Archive for December 5th, 2008
ஒட்டுதலும் பிரித்தலும்
Posted December 5, 2008
on:- In: Change | Hyderabad | IT | Life | Positive | Students | Technology | Youth
- 13 Comments
அந்தத் துண்டுச் சீட்டு மஞ்சள் நிறத்தில் இருந்தது. வெள்ளைக் காகிதத்தின் உச்சியில் அலட்சியமான கோணத்தில் அதை ஒட்டியிருந்தார்கள்.
அப்படி ஒரு வழவழப்பான காகிதம், பளபளப்பான துண்டுச் சீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. குறிப்பாக, அதில் எழுதப்பட்டிருந்த எண்களைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது.
அந்த வெள்ளைக் காகிதம், என்னுடைய முதல் வேலை நியமனக் கடிதம். அதன்மீது ஒட்டப்பட்டிருந்த துண்டுச் சீட்டில், எனது மாதாந்திரச் சம்பளம் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கெல்லாம் ஒருத்தன் வேலை கொடுப்பான் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. நான் பேசுகிற அபத்த ஆங்கிலத்துக்கு இண்டர்வ்யூ அறையிலிருந்து விரட்டி அடிக்காமல் இருந்தாலே ஆச்சர்யம்தான்.
ஆனால், அன்றைக்கு என்னுடன் பேசிய அதிகாரி, ஏதோ நல்ல மூடில் இருந்திருக்கவேண்டும். என்னுடைய இலக்கணப் பிழைகள் மலிந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மதித்துக் கேள்விகள் கேட்டார், டெக்னிகல் விஷயங்களைத் தோண்டித் துருவி அவரே என்னிடமிருந்து விடைகளை எடுத்துக்கொண்டார்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, இந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். என்னுடைய வேலை எங்கே, எப்படி என்கிற விவரங்களைச் சொல்லி, நான் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்காத சம்பளம் (வருடத்துக்கு 95000 ரூபாய்!) குறிப்பிட்டிருந்தார்கள். ஆண்டுச் சம்பளத்தைப் பன்னிரண்டால் வகுத்து நான் சிரமப்படக்கூடாது என்பதற்காக, மேலே ஒரு மஞ்சள் துண்டுச் சீட்டை ஒட்டி, மாதச் சம்பளத்தைத் துண்டுகளாகப் பிரித்துக் காட்டியிருந்தார்கள்.
மாதச் சம்பளம், ஆஹா!
இனிமேல் பாடம் கிடையாது, பரீட்சை கிடையாது, மிரட்டும் வாத்தியார்கள் கிடையாது, நானும் வேலை செய்து சம்பாதிக்கப்போகிறேன், ஹையா ஜாலி, ஜாலி!
அந்த மஞ்சள் துண்டுக் காகிதத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அப்பா, அம்மாவிடம் என்னதான் பொய் சொல்லிப் பணம் சுருட்டினாலும், அத்தனையும் வந்த வேகத்தில் காலியாகிவிடும், ஹாஸ்டல் வாழ்க்கையில் மாதக் கடைசி அஞ்சு, பத்து திண்டாட்டங்களைத் தவிர்க்கவேமுடியாது. பல நாள்கள் டீ குடிக்கக்கூடக் காசு இல்லாமல், வேறு வழியே இன்றி மெஸ்ஸில் போய்ச் சாப்பிட்டிருக்கிறோம்!
அதுபோன்ற தொல்லைகளெல்லாம் இனிமேல் இல்லை, இந்த மஞ்சள் சீட்டு சொல்கிறது.
மாதம் பிறந்தால் கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாய் சம்பளம். அதை எப்படிச் செலவு செய்வது என்கிற சந்தோஷக் கனவுகளில் நான் மிதக்கத் தொடங்கியிருந்தேன்.
அவ்வப்போது பூமிக்கு வரும் அபூர்வத் தருணங்களில் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்துக்கொள்வேன், அதன்மீது இருக்கும் மஞ்சள் துண்டுச் சீட்டைப் பிரித்து, மீண்டும் அதே கடிதத்தின் வேறொரு மூலையில் ஒட்டிவிட்டு, மறுபடி கனவுக்குள் மூழ்கிவிடுவேன்.
இன்றைக்கு ‘Post It’ என்றால் எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அப்போது எனக்கு அது புதியது. பசையின் அவசியமே இல்லாமல், ஒரு துண்டுச் சீட்டை இங்கிருந்து பிரித்து அங்கே, அங்கிருந்து பிரித்து இங்கே என மாற்றி மாற்றி ஒட்டமுடிவது பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
நான் பார்த்தவரையில், பசைகள் முரட்டுத்தனமானவை. கொஞ்சம் காய்ந்துவிட்டால் அவற்றால் ஒட்டப்பட்ட காகிதம் அல்லது பொருள்களைச் சேதமின்றி பிரிப்பது மிகவும் சிரமம்.
ஆனால் இந்தத் துண்டுச்சீட்டின் பின்புறமிருந்த பசை, ஏதோ செல்வந்தர் வீட்டுப் பூனைபோல் மென்மையாக இயங்கியது. அதைப் பிரித்து மீண்டும் ஒட்டுவது ஓர் ஆனந்தமான விளையாட்டாக இருந்தது.
அதுவும் சாதாரணத் துண்டுச் சீட்டா? எனக்கு நிஜமான நிதிச் சுதந்தரம் வழங்கப்போகிற, முதுகில் பசை பூசிய தேவ தூதனே அல்லவா?
என்னுடன் அதே நிறுவனத்தில் இன்னும் பதினான்கு பேர் வேலைக்குத் தேர்வாகியிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோரை எனக்கு முன் அனுபவம் இல்லை, இந்த வெள்ளை, மஞ்சள் காகிதங்கள்தான் எங்களை ஒருங்கிணைத்தன, ‘என்ன கலீக் சௌக்யமா?’ என்றெல்லாம் உத்ஸாஹமாகப் பேசிக்கொள்ளத் தொடங்கினோம்.
ஒரு வாரம் கழித்து, என்னுடைய வருங்கால ‘கலீக்’ ஒருவனை டீக்கடையில் பார்த்தேன், ‘என்னய்யா? சௌக்யமா? ஊர்ல என்ன விசேஷம்?’ என்று எதார்த்தமாக விசாரித்தேன்.
‘எனக்கு விப்ரோவிலே வேலை கிடைச்சிருக்கு மாம்ஸ்’ என்றான் அவன்.
நான் திகைத்துப்போனேன், இவன் என்னுடன் வேலைக்குச் சேரப்போகிறான் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்? இடையில் ‘விப்ரோ’ எப்படி வந்தது? ஏன் வந்தது?
என்னுடைய குழப்பத்தை அவன் புன்னகையுடன் ரசித்தான், ‘போன சாட்டர்டே ரொம்ப போரடிச்சது, பேப்பர்ல வாக்-இன் இண்டர்வ்யூன்னு போட்டிருந்தான், ஒரு நூல் விட்டுப் பார்க்கலாமேன்னு ட்ரை பண்ணேன், செலக்ட் ஆயிடுச்சு, உங்க கம்பெனியில சொன்னதைப்போல டபுள் சாலரி தெரியுமா?’
ஒரு சனிக்கிழமை சாயங்காலத்துக்குள் ‘நம்ம கம்பெனி’யாக இருந்தது ‘உங்க கம்பெனி’யாகச் சரிந்துவிட்டது. இனி விப்ரோதான் அவனுடைய கம்பெனி.
அவன் இருமடங்கு சம்பாதிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், கையில் லட்டுபோல ஓர் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வைத்துக்கொண்டு இன்னோர் இண்டர்வ்யூவுக்குச் செல்ல இவனுக்கு எப்படி மனம் வந்தது?
இந்தக் கேள்வியை என்னால் அவனிடம் நேரடியாகக் கேட்கமுடியவில்லை. ஆனால் அவன் செய்தது பச்சைத் துரோகம் என்றுதான் (அப்போது) தோன்றியது.
