Archive for November 28th, 2008
நந்தன் கதை
Posted November 28, 2008
on:கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?
போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா?
ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.
ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார்.
இது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.
அதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி.
அவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும்.
ஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது.
காரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
பல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார்.
அவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு.
கடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன.
இன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
விழாபற்றிச் சில குறிப்புகள்:
- மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது
- பெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார்
- மேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது
- புத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது
- ஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம்
- நூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன:
- பழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை)
- நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி)
- இன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்)
- இனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை)
- இந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது
- கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது
- அதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார்
- பிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார்? அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம்
- கேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது
- ஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார்
- புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ.
- நான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன்
- புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/
- விழாவில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள்: http://picasaweb.google.com/nchokkan/NandanEvent
- நந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்)
***
என். சொக்கன் …
28 11 2008