மனம் போன போக்கில்

ராமனின் தாத்தா

Posted on: December 1, 2008

அன்பே,

சாப்பிட்டபின் மறக்காமல்

தண்ணீர் குடி.

இல்லாவிட்டால்,

உன்னைச் சாப்பிட்ட உணவுக்கு

விக்கல் எடுக்கும்.

சரி சரி, பெங்களூருக்கு ஆசிட் பாட்டிலுடன் ஆட்டோ பிடிக்கவேண்டாம், இதெல்லாம் சும்மா ஒரு ஃப்ளோவிலே வர்றதுதான் 😉

அச்சிலும், இணையத்திலும் இப்படி ஒரு நாளைக்குப் பதினேழரை என்ற எண்ணிக்கையில் காதல் (மொக்கை) கவிதைகள் நிறையப் படித்திருப்பீர்கள். அதற்கெல்லாம் ஆரம்பம் யார் தெரியுமா?

வீட்டில் எதையோ தேடும்போது, ஒரு பழைய கலைமகள் புத்தகம் அகப்பட்டது. அதில் வடுவூர் நாராயணன் என்பவர் எழுதிய ‘அஜ விலாபம்’ என்கிற கட்டுரையை மெய்மறந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

’அஜ விலாபம்’ என்பது, காளிதாசர் எழுதிய ’ரகுவம்ச’த்தில் ஒரு சிறிய பகுதி. ரகு வம்சத்தில் பிறந்த 21 மன்னர்களின் கதையைச் சொல்லும் இந்தக் காவியத்தில் ‘அஜன்’ என்கிற அரசன் ஐந்தாவதாக வருகிறான், தசரதனுக்கு அப்பா, ராமனுக்குத் தாத்தா!

அழகன் அஜன், இந்துமதி என்கிற பேரழகியை மணக்கிறான், ’ஆஹா, ரொம்பப் பொருத்தமான ஜோடி’ என்று எல்லோரும் மகிழ்கிறார்கள், இருவரும் சந்தோஷமாக இல்லறத்தை நடக்கையில், திடீரென்று இந்துமதி இறந்துபோகிறாள்.

அதுவும் எப்படி? ஒரு மலர்மாலை மேலே விழுந்து, அந்த கனத்தைத் தாங்கமுடியாமல்அவள் இறந்துவிடுகிறாளாம். அத்தனை மென்மையா? அல்லது பரீட்சித்து கதையில் வருவதுபோல் மாலைக்குள் ஒரு பாம்பு ஒளிந்திருந்து கடித்துவிட்டதோ தெரியவில்லை!

மனைவியின் இழப்பைத் தாங்கமுடியாமல், அஜன் புலம்புகிறான். அதுதான், ’அஜ விலாபம்’ (விலாபம் – புலம்புதல் / பிரலாபம்).

தமிழில் நேரடியாக எழுதப்படாவிட்டாலும் அஜ விலாபம் ஒரு மிகச் சிறந்த கையறு நிலை இலக்கியமாக எனக்குத் தோன்றியது. மிக நல்ல உவமைகள், வியக்கவைக்கும் கேள்விகள், கொஞ்சம் ஆங்காங்கே ஒடித்துப் போட்டால் புதுக் கவிதைப் புத்தகமே போட்டுவிடலாம்.

சாம்பிளுக்குச் சில:

* எமன் கொல்லவேண்டிய ஆளுக்கு ஏற்ப கொல்லும் கருவியை மாற்றுகிறானோ (மலர் மாலை)

* ஒரு மரத்தின்மேல் இடி விழுந்தால், அது அந்த மரத்தைத்தான் சாய்க்கும். ஆனால் இந்த இடி மரத்தை (என்னை) விட்டு என்மேல் படர்ந்திருந்த கொடியை(இந்துமதி)ச் சாய்த்துவிட்டதே

* நான் கோபத்தால் உன்னை அவமானப்படுத்தியபோதெல்லாம், என்மேல் கொண்ட பிரியத்தால் அதைப் பொறுத்துக்கொண்டாயே, இப்போது ஏன் நீண்ட மௌனம்?

* நீ இறந்த மறுகணம், உன்னுடன் என் உயிரும் போய்விட்டது, ஆனால் பிறகு ஏன் என்னிடமே திரும்பிவிட்டது? (இந்துமதி இறந்ததும் மயக்கம்கொண்ட அஜன், பிறகு மீண்டும் எழுந்துவிடுகிறான்)

* உன்னை விட்டு நான்மட்டும் திரும்பியது தவறுதான். அந்தத் தவறுக்காக நீ அளிக்கும் இந்தப் பிரிவு என்னும் வேதனையை நான் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதானா ?

