பத்தொன்பது பேர்
Posted November 23, 2008
on:என் முன்னே அமர்ந்திருப்பவர்கள் பத்தொன்பது பேர்.
அனைவரும், மிகச் சமீபத்தில்தான் கல்லூரியிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை, கடந்த நான்கைந்து மாதங்களாகத் தொடர் பயிற்சி.
இவர்களில் யாரும் கல்லூரி மனோபாவத்திலிருந்து வெளியே வந்துவிடவில்லை என்பது அவர்களுடைய உடை அலங்காரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. அதேசமயம், சமீபத்திய மார்க்கெட் சிரமங்களையும் உணர்ந்திருக்கிறார்கள், எதையும் சீக்கிரம் கற்றுக்கொண்டாகவேண்டும் என்கிற துடிப்பு முகத்தில், நடவடிக்கைகளில் சற்று அழுத்தமாகவே தெரிகிறது.
எல்லோரிடமும் தவறாமல் மொபைல் ஃபோன் இருக்கிறது, சிலரிடம் இரண்டு. நவீன மாடலெல்லாம் கிடையாது, ஆனால் முதல் இன்க்ரிமென்ட் வந்ததும் ஃபோன் மாற்றிவிடுவார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. ஏனெனில், இருக்கும் ஃபோனில் உள்ள சகல வசதிகளையும் பிரமாதமாக, முழு நேரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
நான் இவர்களுக்குப் பாடம் நடத்துகிறவன் என்பதால்மட்டும், என்னை ‘சார்’ என்று அழைக்கவேண்டாம் என்கிறேன். ஆனால் அதைப் பின்பற்றத் தயங்குகிறார்கள், சிலர் பயப்படுகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது.
சிலரின் கேள்விகள் மகா அற்பத்தனமாக இருக்கின்றன, இவர்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தார்கள் என்று கோபம் வருகிறது, அதேசமயம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் இதைவிட மோசமாக இருந்தேன் என்பதும் புரிகிறது.
இந்த இளம் ஐடி இளைஞர்களின் மொழி அலாதியானது, அதேசமயம் எல்லோரும் எதற்காகவோ காத்திருக்கிறார்கள் என்பதுபோன்ற ஒரு தவிப்பு.
ஆனால், இந்த விநாடியை முழுமையாக அனுபவிக்கிறார்கள். வகுப்பின் இடையே ப்ரேக் கொடுத்தால், ‘மறுபடி தயவு செய்து உள்ளே வருகிறீர்களா?’ என்று நாமாகச் சென்று கெஞ்சும்வரை திரும்புவதில்லை. எந்நேரமும் கலகலப்பு, உற்சாகம், காற்றில் கலக்கும் ஒலித் துண்டுகளால் ஆன வாழ்க்கை.
இன்றோடு இந்த வகுப்பு முடிகிறது. மறுபடி நான் இவர்களைச் சந்திக்கப்போவதே இல்லை.
ஆனால், நாளை மறுநாள் இன்னொரு வகுப்பு தொடங்குகிறது. அங்கும் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் இருப்பார்கள், அவர்களிடமும் கிட்டத்தட்ட இதேமாதிரியான பண்புகள்தான் தென்படும்.
வாழ்க்கை ‘டெம்ப்ளேட்’ மயமாகிக்கொண்டிருக்கிறது.
***
என். சொக்கன் …
23 11 2008
7 Responses to "பத்தொன்பது பேர்"

Excellent to read


//ஆனால், இந்த விநாடியை முழுமையாக அனுபவிக்கிறார்கள். வகுப்பின் இடையே ப்ரேக் கொடுத்தால், ‘மறுபடி தயவு செய்து உள்ளே வருகிறீர்களா?’ என்று நாமாகச் சென்று கெஞ்சும்வரை திரும்புவதில்லை. எந்நேரமும் கலகலப்பு, உற்சாகம், காற்றில் கலக்கும் ஒலித் துண்டுகளால் ஆன வாழ்க்கை.//
டெள்ம்லேட்களுக்கு நடுவில் இதுவும் தேவை


பாடம் எடுக்கும் பொழுது இந்த மாதிரி நிகழ்வுகள்தானே நம்மை ஒரு ரோபாட்டாக மாற்றாமல் இருக்கிறது. சில எளிய கேள்விகள் வரும் பொழுது வகுப்பில் இருக்கும் மற்றவர்களை பதில் சொல்ல விட்டால் நமக்கு எரிச்சல் குறையும்.


//இதைவிட மோசமான டெம்ப்ளேட் வாழ்க்கைகள் இருக்கின்றன, அதோடு ஒப்பிட்டால் இது எத்தனையோ மேல்!//
கன்னாபின்னாவென, நிபந்தனைகள் ஏதுமின்றி ஒப்புக்கொள்கிறேன் 🙂

1 | பினாத்தல் சுரேஷ்
November 23, 2008 at 8:31 am
மாறிக்கொண்டிருக்கும் மாணவர்கள்தான் ஆசிரியர்க்கு சவால். டெம்ப்ளேட் மயமாகிவிட்டால் 9:43க்கு என்ன வாக்கியம் சொல்வோம் என்பதும் வழக்கமாகி வகுப்பு என்பது ஆசிரியர் கொலைக்கூடமாக மாறிவிடும்.
//சிலரின் கேள்விகள் மகா அற்பத்தனமாக இருக்கின்றன, இவர்களையெல்லாம் யார் வேலைக்கு எடுத்தார்கள் என்று கோபம் வருகிறது, அதேசமயம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் இதைவிட மோசமாக இருந்தேன் என்பதும் புரிகிறது.// அது!!