நல்லவேளையாக, என்னுடைய மற்ற ‘கலீக்’கள் இப்படிப் பால் மாறவில்லை. ஒரு ஜூலை மாதத் தொடக்கத்தில் எல்லோரும் ஹைதராபாத் கிளம்பிச் சென்றோம்.
என்னை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அப்பா, பணச் சேமிப்பின் முக்கியத்துவம், சம்பாதிக்கிற திமிர் தலைக்கு ஏறாமல் இருக்கவேண்டிய அவசியம் போன்றவற்றை அறிவுரைகளாக நிறையச் சொன்னார். முக்கியமாக, ‘உன் கம்பெனிக்கு விசுவாசமாக இரு’ என்றார்.
அவர் அப்படித்தான். காவல்துறையில் பல ஆண்டுகள் தலைமைக் காவலராகப் பணியாற்றி, நான் வேலைக்குச் சென்ற புதிதில் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வுடன் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இப்போதும், யாராவது போலீஸைத் தப்பாகப் பேசினால் துள்ளியெழுந்து சண்டைக்கு வருவார், அப்படி ஒரு விசுவாசம்.
நானும் என்னுடைய கம்பெனிக்கு அதேபோன்ற விசுவாசத்துடன் இருக்கவேண்டும் என்பது அப்பாவின் கோரிக்கை, அல்லது கட்டளை.
அதையெல்லாம் கவனிக்கிற மனோநிலையில் நான் அப்போது இல்லை, புது வேலை, புதுச் சூழ்நிலை, முக்கியமாக, அந்தச் சம்பளம்.
ஹைதராபாதில் நாங்கள் பதினான்கு பேரும் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பயிற்சிக்காக ஒரு குட்டிக் குன்றின்மீதிருந்த அடுக்குக் கட்டடத்துக்கு எங்களை அனுப்பிவைத்தார்கள்
அடுத்த ஒன்றரை மாதமோ, இரண்டு மாதமோ, சொர்க்கம் என்றால் அதுதான். நாள்முழுக்க வகுப்பில் உட்கார்ந்து எதையாவது உருட்டிக்கொண்டிருப்பது, ஒழிந்த நேரத்தில் இண்டர்நெட் என்றால் என்ன என்று அனுபவஸ்தர்களிடம் பழகிக்கொள்வது, மாலைப் பொழுதுகளில் ஊர் சுற்றிப் பார்த்து ஹோட்டல்களில் சாப்பிடுவது, இதற்காக மாதம் பிறந்தால் சம்பளம், போதாதா?
மஞ்சள் பசைத் துண்டில் கண்டபடி, ஒரு பைசா மிச்சமில்லாமல் எங்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது இன்கம் டேக்ஸ் வழிப்பறியெல்லாம் (எங்களுக்கு) இல்லை. ஆகவே அதனை இஷ்டம்போல் செலவு செய்து வாழ்க்கையை அனுபவித்தோம்.
இரண்டாவது மாத இறுதியில், இன்னோர் அதிர்ச்சி. மதுரையிலிருந்து வந்து எங்களுடன் நெருங்கியிருந்த புதுச் சிநேகிதன் ஒருவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு பெங்களூர் புறப்பட்டான்.
இப்போதுதான் பயிற்சி தொடங்கியிருக்கிறது, அதற்குள் இவன் வேலையை விட்டுப் போகிறானே என்று எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சர்யம்.
விசாரித்தபோது, அவன் வெட்கப் புன்னகையோடு பதில் சொன்னான், ‘நம்ம ஆளு பெங்களூர்ல இருக்கு மச்சி, அதான் நானும் அங்கயே செட்டிலாயிடலாம்ன்னு கிளம்பறேன்’
முதலில் பணம், இப்போது காதல். மஞ்சள் துண்டுக் காகிதத்தை அசங்காமல் பிரித்து வேறிடத்தில் ஒட்டுவதுபோல் இப்படி மக்கள் ஏதேதோ காரணங்களுக்காக வேலை மாறுகிறார்களே என்று எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
நான் யாரையும் வெளிப்படையாகக் குற்றம் சொல்லவில்லை. ஆனால், ஒருவர் இப்படிச் சர்வ சாதாரணமாக வேலை மாறிக்கொள்வதை என்னால் அப்போது ஜீரணிக்கவே முடியவில்லை.
