் அல்ல. நான் புத்தகம் படிப்பதைப் பார்த்து அவர்களுக்காக ஆர்வம் வந்தது, பின் அவர்கள் வயதுக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்தேன், சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.

ஆரம்பத்தில் மற்ற எல்லாப் பெற்றோரையும்போல் நாங்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி, நாங்களே அவர்களுக்குப் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்தோம். அது போதாது என்று மகள்களின் ஆசிரியை சொன்னார், ‘அவங்களே படிக்கறமாதிரி சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட புக்ஸ், நிறைய படம் போட்ட புக்ஸ் வாங்கிக் கொடுங்க, வாசிக்கும் வேகமும் ஆர்வமும் பலமடங்கு அதிகரிக்கும்.’

அவர் சொன்னபடி, எளிதில் வாசிக்கக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். ஆரம்பத்தில் ‘நீயே படிச்சுக் கதை சொல்லு’ என்று வற்புறுத்தியவர்கள், அவர்களுக்கே எழுத்துக் கூட்டத் தெரிந்தவுடன் வார்த்தை வார்த்தையாக, வாக்கியம் வாக்கியமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். கதை புரிகிறதோ இல்லையோ, சொந்தமாக ஒவ்வொரு பக்கமும் படித்து முடித்து அவர்கள் அடையும் திருப்தி அலாதியானது!

பின்னர், அவர்களுக்கே கதைகள் புரிய ஆரம்பித்தன. Self Service Modeக்குச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு, புத்தகங்களை வாங்கித்தருவதுமட்டுமே என் வேலை. மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு புத்தகம் என்றால் ஒரு புத்தகத்தையும் நிராகரிப்பதில்லை, எல்லாவற்றையும் படித்துக் களிக்கிறார்கள்.

இன்றைக்கு, என் மகள்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியோ சினிமாவோ மற்ற Passive Entertainmentகளோ அவர்களுக்குத் தேவைப்படுவதே இல்லை. நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை உருவி எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பள்ளி நாள்களில் இருந்து புத்தகப் பிரியனாக வாழ்கிற, அதைமாத்திரமே பிரதான பொழுதுபோக்காகக் கொண்ட எனக்கு, இதில் இருக்கும் சுகம் தெரியும். நான் என் இரு மகள்களுக்கும் தந்திருக்கும் மிகப் பெரிய சொத்தாக, இந்தப் பழக்கத்தைதான் கருதுகிறேன்.

இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களும் ஏதாவது ஒரு புத்தகக் கடைப் பலகையைப் பார்த்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுவர். நான் பெரிதுவப்பேன்!

***

என். சொக்கன் …
25 05 2013

11 Responses to "படித்துக் களித்தல்"

குழந்தைகள் இருவருக்கும் சிறு வயதிலிருந்தே ஏற்படுத்தப்பட்ட பழக்கம் என்பதால் வாழ்நாள் முழுக்க துணையிருக்கும். ஆயிரம் புத்தகங்கள படித்த அபூர்வ சிந்தாமணிகளுக்கு என் வாழ்த்துக்கள். ஆயிரம் பத்தாயிரமாகட்டும். அறிவின் ஊற்று பெருகட்டும்.

Read it more than 3 times 🙂

எங்கள் குடும்பமும் புத்தகப் பைத்தியம்தான். தமிழ். ஆங்கிலம்,சமஸ்கிருதம், ENID BLYTON, AGATHA CHRISTIE. JAMES HERRIOT, ART BUCHWALD, BENNETT CERF, என்று பல ரக புத்தகங்களும் அலமாரிகள் பிதுங்க அடைத்துக் கொண்டிருக்கும்! பாருங்களேன். உங்கள் பெண்கள் எதிர் காலத்தில் எவ்வளவு ஜொலிக்கப் போகிறார்கள் என்று!
பி எஸ் ஆர்

முழுதும் உண்மை உண்மை
கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என
கண்டதைப் படிதத்தால் தான் நான் பண்டிதன் ஆகவில்லை என்றாலும் பண்
பட்டுள்ளேன் என்பதே உண்மை

என் மக்கள் மூவரில் என் ஒரே மகள் மட்டுமே புத்தகப் பிரியர் .அதுபோலே
அவள் மகளும் அப்படியே

சமீபத்தில் திருச்சியில் நடந்த சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒரு
வாரம் என் பேத்தியுடன் டவுன் ஹால் அருகில் அறை எடுத்து தங்கியிருந்தோம்
மாலை நேரம் தினசரி கடை வீதியில் நடந்து செல்லும்
பொழுது அருமையான புத்தகக் கடை அன்பர் அறிமுகமானார் நல்ல
புத்தக ஞானம் . குழந்தைகளுக்கான புத்தகங்களை எடுத்துத் தந்தார்

எங்களுடைய புத்தக ஆர்வத்தைப் பார்த்ததும் அவராகவே
கழிவுகள் கொடுத்து மகிழ்ச்சியையும் கொடுத்தார்

குழந்தைகளுக்கான புத்தகங்களை ஆரம்பகாலத்தில் தொடங்கிவைத்து NCBH தான்

நாங்கள் சிறுவயதில் சென்னை மதுரை செல்லும் பொழுதெல்லாம் அய்யா அவர்கள்
எங்களுக்காகவும்
புத்தகக் கடையில் நேரம் ஒதுக்குவார்கள் அந்தப் பழக்கத்தால் இன்றும்
எங்கு சென்றாலும் புத்தகக் கடையும் ஒரு அங்கமாகிவிட்டது . அய்யா அவர்களின்
வழக்தால் கழிவில்லாமல் வாங்குவதுமில்லை

அன்புடன்
ச கம்பராமன்

புதிய மின் அஞ்சல் :-
kambaramansha@gmail.com

2013/6/17 “மனம் போன போக்கில்”

> **
> என். சொக்கன் posted: “Originally Published In
> http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html விருட்டென்று
> எழுந்து நின்றேன். நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில்
> அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு?’ என்றார்
> பதற்றமாக. ‘ஒண்ணுமில்”

புத்தகப் பிரியரான உங்களுக்கும், சின்ன வயதிலேயே 1,000 புத்தகங்கள் படித்த, இன்னமும் படிக்கும் உங்கள் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.
இதைவிட வேறு என்ன பெரிய சொத்து இந்த குழந்தைகளுக்குக் கொடுக்க முடியும்?
பாராட்டுக்கள் உங்களுக்கே!

புத்தகங்கள் காட்டும் அற்புதமான உலகில் உலாவரும் குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்த்துகள்.

like

Chokkan Sir! I am a regular reader of your blog. Specially your Tamizh & Kids posts, I read & cherish. I am not a voracious reader, but trying to bring my daughter so. I am also a Bangalorean. Can you give the address of the book fair, so that I too can get some kids’ books? Thanks in anticipation.

Emailed 🙂

அருமை !

Nn

Sent from my iPhone

Leave a comment

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,424 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2013
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930