* அரசாங்கத்தைக் காட்டிலும் உன்னை அதிகம் விரும்பினேனே, அரசனாக நான் இருந்தது உன்னிடம் மட்டும்தானே!

* மலர் சூட்டப்பட்டு சுருண்டு நெளிகிற உன் கரிய கூந்தலைக் காற்று அசைக்கும்போது, நீயே அசைவதுபோல் தோன்றுகிறதே

* இமய மலையில் த்ருணஜ்யோதி என்னும் ஒருவகைக் கொடி இரவு நேரங்களில் ஒளிர்ந்து மலைக்குகையின் இருட்டைப் போக்குமாம், அதுபோல நீயும் எழுந்து வந்து என் சோகத்தைத் தீர்ப்பாய்

* தாமரை மலரைச் சூழ்ந்த இருளைப்போல உன் முகமும், கூந்தலும்

* நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இரவைப் பிரிகிறது, இணைபிரியாமல் வாழும் சக்ரவாகப் பறவையும் இரவில் அதன் துணையைப் பிரிகிறது, சந்திரன் மீண்டும் இரவோடு சேர்ந்துவிடும், சக்ரவாகமும் மறுபடி துணையைச் சேரும், ஆனால் நீ எனக்குத் திரும்பக் கிடைப்பாயா?

* இந்த மாமரத்தையும், அதைச்சார்ந்த ப்ரியங்குக்கொடியையும் இணைத்து வைக்க விரும்பினாயே, இனி அதை யார் செய்வார்கள்?

* நீ தோஹதம் இட்டதால் (இது என்ன தோஹதம் ? அது பிறகு ..) முதல்முதலாக பூக்கப்போகிற இந்த அசோக மரத்தின் மலரை உன் தலையில் வைத்து மகிழ நினைத்தேனே, இனி அதை உன் இறுதிச் சடங்குக்குதான் பயன்படுத்த வேண்டுமா, எப்படித் தாங்குவேன் இந்த சோகத்தை?

* இனிய குரல் உடையவளே, உன் மூச்சுக்காற்றைப்போன்ற மணம்கொண்ட இந்த மலர்களை நாம் இருவரும் தொடுக்கத் தொடங்கினோமே, வேலையை முழுதாக முடிக்காமல் நீ உறங்கலாமா?

* மயக்கும் கண்களை உடையவளே, நான் எப்போதும் வாசனையுள்ள மதுவை அருந்தி, பின் அதையே என் வாயிலிருந்து உனக்குத் தந்து மகிழ்விப்பேன், அதை விரும்பிப் பருகுகிறவள் நீ, ஆனால் இப்போது நீ பருக தர்ப்பண நீர்தான் தரப்போகிறேன், அதில் என் கண்ணீரும் கலந்திருக்குமே, எப்படிப் பருகுவாய்?

* மென்மையான படுக்கையும் உன் தளிர்மேனியை வருத்துமே, நீ எப்படி சிதைக்கட்டைகளையும், தீயையும் தாங்குவாய்?

* நீ அணிந்த ஒட்டியாணம்தான் உன் முதல் தோழியும், ரகசியத் துணைவியும். இப்போது நீ செயலற்று இருப்பதால் அதுவும் சத்தம் இல்லாமல் இருக்கிறது, அதுவும் உன்னோடு இறந்துபோனதோ?

* ‘நான் இறந்துபோனாலும் என் கணவர் இவற்றைப் பார்த்து மகிழட்டும்’ என்று உன் குரலை குயிலிடமும், நடையை அன்னத்திடமும், பார்வையை மானிடமும், அசைவுகளைக் காற்றில் அசையும் கொடியிடமும் கொடுத்துப்போனாய், ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் உள்ளதே, எல்லாம் சேர்ந்து இருக்கும் இடம் நீ … நீ இல்லாதபோது உடைந்த என் மனத்திற்கு யார் ஆறுதல் அளிப்பார்கள்?

இப்படித் தொடர்கிற அஜனின் புலம்பல் மரங்களையும் உருக்கிவிடுகிறது. அவை பிசினைப் பெருக்கித் தம் சோகத்தை வெளிப்படுத்துவதாக இந்தச் சிறு காவியத்தை முடிக்கிறார் காளிதாசர்.

இன்னும் ஒரு விஷயம் மிச்சமிருக்கிறது, தோஹதம்.

மரங்கள், செடிகள் காய்க்காமல், பூக்காமல் இருந்தால், கிராமப்புறங்களில் சில சடங்குகளைச் செய்வார்களாம், அப்போது அவை உடனடியாகப் பூத்துவிடுமாம். இதைத்தான் ‘தோஹதம்’ என்கிறார்கள்.

உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.

இப்படிதான், இந்துமதி ஒரு அசோக மரத்தை தோஹதம் செய்ய நினைத்தாளாம், அதற்காக, அந்த மரத்தின் பக்கத்தில் சென்று காலால் உதைத்தாளாம். ஆனால், அசோக மரம் இந்துமதி தன்னை வாழ்த்துவதாக நினைத்துக்கொண்டுவிட்டதாம்!

ரகுவம்சத்தின் மற்ற பகுதிகளும் இதேபோல் ருசிகரமாக இருக்குமா?!

***

என். சொக்கன் …

01 12 2008

7 Responses to "ராமனின் தாத்தா"

அப்போ, தினமும் மொக்கை கவிதைகளை படித்து நம்மளும் விலாபம் எழுத வேண்டியதுதான்.

அப்புறம் அதைப்படித்து வேறு யாராவது வேறு விலாபம் எழுத.. தொடர் மெகா விலாபம் ஆயிடும்.

எ.கொ.இ.ச

இது பழங்காலத்து மொக்கை ஐயா, இப்ப வர்றதெல்லாம் இதுக்குக் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேத்தி மொக்கைகள் 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

ஹல்லோ இந்தக் கவிதையைச் சொல்லி என்கிட்ட ஏற்கெனவே நிறைய திட்டு வாங்கியிருக்கீங்க.. ஞாபகம் இருக்குதா?

ஆரம்பத்தில வருதே அந்த 4 வரிதானே? ஓ, நல்லா ஞாபகம் இருக்கு, அதான் இங்கே நக்கலுக்காகப் பயன்படுத்தினேன், அதைக் கவிதைன்னு நினைச்சுட்டீங்களா? ஐயோ, பாவம்!

– என். சொக்கன்,
பெங்களூர்.

கொஞ்ச நாட்களாக உங்களின் பக்கம் பக்கம் வரஇயலவில்லை.. இன்றுதான் வந்தேன்.. அதுவும் கூட நல்லதுக்குத்தான் போல, இன்றுதான் ரகுவம்சத்திற்கு ஒரு விமர்சனம் எழுதிவிட்டு இங்கு வந்து பார்த்தால், நீங்களுமா.. 🙂 🙂 same pinch சொக்கன் சார்.. 🙂

நான் எழுதியது இங்கே.. நேரம் கிடைக்கையில் பாருங்க..
http://beemorgan.blogspot.com/2008/12/blog-post.html

//அதுவும் எப்படி? ஒரு மலர்மாலை மேலே விழுந்து, அந்த கனத்தைத் தாங்கமுடியாமல்அவள் இறந்துவிடுகிறாளாம். அத்தனை மென்மையா? அல்லது பரீட்சித்து கதையில் வருவதுபோல் மாலைக்குள் ஒரு பாம்பு ஒளிந்திருந்து கடித்துவிட்டதோ தெரியவில்லை! //

அ.வெ.சு என்ன சொல்றார்னா, அந்த அரசி ஒரு அப்சரஸ். ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகிற்கு வந்து மன்னனின் மனைவியாகிறார். சாபம்னா, கண்டிப்பா ஒரு விமோசனமும் வேண்டுமே.. என்றொரு தேவலோகத்து மலர் வந்து அவர் மீது படுகிறதோ அன்றுதான் விமோசனம். இந்துமதி மீது விழுவது, நாரதர் கழுத்திலிருந்த மாலை. நாரதர் பிரபஞ்ச வலம் செல்கையில், அவர் தோளிலிருந்து தவறி விழும் அந்த தேவலோக மாலையால், பூவுலக வாசம் முடித்து தேவலோகம் திரும்புகிறாள் இந்து மதி என்று வருகிறது.

நானும் இதைப்பற்றி குறிப்பிடலாம் என்று கருதினேன்.. ஆனால் நீளம் கருதி சுருக்கிவிட்டேன். எனக்கு இந்த சம்பவத்தைப் படிக்கையில் வைரமுத்துவின் இந்த வரிதான் நினைவுக்கு வந்தது..

“உன்மேல் வந்தொரு பூவிழுந்தால் என்னால் தாங்க முடியாது..”

Bee’morgan,

நல்ல விமர்சனம், ரசித்துப் படித்தேன், மிக்க நன்றி 🙂

ரகுவம்சம் முழுத் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கே, நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க!

– என். சொக்கன்,
பெங்களூர்.

🙂
என் அழைப்பை மதித்து நீங்கள் வந்ததே எனக்கு பெரும் சந்தோஷம்.. பின்னூட்டமிட்டது இரட்டைச் சந்தோஷம்.. 🙂

ரகு வம்சம் முழு மொழிபெயர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டதில்லை..நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக முயற்சிக்கனும்.. தகவலுக்கு மிக்க நன்றி..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,272 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Advertisements
%d bloggers like this: