மனம் போன போக்கில்

Archive for November 24th, 2008

ஸ்டீவ் ஜாப்ஸை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனால் ஓர் அசாத்திய ஆளுமையாகமட்டும். கம்ப்யூட்டர் நிபுணராக அவரை எனக்குச் சுத்தமாகப் பரிச்சயம் இல்லை.

’மாகின்டோஷ்’ அவருடைய பிரமாதமான படைப்பு என்கிறார்கள். இன்றைய கணினி GUIக்கு வழிவகுத்த உத்தம கம்ப்யூட்டர் என்று நிறையப் பேர் போற்றி பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஏதோ பொட்டாஷியம் உர விளம்பரம்தான் ஞாபகம் வருகிறது.

நிற்க. நான் கனவில்கூட மாகின்டோஷ் கணினியைத் தொட்டுப் பார்த்தது இல்லை. அதேசமயம், பில் கேட்ஸ் எனக்கு தூரத்து உறவும் இல்லை. ஆகவே, என்னை ஆப்பிள் விரோதியாகக் கருதிவிடவேண்டாம்.

ஆப்பிள்!

ஆஹா, என்ன ஓர் எளிமையான, அழகான பெயர். இப்படி பாமரனுக்கும் பாட்டிமார்களுக்கும்கூடப் புரியக்கூடிய, பிடிக்கக்கூடிய ஒரு பெயரை யோசித்தவர்கள் ‘மாகின்டோஷ்’ என்கிற குழப்படியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?

ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறைப் படித்தால், ‘The Monk Who Sold His Ferrari’ ஞாபகம் வரும். ஆனால் இந்த மொட்டை மாங்க், துறவறத்தை அனுபவித்தபிறகுதான் ‘ஆப்பிள்’ நிறுவனம் தொடங்கி எங்கேயோ போய்விட்டாராம்.

எங்கே?

’மாக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் மாகின்டோஷ் கணினிகளுக்கு உலகம் முழுக்க ரசிகர் மன்றம் இருக்கிறது. இன்றைக்கும் அவர்களுடைய மென்பொருள், வன்பொருள் வல்லமையுடன், ‘PC Vs Mac’ விளம்பரங்களின் நகைச்சுவை, நக்கல் உணர்வுகளையும் ரசிக்கிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸின் மிகப் பெரிய வெற்றி ஐபாட்தான், இல்லையா?

ஐபாட் எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட முக்கால் வருடம் அதுவே கதி என்று கிடந்தேன், வெள்ளை ஹெட்ஃபோன் தோடுடைய செவியனாக வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் இசையோடு திகட்டத் திகட்ட அனுபவித்தேன்.

பிறகு ஒரு சுபதினத்தில் என்னுடைய ஐபாட் அப்படியே உறைந்துபோனது. என்ன செய்தும் பலன் இல்லை.

இந்த விஷயத்தில் முன் அனுபவம் கொண்ட என் டெக்னாலஜி நண்பர்கள் ‘அபயம்’ தந்தார்கள். பேட்டரி தீர்ந்ததும், ஐபாட் அணைந்துவிடும். அதை இன்னொருமுறை சார்ஜ் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள்.

அதையும் செய்து பார்த்தேன், திரையில் ஒரு வருத்த முகம் திரும்பத் திரும்பத் தோன்றி மறைந்தது, என்னுடைய ஆயிரம்+ பாடல்களைக் காணவே காணோம்.

உடனடியாக ஆப்பிள் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றேன். அவர்கள் கண்ணாடியைக் கழற்றிப் பார்க்காமல், ‘எதையும் நாற்பத்திரண்டு மணி நேரத்துக்குப்பிறகுதான் சொல்லமுடியும்’ என்றார்கள்.

பதினெட்டாவது மணி நேரத்தில் ஃபோன் வந்துவிட்டது, ’ஐயா, உங்க ஐபாட் காலி’

ஏதோ ஹார்ட் டிஸ்க் போய்விட்டதாம், எதுவும் செய்யமுடியாதாம்.

நல்லவேளையாக, என் ஐபாட்க்கு இன்னும் உத்திரவாதம் (கேரண்டி) மீதமிருந்தது. ஆகவே, எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு புது ஐபாட் கொடுத்துவிட்டார்கள்.

