மனம் போன போக்கில்

நந்தன் கதை

Posted on: November 28, 2008

கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?

போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா?

ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.

ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார்.

இது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.

அதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி.

அவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும்.

ஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது.

காரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

பல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார்.

அவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு.

book

கடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன.

இன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

SDC12489

விழாபற்றிச் சில குறிப்புகள்:

  • மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது
  • பெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார்
  • மேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது
  • புத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது
  • ஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம்
  • நூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன:
  1. பழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை)
  2. நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி)
  3. இன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்)
  4. இனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை)
  • இந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது
  • கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது
  • அதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார்
  • பிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார்? அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம்
  • கேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது
  • ஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார்

SDC12502

  • புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ.
  • நான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன்
  • புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/
  • விழாவில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள்: http://picasaweb.google.com/nchokkan/NandanEvent
  • நந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்)

***

என். சொக்கன் …

28 11 2008

19 Responses to "நந்தன் கதை"

சொக்கன் –

நூல் அறிமுகத்திற்கு நன்றி. நூலுக்கு உலகளாவ பெரிய வரவேற்பு கிடைத்தால் மட்டுமே படிக்க உத்தேசித்திருக்கிறேன்.

இன்போஸிஸ் துவங்கிய நான்கு பேரும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இத்தனை ஏன், பெரிய நிறுவனங்களின் உயர்பதவிகளில் வசிப்பவர்கள் (எ.க. பில் கேட்ஸ்) தன்னுடைய நிறுவன வலதளத்தில் தான் கல்வி கற்றது முதல், முதன்முதலின் வேலை செய்த நிறுவனத்தைப்பற்றிய குறிப்புகளை கொடுத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் இன்போஸிஸ் துவங்கிய நால்வரும் அப்படிப்பட்ட அறிமுகங்கள் செய்யாதிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

Fishy? You decide! 😉

டைனோ,

1. எனக்கும் புத்தகத்தின்மீது பெரிய ஆர்வம் இல்லை, தலையணை சைஸைப் பார்த்ததும் பயமாகிவிட்டது, புரொஃபஸர்மாதிரி பாடம் நடத்தியிருப்பாரோ என்று
2. ஆனால், நந்தன் தனது ‘ஐடியா’க்களுக்காகப் புகழ் பெற்றவர் என்று என் Boss சொல்கிறார், நிஜமா தெரியவில்லை
3. இந்தப் புத்தகத்துக்கு 699 ரூபாய் விலை வைத்து அநியாயத்துக்கு மார்க்கெட்டிங் செய்யும் பெங்குவினை நினைத்தால் பயமாக இருக்கிறது, கொஞ்சம் எரிச்சலாகவும்
4. நிஜமாகவே தனது ஐடியாக்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்று நந்தன் நினைத்திருந்தால், இன்ஃபோசிஸ் அதனை subsidize செய்து 99 ரூபாய்க்கு பேப்பர் பேக் வடிவத்தை முதலில் கொண்டுவந்திருக்கவேண்டாமோ? (முதலில் பணக்காரர்களைக் கறந்துவிட்டு, பிறகு இதைச் செய்வார்களோ என்னவோ!)
5. இன்ஃபோசிஸ் தொடங்கியவர்கள் 7 பேர், இப்போது அதில் தொடர்பவர்கள் 6, ஒருவர் இடையில் விலகிவிட்டார். நீங்கள் சொல்வதுபோல் ஏழு பேரும் தங்களைப்பற்றிய முழுமையான அறிமுகத்தைத் தரவில்லை, தவிர்க்கிறார்களா, அல்லது பர்ஸனல் விஷயங்களைப் பேச விருப்பமில்லையா தெரியவில்லை, இப்போது ஓய்வு பெற்றுவிட்ட நாராயணமூர்த்தி ஒரு விரிவான இன்ஃபோசிஸ் கதையை எழுத நினைத்தால் எழுதலாம், வழியா இல்லை பூமியில்? 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

அந்த ஏழு பேரும் பத்னி (patni computers) இல் இருந்து வெளியே வந்தவர்கள் தானே? இது பொதுவாக வெளியே தெரிந்த விஷயம் தானே? டைனோ, இதிலென்ன ஃபிச்ஷி? அப்படி ஏதாவது இருந்தால் சொல்லவும், சினிமாவை விடச் சுவாரசியமானது இந்த கார்ப்பரேட் காசிப் 🙂

பத்னி உண்மைதான், அவர்களுடைய முதல் சில க்ளையன்ட்ஸ் எங்கிருந்து கிடைத்தார்கள் என்பதில்தான் கொஞ்சம் மர்மம் இருப்பதாகக் கேள்வி, பத்னி அதிபர் (அல்லது அவருடைய வாரிசுகள்) நெட்டில் புலம்பியிருப்பார்கள், தேடிப் பாருங்கள் 😉

– என். சொக்கன்,
பெங்களூர்.

Patni குடும்பத்தினர் அந்த விஷயத்தில் very gentlemanly!

நூல் அறிமுகத்திற்கு நன்றி!

