மனம் போன போக்கில்

Archive for December 2008

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

முதன்முறையாக கொல்கத்தா சென்றபோது, சற்றே பெரிய கிராமம்போலிருந்த அதன் தன்மை எனக்குக் கொஞ்சம் பயமூட்டியது.

குறிப்பாக, கொல்கத்தா மழைக் காலங்கள் மிகக் கொடுமையானவை, நான்கு தூறலுக்கே சாலையெல்லாம் சாக்கடையாகிவிடும். தரையடிப் பாலத்தில் இறங்கி ரயில்வே பிளாட்ஃபாரங்களில் ஏற நினைக்கிறவர்களுக்கு நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படும்.

நகரம்(?)முழுவதுமே, நவீனம் ஆங்காங்கே திட்டுத்திட்டாக எப்போதாவதுதான் தென்பட்டது, மற்றபடி கட்டட அமைப்பில் தொடங்கி, மக்களின் உடை அலங்காரம், பேசும் விதம்வரை சகலமும் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை நினைவூட்டியது.

கொல்கத்தாவில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குப் பக்கத்தில் ஒரு நீண்ட கடைத்தெரு. ஷாப்பிங் மால்கள் போலின்றி, அத்தனையும் சின்னச் சின்ன பெட்டிக் கடைகள், ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் இடையே ஒரு சின்ன மரத் துண்டு இடைவெளிமட்டும் என்பதால், எங்கே யார் எதை வாங்குகிறார்கள் என்றுகூடச் சரியாகப் புரியவில்லை, அநேகமாக அந்தக் கடைக்காரர்கள் எல்லோரும் இடது பக்கக் கடையிலிருந்து பொருள்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, காசை வலது பக்கக் கடையின் கல்லாப்பெட்டியினுள் போடுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தக் கடைக்காரர்களும், கஸ்டமர்களும் இளைப்பாறுவதற்காக, ஆங்காங்கே சிறு டீக்கடைகள், மண் கோப்பையில் தேநீர் அருந்தி அதைக் கீழே போட்டு உடைத்துச் செல்லும் கொல்கத்தாவாசிகள்.

அப்புறம், இனிப்புக் கடைகள். ஒவ்வொரு கடையிலும் நூறு, நூற்றைம்பது ரகங்களைச் செங்கல்போல் வரிசையாக அடுக்கிவைத்திருக்கிறார்கள், அத்தனையின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் டயாபடீஸ் வந்துவிடும்போல.

முதல் நாள் இரவு பா. ராகவனுடன் சாட் செய்துகொண்டிருந்தபோது, இந்த விஷயத்தைச் சொன்னேன், ’பெங்காலிங்க ரொம்ப இனிப்பானவங்கபோல’

‘டேய் பாவி, சொல்ல மறந்துட்டேன்’ என்று பதறினார் அவர், ‘கொல்கத்தாவிலே பனங்கல்கண்டு போட்டு ஒரு தித்திப்புத் தயிர் கிடைக்கும், மிஸ் பண்ணிடாதே’

தித்திப்பு, தயிர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றாகக் கேட்ட்தும் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது, ‘அய்யே, அதெல்லாம் வேண்டாம் சார்’

’எனக்காக ஒரே ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாரு, அப்புறம் விடமாட்டே’

சரி, இத்தனை தூரம் சொல்கிறாரே என்று விருந்தினர் விடுதிப் பையனைக் கூப்பிட்டேன், ஹிந்தியில் பனங்கற்கண்டுக்கு என்ன என்று தெரியாததால், ‘மீடா தஹி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

‘அது மீடா தஹி இல்லை சாப், மிஷ்டி தோய்’ என்று திருத்தினான் அவன். காசை வாங்கிக்கொண்டு ஓடியவன், இரண்டரை நிமிடத்தில் திரும்பி வந்தான். கையில் இரண்டு மண் குடுவைகள்.

ஏற்கெனவே இனிப்புத் தயிர் என்றதும் எனக்கு மனத்தடை ஏற்பட்டுவிட்டது, இப்போது மண் குடுவையைப் பார்த்ததும் மறுபடி முகம் சுளித்தேன், இந்த மண்ணில் இருக்கிற அழுக்கெல்லாம் தயிரில் சேரும், இதைச் சாப்பிட்டால் நம் உடம்பு என்னத்துக்கு ஆகுமோ!

பாராமீது பாரத்தைப் போட்டுவிட்டு அந்த மண் குடுவைகளை வாங்கிக்கொண்டேன், மேலே ரப்பர் பாண்ட் போட்டு இறுகக் கட்டப்பட்டிருந்த பேப்பரை விலக்கினால், பழுப்பு நிறத்தில் தயிர்.

ஆமாம், பழுப்பு நிறம்தான். அதைப் பார்த்தால் சாப்பிடவேண்டும் என்று தோன்றவே இல்லை.

இதில் என்ன இருக்கப்போகிறது, ஏன் பாரா இதை விழுந்து விழுந்து சிபாரிசு செய்கிறார் என்று அலட்சியத்துடன் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டேன்.

அந்த விநோதமான சுவையை நான் அதற்குமுன்னால் அனுபவித்தது கிடையாது. தயிர்தான். ஆனால், அதில் ஏதோ ஒரு வித்தியாசமான இனிப்பு கலந்திருந்தது.

இப்போது எனக்கு வாந்தி வரவில்லை. மறுபடி சாப்பிடவேண்டும்போலிருந்தது.

பெங்களூரில் ‘லஸ்ஸி’ எனப்படும் இனிப்புத் தயிர் (அல்லது மோர்) கிடைக்கிறது. ஆனால் வெறும் தயிரில் சர்க்கரையைக் கொட்டிக் கலக்கிக் கொடுப்பார்கள். அது ஆங்காங்கே இனித்துக்கொண்டு, மற்ற இடங்களில் பல்லிளித்துக்கொண்டு அபத்தமாக இருக்கும். அதைச் சாப்பிடுவதற்கு ஒரு க்ளாஸ் மோரைக் குடித்துவிட்டு ரெண்டு ஸ்பூன் சர்க்கரையைத் தனியே தின்றுவிடலாம்.

ஆனால், ‘மிஷ்டி தோய்’ அப்படி இல்லை. தயிரும் தித்திப்பும் பிரிக்கமுடியாதபடி கலந்திருந்தது. ஒவ்வொரு துணுக்கிலும் தித்திப்பு, அதேசமயம் குறையாத தயிரின் சுவை.

சில துணுக்குகளில், நானும் என் நண்பர் சுமேஷும் மயங்கிப்போனோம். ஐந்தே நிமிடங்களில் அன்றைக்கு வாங்கிவந்த இரண்டு குடுவைகளும் காலி.

அடுத்த பதினைந்து நாள்களில் நாங்கள் சாப்பிட்ட ‘மிஷ்டி தோய்’களுக்குக் கணக்கே இல்லை. ஆரம்பத்தில் இதற்காக விடுதிப் பையனை விரட்டிக்கொண்டிருந்த நாங்கள், பிறகு அங்கேயே நேரில் சென்று சாப்பிட ஆரம்பித்தோம், அந்த அத்தனூண்டு கடைக்குள் நெருக்கியடித்துக்கொண்டு சாப்பிடுவதில் ஒரு தனி சுகம் இருந்தது.

அதன்பிறகு, இரண்டுமுறை கொல்கத்தால சென்றிருக்கிறேன், காளி, ராம கிருஷ்ண மடம், கங்கை நதியை மிஸ் செய்தாலும், ‘மிஷ்டி தோய்’மட்டும் தவறவிடுவதே கிடையாது.

சென்றமுறை கொல்கத்தா பயணம் முடிந்து ஊருக்குக் கிளம்பியபோது, மனைவி, குழந்தைகளுக்கு நாலு ‘மிஷ்டி தோய்’ வாங்கிப்போனால் என்ன என்று யோசித்தேன். விமானத்தில் உடையாதபடி கொண்டுசெல்வதற்கு வசதியாகப் பார்சல் செய்து தருவதாக அந்தக் கடைக்காரன் சத்தியம் செய்தான்.

ஆனால் எனக்குதான் கொஞ்சம் பயம், ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.

ஆகவே, என்னால் மிஷ்டி தோய் சுவையை வீட்டில் வர்ணிக்கதான் முடிந்தது. வாங்கித்தர முடியவில்லை.

அதனால்தானோ என்னவோ, அதன்பிறகு ஒன்றரை வருடங்களில் எனக்குக் கொல்கத்தா போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மிஷ்டி தோய் ருசி மறந்துபோய்விட்டது.

நேற்று மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தொப்பையைச் சொறிந்துகொண்டிருந்தபோது ஒரு யோசனை, கோரமங்களாவில் ‘DC Books’ கடை புதிதாகத் திறந்திருக்கிறார்களாமே, போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?

செல்ஃபோனில் இளையராஜாவைக் கேட்டபடி நடக்க ஆரம்பித்தேன். இருபது நிமிடத்தில் கோரமங்களா.

‘DC Books’ முகவரியைக் கவனித்தபடி நடந்தேன், விதவிதமாக சிறிய, பெரிய கடைகள் வந்தன, நான் தேடுவதைமட்டும் காணோம்.

அப்போது, ஒரு செக்கச்செவேல் போர்ட், அதில் கொட்டை எழுத்தில் ‘MISHTI’ என்று எழுதியிருந்தது.

ஆச்சர்யத்துடன் அருகே சென்றேன், ’பாரம்பரிய பெங்காலி இனிப்பு வகைகள் இங்கே கிடைக்கும்’ என்று கீழே பொடி சைஸில் குறிப்பிட்டிருந்தார்கள்.

கடைக்கே ‘மிஷ்டி’ என்று பெயர் வைத்திருந்தால், இங்கே நிச்சயமாக மிஷ்டி தோய் கிடைக்கும். கிட்டத்தட்ட உள்ளே ஓடினேன்.

ஆனால், கடைக்குள் நுழைந்தபிறகு ஏதோ கூச்சம், ‘மிஷ்டி தோய்’ என்று சொல்லிக் கேட்கச் சங்கடமாக இருந்தது.

ஒருவேளை, என்னுடைய உச்சரிப்பு தவறாக இருந்தால்? (இப்போது இந்தப் பதிவை எழுதும்போதும் அந்தக் கவலை இருக்கிறது) ’பாரம்பரியம்’ மிகுந்த அந்தக் கடைக்காரர் சிரிக்கமாட்டாரோ?

ஆகவே, என்னுடைய பழைய உத்தியைப் பயன்படுத்தினேன், ‘மீடா தஹி இருக்குங்களா?’

‘மிஷ்டி தோய்தானே?’ என்று என் வயிற்றில் இனிப்புத் தயிர் வார்த்தார் அவர், கண்ணாடிக் கூண்டுக்குள் சுட்டிக்காட்டினார்.

அங்கே மண் குடுவைகளுக்கு பதில் விதவிதமான பிளாஸ்டிக் கிண்ணங்களில் மிஷ்டி தோய், விலைமட்டும் இரண்டு மடங்கு.

அதனால் என்ன? உலகெலாம் Recession என்கிறார்கள், மிஷ்டி தோய் தயாரிப்பாளர்களுக்குமட்டும் அது இருக்கக்கூடாதா? இரண்டு கிண்ணங்கள் வாங்கிக்கொண்டேன்.

பொட்டலம் கட்டும்போது, திடீர் சந்தேகம், ‘இது பழுப்புக் கலரா இருக்கணுமே, ஏன் வெள்ளையா இருக்கு?’

அவர் சிரித்தார், ‘மண் குடுவையில பார்த்தா பழுப்பு நல்லாத் தெரியும், இது ட்ரான்ஸ்பேரன்ட் பிளாஸ்டிக், அதனால உங்களுக்கு வெள்ளையாத் தோணுது’

உண்மையைதான் சொல்கிறாரா, அல்லது கதை விடுகிறாரா என்று புரியவில்லை. கலர் எதுவானாலும் பரவாயில்லை, ருசி அதேமாதிரி இருந்தால் போதும் என்று வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

வீட்டுக்கு வந்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டோம், அதே பழைய ருசி, வெட்கமில்லாமல் சப்புக்கொட்டித் தின்றேன். பிளாஸ்டிக் கிண்ணத்திலோ, ஸ்பூனிலோ ஒரு துளி மிச்சம் வைக்கவில்லை.

ஆனால், அந்த ருசி, என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓடினார்கள்.

அதனால் என்ன? அவர்களுக்கு வாங்கியதையும் எனக்கே எடுத்துக்கொண்டுவிட்டேன், இன்று இரவு சாப்பாட்டுக்குப்பிறகு வெட்டுவதற்கு!

***

என். சொக்கன் …

29 12 2008

SDC12657

கோகுலம் ஜனவரி 2009 இதழில் தொடங்கி, ‘அறிவியல் கதைகள்’ என்ற தலைப்பில் அறிவியல் உலகின் புகழ் பெற்ற நிகழ்வுகள், கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களைக் கதை வடிவில் எழுதவிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லுமாறு வேண்டுகிறேன்!

***

என். சொக்கன் …

29 12 2008

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சென்னை சென்று திரும்பினார், அவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன், ‘என்னப்பா, எப்படி இருந்தது ட்ரிப்?’

‘எல்லாம் நல்லாதான் இருந்தது, கிளம்பற நேரத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்’

‘அச்சச்சோ, என்னாச்சு?’

‘சிக்னல்ல நிக்கும்போது ஒரு தடிமாடு கார் மேலே வந்து மோதிட்டான், ஒரு லைட் உடைஞ்சுபோச்சு’

‘அடடா, அப்புறம்?’

‘ஒரு மணி நேரம் அவனோட சண்டை போட்டு எழ்நூறு ரூபாய் வாங்கிட்டுதான் விட்டேன்’ என்று பெருமிதமாகச் சொன்னார் நண்பர், ‘ஆனா, இந்த எழ்நூறு ரூபாய் ரிப்பேருக்குப் போதுமான்னு தெரியலை’

அதோடு அந்தப் பேச்சு முடிந்தது. தொலைபேசி இணைப்பைத் துண்டித்தபிறகுதான் யோசித்தேன், இதுபோல் நாம் சென்று எங்காவது மோதும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்குதானே ஆட்டோ இன்ஷூரன்ஸ்? பிறகு எதற்குச் சண்டை? எழ்நூறு ரூபாய்? அது போதுமா என்கிற கவலை?

அந்த நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தாலும், இதேபோல் சண்டை போட்டிருப்பேன், அறுநூறு ரூபாயோ, எண்ணூறு ரூபாயோ வாங்கிக்கொண்டு கவலையோடு திரும்பி வந்திருப்பேன், இன்ஷூரன்ஸ்பற்றிச் சுத்தமாக நினைவு வந்திருக்காது.

நல்ல வேளையாக, அரசாங்கம் மோட்டார் இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால் அப்போதும், அதன் பலன்கள் முழுமையாகச் சென்று சேர முடிவதில்லை, இதுபோல் ரோட்டோரச் சண்டைகளில் எல்லோருடைய நேரமும் மன அமைதியும் கெட்டுப்போகிறது.

இன்னொரு பக்கம், ஜெனரல் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள். என்னென்ன வகைகளில் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் செலுத்தவேண்டியிருக்கும், எப்போது இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது, எங்கே காப்பீடு எடுக்கலாம், அதைப்பற்றி யாரிடம் பேசவேண்டும், மேல் விவரங்கள் எங்கே கிடைக்கும் … இப்படி எந்த விவரமும் தெரியாதவர்கள்தான் நம் ஊரில் அதிகம்.