ஆஹா, ‘இந்த ஐபாடை எங்கே வாங்கினாய், எப்போது வாங்கினாய்’ என்றுகூட ஒரு கேள்வி கேட்காமல், ‘கேரண்டி கார்ட் எங்கே?’ என்று அதட்டாமல் பழசுக்குப் புதுசு என மாற்றிக் கொடுத்த ஆப்பிள் கம்பெனி வாழ்க வாழ்க, கூடவே ஸ்டீவ் ஜாப்ஸும் வாழ்க, அவருடைய மொட்டைத் தலையில் ஆறடிக் கூந்தல் முளைக்கட்டும், பல்லாண்டு வாழ்க.

மறுபடி ஆயிரம் பாடல்களைத் தேடி நிரப்பினேன். பஸ்ஸில், ஆட்டோவில், ரயிலில், விமானத்தில், எங்கேனும் வரிசையில் காத்திருக்கும்போது என எங்கும் இளையராஜா என் காதுகளை வருடிக் கொடுத்தார்.

ஆறே மாதம், இன்னொருமுறை அதேபோல் ஐபாட் நோய் வந்து படுத்துவிட்டது.

இந்தமுறை நான் பதறவில்லை, பழைய வாடிப்போன ஆப்பிளுக்குப் புதுசு கொடுக்க ஸ்டீவ் ஜாப்ஸ் காத்திருக்கும்போது நான் ஏன் கவலைப்படவேண்டும்?

மறுபடியும் ஆப்பிள் சென்டர், பிரச்னை என்ன என்று நான் கேஷுவலாக விவரிக்க, அவர்களும் புன்னகையோடு கேட்டுக்கொண்டார்கள். ‘ரெண்டு நாள்ல ஃபோன் பண்றோம் சார்’

வழக்கம்போல், ஒன்றரை நாளில் ஃபோன் வந்துவிட்டது, ‘சார், ஹார்ட் டிஸ்க் ஃபெயிலியர்’

‘தெரிஞ்ச விஷயம்தானே?’ என்றேன் நான், ‘புதுசு எப்ப தருவீங்க?’

‘ஸாரி ஸார், உங்க வாரண்டி பீரியட் முடிஞ்சுபோச்சு’

வாரிச் சுருட்டிக்கொண்டு ஆப்பிள்காரர்களைத் தேடி ஓடினேன், ‘இப்ப நான் என்ன பண்றது?’

‘ஒண்ணும் பண்ணமுடியாது சார்’ என்று புன்னகைத்தான் அவன், ‘இனிமே இது ஒரு காஸ்ட்லி பேப்பர் வெயிட், அவ்வளவுதான்’

நான் நம்பமுடியாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த நேரத்திலும் ‘புது ஐபாட் மாடல் வந்திருக்கு, பார்க்கறீங்களா சார்?’ என்று வியாபாரம் பண்ணப் பார்த்தான் அவன்.

ரொம்ப நாளைக்குப்பிறகு, அன்றுதான் எனக்கு வன்முறையின்மீது நம்பிக்கை வந்தது. ஆனால் தைரியம் இல்லை, ஸ்டீவ் ஜாப்ஸ் பரம்பரையையே சபித்தபடி வீடு திரும்பினேன்.

இன்றைக்கும், அந்த ஐபாட் வெட்டியாக என் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறது. என் மனைவி கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் ‘உங்களுக்கு ஐபாட் ரிப்பேர் செய்யத் தெரியுமா?’ என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறாள். இந்த விநாடிவரை அதிர்ஷ்டம் இல்லை.

கடந்த ஐந்து வருடங்களில், நான் செய்த மிகப் பெரிய செலவு அந்த ஐபாட்தான். ஆனாலும், அந்த இழப்பு சீக்கிரத்தில் எனக்கு ஜீரணித்துவிட்டது. காரணம், ஐபாட் அளவுக்கு ‘இடம்’ இல்லாவிட்டாலும், நூற்றுச் சொச்ச பாடல்களைக் கலக்கலாகப் பாடிக் காட்டிய எனது புது நோகியா!

இந்த ஐபாட் துயரத்தால், புதிய ஐஃபோன் வந்தபோது எனக்குக் கொஞ்சம்கூடப் பரபரப்பு உண்டாகவில்லை. ஜனங்கள் அதிகாலை தொடங்கி வரிசையில் நிற்கிறார்கள், கடைச் சிப்பந்திகள் ‘ஜரகண்டி, ஜரகண்டி’ சொல்லி வியாபாரம் செய்கிறார்கள் என்றெல்லாம் செய்திகளைப் படித்து நக்கலாகச் சிரித்துக்கொண்டேன்.

