பறக்கும் குழந்தைகளுக்கு
Posted November 26, 2008
on:- In: Books | Kids | Marketing
- 3 Comments
கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானத்தில் பயணம் செய்கிற குழந்தைகளுக்காக ஒரு புதிய பத்திரிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது, ‘Little Wings’ என்ற பெயரில்.
48 பக்கங்கள் முழு வண்ணத்தில் பளபளக்கும் இந்தப் புத்தகம், டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பு. மிக்கி மவுஸ் தொடங்கி, சமீபத்திய Wall-Eவரை அவர்களுடைய பழைய, புதிய கதாபாத்திரங்கள் எல்லோரும் வந்துபோகிறார்கள்.
இந்தப் புத்தகம் மிக எதேச்சையாகதான் என் கைக்குக் கிடைத்தது. விமானத்தில் எனக்குமுன்னால் பயணம் செய்த ஒரு குழந்தை, புத்தகத்தைப் படித்துவிட்டு அங்கேயே விசிறிவிட்டுப் போயிருந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை, நான் பொறுக்கிக்கொண்டேன். (அல்பம், அல்பம்!)
என்னதான் விமானத்தில் விநியோகிக்கப்படும் புத்தகமாக இருந்தாலும், உள்ளடக்கத்தில் புதுமையாக எதுவும் இல்லை. அதே பழைய புள்ளிகளை இணையுங்கள், வண்ணம் தீட்டுங்கள், ஆறு வித்தியாசம் கண்டுபிடியுங்கள், வெட்டி ஒட்டுங்கள், வழி கண்டுபிடியுங்கள், கதை படியுங்கள், காமிக்ஸ் புரட்டுங்கள், கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், புத்தகத்தை மூடிவிட்டு வீட்டுக்குப் போங்கள்.
சுவாரஸ்யமான விஷயங்கள் இரண்டு, பொதுவாக கிங்ஃபிஷர் பயணிகளுக்கு வழங்கப்படும் ‘Flight Magazine’ விமானப் புத்தகத்தில் பாதிக்குப் பாதி விளம்பரங்கள்மட்டுமே இருக்கும். ஆனால் இங்கே, ஒரு விளம்பரம்கூட இல்லை.
இன்னொருவிதத்தில் பார்த்தால், இந்தப் புத்தகம்முழுவதுமே விளம்பரங்கள்தான்.
டிஸ்னி தனது தயாரிப்புகள், கதாபாத்திரங்களை எப்படியெல்லாம் மார்க்கெட்டிங் செய்கிறது என்பதை யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. எப்போதோ சினிமாவில், கார்ட்டூன் படங்களில் பார்த்த குட்டிக் குட்டிக் கதாபாத்திரங்கள்கூட, இங்கே புத்தகத்தைத் தொகுத்து வழங்கும் சூத்திரதாரிகளாக வந்துபோகிறார்கள்.
டிஸ்னி என்றில்லை, ஹாலிவுட்டில் எந்தப் பெரிய நிறுவனத்தின் படம், தொலைக்காட்சி நிகழ்ச்சி புதிதாக வந்தாலும், அதோடு Co-Branded உடைகள், புத்தகங்கள், பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், இசைத் தட்டுகள் என்று ஒரு பெரிய சந்தையை உருவாக்கிவிடுகிறார்கள். இவை உலகம்முழுவதும் விற்பனையாகின்றன – அதிகாரபூர்வமாகவும், திருட்டுப் பிரதிகளாகவும்.
சமீபகாலமாக இந்த உத்தி இந்தியாவிலும் பிரபலம் அடைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எப்போது லாண்ட்மார்க் சென்றாலும் ‘பால் ஹனுமான்’ பொம்மைகள், முதுகுப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், இன்னும் பல நம்மைக் கூவி அழைக்கின்றன.
தமிழில்? நதியா புடவை, குஷ்பு ஜாக்கெட் என்று வந்ததாக ஞாபகம், ஆனால் திரைப்படங்கள், கதாபாத்திரங்களை முன்வைத்து யாராவது, ஏதாவது செய்திருக்கிறார்களா?
எனக்குத் தெரிந்து இல்லை. ரஜினிகாந்தின் மகள், ‘சுல்தான் பொம்மை’களில் தொடங்கலாம்!
போட்டிக்கு, கமலஹாசன் மகள் ‘மர்மயோகி பொம்மை’களைத் தயாரிக்கவேண்டாம். குழந்தைகள் பயந்துவிடும்.
***
என். சொக்கன் …
26 11 2008
3 Responses to "பறக்கும் குழந்தைகளுக்கு"

23-ம் புலிகேசி ஒரு சூப்பர் சாய்ஸ்.. ஆனால் யாரும் முயற்சிக்கவில்லை… இதிலும் வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தானா?

1 | bsubra
December 10, 2008 at 3:15 am
ஆண் குழந்தைக்கு மர்மயோகி மாதிரி அதிரடி பொம்மைககள் மிகவும் பிடிக்கும். ஸ்டார் வார்ஸ் போல் மிரட்டலாக இருந்தால் வரவேற்பு அதிகம்?