மேலே சொன்ன இந்த இரு வகையைச் சேர்ந்தவர்களுக்கும், கிழக்கு பதிப்பக வெளியீடான ‘All In All ஜெனரல் இன்ஷூரன்ஸ்’ புத்தகம் மிகவும் பயன்படும். (ஆசிரியர்: ஏ. ஆர். குமார் – 104 பக்கங்கள் – விலை ரூ. 60/-).

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்வரையில் நான் இன்ஷுரன்ஸ்பற்றி ஓரளவு தெரிந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில், ஆயுள் காப்பீடு வேறு, பொதுக் காப்பீடு வேறு என்கிற அடிப்படை விஷயம்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே இதைத் தெளிவாக விளக்கிவிடுகிறார் ஆசிரியர். அவருடைய விளக்கத்தின் சாராம்சம் இதுதான்: நீங்கள் இன்ஷூரன்ஸ்பற்றிக் ‘கேள்விப்பட்டிருக்கலாம்’, ஆனால் அதுமட்டும் போதாது, முழுமையான புரிதல் இருந்தால்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும், அதற்குதான் இந்தப் புத்தகம்.

யாரெல்லாம் பொதுக் காப்பீடு எடுக்கவேண்டும்?

‘பொது’ என்கிற பெயரே சொல்கிறது, எல்லோரும் எடுக்கலாம், எடுக்கவேண்டும் என்று புத்தகம்முழுக்க வலியுறுத்துகிறார் ஏ. ஆர். குமார் – சில சமயம் சற்று அளவுக்கு அதிகமாகவே அழுத்திச் சொல்கிறார், வலிக்கிறது 🙂

நம் ஊரில் ஆயுள் காப்பீடு ரொம்பப் பிரபலம், ஆயுளைக் காக்கிறதோ இல்லையோ, அதில் காசு போட்டால் பின்னால் நமக்கு வேறுவிதமாக்த் திரும்பி வரும், வருமான வரியைச் சேமிக்கலாம் என்கிற காரணத்தால் அநேகமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சம்பாதிக்கும் எல்லோரும் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள்.

ஆனால், பொதுக் காப்பீடு அப்படி இல்லை, அதன் காரண காரியங்களே பெரும்பாலானோருக்குப் புரியாததால், அது ஒரு சவலைப் பிள்ளைபோல் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

முக்கியமாக, மருத்துவக் காப்பீடு, அதன் மகிமையை ஒருமுறை பார்த்துவிட்டவர்கள், அதன்பிறகு அதற்காகச் செலவழிக்கத் தயக்கமே காட்டமாட்டார்கள். ஏ. ஆர். குமார் ஏகப்பட்ட உதாரணங்களுடன் அதைப்பற்றிப் புட்டுப்புட்டு வைக்கிறார்.

அதேசமயம், இந்தப் புத்தகத்தில் அவர் இன்ஷூரன்ஸ்பற்றி நல்லவிதமாக விளக்குவதைவிட, எப்போதெல்லாம் நமக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்று எச்சரிப்பதுதான் அதிகம். இது வாசகரை மிரட்டும்விதமாக இல்லாமல், ‘கவனமாக இருங்கள், இன்ஷூரன்ஸ் என்பது அமுதசுரபி அல்ல, சில விஷயங்களுக்குதான் நாம் நம்மைக் காப்பீடு செய்துகொள்ளமுடியும்’ என்று வழிகாட்டுவதாக இருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் நான்கு பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் (நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைடட் இந்தியா) இருக்கின்றன. இவைதவிர ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் சமீபகாலமாக சந்தையை மொய்த்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் அனைத்தின் சரித்திரத்தை புத்தகத்தின் முன் பகுதியிலேயே விரிவாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். வாசிப்பு சுவாரஸ்யம் இருப்பினும், ஜெனரல் இன்ஷுரன்ஸ்பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தப் புத்தகத்தை வாங்கிய ஒருவருக்கு, இந்தக் கதைகள் அலுப்பூட்டலாம், ’இதையெல்லாம் பின்னிணைப்புக்குத் தள்ளியிருக்கலாமே’ என்கிற நினைப்பைத் தவிர்க்கமுடிவதில்லை.

அடுத்தபடியாக, ஜெனரல் இன்ஷூரன்ஸின் வகைகளை விவரிக்கிறார் ஆசிரியர். அவற்றைப் பின்னர் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார்.

முக்கியமாக மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு ஆகிய அத்தியாயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்கள், வழிமுறைகள், செலவாகக்கூடிய தொகை (உத்தேச மதிப்பீடு), எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது என்று விரிவான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

வாசிப்பினூடே, பல சுவாரஸ்யத் தகவல்களும் சிக்குகின்றன. உதாரணமாக, ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடக்காவிட்டால், அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம், உங்களுக்குத் தெரியுமா? 🙂

இதைப் படித்ததும், அடுத்தபடியாக காதல் தோல்விக்கு இன்ஷூரன்ஸ் உண்டா என்று ஓர் அத்தியாயத்தை எதிர்பார்த்தேன், காணோம்!

விபத்துக் காப்பீடுபற்றித் தனி அத்தியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் மருத்துவக் காப்பீடுக்கும் என்ன வித்தியாசம் என்பது அத்தனை தெளிவாக விளக்கப்படவில்லை, அல்லது தனியே எடுத்துக்காட்டப்படவில்லை. (வித்தியாசம்: மருத்துவக் காப்பீடு சாதாரண நோய்களுக்கும் கிடைக்கும், விபத்துக் காப்பீடு என்பது ஏதேனும் விபத்து நேர்ந்து அதன்மூலம் மருத்துவ சிகிச்சை எடுத்தால், உறுப்புகளை இழந்தால்மட்டுமே கிடைக்கும்)

இந்த ‘உறுப்புகளை இழப்பது’பற்றிச் சொல்ல ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 69, 70வது பக்கங்களில் ஒரு பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு சின்னப் பகுதி இங்கே

உயிரிழப்பு நேர்ந்தால் – 100 சதவிகிதம்

2 கண்களை இழந்தால் – 125 சதவிகிதம்

2 கைகளை இழந்தால் – 125 சதவிகிதம்

2 கால்களை இழந்தால் – 125 சதவிகிதம்

கட்டை விரலை இழந்தால் – 20 சதவிகிதம்

ஆள்காட்டி விரலை இழந்தால் – 10 சதவிகிதம்

மற்ற விரலை இழந்தால் – 5 சதவிகிதம்

1 கண்மட்டும் இழந்தால் – 50 சதவிகிதம்

முகரும் திறனை இழந்தால் – 10 சதவிகிதம்

ருசிக்கும் திறனை இழந்தால் – 5 சதவிகிதம்

இப்படி நீள்கிற இந்தப் பட்டியலை வாசிக்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நவீன சிறுகதையைப் படிப்பதுபோல் உணர்ந்தேன். எந்த உறுப்பை இழந்தால் எவ்வளவு இழப்பீடு என்று எதன் அடிப்படையில் முடிவு செய்திருப்பார்கள்? ஒருவர் முகரும் திறனை இழப்பதற்கும், பார்க்கும் திறனை இழப்பதற்கும் இடையே ஐந்து மடங்கு வித்தியாசம் எப்படி வருகிறது, ஏன் வருகிறது?

இன்னும் கொடுமை, ருசிக்கும் திறன் அதைவிடக் கீழே கிடக்கிறதே, ஏன்? நாவுக்கு வாழ்க்கையில் மரியாதை அவ்வளவுதானா?

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு விஷயம் தோன்றியிருக்கலாம், இதை வரிவரியாகக் கொடுக்காமல், Table வடிவத்தில் தந்திருந்தால், இன்னும் சுலபமாகப் பார்க்கலாமே.

புத்தகம்முழுவதும் இந்தக் கேள்வி எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை Table வடிவத்திற்கு மாற்றியிருந்தால், பக்கமும் மிச்சமாகியிருக்கும், எளிதில் Refer செய்வதும் சாத்தியம். அடுத்த பதிப்பில் செய்வார்கள் என நம்பலாம்.

அதேபோல், காப்பீடு எடுக்கவேண்டும் என்று புத்தகம் முழுக்கச் சொன்னாலும், ஒருவேளை ஏதேனும் விபத்து, திருட்டு நேர்ந்தால் இழப்பீடுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்கிற தகவல் குறைகிறது. அதேசமயம், இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் சர்வே, ரீ-சர்வே, பிரச்னைகள் வரும்போது உதவுகிற தீர்ப்பாணையங்களைப்பற்றியெல்லாம் விரிவான குறிப்புகள் இருக்கின்றன.

குறைகள் என்று பார்த்தால், முக்கியமாகச் சில எழுத்துப் பிழைகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், இன்ஷூரன்ஸ் போன்ற முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சொல்கையில், இந்த எழுத்துப் பிழைகள்கூடப் பெரிய பிரச்னையாக அமையக்கூடும்.

45வது பக்கம்: ‘Caseless Hospitalisation’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிறது, இது ‘Cashless’ என்று இருக்கவேண்டும்

79வது பக்கம்: ’10 ஆயிரம் டாலர் (சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்)’ என்று வருகிறது. 10 ஆயிரம் டாலர் என்பது நான்கு லட்சம் ரூபாயைத் தாண்டுமே, தப்பு டாலர் மதிப்பிலா, அல்லது ரூபாய்க் கணக்கிலா?

52வது பக்கம்: ‘பிரசவத்துக்கு எந்த மருத்துவ இழப்பீடும் கிடைக்காது. அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தாலும் அதற்கும் இழப்பீடு கிடைக்காது’ என்று வருகிறது. இது பாலிஸி விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும், எங்கள் அலுவலகத்தில் பலர் தங்களுடைய / தங்கள் மனைவியின் பிரசவத்து(அறுவைச் சிகிச்சை)க்குச் செலுத்திய பணத்தை இழப்பீடாகப் பெற்றிருக்கிறார்கள்

இப்படி அடுத்த பதிப்பில் எளிதாகச் சரி செய்யக்கூடிய ஒரு சில தகவல் பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது ஒரு முக்கியமான புத்தகம். ஜெனரல் இன்ஷூரன்ஸ்பற்றி மிரட்டாமல், விளம்பரம் போடாமல், எல்லோரும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சாதக பாதகங்களை விளக்கி எழுதப்பட்டிருக்கிறது.

முடிக்குமுன், ஆசிரியர் தரும் சில டிப்ஸ்:

1. பாலிசி எடுக்கும்போது ஏதோ ஒரு தேதியில் எடுக்காதீர்கள். உங்களால் மறக்க முடியாத, அல்லது எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு தேதியில் பாலிசியைத் துவக்கினால், அதைப் புதுப்பித்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். உதாரணமாக, உங்கள் பிறந்த நாலன்று அல்லது உங்கள் திருமண நாளன்று நீங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஆரம்பிக்கலாம்

2. ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் பாலிசியைப் புதுப்பித்துக்கொண்டபிறகு பழைய பாலிசியைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்கிற அவசியமில்லை. பழைய பாலிசிகளை எல்லாம் ஒரு ஃபைலில் தனியாகச் சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. ஏனெனில், நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலிசி புதுப்பித்து வருகின்ற தகவல், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் இருந்து திடீரெனக் காணாமல் போகலாம்

அப்படித் ‘திடீரென்று காணாமல் போனால்’, அந்த விபத்துக்கு எந்த நிறுவனமும் காப்பீடு தருவதில்லைபோல 🙂

இந்தப் புத்தகம்பற்றிய கூடுதல் தகவல்கள், ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே க்ளிக்கவும்.

***

என். சொக்கன் …

28 12 2008

எனது ‘அம்பானி: ஒரு வெற்றிக்கதை’ புத்தகத்தின் விமர்சனம்: ’வினவு, வினை செய்’ தளத்திலிருந்து:

அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

முழுவதும் படிக்க: செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

நன்றி: vinavu@gmail.com

***

என். சொக்கன் …

28 12 2008

கல்லூரி நாள்களில் தொடங்கி, தடி தடியான ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. அவ்வளவு சிரமப்பட்டு அவற்றைப் படிக்கத்தான் வேண்டுமா என்று அலுத்துக்கொள்வேன்.

பன்னிரண்டாம் வகுப்புவரை நான் படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடம்தவிர வேறு எதற்காகவும் ஏ, பி, சி, டி எழுத்துகளை அணுகியதே கிடையாது.

இதனால், கல்லூரி சென்ற புதிதில் ரொம்பச் சிரமப்பட்டேன். ’எஞ்சினியரிங் பாடமெல்லாம் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று என்ன கட்டாயம்?’ என்றெல்லாம் சுயநலமாக ஆத்திரப்பட்டிருக்கிறேன்.

கல்லூரியில் என்னுடன் படித்த பெரும்பாலான பையன்கள் கான்வென்ட் குழந்தைகளாக வளர்ந்தவர்கள். அவர்கள் வாய் திறந்தால் பிரிட்டிஷோ, ஆமெரிக்கனோ ஆங்கிலம் துள்ளி விளையாடும்.

நல்ல வேளையாக, என்னைப்போல் தமிழ் மீடியம் அப்பாவிகள் நிறையப் பேர் இருந்தோம். அநாவசிய ஆங்கிலம் (முக்கியமாகப் பெண்கள் முன்னால்) பேசுபவர்களைக் கேலி செய்தே பிழைப்பை ஓட்டினோம்.

முக்கியமான விஷயம், அப்போது எங்களுக்குத் தமிழ்ப் பற்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஆங்கிலம் தெரியாது, ஆகவே அதை அடாவடியாகப் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்தோம், அவ்வளவுதான்.

இந்தக் கலகம், சும்மா பீட்டர் விடுகிறவர்களை மிமிக்ரி செய்பவர்களில் தொடங்கி, கல்லூரி ஆண்டு விழாவில் தமிழ்க் கவிதை படிப்பதுவரை நீண்டது. இதன்மூலம் எங்களுக்குக் கிடைத்த தனி அடையாளமும், அந்தஸ்தும், வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அல்ப சுகம்.

இப்படியாக இரண்டரை வருடம் தீர்ந்தது. கடைசி ஆண்டு கேம்பஸ் இண்டர்வ்யூ(வளாக நேர்முகம்?)க்களுக்குத் தயாராகும்போதுதான், எங்களுடைய தப்பு எத்தனை பெரியது என்று புரிந்தது.

சாதாரணமாகவோ, பெண்கள்முன் பந்தா விடுவதற்காகவோ ஆங்கிலம் பேசியவர்களெல்லாம், இப்போது அதனை இண்டர்வ்யூ தயாரிப்புகளில் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். க்ரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு விவாதங்களில் அவர்கள் மணிமணியாகப் பேசக் கேட்கும்போது எங்களுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்போல் இருந்தது.

இத்தனை காலமாக அவர்களைக் கிண்டல் அடித்த நாங்கள், இப்போது குரூப் டிஸ்கஷன்களில் வாய் மூடி மௌனிகளாக அமர்ந்திருந்தோம். ‘நீங்க பேசுங்க’ என்று மற்றவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினாலும், ஒரு ‘ஈஸ்’, ‘வாஸ்’ போட்டுச் சாதாரணமாகப் பேசக்கூட எங்களால் முடியவில்லை.

அதைவிட சங்கடம், முன்பு நாங்கள் கிண்டலடித்த அதே தோழர்கள், பெரிய மனதோடு இப்போது எங்களுக்கு உதவினார்கள். கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பழகு, யாரிடமும் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசு, தப்பு வந்தால் கவலைப்படாதே, ‘தி ஹிந்து’ புரட்டு, சிட்னி ஷெல்டன் படி, டிக்‌ஷ்னரியைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கு என்றெல்லாம் அறிவுரைகள் குவிந்தன.