இப்படி மணிக்கணக்காக வரிசையில் நின்று ஐஃபோன் வாங்குகிறவர்களில் எத்தனை பேருக்கு ஐஃபோன் திரை அப்படியே உறைந்து போகுமோ, யாருக்குத் தெரியும்?

ஐஃபோனின் டெக்னாலஜி மேன்மைபற்றி எதுவும் தெரியாமல் அதன் இடுப்புக்குக் கீழே உதைக்கிறாற்போல் இப்படிப் பேசுவது தப்புதான். ஆனால் நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. ஆகவே, அடி வாங்காமல் தப்பினேன்.

அதன்பிறகு ஐஃபோன் இந்தியாவுக்கும் வந்தது. விலையைக் கேட்டால் சொத்தில் பாதியை எழுதிக் கொடுத்து, மிச்சத்துக்கு போஸ்ட் டேட்டட் செக் கேட்கிறார்கள் என்பதால், அதிகப் பேர் வாங்கியதாகத் தெரியவில்லை.

இந்த நிலைமையில், ஐஃபோனை மையமாக வைத்து எழுதப்படும் செயலிகள் (Applications) எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, ஆப்பிள் நிறுவனம் உலகம்முழுக்கச் சுற்றிவந்து ‘Tech Talks’ நடத்துகிறது: http://developer.apple.com/events/iphone/techtalks/

இதற்கான அறிவிப்பு வெளியானபோது, முதலில் நிரம்பிப் போன நகரங்களில் ஒன்று பெங்களூர். நான் உடனடியாக முயன்றும் ஏமாந்தேன், ‘வெயிட்டிங் லிஸ்ட்’ என்று உட்காரவைத்துவிட்டார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் பரம்பரைமீதே கொலை வெறியுடன் இருக்கிறவன், இந்தியாவில் ஐஃபோன் நன்றாக விற்கவில்லை என்றதும் சந்தோஷப்படுகிறவன், எதற்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும்?

தலை விதி இல்லை, அலுவலக விதி. எங்களுடைய மொபைல் அப்ளிகேஷன்ஸை மேம்படுத்த (http://www.mcrmondemand.com/) ஐஃபோன் தொழில்நுட்பத்தை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று என் மேனேஜர் சொல்ல, நானும் இந்த டெக்னாலஜி கூட்டத்துக்கு விண்ணப்பம் போட, நல்லவேளையாக வெயிட்டிங் லிஸ்ட் ஆகிப் போனது.

ஆனால், இந்த சந்தோஷம் நெடுநாள் நீடிக்கவில்லை. விரைவில் அவர்களே மெயில் அனுப்பி, ‘24 நவம்பர் காலை எட்டரை மணிக்கு வந்து சேர்’ என்றார்கள்.

இன்றைக்கு 24 நவம்பர், காலை எழுந்தபோது கடுமையான தலைவலி.

’ஆஹா ஜாலி’ என்று ஆப்பிள் நிகழ்ச்சிக்கு மட்டம் போட மனம் வரவில்லை, வாங்குகிற சம்பளத்துக்குப் பாழும் விசுவாசம், அதற்குத் துரோகம் செய்கிறோமே என்கிற குற்றவுணர்ச்சி, சிரமத்துடன் எழுந்து கிளம்பினேன்.

ஆட்டோ பிடித்து லீ மெரிடியன் சென்று சேர்ந்தபோது, கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. ’Registration Desk’ என்றெழுதி உட்கார்ந்திருந்த கன்னியர் என் பெயரை டிக் அடித்து கையில் ஒரு நீலக் கலர் பட்டை மாட்டிவிட்டார்கள்.

உள்ளே நுழைந்தால் ஒரே இருட்டு. காரணம் மேடை முழுக்கக் கறுப்பு வர்ணம், நடுவில் வெள்ளை வெளேர் ஆப்பிள் – என் கணிப்பில் உலகின் மிகச் சிறந்த லோகோ அதுதான்.

மேடைமட்டுமில்லை, அதில் ஏறிப் பேசியவர்கள் எல்லோரும் கறுப்புச் சட்டைதான் அணிந்திருந்தார்கள். தெரியாமல் திராவிடர் கழகக் கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டோமா என்று சந்தேகமாக இருந்தது.

கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் இங்கே சொலிக்கொண்டிருந்தால் டெக்னாலஜி பிஸ்தாக்கள் என்னைப் பிய்த்துவிடுவார்கள். ஆகவே, நான் வேடிக்கை பார்த்த சமாசாரங்களைமட்டும் விரைவாகச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

முதலில், இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் எல்லோரும் மேகிண்டோஷ் பிரியர்கள். ஆளாளுக்குக் கையில் மேக்புக் எனப்படும் மேகின்டோஷ் மடிக் கணினிகளோடு சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

சாதாரண மடிக் கணினிகளுக்கும் இந்த ’மேக்புக்’களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம், அழகாக வெள்ளை வெளேர் பால் சாக்லேட்போல் கடித்துச் சாப்பிட்டுவிடலாமா என்று ஆசையாக இருக்கிறது.

மேக்புக்போலவே, அவற்றைப் பயன்படுத்துகிறவர்களும் தனி ரகம் என்று தெரிகிறது. துறுதுறுப்பாக மேடையில் பேசுகிறவர்களை (எனக்குப்) புரியாத மொழியில் கேள்வி கேட்பது, மிஞ்சிய சமயத்தில் ஏதோ கணினியில் நோண்டுவது, இந்த நேரமெல்லாம் காதில் வெள்ளை ஐஃபோன் (அல்லது ஐபாட்) சங்கீதம்.

அநேகமாக எல்லா வயதிலும் மேக் பிரியர்கள் வந்திருந்தார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, ஒரு பத்துப் பன்னிரண்டு வயதுப் பையன்.

நானும் எத்தனையோ தொழில்நுட்பக் கூட்டங்களுக்குச் சென்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். இப்படிப் பத்து வயதுப் பையன்களையெல்லாம் எங்கேயும் பார்த்தது கிடையாது. பிஞ்சிலேயே பழுத்த ஆப்பிள்?

சாதாரணமாக இதுபோன்ற கூட்டங்களில் மென்மையான இசையைப் பரவ விடுவார்கள். ஆனால் இங்கே வித்தியாசம், பேச்சாளர் ஒரு நிமிட இடைவெளி விட்டாலும் தடால் தடாலென்று ராக் இசையில் கூ(ட்)டம் அதிர்ந்தது.

முழு நாள் நீடித்த கூட்டம், மதியத்தில் லேசாக போர் அடிக்க ஆரம்பித்தது. அப்ஜெக்டிவ் சி, சி ப்ளஸ் ப்ளஸ், மெமரி லீக் என்று ஒரு கறுப்புச் சட்டை மேடையில் பேச, அரங்கத்தில் பலர் உட்கார்ந்தபடி தூங்கத் தொடங்கிவிட்டார்கள்.

அப்போதும், மேலே சொன்ன மேக் பிரியர்கள் அசரவில்லை. எனக்கு முன்னே உட்கார்ந்திருந்தவர், மேடையில் பேசுகிறவர் நிகழ்த்துகிற ‘டெமோ’வை விநாடிக்கு விநாடி அப்படியே தன்னுடைய ‘மேக் புக்’கில் செய்து பார்த்துப் பிரம்மிக்கவைத்தார். இத்தனை வேகம் நமக்கு ஆகாது.

கூட்டத்தின் இறுதியில், ஒரு பிரபலமான ‘Mac Vs PC’ விளம்பரத்தை ஒளிபரப்பினார்கள். எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி நன்றி சொன்னோம்.

முக்கியமான விஷயம், ஐஃபோனுக்கு அப்ளிகேஷன் எழுதவேண்டுமென்றால், விண்டோஸ் ஆகாதாம், மேகிண்டோஷ் கணினி வேண்டுமாம். ஒன்று வாங்கிப் போடுங்கள் என்று என் பாஸுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன்.

இன்ஷா அல்லா, நான் என்னுடைய அடுத்த போஸ்ட் மேகிண்டோஷிலிருந்து எழுதக்கூடும். அப்போதும், எனக்கு அந்தப் பெயர் பிடிக்கப்போவதில்லை.

ஸாரி, ஸ்டீவ் ஜாப்ஸ்!

***

என். சொக்கன் …

24 11 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930