இப்படியிருந்தால், அவர்களுக்கு யார்மீது, அல்லது எதன்மீது விசுவாசம் வரும்? எனக்குப் புரியவே இல்லை.
ஆனால், அந்தச் சம்பவத்துக்குப்பிறகு, என்னுடைய வேலை நியமனக் கடிதத்தின்மீது ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் துண்டு எனக்கு வேறுவிதமாகத் தோன்ற ஆரம்பித்தது. இந்தத் துறையில் (அல்லது இந்த உலகத்தில்) எதுவுமே நிரந்தரமான ஒட்டுதல் இல்லை, அவ்வப்போது சேதமில்லாமல் பிரித்து ஒட்டிக்கொள்வதுதான் வாழ்க்கை என்று புரிகிறாற்போல் இருந்தது.
செப்டம்பர் முடிந்து, அக்டோபர் தொடங்கியது. எங்கள் நிறுவனத்தின் காலாண்டுக் கணக்குகள் வெளிவந்தன.
அதுவரை, ‘காலாண்டு’ என்றால் எங்களுக்குப் பரீட்சைதான் ஞாபகம் வரும். ஆனால் இப்போதுதான், ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் தங்களுடைய லாப, நஷ்டங்களைக் கணக்குப் பார்ப்பார்கள் என்று தெரியவந்தது.
எங்களுடைய கெட்ட நேரம், நாங்கள் சார்ந்த நிறுவனம் அதன் சரித்திரத்திலேயே முதல் தடவையாக நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.
அவ்வளவுதான், எங்கள் மேலிடம் வெலவெலத்துப்போய்விட்டது. உடனடியாகப் பல ஆயிரம் பேரை வேலையை விட்டுத் தூக்கப்போகிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
என்னுடைய ‘சுமார்’ ஆங்கில அறிவுக்கு ‘Lay-Off’ என்கிற வார்த்தையே புதிது. அதன் அர்த்தம் தெரியவந்தபோது, நடுக்கமாக இருந்தது.
ஹைதராபாத் அலுவலகத்தில் சுமாராக மூன்றில் ஒரு பங்குப் பேர் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிந்தது. யார் அந்த துரதிருஷ்டசாலிகள் என்பதைக் கூப்பிட்டுச் சொல்வார்களாம்.
ஒரு சுபயோக சுபதினத்தில் அந்தச் சடங்கும் நடந்தது. ஒவ்வொருவராக அழைத்து, ‘உள்ளே’யா, ‘வெளியே’யா என்று தகவல் சொன்னார்கள், சிலர் சிரிப்புடனும், சிலர் வெறுப்புடனும் வெளியே வந்தோம்.
அந்தத் தலைவெட்டில், நான் எப்படியோ தப்பிவிட்டேன். ஆனால் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் மாட்டிக்கொண்டார்கள், ‘மூன்று மாதம் தருகிறோம், அதற்குள் வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கெடு விதித்துவிட்டார்கள்.
மஞ்சள் துண்டுச் சீட்டைப் பிரித்து ஒட்டுவது, வேலைக்காரர்கள்மட்டுமில்லை, முதலாளிகளும்தான் என்பது அப்போது புரிந்தது.
அதன்பிறகு, என் நண்பர்கள், சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் என யார் வேலை மாறினாலும், நானே மாறியபோதும், அது துரோகம் எனத் தோன்றவே இல்லை. சேதமில்லாமல் பிரிந்து, மறுபடி ஒழுங்காகச் சேர்ந்துவிடமுடிகிறதா என்பதைமட்டும்தான் கவனிக்கிறேன்.
***
என். சொக்கன் …
05 12 2008