நாங்கள் பதற்றத்தில் எல்லாவற்றையும் முயன்று பார்த்தோம். ஆனால், ஒரு மாதத்தில் ஒன்பது மடங்கு கஷ்டப்பட்டாலும் பிரசவம் நிகழ்ந்துவிடாதே.

இதனால் கிடைத்த ஒரே நன்மை, நான் சிட்னி ஷெல்டன் பைத்தியமாகிவிட்டேன். அவருடைய எல்லாப் புத்தகங்களையும் திருட்டு வடிவத்தில் வாங்கிப் படித்துக் குடித்தாகிவிட்டது.

ஆனால் ஷெல்டன் எனக்கு க்ரைம் கற்றுக்கொடுத்தாரே ஒழிய, ஆங்கிலம் பேசப் பழக்கவில்லை. நான் இன்னும் ஈஸ், வாஸ் தடுமாற்றத்தில்தான் இருந்தேன்.

அப்போதுதான் நான் முடிவு செய்தேன், இந்த ஜென்மத்தில் எனக்கு ஆங்கிலம் பேச வராது, முயற்சி செய்வது வீண்.

நான் என்னதான் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தாலும், இண்டர்வ்யூவுக்கு வருகிறவர்கள் என்னுடைய வேஷத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே, விதிப்படி நடக்கட்டும்.

ஆனால், நான் நினைத்ததற்கு நேர்மாறாக விதி அமைந்திருந்தது.

என்னுடைய முதல் நேர்முகத் தேர்வை நிகழ்த்தியவர், அவரும் தமிழ் மீடியத்தில் படித்தவரோ, என்னவோ, என்னுடைய ஈஸ், வாஸ் தடுமாற்றத்தைப் பார்த்துக் கொஞ்சம்கூட முகம் சுளிக்கவில்லை, புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தினார்.

ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்த நாற்பது, ஐம்பது வார்த்தைகளை வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரோடு பேசினேன். தப்பும் தவறும் எனக்கே தெரிந்தது. ஆனால் அதைச் சரி செய்ய நேரமில்லை.

அந்த மனிதர் என் கேவலமான மொழியைப் பார்க்கவில்லை, வேறெதையோ பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

ஆனால், அந்த இண்டர்வ்யூவுக்குப்பிறகு, எதார்த்தம் புரிந்துவிட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கிலம் படிக்கதான் வேண்டும், அதைப் பதினெட்டு வயதிலோ, இருபது வயதிலோ தொடங்கினாலும் தப்பில்லை.

அப்போதும், நான் உருப்படியாகப் படிக்கவில்லை, பேசவில்லை, ஆனால் ஆங்கிலப் பிரியர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.

சிட்னி ஷெல்டனில் தொடங்கிய தடிப் புத்தகப் பிரியம், அடுத்தடுத்த க்ரைம் கதை எழுத்தாளர்கள்மேல் தாவியது. வாத்தியார் சுஜாதா அறிமுகப்படுத்திய (நல்ல) ஆங்கில எழுத்தாளர்கள் சிலரையும் தட்டுத் தடுமாறி வாசிக்க ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் (1997-98), Harry Potter வரிசைப் புத்தகங்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன. ஆனால் அவை அப்போது அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை.

அதன்பிறகு நாங்கள் ஹைதராபாத் சென்றோம், ஹிந்தி கற்றுக்கொண்டோம், தெலுங்குப் படம் பார்த்து ஜாலி பண்ணினோம், அலுவலகத்தில் வேறு வழியில்லாமல் ஆங்கிலம் பேசினோம்.

ஹைதராபாதிலிருந்து நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது, ஹாரி பாட்டரும் உலகப் பிரபலம் ஆகத் தொடங்கியிருந்தார். அவருடைய பைரேட்டெட் புத்தகங்கள் காசுக்கு எட்டு ரேஞ்சுக்கு சல்லிசாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன.

நானும் ஹாரி பாட்டரைப்பற்றி ஆஹோ, ஓஹோ என்று நிறைய இடங்களில் படித்தேன். ஆனால் ஏனோ, அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவே இல்லை.

இதற்குள் ஹாரி பாட்டர் வரிசையில் நான்கு புத்தகங்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட். ஐந்தாவது புத்தகத்துக்கு அகில உலகமும் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தது.

அப்போது நான் பூனாவுக்கு ஒரு பயிற்சி வகுப்புக்காகச் சென்றிருந்தேன், பதினைந்து நாள் பயிற்சி, நடுவில் வரும் சனி, ஞாயிறு விடுமுறைகளை எல்லாம் சேர்த்தால் இருபது நாள்களுக்குமேல்.

இருபது நாள் மாணவனாக இருப்பது ரொம்ப போரடிக்கும், ஏதாவது பொழுதுபோக்கு வேண்டாமா?

வழக்கமாக நான் எங்கே பயணம் சென்றாலும், பெட்டியில் நான்கைந்து புத்தகங்கள் இருக்கும். இந்தமுறை மூன்று வாரங்களுக்கான துணிமணிகளை அடைத்ததில், புத்தகங்களுக்கு இடம் இல்லை.

அப்போதுதான், அந்த யோசனை தோன்றியது. பேசாமல் இந்த ஹாரி பாட்டர் சமாசாரத்தை ஈபுக்காக எடுத்துச் சென்றால் என்ன?

இது எனக்குப் பல வகைகளில் வசதி, ஈபுக் லாப்டாப்புக்குள் ஒளிந்துகொள்வதால், பெட்டியில் இடம் தேவையில்லை, வகுப்பு போரடித்தால் இதைத் திறந்து படிக்கலாம், புத்தகம் போரடித்தால் Shift + Delete, அரை நொடியில் அழித்துவிடலாம்.

இப்படிப் பலவிதமாக யோசித்து, இணையத்தில் தேடினேன், நான்கு ஹாரி பாட்டர்களையும் ஒரே PDF கோப்பாக டவுன்லோட் செய்துகொண்டேன்.

பூனாவில் அந்தக் காலை நேரத்தை என்னால் மறக்கவேமுடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சொல்லப்போனால் கொஞ்சம் அலட்சியத்துடன் சாதாரணமாக அந்தக் கோப்பைத் திறந்து படிக்கத் தொடங்கினேன், சில நிமிடங்களுக்குள் ஹாரி பாட்டர் என்னை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.

அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எத்தனையோ மாயாஜாலக் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் அவையெல்லாம் எதார்த்த உலகிலிருந்து சற்றுத் தள்ளியே நிற்கும், இப்படி நம்மையே அந்தக் கற்பனை உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிற ஓர் எழுத்தை நான் அதுவரை வாசித்தது கிடையாது.

உண்மையில், ஹாரி பாட்டருக்கு முன்பே இப்படிப்பட்ட அற்புதமான மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களையெல்லாம் நான் அதன்பிறகுதான் தேடிப் படித்தேன் – முதலில் ரஹ்மானால் கவரப்பட்டு, பின்னர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதனையெல்லாம் தேடிக் கேட்கிற இளைஞர்களைப்போல.

ஹாரி பாட்டர் வாசிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள், எனக்குப் புரிந்துவிட்டது, சந்தேகமில்லாமல் இந்த J K Rowling ஒரு மேதை. நிஜ உலகத்துக்கும், மாய உலகத்துக்கும் நடுவே நூலிழையில் பேலன்ஸ் செய்து நடக்கிற அவர் எழுத்து, வெறுமனே வாசிக்கப்படவேண்டியது இல்லை, கொண்டாடப்படவேண்டியது.

Jk-rowling-crop.JPG

அன்று மாலைக்குள், ஹாரி பாட்டர் வரிசையின் முதல் புத்தகத்தை முடித்து இரண்டாவது தொடங்கிவிட்டேன். மறுநாள் காலை, எங்கள் வகுப்பு தொடங்குவதற்குமுன்னால், அதுவரை வந்த நான்கு புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.

அதன்பிறகு, ஹாரி பாட்டர் புத்தகங்கள் அனைத்தையும் அச்சு வடிவில்தான் படித்திருக்கிறேன், ஈபுத்தகங்கள் அந்தக் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கின்றன.

ஹாரி பாட்டர் ஏழாவது புத்தகம் வெளியாவதற்குச் சில தினங்கள் முன்னதாக, ஏற்கெனவே படித்து முடித்திருந்த ஆறு புத்தகங்களையும் இன்னொருமுறை படித்தேன்.

ஆச்சர்யம், அத்தனை தடிமன் புத்தகங்கள், இரண்டாவது வாசிப்பில்கூட, கொஞ்சமும் போரடிக்கவே இல்லை, மறுபடியும் அந்த உலகத்துக்கு ஒரு ‘ரிடர்ன் ஜர்னி’ சென்றுவந்ததுபோல் ஆறையும் முடித்து, மறுநாள் காலை ஏழாவது புத்தகத்தைத் தொடங்கியது ஓர் இணையற்ற அனுபவம்.

இதற்குமேல் ஹாரி பாட்டர் புத்தகங்களைப்பற்றி, கதையைப்பற்றி எழுதினால் வெறும் உணர்ச்சிமயக் குப்பையாகிவிடும். ஆகவே, இப்போது வேறு விஷயம்.

ஹாரி பாட்டர் வரிசையில் ஏழு நாவல்கள்தவிர, இரண்டு துணைப் புத்தகங்களும் வந்திருக்கின்றன. ‘Quidditch Through The Ages’, ‘Fantastic Beasts And Where To Find Them’ என்ற இந்த இரு நூல்களும், என்னை அவ்வளவாகக் கவரவில்லை.

ஆகவே, சமீபத்தில் ஹாரி பாட்டர் வரிசையில் ’The Tales Of Beedle The Bard’ இன்னொரு புதிய துணைப் புத்தகம் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்தபோது, எனக்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படவில்லை. வழக்கமான ஜே கே ரௌலிங் மேஜிக் இந்தப் புத்தகத்தில் இருக்காது என்று தோன்றிவிட்டது.

ஆனால், ரௌலிங்கும் ஹாரி பாட்டரும் என்னை எந்த அளவு அடிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ‘The Tales Of Beedle The Bard’ வெளியானபிறகுதான் தெரிந்தது. கடையில் அந்தச் சிறிய புத்தகத்தைப் பார்த்தாலே கை, காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது, ‘இதை இன்னும் படிக்காமல் இருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனுஷனா? நீ இத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்’ என்றெல்லாம் என்னை நானே திட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

மூன்று அல்லது நாலு நாள் கழித்து, என்னால் அந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் துணைப் புத்தகத்தையும் அநியாய விலை (ஐநூற்றுச் சொச்சம்) கொடுத்து வாங்கிவிட்டேன்.

Beedle_The_Bard_Wrapper

ஒரே ஆறுதல், இந்தப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கிற லாபம், ஏதோ ஒரு சமூக சேவை நிறுவனத்துக்குச் செல்கிறதாம், அந்தவகையில் காசைக் கொண்டுபோய் எங்கோ கொட்டவில்லை என்று ஒரு திருப்தி.

அது சரி, புத்தகம் எப்படி?

ஹாரி பாட்டர் கதை, ஏழு பாகங்களுடன் முடிந்துவிட்டது. வில்லனாகப்பட்டவன் ஏழாவது பாகத்தின் கடைசி அத்தியாயத்தில் நிரந்தரமாக இறந்துவிட்டான், அதற்குமுன்னால் ஹாரி பாட்டரும் செத்துப் பிழைக்க, சுபம். 

ஆனால், ஹாரி பாட்டர் பிரியர்களுக்கு இது போதவில்லை. ’இன்னும் இன்னும் மேஜிக் வேண்டும்’ என்று அவர்கள் தவிக்க, ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவதுபோல் இந்தப் புதுப் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் ஜே. கே. ரௌலிங்.

உண்மையில், இது புதிய புத்தகமே அல்ல. ஹாரி பாட்டர் ஏழாவது பாகம் ‘Harry Potter And The Deathly Hallows’ல், அவனுடைய தோழி ஹெர்மியானுக்கு ஒரு பழங்கால ஓலைச் சுவடிப் புத்தகம் கிடைப்பதாகக் கதை. அந்தப் பழைய புத்தகம்தான், இப்போது அச்சு வடிவில் வெளியாகியிருக்கிறது.

’The Tales Of Beedle The Bard’ தொகுப்பில் ஹாரி பாட்டர் வருவதில்லை. ஆனால், ஏராளமான மேஜிக் கொட்டிக் கிடக்கிறது. சின்னச் சின்ன குழந்தைக் கதைகளைக் கொண்டு அதே மாயாஜால உலகத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஜே. கே. ரௌலிங்.

ஆனால், நூறு பக்கப் புத்தகத்தில் இந்தக் கதைகள் வெறும் 40%கூட இல்லை. மிச்ச இடத்தை டம்பிள்டோரின் விளக்க உரை போட்டு நிரப்பியிருக்கிறார்கள்.

டம்பிள்டோரின் இந்த விளக்க உரைகளிலும், கொஞ்சம்போல் சுவாரஸ்யம் இருக்கிறதுதான். ஆனால் மேஜிக் படிக்க வருகிறவர்களைப் பாடப் புத்தகம் வாசிக்கச் செய்வது தப்பில்லையா? அந்த இடத்தில் இன்னும் நாலு கதைகளை எழுதியிருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இந்தக் காரணத்தால், ஒரு வாசகனாக எனக்கு இந்தப் புத்தகம் முழுத் திருப்தி அளிக்கவில்லை. ஐந்து குழந்தைக் கதைகளிலும் தெரிகிற அக்மார்க் ஜே. கே. ரௌலிங் எழுத்துமட்டும் சந்தோஷம்.

ஜே. கே. ரௌலிங் இப்போது ஹாரி பாட்டர் என்சைக்ளோபீடியா எழுதிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள், க்ரைம் (த்ரில்லர்) நாவல் முயற்சி செய்கிறார் என்றுகூட ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது, இவற்றில் எதையும் நான் வாங்கப்போவதில்லை, படிக்கப்போவதில்லை.

ஆனால், நான் சொல்வதை நம்பாதீர்கள். இந்தப் புத்தகங்கள் வெளியான மறுதினம் எனக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்துவிடும். அது குப்பையாகவே இருந்தாலும், விலையைப்பற்றி, தரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் உடனே வாங்கிப் படித்துவிடுவேன்.

ஜே. கே. ரௌலிங்கிற்கு நான் ஆயுள் சந்தா செலுத்திவிட்டேன். இந்த மாயத்திலிருந்து என்னால் ஒருபோதும் விடுபடமுடியாது, விருப்பமும் இல்லை.

***

என். சொக்கன் …

27 12 2008

எனது ‘சல்மான் ரஷ்டி’ புத்தகத்தின் மினி விமர்சனம்: ’கிறுக்கல்கள்’ தளத்திலிருந்து:

 

ரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு தொலைந்து போனவராக, போராளியாக.

நம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் ரஷ்டியின் நாவல்கள் பிறந்த கதையை விவரமாக விவரிக்கிறார் சொக்கன். ஃப்த்வா நாட்களை பற்றி, புலம் பெயர்ந்ததால் பட்ட அவஸ்தையைப் பற்றி நடுநிலையாக சொல்கிறார்.

 

முழுவதும் படிக்க: காணமல் போன கதைக் கடல்

நன்றி: subbudu@kirukkal.com

***

என். சொக்கன் …

26 12 2008

ஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும்.

ஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே  முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.

எங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிறிய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார்.

அவருடைய வண்டியில் எந்நேரமும் ஒரு பை நிறையத் துணிகள் காத்திருக்கும். பக்கத்தில் சூடான நெருப்புப் பெட்டி, சற்றுத் தொலைவில் மரக் கிளையில் தூளி கட்டித் தொங்கும் குழந்தை. அதன்கீழே சோர்வாக அமர்ந்திருக்கும் மனைவி.

அந்த அயர்ன் தொழிலாளியைப் பார்க்கும்போது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவராகத் தோன்றும். அவர் ஆடைகளைத் தேய்க்காமல் வெறுமனே மடித்துக் கொடுத்தால்கூட சந்தோஷமாகக் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம்போல் இருக்கும்.

இந்தக் காலத்தில் இரண்டரை ரூபாய் என்பது ஒரு பெரிய விஷயமா? அந்தத் தொகையை நம்பி ஒரு குடும்பம் பிழைக்கிறது என்றால், நல்ல விஷயம்தானே?

ஆனால், என் மனைவிக்கு அவர்மீது தீவிர விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன.

சில மாதங்களுக்குமுன்னால் ஒருநாள், குளித்துவிட்டு வந்து பீரோவில் மேலாக இருந்த சட்டையை எடுத்து அணிந்தேன். எப்போதும் அதுதான் வழக்கம், எனக்கு ஆடைகளில் வண்ணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது, தோன்றாது.

ஆகவே, சட்டை அடுக்கில் இருக்கும் முதலாவது, பேன்ட் அடுக்கில் இருக்கும் முதலாவது என்றுதான் ’தேர்ந்தெடுத்து’ அணிவேன், அது ராமராஜன் காம்பினேஷனாக இருந்தாலும் சந்தோஷமே (பெரும்பாலும் அப்படிதான் அமையும் 😉

நான் வெளியூர் போகும்போது, என் மனைவி மெனக்கெட்டு உடைகளைப் பொருத்தம் பார்த்து வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவார், விமானத்தில் அவை அலுங்கிக் குலுங்கி வரிசை மாற, நான் வழக்கம்போல் கேனத்தனமாக எதையாவது போட்டுக்கொண்டு போய் நிற்பேன், என் முகம் தெரிந்த யாரும் அதைப் பார்ப்பதில்லை என்பதால், இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

ஆனால் அன்றைக்கு, நான் தேர்ந்தெடுத்த சட்டையில் ஏதோ கோளாறு என்று எனக்கே தோன்றியது, கழற்றி முதுகைப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் சில கோடுகள்.

என் மனைவியிடம் விசாரித்தேன், ‘வாஷிங் மெஷின்ல எதுனா கோளாறா? சரியாத் துவைக்கலை போலிருக்கே’

அவருக்கு எங்கள் வீட்டு இயந்திரங்களைக் குறை சொன்னால் பிடிக்காது, போன நூற்றாண்டில் நாங்கள் வாங்கிய ஷார்ப் டிவிதான் உலகத்திலேயே பெஸ்ட் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறவர் அவர்.

ஆகவே, ‘வாஷிங் மெஷின்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’ என்று சீறலாகப் பதில் வந்தது, ‘எல்லாம் அந்த அயர்ன்காரன் வேலை’

அதாகப்பட்டது, நாங்கள் துணிகளை ஒழுங்காகத் துவைத்து அவரிடம் அனுப்புகிறோம், அவருடைய வண்டியில், மரத்தடியில், குடிசையில் எங்கோதான் அழுக்கு படிந்துவிடுகிறது.

இந்த வாதத்தை (அல்லது ஊகத்தை) என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ’நம் முதுகு அழுக்கு நமக்குத் தெரியாது’ என்பதுபோல் ஒரு பழமொழியைச் சொன்னேன்.

கணவன்மார்களுக்கு அதிபுத்திசாலித் தோற்றத்தைத் தரும் பழமொழிகள் மனைவிகளுக்குப் பிடிப்பதில்லை. ’உனக்கு என்ன தெரியும்? நான் நாலு மாசமாப் பார்க்கறேன், அவன்கிட்டே போற ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காதான் திரும்பி வருது’

எனக்கு எதுவும் தெரியாதுதான். அந்தச் சட்டையைத் துவைக்கப் போட்டுவிட்டு அடுத்தபடியாக இருந்த இன்னொரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினேன்.

இரண்டு நாள் கழித்து, இதேபோல் இன்னொரு அழுக்குச் சட்டை. அப்புறம் ஒருநாள் பேன்ட்டில் சின்ன ஓட்டை.

அவ்வளவுதான். என் மனைவி பொங்கி எழுந்துவிட்டார், ‘இந்தாளுக்கு அக்கறையே இல்லை, சுத்த கேர்லெஸ், இனிமே இவன்கிட்டே துணி அயர்ன் செய்யக் கொடுக்கப்போறதில்லை’ என்றார்.

எங்கள் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் நுட்பம்(?) எங்கள் இருவருக்கும் தெரியாது, அது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பது தெரிந்தாலும், சோம்பேறித்தனம்.

ஆகவே, இதெல்லாம் சும்மா ஒரு வேகத்தில் சொல்வதுதான், நாளைக்கு மறுபடி அவரிடமேதான் துணிகளைக் கொண்டுசெல்வார் என்று நினைத்துக்கொண்டேன்.

வழக்கம்போல், நான் நினைத்தது தப்பு.

நாங்கள் பேசிய அன்றைய தினமே, என் மனைவி சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்கள் சிலவற்றில் சுற்றி இன்னோர் அயர்ன் காரரைப் பிடித்துவிட்டார், அவரிடம் எல்லாத் துணிகளையும் கொடுத்து வாங்கிவிட்டார்.

இந்தக் கூத்து சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. அதற்குள் நாங்கள் சைக்கிளில் துணி கடத்துவதைக் கவனித்துவிட்ட அந்த அயர்ன் காரர், எங்கள் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.

அவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது, எங்களுக்குக் கன்னடம் சுமாராகதான் தெரியும்.

ஆகவே, அன்றைக்கு நாங்கள் ஆவேசமாக, ஆனால் அதிகப் பிரயோஜனம் இல்லாமல் அவரவர் மொழியில் பேசிக்கொண்டோம். அந்தப் பேச்சின் சாராம்சம்:

அவர்: ஏதோ ஒண்ணு ரெண்டு தப்பு நடந்திருக்கலாம், அதுக்காக நீங்க என் பிழைப்பைக் கெடுக்கக்கூடாது

நாங்கள்: எங்கள் துணி, அதை நாங்கள் யாரிடமும் கொடுப்போம், அதைக் கேட்க நீ யார்?

கடைசியில் அவர் காச்மூச்சென்று ஏதோ கத்திவிட்டுத் திரும்பினார். கோபத்தில் என் மனைவி அடுத்த கட்டச் சதியில் இறங்கினார்.

மறுநாள், இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த அயர்ன் காரரிடம் பேசி, அவரை எங்கள் அபார்ட்மென்டுக்கே இறக்குமதி செய்தாகிவிட்டது. இங்கே அவர் காங்க்ரீட் நிழலில் நின்றபடி இரண்டு மணி நேரத்தில் எல்லா வீட்டு ஆடைகளையும் தேய்த்து முடித்துவிடுகிறார், கணிசமான வருமானம்.

எங்களுக்கும், துவைத்த ஆடைகளைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் நடக்கவேண்டியதில்லை, அவரே வீட்டு வாசலில் வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார், தேய்த்துக் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக்கொள்கிறார்.

சீக்கிரத்தில், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் ஆடைகளைத் தேய்க்கக் கொடுத்தார்கள். தெரு மத்தியிலிருந்த பழைய அயர்ன் காரருக்குப் பெரும் பொருள் இழப்பு.

சில நாள் கழித்து, இரண்டு அயர்ன் காரர்களும் எங்கள் வீட்டு வாசலில் குடுமி பிடிச் சண்டை, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே, நீ இந்த நொடியே வெளியில் ஓடு’ என்று கத்தினார் பழையவர்.

பதிலுக்கு இந்தப் புதியவரும் விட்டுக்கொடுக்கவில்லை, ‘இந்தத் தெரு என்ன உன் பெயரில் எழுதி வைத்திருக்கிறதா? வேணும்ன்னா நீ ஓடிப் போ’ என்று சீறினார்.

சுமார் முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

அதன்பிறகு, பழைய அயர்ன் காரர் எங்களுக்கு ஜென்ம விரோதியாகிவிட்டார். அந்தப் பக்கம் நாங்கள் சாதாரணமாக நடந்து சென்றாலே அவருடைய குடும்பம் முழுக்க (தூளிக் குழந்தை உள்பட) முறைக்கிறது.

இதில் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன பயம் என்றால், தினசரி நான் அலுவலகத்துக்கு அவருடைய தள்ளு வண்டியைக் கடந்துதான் போகவேண்டும். என்றைக்காவது வழி மறித்து அடித்து, உதைத்துவிடுவாரோ?

நல்ல வேளையாக, இதுவரை அப்படி எந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக, எங்கள் தெருவில் இரண்டு அயர்ன் காரர்கள், ஆச்சர்யமான விஷயம், இருவருடைய வண்டிகளிலுமே துணிகள் நிரம்பி வழிகிறது.

***

என். சொக்கன் …

25 12 2008

திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள்.

அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார்.

’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா.

சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார்.

உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார்.

ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார்.

(தகவல்: போளூர் சி. ரகுபதி – பெண்ணே நீ – டிசம்பர் 2008)

***********

pattimanramRaja

இப்போ பள்ளியில முதல் மதிப்பெண் வாங்கணும்னா கடுமையா போட்டி போட வேண்டியிருக்கு. இதனால, கதைப் புத்தகங்கள் படிக்கிறது குறைஞ்சு போச்சு.

அதுக்காக, இளைய தலைமுறையினர்கிட்ட வாசிக்கும் பழக்கமே இல்லைன்னு சொல்லமுடியாது. விருப்பமான துறையா இருந்தா அவங்களே ஆர்வமாகத் தேடிப் படிக்கவும் செய்யறாங்க.

என் மகன் பத்தாவது படிக்கிறான். ‘சுட்டி விகடன்’ ஆர்வமாகப் படிப்பான், அத நான் வாங்கித் தந்துவிடுவேன்.

ஒருநாள் ‘மோட்டார் விகட’னைப் பார்த்திருக்கிறான். அதுவும் வேணும்ன்னு கேட்டான்.

எனக்கு அவனுடைய ஆர்வத்தை முதல்ல புரிஞ்சுக்கமுடியலை. அந்தப் புத்தகத்தோட விலை வேற அதிகமா இருந்ததால, ‘உனக்கெதுக்குடா அதெல்லாம்’ன்னு கேட்டேன்.

‘உன்னால கார்தான் வாங்கித் தரமுடியலை, அட்லீஸ்ட் கார் பத்தின புத்தகத்தையாவது வாங்கித் தாயேன்’னு பளிச்னு கேட்டான்.

மூஞ்சியை கர்ச்சீப்பால துடைச்சுகிட்டு, இப்போ மோட்டார் விகடன் வாங்கித் தந்துட்டு வர்றேன். சகல கார், பைக்குகளோட பேரும், ரேஸ் வீரர்களோட பேரும் அவனுக்கு இப்போ அத்துப்படி.

நான் வேற எத்தனையோ புத்தகங்களை வாங்கிக் கொடுத்தப்போ படிக்கலை. ஆனா, அவனுக்கா ஒரு விஷயத்தில ஈடுபாடு வந்ததும் தேடிப் படிக்க ஆரம்பிச்சுட்டான்.

(ராஜா (பட்டிமன்றப் பேச்சாளர்) – பேட்டி: மகாதேவன் – விகடன் புக்ஸ் – டிசம்பர் 2008)

***********

எனக்கு பதின்மூன்று வயது வரும் வரைக்கும் ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் என்று நினைத்திருந்தேன். அல்ஜிப்ரா என்ற புதுக் கணிதப் பாடம் தொடங்கியபோது எங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் x க்கு 3, 8 என்று இரண்டு விடைகள் இருக்கலாம் என்று கூறினார்.

இன்னும் சில வருடங்கள் கழித்து கல்லூரியில் படிக்கும்போது வால் நட்சத்திரத்தின் வால் எங்கே இருக்கிறது என்று ஒரு கேள்வி எழுந்தது. வேறு எங்கே இருக்கும், பின்னுக்குத்தான். அப்படி இல்லை. சூரியனை நோக்கிச் செல்லும்போது அது பின்னால் இருக்கும்; சூரியனை தாண்டிப் போகும்போது அது வாலை எடுத்து முன்னால் வைத்துக்கொள்ளும். அப்படிச் சொல்லித் தந்தார்கள்.

இதே மாதிரித்தான் சூரியக் குடும்பத்தில் எது கடைசிக் கிரகம் என்ற கேள்வியும். விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான். புளூட்டோ. ஆனால் உண்மை வேறு மாதிரியிருந்தது. சில நேரங்களில் நெப்டியூன் தன் எல்லையை மீறி புளூட்டோவையும் தாண்டி சுற்றிவரும். அப்போது நெப்டியூன்தான் கடைசிக் கிரகம்.

சமீபத்தில் பொஸ்டன் போனபோது அங்கே பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்த ஒருவரைச் சந்தித்தேன். இவருடைய நாடு ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டது. ஒரு பேச்சுக்காக அவரிடம் உங்கள் நாட்டில் எத்தனை தீவுகள் என்று கேட்டு வைத்தேன்.

மிக எளிமையான கேள்வி. ஆனால் அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். யோசித்துவிட்டு இரண்டு பதில்கள் கூறினார். கடல் வற்றிய சமயத்தில் 7108 தீவுகள், கடல் பொங்கும்போது 7100 தீவுகள் என்றார்.

பல வருடங்கள் சென்றபிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்ற கணக்கு சரியல்ல என்பது புரிந்தது.

(அ. முத்துலிங்கம் – ’அ. முத்துலிங்கம் கதைகள்’ நூலின் முன்னுரையிலிருந்து – தமிழினி வெளியீடு – 2003 – விலை ரூ 350/-)

***********

கவிஞர் ருட்யார்ட் கிப்ளிங் ‘San Francisco Examiner’ என்ற பத்திரிகையில் நிருபராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரை வேலையிலிருந்து நீக்கி உத்தரவிட்ட டிஸ்மிஸ் ஆர்டர்:

I’m Sorry Mr. Kipling, But You Just Don’t Know How To Use English Language. This Is Not A Kindergarten For Amateur Writers”

(தகவல்: DCB News – November 2008)

***********

‘பலரும் என்னைச் சாதனையாளர் என்று புகழ்கிறார்கள். ஆனால், பெரிய அளவு படிக்காததால், எனக்கு அந்தப் பெருமை எல்லாம் இல்லை. இன்னமும் படித்தவர்கள் கூட்டத்தில் அமரும்போது கூச்சப்படுகிறேன். கல்வி மட்டும்தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது – ஆச்சி மனோரமாவின் வாக்குமூலம் இது.

(தகவல்: மல்லிகை மகள் – டிசம்பர் 2008)

 

நொறுக்குத் தீனி – 1

‘இந்த ரயில் மைசூருக்குப் போகுமா ?’

தெளிவான கன்னடத்தில் அவர் நிறுத்தி, நிதானித்துதான் கேட்டார். என்றாலும், எனக்கு சரியாய்ப் புரியவில்லை. காரணம், ஒரு வார்த்தைக்கும், இன்னொரு வார்த்தைக்கும் இடையில் அவர் விடுத்த அதீத இடைவெளிதான் – ரயில் நன்றாக வேகம் பிடித்திருந்த காரணத்தால், அந்த இடைவெளிகளில் ஜன்னலோரக் காற்று தாராளமாய்ப் புகுந்துகொள்ள, ‘மைசூர்’ என்பதைத்தவிர, வேறேதும் எனக்கு அர்த்தமாகவில்லை.

‘என்ன கேட்டீங்க ?’, அவருடைய முகத்தை நெருங்கினாற்போல் விசாரிக்கையில், குப்பென்று மதுபான வாடை என்னைத் தாக்கியது. சட்டென விலகி, என் இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.

‘இந்த ரயில் மைசூருக்குப் போறதுதானே ?’, அவர் மீண்டும் நிதானமாய்க் கேட்டார்.

‘இல்லைங்க, இது தஞ்சாவூர் போற வண்டி !’, அவசரமாய்ச் சொன்னேன் நான், ‘மைசூர் பாஸஞ்சர் ஆறே முக்காலுக்குப் போயிருக்குமே சார், நீங்க ட்ரெயின் மாறி ஏறிட்டீங்கன்னு நினைக்கறேன் !’

‘அப்படியா ? சரி சரி !’, அவர் பெரிதாய்த் தலையாட்டிவிட்டு, ஜன்னலை ஒட்டினாற்போல் சாய்ந்துகொண்டார்.

அவருடைய நிதானத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பெங்களூரிலிருந்து, மைசூருக்குச் செல்லவேண்டியவர், வேறொரு கோடியிலிருக்கிற தஞ்சாவூருக்குப் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், அதுகுறித்த சிறு பதட்டமும் அவரிடம் இல்லை.

நானாக அவரருகே குனிந்து, சாராய நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டபடி கன்னடத்தில் கேட்டேன், ‘சார், நீங்க எங்கே போகணும் ?’

‘மைசூருக்கு !’

‘இந்த ரயில் மைசூர் போகாதுங்களே !’

‘சரி !’, முகத்தில் சிறு சலனமும் இல்லாமல் சொன்னார் அவர்.

அதற்குமேல் அவரிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய தோல்வியை முகபாவத்தில் காட்டிக்கொள்ளாமல், பழையபடி சரிந்து அமர்ந்துகொண்டேன். ஆனாலும், பார்வையை அவரிடமிருந்து விலக்கமுடியவில்லை.

ஜன்னலுக்கு வெளியே அதிவேகமாய் விரையும் கட்டிடங்களை வெறித்துக்கொண்டிருந்தவருக்கு, சுமாராய் அறுபது வயது கடந்திருக்கவேண்டும், கட்டுப்பாடின்றி நடுங்கும் உடல், அழுக்கான உடை, ரப்பர் செருப்பு, முகத்தில் பல நாள் தாடி – அவருடைய கறுத்த முகத்தில், அந்த வெள்ளைத் தாடி, ஒட்டப்பட்டதுபோல் துருத்திக்கொண்டு தெரிந்தது.

நெடுந்தூரப் பயணிகள் நிறைந்திருந்த அந்த ரயிலுடன், கொஞ்சமும் பொருத்தமற்றவராய்த் தெரிந்தார் அவர். கையில் பெரிய பெட்டியோ, பையோ இல்லை, தண்ணீர் பாட்டில் இல்லை, கண்களில் முன்னிரவுத் தூக்கம் நிறைந்திருக்கவில்லை.

மோனத்தவத்தில் ஆழ்ந்திருக்கிறவர்போல் கண்மூடி அமர்ந்திருந்த அவரைப் பார்க்கப்பார்க்க, என்னுடைய பதட்டம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது – மைசூருக்குச் செல்லவேண்டியவர், இப்போது தஞ்சாவூருக்குப் போய் என்ன செய்யப்போகிறார் ? இவருக்குத் தமிழ் தெரியுமா ? அங்கிருந்து எப்போது, அல்லது எப்படி மைசூர் திரும்புவார் ? அதற்குத் தேவையான காசு இவரிடம் இருக்குமா ? பயணத்தின் இடையே, யாரேனும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் என்ன செய்வார் இவர் ? அவர்கள் இவரை ஒழுங்காய் விசாரித்து, சரியாகப் புரிந்துகொண்டு, மைசூர் ரயிலுக்கு மாற்றிவிடுவார்களா ? அல்லது நடுப்பாதையில் எங்கேனும் புறக்கணித்துவிடுவார்களா ?

கேள்விகளின் கனம் தாங்கமுடியாமல், மீண்டும் நானே என் தயக்கத்தை உடைக்கவேண்டியிருந்தது, ‘சார், நாம இன்னும் பெங்களூர் தாண்டலை, நீங்க இந்த ஸ்டேஷன்-ல இறங்கிடுங்க, அடுத்த மைசூர் வண்டி எப்போ வரும்-ன்னு விசாரிச்சுகிட்டு, அதிலே போயிடலாம் நீங்க !’, என்றேன் அவரிடம்.

‘சரி !’, என்றார் அவர். இதைச் சொன்னபோது, அவருடைய முகத்தின் வெறுமை, என்னை ஓங்கி அறைவதுபோலிருந்தது.

என்ன மனிதர் இவர் ? ‘சரி’ என்ற ஒற்றை வார்த்தையைத்தவிர, வேறேதும் பேசமாட்டேன் என்று ஏதேனும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறாரா ? தான் செய்துவிட்ட தவறின் தீவீரம் புரியவில்லையா ? அல்லது, புரிந்தும் அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறாரா ?

ஆச்சரியத்தோடு அவரைக் கூர்ந்து பார்த்தேன் நான். அவரிடம் தெரிவது குடிகாரக்களையா, அல்லது சாமியார்க்களையா என்று என்னால் சரியாக ஊகிக்கமுடியவில்லை. ஆனால், அந்த முகத்தின் சலனமின்மை, ‘இந்த உலகத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இங்கே நடப்பவற்றுடன் எனக்கான தொடர்பு முறிந்துவிட்டது. அதிர்ச்சி, சோகம், சுகம், சந்தோஷம், நகைச்சுவை, கண்ணீர் ஆகிய உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் !’, என்று அறிவிப்பதைப்போலிருந்தது.

நான் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. நீண்ட பிளாட்ஃபாரத்தை ஒட்டினாற்போல் ஊர்ந்த ரயில், வேகம் குறைந்து நின்றதும், நான் அவரைப் பார்க்க, அவர் சட்டென்று எழுந்துகொண்டார். விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தார்.

இப்போதுதான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. எப்படியும் பெங்களூரிலிருந்து, மைசூருக்கு இன்னொரு ரயில் இருக்கும், இந்தப் பெரியவர் சரியாக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவார் என எண்ணிக்கொண்டேன்.

பெருமூச்சோடு, நான் என் கால்களை நன்றாக முன்னே நீட்டி அமர்கையில், சட்டென்று எதிலோ இடித்துக்கொண்டேன். குனிந்து பார்த்தால், ஒற்றைச் செருப்பு – அந்தப் பெரியவருடையது.

‘சார், சார் !’, நான் வாசலைப் பார்த்துக் கத்தினேன், ‘ஒரு செருப்பை விட்டுட்டீங்க, பாருங்க !’

இறங்கத் தயாராய், கதவருகே நின்றிருந்த அவர் நம்பிக்கையில்லாமல் கீழே குனிந்து பார்த்தார், வலது காலில்மட்டும் செருப்பு இருந்தது.

முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்போ, எனக்கு நன்றி சொல்லும் பாவனையோ ஏதுமில்லாமல், விறுவிறுவென்று, அவருடைய பழைய இருக்கைக்கு நடந்துவந்தார், அங்கே கிடந்த செருப்பில் இடது காலை நுழைத்துக்கொண்டார், சட்டென்று அங்கேயே துவண்டு அமர்ந்துவிட்டார்.

நான் திகைப்போடு அவரைப் பார்த்துக்கொண்டிருக்கையில், ரயில் நகரத்துவங்கிவிட்டது, ‘ஐயோ, நீங்க இங்கே இறங்கணும் சார் !’, என்று அனிச்சையாய்க் கத்தினேன் நான்.

என் படபடப்பை அவர் பொருட்படுத்தவே இல்லை. ஏதோ ஒரு வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் நிதானமாக என்னைக் கூர்ந்து நோக்கியவர், ‘இந்த ரயில் மைசூருக்குப் போறதுதானே ?’, என்றார்.

*******

அன்றைக்கு எங்கள் பெட்டியில் வெளிச்சம் மிகக் குறைவாய் இருந்தது. மங்கலாய் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு விளக்குகளும்கூட, மெல்லமெல்ல சுரத்துக் குறைந்துகொண்டேயிருந்தன. குழல் விளக்குகளின் வெளிச்சம் சுருங்கிச் சிறுத்து, இரவு விளக்கின் ஒளியளவு ஆகியிருந்தது.

அந்தக் குறைவெளிச்சத்தில், அவரைப் பார்க்கையில், என்னுடைய கற்பனைகளும், கவலைகளும் பலமடங்கு பெருகிவிட்டன – பெங்களூரைக் கடந்து ரொம்ப தூரம் வந்தாகிவிட்டது, அநேகமாய் வண்டி தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்திருக்கக்கூடும், இனிமேல் இந்தப் பெரியவரின் நிலைமை என்னாகுமோ ? இவர் மீண்டும் மைசூருக்குத் திரும்ப முடியுமோ, முடியாதோ !

என்னருகே அமர்ந்திருந்த ஒருவர், அந்தப் பெரியவரைச் சுட்டிக்காட்டி, கட்டைவிரலால் குடிப்பதுபோல் சைகை காட்டினார். நானும் சம்மதமாய்த் தலையாட்டினேன். இருவரும் மெலிதாய் உச்சுக்கொட்டிக்கொண்டோம்.

‘பெரிய ஸ்டேஷன்கள்ல இது ஒரு தொல்லை சார், ஒரே நேரத்தில பத்து ரயில் கிளம்புதா, யாராச்சும் இப்படித் தவறி ஏறிடறாங்க !’, என்றார் அவர். புரிதலும், அனுதாபமும் கலந்த அவரது பார்வை, என்னைப்போலவே, அந்தப் பெரியவரின்மேல், அவருக்கும் அக்கறை உள்ளதைத் தெரிவித்தது, ‘பாவம் சார், தெரியாத ஊர்ல மாட்டிகிட்டு எப்படிக் கஷ்டப்படப்போறாரோ !’

அடுத்த சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன. பின்னர், சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஹோசூர் வந்ததும், இவரைப் பிடிச்சு இழுத்து, வெளியே போட்டுடலாமா சார் ?’, பொறுக்கமாட்டாமல் கேட்டேன்.

‘ஐயோ, அதெல்லாம் தப்பு சார் !’, என்றார் அவர், ‘இது அவரோட மிஸ்டேக், அதுக்கு நாம என்ன செய்யமுடியும் ? சொல்லுங்க !’

நான் மௌனமாகிவிட்டேன். இவர் சொல்வதும் நியாயம்தான். ஆனால், அந்தப் பெரியவர் செய்தது தவறா, அல்லது அறியாமையா ? விபரம் தெரியாமல் தப்பான ரயிலில் ஏறிவிட்டவர்களைக் கீழே இறக்கிவிடுவது யாருடைய பொறுப்பு ?

ரிசர்வேஷன் பெட்டியானால், ரயில் அதிகாரிகள் யாராவது வருவார்கள், அவர்களிடம் விபரத்தை எடுத்துச்சொல்லி, ஏதேனும் உதவக் கேட்கலாம். ஆனால், இருண்டுகிடக்கும் இந்தப் பொதுப்பெட்டியை, அவர்களில் ஒருவரும் சீண்டப்போவதில்லை. இப்போது நாம் என்ன செய்யவேண்டும் ? என்னதான் செய்யமுடியும் ?

நான் அவரையே பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். தஞ்சாவூர்ப் பெரிய கோவில் வாசலில், ‘மைசூர் வண்டி எங்கே, எப்போ வரும் ?’, என்று அவர் கன்னடத்தில் கதறிக்கொண்டிருப்பதுபோலவும், போகிற, வருகிறவர்களெல்லாம், அவர்மேல் பிச்சைக் காசுகளை வீசி எறிவதுபோலவும் ஒரு பிம்பம் எனக்குள் தோன்றி, விடாமல் அலைக்கழித்தது.

என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர், என்னுடைய மனக் குழப்பங்களைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும், ‘இதை நினைச்சு, நீங்க ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்க சார் !’, என்று சிரித்தபடி சொன்னார் அவர், ‘இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு கோணமும் இருக்கு !’

‘என்னது ?’, ஆர்வமில்லாமல் கேட்டேன்.

அவர் மிகச் சாதாரணமான தொனியில், ஒரே ஒரு கேள்வி கேட்டார், ‘இந்தப் பெரியவர், மைசூருக்குப் போகவேண்டியவர், தெரியாம, தஞ்சாவூர் வண்டியில ஏறிட்டார்-ன்னு நாம எல்லாரும் நினைக்கறோம், ஆனா, உண்மையிலேயே அவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவரா இருந்தா ?’

நான் அவரை லேசான ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தேன், ‘நீங்க என்ன சொல்றீங்க சார் ? எனக்கு சரியாப் புரியலை !’

அவர் மெலிதாய்ச் சிரித்தபடி, கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார், ‘அதாவது சார், இப்போ இந்தப் பெரியவர் விஷயத்தில ஏதோ குழப்படி நடந்திருக்கு-ன்னுமட்டும் நமக்குத் தெளிவாப் புரியுது ! ஆனா, அந்தக் குழப்பம் எது-ன்னு நம்மால சரியாச் சொல்லமுடியாது – இவர் மைசூருக்குப் போகவேண்டியவர், தப்பான ரயில்ல ஏறியிருக்கார்-ங்கறது ஒரு சாத்தியம், இவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவர், சரியான ரயில்ல ஏறிட்டு, குடிபோதையில, இப்போ நம்மகிட்டே ‘மைசூர்’ன்னு தப்பான ஊர் பேரைச் சொல்லி விசாரிக்கறார்-ங்கறது இன்னொரு சாத்தியம், இல்லையா ?’

ஏதோ கொஞ்சமாய்ப் புரிவதுபோலிருந்தது, மையமாய்த் தலையாட்டிவைத்தேன்.

‘அதனாலதான் சொல்றேன், நீங்க இந்தக் கோணத்திலிருந்து கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க, இப்போ நீங்க அடுத்த ஸ்டேஷன்-ல இவரைக் கீழே இறக்கிவிட்டுடறீங்க-ன்னு வெச்சுப்போம், இவர் ஒருவேளை நிஜமாவே தஞ்சாவூர் போகவேண்டியவரா இருந்தா, நீங்க செஞ்சது தப்பு-ன்னு ஆயிடும், இல்லையா ?’

‘ஆ – ஆமாம்’, திணறலாய்ச் சொன்னேன் நான், எதிர் இருக்கையில் கவிழ்ந்து அமர்ந்திருந்த அந்த தாடிக்காரரை உன்னித்துப் பார்த்தபடி, ‘இப்போ நாம என்னதான் பண்றது ?’

‘அதான் சொன்னேனே சார், இதிலே நாம பண்ணக்கூடியதுன்னு ஒண்ணுமே இல்லை, நான் சொன்ன ரெண்டு தப்பிலே, எந்தத் தப்பு நடந்திருக்கு-ன்னு முடிவுபண்றதுக்கு நாம யாரு ? அதை அவர்கிட்டேயே விட்டுடுங்க !’

‘எவர்கிட்டே ? கடவுள்கிட்டேயா ?’

அவர் பெரிதாய்ச் சிரித்தபடி, ‘கடவுளை ஏன் சார் இதிலே இழுக்கறீங்க ?’, என்றார், பின்னர் அந்தக் குடிகாரப் பெரியவரைச் சுட்டிக்காண்பித்து, ‘இந்தக் கிழவர் ரயில் ஏறினதிலே தப்பு செஞ்சிருந்தா, அதுக்கான கஷ்டத்தை அவர் அனுபவிச்சாகணும், இல்லைன்னா, நாளைக்குக் காலையில குடிபோதை தெளிஞ்சப்புறம், சந்தோஷமா தஞ்சாவூர்ல இறங்கி, வீட்டுக்குப் போகட்டும் ! அவ்ளோதான் !’

இப்படிச் சொல்லிவிட்டு, பையிலிருந்து ஒரு காற்றுத் தலையணையை எடுத்து ஊதத்துவங்கினார் அவர். உட்காரும் இருக்கைகளுக்கு மேலே, துண்டு விரித்து ரிசர்வ் செய்திருந்த பகுதியில் ஏறிப் படுத்துக்கொண்டார்.

எனக்குத் தூக்கம் வரவில்லை, அவர் சொன்னதைத் திரும்பத்திரும்ப அசைபோட்டவாறு, ஜன்னலுக்கு வெளியே வெறித்துக்கொண்டிருந்தேன். எதிர் இருக்கையில் அந்தப் பெரியவர், உட்கார்ந்த நிலையில் கண்மூடித் தூங்கியிருந்தார்.

ரயில் ஹோசூரில் நின்று, கிளம்பியபின், யதேச்சையாய் நிமிர்ந்து பார்த்தபோது, அவருடைய தூக்க முகத்தில், குழந்தைத்தனமான ஒரு மெல்லிய புன்முறுவல் தோன்றி மறைந்தாற்போலிருந்தது.

***

பின்குறிப்புகள்:

1. 2004 மார்ச் மாதம் எழுதிய சிறுகதை இது, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘வடக்கு வாசல்’ இதழில் பிரசுரமானது.

2. இந்தப் பழைய கதையை இங்கே மீள்பதிவு செய்யக் காரணம், ஜெயமோகன் அவர்களின் இந்த அற்புதமான கட்டுரை. இதுவும் கிட்டத்தட்ட அதேபோன்ற அனுபவம் (கொஞ்சம் கற்பனை கலந்தது) என்பதால், ஒரு வாசிப்பு அனுபவத்துக்காக இங்கே பதிவு செய்து வைக்கிறேன்

3. மேற்சொன்ன ஜெயமோகனின் கட்டுரை, எனது அத்தைக் கட்டுரையின் தொடர்ச்சிபோல் அமைந்திருப்பதாக நண்பர் டைனோ சுட்டிக்காட்டினார், இல்லாவிட்டால் ஜெயமோகனின் இந்த நல்ல பதிவைத் தவறவிட்டிருப்பேன், அவருக்கு என் நன்றி

4. அதிகாலை 1:44க்குப் பதிவு எழுதினால், அதுவும் தேவையற்ற பின்குறிப்புகள் எழுதினால், இப்படிதான் குழப்பமாக அமையும், உறங்கப்போதல் உத்தமம்

***

என். சொக்கன் …

23 12 2008

இந்த வருடம் (2009) சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எனது நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன, அவைபற்றிய சிறுகுறிப்புகள் இங்கே:

1. எனக்கு வேலை கிடைக்குமா?

 Enakku Velai Kitaikkuma

குங்குமம் இதழில் எட்டு வாரங்கள் ‘லட்சத்தில் ஒருவர்’ என்ற பெயரில் வெளியான தொடரின் விரிவான புத்தக வடிவம்.

‘லட்சத்தில் ஒருவர்’ தொடர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதியவர் வேலை பெறுவதற்கான சில வழிகளைமட்டுமே எடுத்துக்காட்டியது. ஆனால் இந்தப் புத்தக வடிவத்தை, ஒரு குறிப்பிட்ட துறையுடன் நிறுத்திக்கொள்ளாமல் எல்லோருக்கும் பொருந்தும்வகையில் மாற்றி அமைத்திருக்கிறோம்.

இந்நூலில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அம்சம் ’Soft Skills’ எனப்படும் மென்கலைகளைப்பற்றிய விரிவான அறிமுகம், அவைகுறித்த விளக்கங்கள், பயிற்சிமுறைகள், சின்னச் சின்ன உதாரணக் கதைகளுடன்.

மேலும் விவரங்கள் இங்கே

2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை

Amul

குஜராத் மாநிலப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற நீளமான பெயர், அடையாளம் கொண்ட அமுலின் வெற்றிக் கதை.

அமுல், இந்தியாவின் முதல் கூட்டுறவுப் பால் பண்ணை அல்ல. எனினும், மற்ற யாரும் அடையாத வெற்றியை அது பெற்றது, வெண்மைப் புரட்சிக்குக் காரணமாகவும் அமைந்தது. இதற்கான பின்னணிக் காரணங்கள், அமுலின் நிறுவனத் தலைவரான திரிபுவன் தாஸ், அதன் முதன்மைப் பிதாமகராக இயங்கிய தலைவர் வர்கீஸ் குரியன், தொழில்நுட்ப வெற்றிக்குக் காரணகர்த்தாவாக அமைந்த ‘கில்லி’கள், வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் அமுல் சந்தித்த பிரச்னைகள், சவால்கள், வில்லன்கள், அவர்களை எதிர்கொண்ட விதம் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாக உண்டு.

3. ரதன் டாடா

ratan-tata

டாடா குழுமத்தின் இப்போதைய தலைவர் ரதன் டாடாவின் விரிவான வாழ்க்கை வரலாறு.

பிரச்னை என்னவென்றால், டாடா நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருடைய வாழ்க்கை வரலாறையும் தனியாகச் சொல்லவே முடியாது. ஏதோ ஒருவிதத்தில் அவர்களுடைய கதை முந்தைய தலைமுறையினர், டாடா நிறுவனர்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும்.

ஆகவே, ரதன் டாடாவின் கதையைச் சொல்லும் இந்நூல், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வரலாறையும் தொட்டுச் செல்கிறது. ரதன் டாடாவின் அமெரிக்க வாழ்க்கை, இந்தியாவுக்குத் திரும்பிய கதை, ஆரம்ப காலத் தடுமாற்றங்கள், பலத்த போட்டிக்கு நடுவே அவர் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்படும்வரை நிகழ்ந்த போராட்டங்கள், ஜே. ஆர். டி. டாடாவின் ஆளுமை, ருஸி மோடியின் உள் அரசியல், டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸில் ரதன் டாடா கொண்டுவந்த முன்னேற்றங்கள், இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப அவர் டாடா குழுமத்தில் செய்த மாற்றங்கள், and of course, Tata Indica, அதன் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் நுட்பம், இனி வரப்போகும் Tata Nano, மேற்கு வங்காளத்தில் நானோ தொழிற்சாலை சந்தித்த பிரச்னைகள்,. நிஜமாகவே ரதன் டாடாவின் வாழ்க்கை வண்ணமயமானதுதான்.

4. அம்பானிகள் பிரிந்த கதை

ambani-brothers

கிழக்கு பதிப்பகத்தின் முதல் புத்தகம், நான் எழுதிய ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’. கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சிபோல் இப்போது இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. கிழக்கின் ஜுனியர் ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது.

அந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கைக் கதையில், அவருடைய மகன்கள் லேசாக எட்டிப் பார்த்துவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இங்கே, அவர்கள்தான் கதை நாயகர்கள், அல்லது வில்லன்கள், முகேஷ், அனில் அம்பானி இருவரின் தனிப்பட்ட ஆளுமையில் தொடங்கி, அவர்களுடைய மனைவிகள், அப்பா, அம்மாவுடன் அவர்களுக்கிருந்த உறவு நிலை எனத் தொடர்ந்து, பிஸினஸில் யார் எப்படி, எவருடைய கோஷ்டி எங்கே என்ன செய்தது, எப்படிக் காய்களை நகர்த்தியது என்று சுட்டிக்காட்டி,. இந்தியாவின் ‘First Business Family’யில் அப்படி என்னதான் நடந்தது என்று முழுக்க முழுக்கத் தகவல்களின் அடிப்படையில் சொல்லும் முயற்சி.

பரபரப்பாக எழுதவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய? அம்பானி என்று தொடங்கினாலே ஏதோ ஒருவிதத்தில் அந்தப் புத்தகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டுவிடுகிறது 🙂

***

என். சொக்கன் …

22 12 2008

சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன்.

அன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது.

பிரச்னை என்னவென்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று என்னையும் அழைத்து வந்திருந்தான்.

ஏழரை மணிக்கு நாங்கள் அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலை நெருங்கியபோது, ‘பார்க்கிங் ஃபுல்’ என்று அறிவித்துவிட்டார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.

ஹெல்மெட்டைக் கழற்றியதும், ‘இன்னிக்குக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டப்போறேன்’ என்றான் கிஷோர்.

‘ஏன் அப்படிச் சொல்றே?’ எனக்குக் குழப்பம், ‘இங்கே நோ பார்க்கிங் போர்ட்கூட இல்லை’

‘என்னவோ, எனக்குத் தோணுது’ என்றான் அவன், ‘கண்டிப்பா இன்னிக்குப் போலீஸ் மாமாங்களுக்கு துட்டு அழுதாகணும்’

அவன் குரலில் இருந்த உறுதி எனக்குக் கலவரமூட்டியது, ‘பேசாம வண்டியை வேற் இடத்தில நிறுத்திடலாமா?’

‘ம்ஹும், நேரமில்லை, நீ வா’

கிட்டத்தட்ட ஓடினோம், வேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டோம், தோரணங்கள்போல் நீளும் க்யூக்களில் எது சிறியதோ அதில் நின்று பில் போட்டோம், பணம் கட்டிவிட்டு எஸ்கலேட்டரில் கீழ் நோக்கி ஓட்டமாக இறங்கி வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணோம்.

கிஷோர் தன் வண்டியை நிறுத்தியபோது அங்கே ஏற்கெனவே நான்கைந்து வண்டிகள் இருந்தன. அதனால்தான் கிஷோர் போலீஸ்பற்றிச் சொன்னபோது எனக்கு அலட்சியம், ’எல்லோரும் நிறுத்தறாங்க, நாம நிறுத்தக்கூடாதா?’

இப்போது, அந்த எல்லோரையும் காணவில்லை, எங்கள் வண்டியையும் காணவில்லை. இப்போது என்ன பண்ணுவது?

பக்கத்திலிருந்த பூச்செண்டுக் கடைக்காரர் எங்களைப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார், ‘பதினெட்டாவது க்ராஸ் ரோட்ல ஐசிஐசிஐ ஏடிஎம் இருக்கு, தெரியுமா?’

‘தெரியும்’ என்று தலையசைத்தான் கிஷோர்.

‘அங்கதான் எல்லா வண்டியும் இருக்கும், ஓடுங்க’

அவசரமாகத் தலைதெறிக்க ஓடினோம். கிஷோருக்கு ஏற்கெனவே வழி தெரிந்திருந்ததால் கண்ட ‘மெயின்’, ‘க்ராஸ்’களில் வழிதவறவில்லை.

ஐசிஐசிஐ ஏடிஎம்க்கு எதிரே ஒரு பிரம்மாண்ட வண்டி, தசாவதாரத்தில் கமலஹாசன் முதுகில் கொக்கி மாட்டித் தூக்குவார்களே, அதுபோல பெரிய சங்கிலியெல்லாம் இருந்தது.

ஆனால், இப்போது அந்த வண்டி காலியாக இருந்தது, அதன் சங்கிலியில் மாட்டித் தூக்கப்பட்ட வண்டிகள் அருகே வரிசையாக நின்றிருந்தன.

அவசரமாக அந்த வண்டிகளைச் சரிபார்த்து நிம்மதியடைந்தான் கிஷோர், ‘அதோ அந்த மூணாவது வண்டிதான் என்னோடது’

அந்த வரிசையில் கிஷோரின் வண்டியைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம், திகைப்பு, லேசான திகில்கூட. இந்தப் பயல் கிஷோருக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா? எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான்? ஏதோ மந்திரவாதியின் அருகே நின்றிருப்பதுபோல் அபத்திரமாக உணர்ந்தேன்.

கிஷோர் அந்த டிராஃபிக் கான்ஸ்டபிளை நெருங்கி பேசத் தொடங்கியதும் ’ஏன் சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே?’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா?’

‘அங்க நோ பார்க்கிங் போர்டே இல்லை குரு’ என்றான் கிஷோர்.

‘அந்த இடம் பத்து வருஷமா நோ பார்க்கிங்’

‘சும்மா சொல்லாதீங்க குரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவெல்லாம் முள்ளுக் காடு, தெரியுமா’

‘உங்களோட எனக்கு என்ன பேச்சு?’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் வெண்ணிற உடைக் காவலர், ‘நீங்க சாரைப் பார்த்துட்டு வாங்க’

சார் எனப்பட்டவர், டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர், அல்லது அதனினும் உயர்ந்த பதவியாக இருக்கலாம், ஜீப்புக்குள் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் கிஷோர் ஏதோ கன்னடத்தில் சகஜமாகப் பேசினான், தன்மீது தப்பில்லை என்று அவன் எத்தனை நாடகத்தனமாகச் சொல்லி உணர்த்தியபோதும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

கடைசியாக, அவரை சென்டிமென்டில் அடிக்க நினைத்தான் கிஷ்ரோர், ‘உங்க சன்மாதிரி நெனச்சுக்கோங்க சார்’ என்றான்.

அங்கேதான் தப்பாகிவிட்டது. ‘என் மகன் இதுபோல நோ பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு வந்தா, அங்கயே வெட்டிப் போடுவேன்’ என்று கர்ஜித்தார் ‘சார்’.

அதன்பிறகு பேச்சு இன்னும் சூடு பிடித்தது, கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை, ‘கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும்’

இப்போது கிஷோர் கொஞ்சம் இறங்கிவந்தான், தணிந்த குரலில் அவரிடம் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.

உடனடியாக அவர் குரலும் தணிந்தது, அதுவரை மிரட்டிக்கொண்டிருந்தவர், இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

அடுத்து என்ன? லஞ்சம்தான்.

‘கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ஆயிரம் ஃபைன் ஆவும்’ என்றார் அவர், ‘நீங்க முன்னூறு கொடுத்துடுங்க’

நிஜமாகவே நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினால் ஐநூறு, ஆயிரம் ஃபைன் ஆவுமா? எங்களுக்குத் தெரியவில்லை, யாரிடம், எப்படி அதை உறுதிப்படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை.

கிஷோர் அதை விரும்பவும் இல்லை, அவனுக்கு எட்டு மணி டாக்டர் அவசரம், முன்னூறை எண்ணிக் கொடுத்துவிட்டு வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டான்.

புறப்படும்போது அவர் சொன்னார், ‘சார், இது நமக்குள்ள இருக்கட்டும்’

வரும் வழியெல்லாம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என்ன அநியாயம், நோ பார்க்கிங் ஏரியாவில் போர்டை வேண்டுமென்றே உடைத்து எறிந்துவிட்டுத் தூண்டில் போட்டு ஆள் பிடிப்பது, பிறகு இப்படி எதையோ சொல்லிக் காசு பிடுங்குவது. அரசாங்க அதிகாரிகளே இப்படிச் செய்தால் மக்கள் என்னதான் செய்யமுடியும்?

’இப்ப நீ என்னதான் சொல்றே?’ கிஷோர் எரிச்சலுடன் கேட்டான்.

’கொஞ்சம் முயற்சி செஞ்சா இந்த லஞ்சத்தைத் தடுக்கமுடியாதா?’

‘சத்தியமா முடியாது’

‘அந்த ஆஃபீஸர் வண்டியில டிஜிட்டல் கேமெரா வெச்சா? எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா? மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா?’ நான் அடுக்கிக்கொண்டே போனேன், ‘டெக்னாலஜியைப் பயன்படுத்தி எத்தனை பெரிய தப்பையும் தடுக்கமுடியும்’

‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி வண்டியை நிறுத்தினான் அவன், ‘நாளைக்கு நீ கர்நாடகாவுக்கு முதலமைச்சரா வந்தா, டெக்னாலஜியை நல்லாப் பயன்படுத்து, இப்ப நான் எல்.ஐ.சி. மெடிக்கல் செக்-அப்க்கு ஓடணும்’

அடுத்த சில நாள்களில் கிஷோர் வேறொரு நிறுவனத்துக்கு வேலை மாறிவிட்டான். அதன்பிறகு நாங்கள் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.

சமீபத்தில், என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றிருந்தேன்.

அந்தக் கூடம் கிட்டத்தட்ட, ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு அறையைப்போல் நீண்டிருந்தது. ஆங்காங்கே குஷன் வைத்த நாற்காலிகளில் மக்கள் செய்தித் தாள் படித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் மிக்ஸியோ, கிரைண்டரோ, டிவியோ, ரிமோட்டோ, செல்ஃபோனோ, இன்னும் வேறெதுவோ.

ஓரத்தில் ஓர் அறைக் கதவு திறந்தது, பிரம்மாண்டமான ஒரு டிவியைச் சக்கர மேடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு மின்சார இணைப்புக் கொடுத்து ஸ்விட்சைப் போட்டதும், ஷாருக் கான் சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார், ஆடினார்.

இன்னொருபக்கம், மைக்ரோவேவ் அவன் ரிப்பேராகி வந்திருந்தது. அதைக் கொண்டுவந்த பெண்மணி செவ்வகப் பெட்டிக்குள் தலையை நுழைக்காத குறையாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, அவருடைய கணவர் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றார்.

நெடுநேரம் இப்படிப் பரிசோதித்தப்பிறகு, ’எனக்கென்னவோ இவங்க எதையுமே மாத்தலைன்னு தோணுது’ என்று உரத்த குரலில் அறிவித்தார் அவர்.

எதிரில் நின்ற மெக்கானிக் கதறி அழாத குறை, ‘அம்மா, உள்ளே சர்க்யூட் மாத்தினது வெளியிலிருந்து பார்த்தாத் தெரியாதுங்க’

இப்படி அவர் விளக்கிச் சொல்லியும், அந்தப் பெண்ணுக்குத் திருப்தியாகவில்லை. தனது பழைய ரிப்பேர் ஆகாத மைக்ரோவேவ் அவனைப்போல் இது இல்லை என்றுதான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கடைசியில் என்ன ஆனது என்று நான் கவனிப்பதற்குள், என் பெயரைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் கேமெராவுடன் ஏழாவது கவுன்டருக்கு ஓடினேன்.

அங்கிருந்த இளைஞர், என்னுடைய கேமெராவைப் பரிசோதித்தார், ‘எல்ஈடி போயிடுச்சுங்க, புதுசா மாத்தணும்’ என்றார்.

‘அது வாரண்டியில கவர் ஆகுமா?’

‘ம்ஹும், ஆகாது’ என்றார் அவர்.

‘புது எல்.ஈ.டி. மாத்தறதுன்னா என்ன செலவாகும்?’

‘ஆயிரம், ஆயிரத்து ஐநூறு’ என்றார் அவர், ‘பரவாயில்லையா?’

வேறு என்ன செய்யமுடியும்? ‘ஓகே’ என்றேன் அரை மனதாக, ‘எப்போ கிடைக்கும்’

’நாளைக்கு இதே நேரம் வாங்க, ரெடியா இருக்கும்’

மறுநாள் நான் புறப்படத் தாமதமாகிவிட்டது, அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவுபடுத்தினார்கள். அதன்பிறகுதான் ஆட்டோ பிடித்துச் சென்றேன்.

இப்போது அந்த இளைஞர் மஞ்சமசேல் என்று ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு உள் அறையில் உட்கார்ந்திருந்தார், என்னைப் பார்த்ததும் புன்னகைத்து, ‘வாங்க சார்’ என்று உள்ளே அழைத்தார்.

அந்த அறை முழுவதும் ஏகப்பட்ட சர்க்யூட்கள், விதவிதமான கேமெராக்கள், மொபைல் ஃபோன்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அம்மணமாகத் திறந்து கிடந்தன.

இதையெல்லாம் எப்படி கவனமாகப் பார்த்துச் சரி செய்வார்கள் என்று நான் ஆச்சர்யப்படுவதற்குள், மஞ்சள் சட்டை இளைஞர் என் கேமெராவைக் கொண்டுவந்தார், ‘செக் பண்ணிக்கோங்க சார்’

நான் கேமெராவை முடுக்கி எங்கோ ஒரு சுவர் மூலையைப் படம் பிடித்தபோது, ‘உள்ள ஃபுல்லா வாட்டர் சார்’ என்றார் அவர், ‘நல்லவேளை மெயின் சர்க்யூட்க்கு எதுவும் ஆகலை, இல்லாட்டி தூக்கி எறியவேண்டியதுதான்’

உடனடியாக, எனக்கு என் ஐபாட் ஞாபகம் வந்தது. அந்தமாதிரி எதுவும் ஆகிவிடாமல் காப்பாற்றினாய், கடவுளுக்கு நன்றி.

கேமெராவை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், ‘பில் எவ்வளவு?’

அவன் நேரடியாக பதில் சொல்லாமல், ‘சார் தமிழா?’ என்றான்.

‘ஆமாம், நீங்க?’

’நானும் தமிழ்தான், திருச்சி’ என்றான் அவன், ‘நீங்க எந்த ஊர்?’

‘சேலம் பக்கத்தில, ஆத்தூர்’ நட்பாகச் சிரித்துவைத்தேன், ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’

‘ஆயிரத்து அற்நூத்தம்பது’ என்றான் அவன், ‘உங்களுக்கு பில் வேணுமா?’

‘ஏன் அப்படிக் கேட்கறீங்க?’

‘பில் வேணாம்ன்னா, உங்களுக்கு வேறவிதமா அட்ஜஸ்ட் பண்ணலாம்’ என்று பல்லிளித்தான் அவன், ‘நீங்க ஆயிரம் ரூபாய் கொடுங்க, போதும்’

நான் திகைத்துப்போனேன், சுற்றிலும் இத்தனை எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு இவன் எப்படி லஞ்சம் கேட்கிறான்?

ஆனால், இவனுக்கு அறுநூறு ரூபாய் குறைத்துக் கொடுப்பது லஞ்சம்தானா? இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும்? கறுப்புப் பணம் என்பது இதுதானா? என்னால் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.

என்னுடைய மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், ‘இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியவேண்டாம் சார், நமக்குள்ள இருக்கட்டும்’ என்றான்.

***

பின்குறிப்பு: கடைசியில் நான் அவனுக்குத் திருட்டுத்தனமாக ஆயிரம் கொடுத்தேனா, அல்லது ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கொடுத்து பில் பெற்றுக்கொண்டேனா? அது அவ்வளவு முக்கியமில்லை.

ஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.

என். சொக்கன் …

22 12 2008

A1

மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான்.

ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.

வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.

டிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.

’சிக்‌ஷா’ (http://www.siksha.co.in/) என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்?

அந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.

உண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை

ஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு?

ஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே!

இதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.

இன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.

காரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.

நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.

இப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?

இன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.

மேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.

‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:

‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’

இந்தப் பாடலின் அர்த்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.

***

என். சொக்கன் …

21 12 2008

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.

இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே?

ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’

முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.

இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா?

என்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

கட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.

அதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.

இதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.

நல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.

அதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.

தனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், காசோலை எழுதிக் கொடுத்தேன்.

வங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’

அந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’

உடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.

பாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.

திருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்?

வீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா?

நான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.

ஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.

இதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.

என்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.

தப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.

மூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.

அதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.

இந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.

உண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.

அல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.

எத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.

ஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.

உடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You?’

நான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.

அந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.

‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா?’

‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’

‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்?’

எவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.

இந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.

ஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.

அதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.

அவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.

அடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.

இந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா?

இத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.

இப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா? என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்?

இந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.

அது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம்? நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா?

நிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை (?) நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது?

***

என். சொக்கன் …

19 12 2008

Update:

இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!

கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

– என். சொக்கன்

சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?

இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.

களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.

இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.

‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.

‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’

அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.

அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!

எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.

ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.

ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.

இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉

Image107

#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு

Image108

#2. இதென்ன? குலோப் ஜாமூனா?

Image109

#3. களிமண்ணில் சார்மினார்

Image111

#4. குச்சி ஐஸ்

 Image112

#5. முயலே முயலே வா வா

Image113

#6. ’எலி’மையான பொம்மை

Image114

#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!

 Image115

#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?

Image116

#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி

Image118

#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!

Image119

#11. இதுவும் பயமுறுத்துது

 Image120

#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?

Image121

#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல

Image122

#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு

 Image123

#15. பகடை பகடை

 Image124

#16. இது  தொப்பியா? அல்லது திருவோடா? 

முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!

***

என். சொக்கன் …

19 12 2008

பதினான்கு.

சம்பந்தமில்லாமல் ஏன் இந்தப் பதிவைப் பதினான்கு என்கிற வார்த்தையுடன் தொடங்குகிறேன் என்று குழம்பவேண்டாம். நிஜத்தில் இந்த விமர்சனக் கட்டுரை அடுத்த பேராவில்தான் ஆரம்பமாகிறது. தொடக்கத்திலேயே ‘பதின்மூன்று’ என்று அபசகுனமாக வேண்டாமே என்று சும்மா உல்லுலாக்காட்டிக்கு இந்த அறிமுகம்.

பதின்மூன்று என்கிற எண், எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

அசுத்தமாகவும் பிடிக்காது.

என்னுடைய மெயில் இன்பாக்ஸில்கூட 13 மெயில்கள் இருந்தால், ஒன்றை டெலீட் செய்து 12 ஆக்குவேன். இல்லாவிட்டால் அடுத்தமுறை மெயில் பார்க்கமுடியாமல் ஏதாவது நேர்ந்துவிடும் என்று ஒரு மூட நம்பிக்கை.

தப்புதான், அபத்தம்தான், ஓவர்தான், அசிங்கம்தான், அவமானம்தான், ஆனாலும் விடமுடியவில்லை, என்ன செய்வது?

போகட்டும். இந்தக் கட்டுரைக்கும் பதின்மூன்றுக்கும் என்ன சம்பந்தம்?

எப்போதோ ரா. கி. ரங்கராஜன் ஆனந்த விகடனில் எழுதிய ‘அட்வெஞ்சர்’ நாடகங்களைத் தொகுத்து, ‘விஜி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். விகடன் பிரசுரம், விலை ரூ 70/-.

அந்த ‘விஜி’யில், மொத்தம் பதின்மூன்று நாடகங்கள். ஹும், இன்னொன்றைச் சேர்த்துப் பதினான்கு ஆக்கியிருக்கக்கூடாதா என்கிற ஆதங்கத்துடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.

பயிற்சியின்மூலம் எழுத்தைச் செதுக்குவது எப்படி என்பதற்கு ரா. கி. ரங்கராஜன் ஒரு பிரமாதமான உதாரணம், அவருடைய எழுத்தில் மேதைமை தென்படாது, பெரிதாக விஷய கனமும் இருக்காது, ஆனால் படிக்க ஆரம்பித்தால் யாராலும் கீழே வைக்கமுடியாது. அப்படி ஒரு ஸ்டைலில் நல்ல விஷயங்களைக் கல்ந்து கொடுக்கும் ஜனரஞ்சக பாணி அவர் குமுதத்தில் சம்பாதித்த சொத்து, அதில் கொஞ்சத்தைக் குமுதத்துக்குக் கொடுத்துவிட்டுதான் ரிடையர் ஆனார்.

உண்மையில், அதன்பிறகுதான் அவருடைய் முழுத் திறமையும், பன்முகத்தன்மையும் வெளிப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வாரம் ஒரு சிறுகதை என்கிற கணக்கைக் குறைத்துக்கொண்டு பல விஷயங்களைத் தனது ‘ஆட்டோமாடிக்’ எழுத்தில் சுவாரஸ்யமாகச் சொன்னார். குறிப்பாக, ‘நான், கிருஷ்ண தேவராயன்’ நாவலைச் சுயசரிதை பாணியில் எழுதியது, ஆனால் நிஜ சுயசரிதையை ‘அவன்’ என்ற பெயரில் மூன்றாம் மனிதனின் கதைபோலச் சொன்னது, ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ இதழில் அவர் எழுதிவரும் ‘நாலு மூலை’ பத்திகள் போன்றவை, யாரும் தவறவிடக்கூடாத விஷயங்கள்.

மற்றவர்களைப்பற்றித் தெரியாது. நான் தவறவிடுவதில்லை, ரா. கி. ரங்கராஜனின் எழுத்துகளைத் தேடிப் பிடித்துப் படிக்கிறேன், இதைச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

சரி, உள் அரசியல் போதும். ‘விஜி’ எப்படி?

நேர்மையான விமர்சனம், ‘சுமார்’. நாடகம் என்ற அளவில், இவை வெறும் துணுக்குத் தோரணங்கள்தான், எஸ். வி. சேகர், கிரேஸி மோகன் கிச்சுகிச்சு நாடகங்களை மேடையில் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆனால் அதையே புத்தகமாகப் படித்தால் திருதிரு என்று விழிப்போம், கிட்டத்தட்ட அதேமாதிரிதான் இந்தப் புத்தகமும்.

ஆனால், அந்த மேடை நாடகக் கிச்சுகிச்சுகளில் கதை என்று ஒரு சமாசாரமே இருக்காது. அப்படியே இருந்தாலும், ஸ்விம் சூட் போட்டியில் கலந்துகொள்ளும் அழகியின் பூணூல் பட்டைபோல லேசாக அலையவிட்டிருப்பார்கள், அதற்குமேல் அதற்கு மரியாதை இல்லை.

அங்கேதான், ரா. கி. ரங்கராஜன் வித்தியாசப்படுகிறார். இந்த நாடகங்களில், நிஜமாகவே கதை இருக்கிறது, நகைச்சுவை நோக்கம் இல்லை என்று தீர்மானித்துவிட்டால், இவற்றை அவர் தாராளமாகச் சிறுகதை வடிவில் எழுதியிருக்கலாம்.

160 எழுத்து எஸ்.எம்.எஸ்., 140 எழுத்து ட்விட்டரெல்லாம் அறிமுகமாவதற்கு முந்தைய தலைமுறை நாடகங்கள் இவை. ஆகவே நிதானமாக, பத்துப் பதினைந்து பக்கங்களில் பொறுமையாகக் கதை சொல்லும் வாய்ப்பு, அதனை அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டு, நீரோட்டமான நடையில் நாடகத்தை விரித்துச் செல்கிறார் ரா. கி. ரங்கராஜன்.

ஆங்காங்கே ‘களுக்’ என்று சிரிக்கத் தோன்றினாலும், கதை என்னப்பா ஆச்சு என்று நினைக்கவைக்கிற அந்தப் பரபரப்புதான் அவருடைய வெற்றி. மிகவும் ரசித்துப் படிக்கவைத்த பொழுதுபோக்கு நாடகங்கள் இவை.

விஜி, பிரசாத், சிவராம், கோமதி என்று நான்கு பிரதான பாத்திரங்கள். அவை எல்லா நாடகங்களிலும் வருகின்றன, ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனி கதை, வெவ்வேறு சுவாரஸ்யமான முடிச்சு, ஆனால் அதை லாஜிக் பிசகாமல் அவிழ்க்கவில்லை, துப்பறியும் சாம்புபோல விறுவிறு நடை, ஆஙகாங்கே அள்ளித் தெளித்த நகைச்சுவை, ‘சுப’ முடிவுதான் நோக்கம் என்பதால், குறையொன்றும் இல்லை.

ஒரே ஒரு ஆச்சர்யம், எப்போதாவது தட்டுப்படுகிற ’அடல்ட்ஸ் ஒன்லி’ வசனங்கள், எனக்குத் தெரிந்து ரா. கி. ரங்கராஜன் இப்படிக் குறும்பு செய்தது இல்லை!

நூலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்ற இரண்டு விஷயங்கள். இந்நாள் இயக்குனர், அந்நாள் கார்ட்டூனிஸ்ட் சரணின் கலகலப்பான கார்ட்டூன்கள், அப்புறம், பழைய வாடை அடிக்காதபடி, காலத்துக்குத் தகுந்தாற்போல் வசனங்களில் தட்டுப்படும் பெயர்கள், சம்பவங்களை மாற்றியிருக்கிற விக்டன் பிரசுரத்தாரின் கவனம். உதாரணமாக, புத்தகத்தில் ஆங்காங்கே ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங்கெல்லாம்கூட வருகிறார்கள்.

வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதுபோல் தோன்றும் அந்தக் கடைசி நாடகம் (விஜி – பிரசாத் திருமண வைபோகம்) ஒன்றைமட்டும் மறந்துவிட்டுப் பார்த்தால், பதின்மூன்று பன்னிரண்டாகிவிடும், சில மணி நேரங்கள் ஜாலியாகப் பொழுதுபோகும்!

***

என். சொக்கன் …

17 12 2008

எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.

காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.

சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ?

அது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.

ஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.

அதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.

இன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.

திருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்!

***

என். சொக்கன் …

16 12 2008

நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.

எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.

சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.

ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்?’

சட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’

‘எப்படிச் சொல்கிறீர்கள்?’

‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா? அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’

‘அதனால் என்ன?’

‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’

‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’

‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’

எரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார்.

***

என். சொக்கன் …

16 12 2008

அத்தை வந்திருந்தார்.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இப்படி மொட்டையாகச் சொன்னால் யாருக்கும் புரியாது, எந்த அத்தை என்று விளக்கவேண்டும்.

என் அப்பாவுக்கு நிறைய சகோதரிகள். ஆகவே, ‘அத்தை’ என்ற பொதுப் பதம் எங்களுக்குப் போதவில்லை. ஒவ்வோர் அத்தையையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு தனிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது.

சில அத்தைகள், தங்களுடைய சொந்தப் பெயரால் அறியப்பட்டார்கள். உதாரணமாக, வெள்ளம்மா(அ)த்தை, கண்ணம்மா(அ)த்தை.

இன்னோர் அத்தை ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆகவே அவர் ‘டீச்சரத்தை’ ஆனார். கொத்தாம்பாடி, காரைக்குடி என்கிற ஊர்களில் வசித்த அத்தைகளின் பெயர்கள், முறையே ‘கொத்தாம்பாடி அத்தை’, ‘காரைக்குடி அத்தை’ என்று ஆனது.

இப்படி ஒவ்வோர் அத்தைக்கும் தனித்தனி பெயர் வைத்து அழைக்காவிட்டால், பெரிய குழப்பம் வரும். அந்தவிதத்தில், நேற்றைக்கு வந்திருந்தவர் கண்ணம்மா அத்தை.

அப்பாவுக்குப் பல அக்காக்கள் உண்டு, இவர் ஒருவர்தான் தங்கை. ஆகவே, வீட்டில் மற்ற எல்லோரையும்விட இவருக்குச் செல்லம், உரிமை, மரியாதை எல்லாமே அதிகம்.

காவல் துறையில் வேலை பார்த்த என் அப்பாவிடம் மற்ற அத்தைகள் சாதாரணமாகப் பேசுவதற்கே கொஞ்சம் பயப்படுவார்கள். அவரை நேருக்கு நேர் பார்த்து, ‘நீ செய்வது தப்பு’ என்று சொல்லக்கூடிய தைரியம், இந்த ஓர் அத்தைக்குதான் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இதுதவிர, என்னுடைய திருமணப் பேச்சைத் தொடங்கி, முன்னின்று நடத்தியவரும் இந்த அத்தைதான். இதனால், என் மனைவிக்கு அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு.

ஆகவே, கண்ணம்மா அத்தை வருகிறார் என்றால், எங்கள் வீட்டுச் சமையலறைக்குக் கை, கால் முளைத்துவிடும். பக்கோடாவில் ஆரம்பித்துப் பால் பாயசம்வரை ஒரே அமளி, துமளி.

அத்தை வருவதற்குமுன்பே, எனக்குப் பக்கோடா வந்துவிட்டது. கலோரிக் கணக்கை நினைத்துப் பார்க்காமல் விழுங்கிவைத்தேன்.

கலோரி என்றதும் ஞாபகம் வருகிறது. சமீபத்தில் மலேசியா சென்று வந்த அலுவலக நண்பன், ஒரு சாக்லெட் கொடுத்தான். அதன் விசேஷம், மேலுறையிலேயே எத்தனை கலோரிகள் என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.

நம் ஊரிலும் அந்த விதிமுறை இருக்கிறது. ஆனால் எங்கோ பொடி எழுத்தில் கண்ணுக்குத் தெரியாதபடி அச்சடித்து ஏமாற்றுவார்கள்.

அதற்குபதிலாக, எல்லா உணவுப் பொருள்களிலும் கலோரி கணக்கைப் பெரிய அளவில் அச்சிட்டே தீரவேண்டும் என்று ஒரு விதிமுறை கொண்டுவந்தால நல்லது. என்னைப்போன்ற குண்டர்கள் உடனடியாக மெலியாவிட்டாலும், கொஞ்சம் உறுத்தலாகவேனும் உணர்வோம்.

நிற்க, பேச்சு எங்கேயோ திரும்பிவிட்டது, மீண்டும் (கண்ணம்மா) அத்தை.

சனிக்கிழமை மாலை, அத்தை வந்தார். பக்கோடா சாப்பிட்டார், ‘காரம் ஜாஸ்தி’ என்று குறை சொன்னார், ‘அதுக்குதான் காப்பியில ஒரு ஸ்பூன் சர்க்கரை எக்ஸ்ட்ராவாப் போட்டிருக்கேன்’ என்று என் மனைவி அசடு வழிந்தார்.

ராத்திரிச் சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ‘நாளைக்கு நான் ராம் குமார் வீட்டுக்குப் போகணுமே’ என்றார் அத்தை.

ராம் குமார், இன்னோர் அத்தையின் மகன், என் மனைவியின் அண்ணன், இதே பெங்களூரின் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.

பிரச்னை என்னவென்றால், எங்கள் வீட்டிலிருந்து ராம் குமார் வீட்டுக்குச் செல்ல நேரடி பஸ் கிடையாது, இரண்டு பஸ் மாறிச் செல்லவேண்டும்.

அத்தைக்குத் தமிழ்மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியவே தெரியாது, கன்னடம் சான்ஸே இல்லை.

பெங்களூரில் தமிழைமட்டும் வைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம் என்று பலர் என் கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு இன்றுவரை நம்பிக்கை வரவில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.

ஆகவே, அத்தையைத் தனியே பஸ் ஏற்றி அனுப்பத் தயங்கினேன், ‘பேசாம நான் உங்களுக்கு ஆட்டோ பிடிச்சுக் கொடுத்துடறேனே’ என்று இழுத்தேன்.

அத்தை இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தெரியும். காரணம், பஸ்ஸில் 10 ரூபாய் டிக்கெட், ஆட்டோவில் 150 ரூபாய், பதினைந்து மடங்கு.

நூற்று ஐம்பது ரூபாய் செலவழிப்பது அத்தைக்குப் பெரிய விஷயம் இல்லை, அது அநாவசிய செலவு என்கிற கொள்கை.

’அந்தக் காசை நான் தருகிறேன்’ என்று சொல்லலாம். அது ‘பணத் திமிர்’ என்கிற பதத்தால் அறியப்படும்.

ஆகவே, எப்படி யோசித்தாலும் அத்தைக்கும் ஆட்டோவுக்கும் ஒத்துவராது, ‘என்னை பஸ் ஏத்தி விட்டுடுப்பா, நான் விசாரிச்சுப் போய்க்கறேன்’ என்றார் பிடிவாதமாக.

வேண்டுமென்றால், அத்தையோடு நானோ என் மனைவியோ துணைக்குச் செல்லலாம். ஆனால் வேறு சில காரணங்களால் அது முடியாமல் போனது.

இப்போது என்ன செய்வது?

‘நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடுவேன்’ என்றார் அத்தை, ‘நீ பஸ்ஸைமட்டும் கண்டுபிடிச்சு ஏத்திவிட்டுடு, போதும்’

அவர் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். ஆனால் எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை, ஏதோ இனம் புரியாத பயம்.

எங்களுடைய தயக்கம், அவருக்கு அவமானமாகத் தோன்றியிருக்கவேண்டும், ’நான் என்ன சின்னப் பிள்ளையா?’ என்று கோபப்பட்டார்.

கண்ணம்மா அத்தை நிச்சயமாகச் சின்னப் பிள்ளை இல்லை. அவருடைய தைரியம் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் வராது.

சேலத்திலிருந்து முக்கால் மணி நேரத் தொலைவில் நரசிங்கபுரம் என்கிற ‘சற்றே பெரிய’ கிராமத்தில் வசிக்கிறவர் அவர். அந்த ஊரில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை, சார்ந்திருக்காதவர்கள் இல்லை.

உதாரணமாக, என் தம்பி ஒரு மருத்துவப் பிரதிநிதி. அவனிடம் மிஞ்சுகிற மருந்து சாம்பிள்களையெல்லாம் வாங்கிச் சென்று, ஒவ்வொன்றும் எதற்கான மருந்து எனக் குறித்துவைத்துக்கொள்வார், அக்கம்பக்கத்து ஜனங்களுக்குத் தேவையான நேரத்தில் விநியோகிப்பார்.

எங்கள் வீட்டில் உடைந்து போகிற பொம்மைகள், கிழிந்த ஆடைகளைத் தூக்கி எறிகிற பழக்கமே இல்லை. ஒரு பெட்டியில் போட்டுவைத்துக் கண்ணம்மா அத்தை வரும்போது அவரிடம் கொடுத்துவிடுவோம், எங்கோ ஓர் ஏழை வீட்டுக் குழந்தைக்கு அவை பயன்படும்.

இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். நரசிங்கபுரம் ஜனங்களுக்கு அத்தையின்மீது இருந்த மரியாதை, பாசம் கொஞ்சநஞ்சமில்லை.

சில மாதங்களுக்குமுன் அத்தையின் ஒரே மகனுக்குத் திருமணம் வைத்தபோது, ஒட்டுமொத்தக் கிராமமும் பஸ் ஏறிவிட்டது. அனுமார் மலையைப் பெயர்த்து ராமரிடம் கொண்டுசென்றதுபோல, நரசிங்கபுரத்தையே பிய்த்துக் கையோடு கொண்டுசென்றுவிட்டார் அத்தை.

ஆனால், அதெல்லாம் இப்போது பெங்களூரில் சரிப்படுமா? மொழி தெரியாத ஊரில் ஒரு ஸ்டாப் மாறி இறங்கிவிட்டால் அவர் என்ன செய்வார்? எப்படி என் வீட்டுக்கோ, ராம் குமார் வீட்டுக்கோ சென்று சேர்வார்?

நாங்கள் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கையில், அத்தை புறப்படத் தயாராகிவிட்டார். பெட்டி கட்டிக்கொண்டு, எங்களுடைய பழைய துணிமணிகள், பொம்மைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, ‘எங்கே பஸ் ஸ்டாப்?’ என்றார்.

அதற்குமேல் வேறு வழியில்லை. அரைமனதாகக் கிளம்பினேன்.

என் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் எங்களுடைய முகவரி, ராம் குமார் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தாள். அதன் பின்புறத்தில் என்னுடைய, அவளுடைய, ராம் குமாருடைய, அவர் மனைவியுடைய, அவர்கள் வீட்டு நாய்க் குட்டியுடைய மொபைல் நம்பர்கள், லாண்ட்லைன் நம்பர்கள், சாடிலைட் ஃபோன் நம்பர்கள் அனைத்தும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தன.

‘ராமமூர்த்தி நகர் பாலம்ன்னு சொல்லி இறங்கணும் அத்தை’, நான் கவனமாக அவருக்கு அடையாளங்களை விவரித்துச் சொன்னேன், ‘ஒருவேளை அந்த ஸ்டாப் மிஸ் ப்ண்ணீட்டா ஒண்ணும் கவலைப்படாதீங்க, அடுத்து ஒரு சின்ன ஸ்டாப் வரும், அங்கே இறங்கி…’

‘அதெல்லாம் மிஸ் பண்ணமாட்டேன், நீ புறப்படு’

பேருந்து நிறுத்தத்தில் தயாராக அவருடைய பஸ் காத்துக்கொண்டிருந்தது. அத்தையை ஏற்றிவிட்டுப் பையை, பெட்டியைக் கையில் கொடுத்தேன். டிரைவர், கண்டக்டர், பக்கத்து சீட் பயணி என எல்லோரிடமும் எச்சரிக்கையாகச் சொன்னேன், ‘ராமமூர்த்தி நகர் பாலம் வரும்போது இவங்களுக்குச் சொல்லுங்க ப்ளீஸ்’

‘எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பு’ என்றார் அத்தை. அவர் முகத்தில் துளி கவலை, பயம், குழப்பம் எதுவும் இல்லை. Ignorance Is A Bliss?

பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அங்கேயே ராம் குமாருக்கு ஃபோன் செய்தேன், ‘அத்தை இன்னொரு பஸ் மாறி வர்றதெல்லாம் கஷ்டம், நீயே ராமமூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்புக்குப் போய் அத்தையை பத்திரமாக் கூட்டிகிட்டுப் போயிடு, சரியா?’

பேருந்து கிளம்பும்வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்போதும் மனசெல்லாம் ஒரே கவலை, அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரவேண்டுமே.

உண்மையில், அத்தை வழி தெரியாமல் சிரமப்படுவாரோ என்கிற கவலையைவிட, ஒருவேளை அவர் வழி தவறிவிட்டால் அது எங்களுடைய தவறாகக்  கருதப்படுமோ என்கிற பயம்தான் அதிகம். அதற்காகவேனும் அவர் சீக்கிரம் அங்கே சென்று சேர்ந்து ஃபோன் செய்யவேண்டுமே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்துத் தொலைபேசி மணி ஒலித்தது, ’நான்தான்ப்பா, பத்திரமா இங்கே வந்து சேர்ந்துட்டேன். ராம் குமாரே பஸ் ஸ்டாப்புக்கு வந்து காத்திருந்து கூட்டிகிட்டு வந்தான்’

‘ரொம்ப சந்தோஷம் அத்தை’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக ஃபோனை வைத்தேன்.

நாளை காலை, அத்தை அங்கிருந்து ஊருக்குக் கிளம்புகிறார். அவரை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அல்லது, பஸ் ஏற்றிவிடவேண்டும்.

எனக்கென்ன? அது ராம் குமாரின் கவலை!

***

என். சொக்கன் …

15 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,784 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031