/…தலையணை சைஸைப் பார்த்ததும் பயமாகிவிட்டது,/
படிச்சிட்டு point by pointஆ ஒரு பதிவு போடுங்களேன்… 😉

/த்னி உண்மைதான், அவர்களுடைய முதல் சில க்ளையன்ட்ஸ் எங்கிருந்து கிடைத்தார்கள் என்பதில்தான்…/

இதலாம் ‘அரசியல’ சகஜம் இல்லையா..?? ;(

தென்றல்,

முயற்சி செய்யறேன், ஒரு பத்திரிகையில் அறிமுகக் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அது ஜனரஞ்சகமான அறிமுகமாக இருக்கும், நெட்டில் போட்டால் திட்டுவார்கள், பயமாக இருக்கிறது 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

ஹார்ட் பவுண்ட் புத்தகம் 699 என்றால், அதனை எத்தனை சப்சிடைஸ் செய்தாலும் 99க்குக் கொண்டுவர முடியாது. எத்தனை பக்கங்கள் என்று பார்க்கவும். யாராவது தருமப்பிரபு மனசு வைத்து செலவை ஏற்றுக்கொண்டால் [வர்த்தமானன் புத்தகங்களுக்கு மகாலிங்கம் செய்வது போல] 99 ரூபாய்க்குத் தரலாம்.

பி.கு. உன்னுடைய ஒரு சட்டை, பேண்டின் விலை என்ன? அதை ஏன் சப்சிடைஸ்ட் விலையில் நீ பெற முயற்சி செய்வதில்லை?

1. இன்னொரு தர்ம பிரபு எதற்கு? அதான் இன்ஃபோஸிஸ் அறக்கட்டளை இருக்கிறதே. ஐடியாவை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கம் என்றால், அவர்கள் இலவசமாகக்கூட தரலாம்.
2. நந்தனின் நோக்கம் இதன்மூலம் சம்பாதிப்பது என்றால், அதை வெளிப்படையாகவே சொல்லலாம், எதற்கு சிந்தனையாளர், சமூக சேவகர் வேஷம்? (அவர் எழுதி சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது வேறு விஷயம்)
3. என் சட்டை, பான்ட்போலவே இந்த புத்தகத்தையும் முழு விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். நான் சொன்னது, இன்னும் அதிக பேரை சென்று சேர்வதற்கு

– N. Chokkan,
Bangalore

“Every 7th man in this world is known to Nandhan(Nilekani)” என்று எங்கோ படித்திருக்கிறேன்! மனிதர் Interpersonal skillsஇல் (தமிழில்?) சமர்த்தர் என்று, Pricol நிறுவனத்தில் IPT போனபோது அங்கு நூலகத்தில் படித்த ஞாபகம். இந்த வார சென்னை ergo வில்(திங்களோ, செவ்வாயோ?) இதைப் பற்றிய ஒரு அறிமுகம் வந்திருக்கிறது.
புத்தக விலை நீங்கள் குறிப்பிட்டபடி ரொம்ப அதிகம்தான்!

சொக்கன்! என்னை தங்களுக்கு நினைவிருக்குமென நம்புகிறேன் (2006ல் புத்தகக் காட்சியில் தாங்கள் கிழக்கு ஸ்டாலின் பக்கம் ஒதுங்கி (அல்லது ஒளிந்து?) நின்றபோது தங்களை அடையாளம் கண்டுகொண்டு பேசியது நினைவிலுள்ளதா?!

அன்புடன்
வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்,

இந்தத் தகவல் (எனக்குப்) புதிது, நன்றி 🙂

எனக்கு அவ்வளவாக Interpersonal skills போதாது, ஆகவே, உங்கள் புகைப்படம் பார்க்கும்வரை பெயர் நினைவு வரவில்லை 😉 இப்போது ஞாபகம் வந்துவிட்டது!

– என். சொக்கன்,
பெங்களூர்.

மணிரத்னத்தின் மகன் பெயர் நந்தன்!
முதலிலேயே சொல்ல நினைத்தேன்! விடுபட்டுவிட்டது!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

அட, அபூர்வமான ஒற்றுமை … இந்தக் கட்டுரையும் மணிரத்னத்தில் தொடங்கி நந்தனுக்குச் சென்றிருக்கிறது 😉

– என். சொக்கன்,
பெங்களூர்.

Very good article. Every post is good in its own kind. I like the good way of not hurting people in your writings especially Doctor Sitrasar.

Keep up the good work.

இந்தப் புத்தகம் குறித்த எனது அறிமுகக் கட்டுரை இன்று வெளியாகியிருக்கும் ‘குமுதம்’ இதழில் வந்துள்ளது, வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லவும். அட்வான்ஸ் நன்றி!

அடுத்த வாரக் குமுதம் வெளியானபிறகு, அந்தக் கட்டுரையை இங்கே பதிகிறேன்.

INEf03 Thanks for good post

இப்போது 30% off and free shipping என ரூ.500க்கும் குறைவாக இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், தலையணை சைஸ்தான் பயமுறுத்துது.. 🙂

இதுவே நல்லதொரு அறிமுகம்.. உங்கள் குமுதம் கட்டுரையை இன்னும் படிக்கவில்லை. காத்திருக்கிறேன்..

[…] அதுபற்றிய என் முந்தைய பதிவு இங்கே, விழாவில் எடுத்த புகைப்படங்கள் […]

குமுதம் அறிமுகக் கட்டுரை இங்கே:

https://nchokkan.wordpress.com/2009/01/02/imgindia/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
%d bloggers like this: