மனம் போன போக்கில்

சிற்றரசர்

Posted on: December 8, 2008

ஒரு குறுநிலப் பகுதிக்கு ராஜாவாகச் சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அதட்டி மிரட்டி ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்தவர், திடீரென்று ஒருநாள் உங்களையும் என்னையும்போல சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் சாதாரணமாக வாழப் பணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கும்போதெல்லாம், என்னால் இந்தக் கற்பனையைத் தவிர்க்கமுடிவதில்லை. வாழ்ந்து கெட்ட அரசர்கள், ஜமீன்தார்கள் போல, இவர் ஒரு வாழ்ந்து கெட்ட மருத்துவர்.

ஒருகாலத்தில், ஜெயநகரின் முக்கியமான வணிகத் தலங்களுக்கு நடுவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து, ஏழெட்டு விசிட்டிங் டாக்டர்களுடன் கம்பீரமாக ஆட்சி நடத்திக்கொண்டிருந்தவர் டாக்டர் கோவிந்தப்பன். அப்போது அவரிடம் பலமுறை சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறேன்.

அவருடைய பார்வையிலேயே ஓர் அதட்டல் இருக்கும், ‘என்னாச்சு?’ என்று விசாரிக்கும்போதே, ‘படவா ராஸ்கோல், நீ ஏதாவது விஷமம் செஞ்சிருப்பே, அதான் உடம்புக்கு வந்துடுச்சு’ என்று மிரட்டுவதுபோல் தோன்றும்.

நாம் நம்முடைய பிரச்னையைச் சொல்லச் சொல்ல, கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு, ‘ம்ஹும், தேறாது’ என்பதுபோல் தலையசைப்பார்.

பொதுவாக, டாக்டர்கள் ரொம்பவும் சிநேகிதமாகப் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஆனால் டாக்டர் கோவிந்தப்பன் இந்தப் பொதுவிதிக்கு நேர் எதிரானவர், ‘உன்னைமாதிரி ஆள்களுக்கெல்லாம் மருத்துவம் பார்க்கவேண்டியிருக்கிறதே’ என்பதுபோல்தான் அவருடைய பார்வையும், பேச்சும், நடவடிக்கைகளும் இருக்கும்.

நானாவது பரவாயில்லை, என் மனைவிக்கு அவரைப் பார்த்தாலே பயம், ‘கையில பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்மாதிரி இருக்கார்’ என்பாள்.

நிஜமாகவே டாக்டர் கோவிந்தப்பன் ஒரு வாத்தியார்தான். ஏதோ மருத்துவக் கல்லூரியில் புரொஃபஸராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கூடவே, பெரிய மருத்துவமனை அமைத்து நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தார்.

முதன்முறையாக நான் அவரைப் பார்த்தபோதே, கோவிந்தப்பனுக்கு அறுபது வயது கடந்திருக்கும் என்று தோன்றியது. எனக்குத் தெரிந்து கோட், சூட்டெல்லாம் உடுத்தி சம்பிரதாயமாக வைத்தியம் பார்த்த முதல் டாக்டர் அவர்தான்.

ஆனால், டாக்டருக்கு உடை அலங்காரமா முக்கியம்? ஏற்கெனவே உடலால், பலசமயம் மனத்தாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற பேஷன்ட்களிடம் அன்பாகப் பேசி, ‘எல்லாம் சரியாகிடும்’ என்று நம்பிக்கை தரவேண்டாமா? மருந்துகளைவிட, அன்பான கவனிப்புதானே நோயைத் தீர்க்கிறது?

இதையெல்லாம் யாரும் டாக்டர் கோவிந்தப்பனுக்கு எடுத்துச் சொல்லவில்லைபோல. அவர் தனது நோயாளிகளை எப்போதும் கிள்ளுக்கீரைபோல்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனாலும், அவரிடம் பேஷன்ட் கூட்டத்துக்குக் குறைச்சலே இல்லை. திங்கள்முதல் ஞாயிறுவரை அவரை எப்போது பார்க்கச் சென்றாலும், ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கும்.

முகத்தில் எள்ளும் கடுகு வெடிக்கிற ஒரு டாக்டரிடம், ஜனங்கள் ஏன் இப்படி வந்து குவிகிறார்கள்?

அதுதான் டாக்டர் கோவிந்தப்பனின் கைராசி. என்னதான் சிடுசிடுவென்று முறைத்தாலும், அவர் மருந்து எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தால், வியாதி பறந்து ஓடிவிடும் என்று ஒரு நம்பிக்கை.

ஆரம்பத்தில் எனக்கும் அவர்மீது பெரிய மரியாதையெல்லாம் எதுவும் வரவில்லை. ஆனால் ஒன்றிரண்டுமுறை அவரிடம் சென்றபோதெல்லாம் அடுத்த தடவை மறு ஆய்வுக்குக்கூடச் செல்லவேண்டிய அவசியமே இல்லாதபடி பிரச்னை நிச்சயமாகக் குணமாகிவிடும். அப்போதுதான், ‘மனுஷனிடம் ஏதோ விஷயம் இருக்கு’ என்று கவனிக்கத் தொடங்கினேன்.

கோவிந்தப்பனின் மருத்துவமனையில் அவரை யாரும் ‘டாக்டர்’ என்றுகூட அழைக்கமாட்டார்கள், ரிசப்ஷனிஸ்ட் தொடங்கி, சக மருத்துவர்கள்வரை எல்லோரும் அவரை ‘சீஃப்’ என்று விளிப்பதுதான் வழக்கம்.

நோயாளிகளிடமே எரிந்து விழுகிறவர், மருத்துவமனை ஊழியர்களை எப்படி நடத்துவார்? அவர்கள் அவரிடம் பேசும்போதே கை கட்டி வாய் பொத்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றும்.

அவர் எப்படி இருந்தால் என்ன? என்னுடைய வியாதி குணமானால் போதாதா?

போதும், நிச்சயமாகப் போதும். அதனால்தான், வீடு மாறியபிறகும்கூட, எனக்கோ என் மனைவிக்கோ சளி, காய்ச்சல், ஜுரம் என்றால் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து கோவிந்தப்பனிடம்மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம்.

அவருக்கு எங்களைச் சரியாகத் தெரியாது. ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவர்தான் எங்களுடைய குடும்ப மருத்துவர்.

பெரிய மருத்துவமனையில் தனியறை ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் கோவிந்தப்பனுக்கு, என்ன பிரச்னையோ தெரியவில்லை, திடீரென்று ஒருநாள் அவருடைய மருத்துவமனை இழுத்து மூடப்பட்டுவிட்டது.

‘என்னாச்சு?’ என்று பக்கத்து மருந்துக்கடைப் பையனிடம் விசாரித்தேன், ‘இங்கிருந்த ஹாஸ்பிடல் இடம் மாறிடுச்சா?’

‘டாக்டர் கோவிந்தப்பன் இப்போ அவர் வீட்டிலயே ஒரு சின்ன க்ளினிக் வெச்சு நடத்திகிட்டிருக்கார்’ என்றான் அவன், ‘இங்கேதான், பக்கத்தில, நீங்க அஞ்சு நிமிஷத்தில நடந்து போயிடலாம்’

அங்கே செல்வதற்கான வழியையும் அவனே குறித்துக் கொடுத்தான். நடக்க ஆரம்பித்தேன்.

அந்த வீடு ஒரு குறுக்குத் தெருவின் முனையில் ஒளிந்திருந்தது. பால்கனியில் போர்ட் தொங்கிய போர்ட், ‘டாக்டர் கோவிந்தப்பன், பார்வை நேரம்: மாலை 7 டு 9’ என்று அறிவித்தது.

குல்மோஹர் மரத்தின் காலடியில் இருந்த கதவைத் திறந்ததும், மிகக் குறுகலான படிகள். மேலே ஏறிச் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

அந்த அறைக்கும், ‘நுழைந்தேன்’ என்கிற வார்த்தை பொருத்தமில்லை, ‘புகுந்தேன்’ என்றால்தான் சரியாக இருக்கும்.

டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனையில் ரிசப்ஷன் டேபிள்கூட, இதைவிடப் பெரியதாக இருக்கும். இத்தனூண்டு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு இந்த மனிதர் என்ன செய்கிறார்?

கோவிந்தப்பன் மிகவும் தளர்ந்திருந்தார். ஆனால் அப்போதும் முகத்தில் சிடுசிடுப்பு குறையவில்லை. என்னை முறைத்து, ‘வாட் டூ யு வான்ட்? என்றார்.

டாக்டரிடம் எதற்கு வருவார்கள்? வைத்தியம் பார்க்கதான். வருகிறவர்களிடமெல்லாம் இவர் இப்படி எரிந்து விழுந்தால், கோபித்துக்கொண்டு திரும்பிப் போய்விடமாட்டார்களா?

நான் போகவில்லை, அனுமதி பெற்று அவர்முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன், ’நாலு நாளா ஜுரம் டாக்டர்’ என்று ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்குபோல் பேச ஆரம்பித்தேன்.

அப்போதுதான் கவனித்தேன், அந்த அறையிலிருந்த குஷன் நாற்காலி, மேஜை, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மர அலமாரி, ஏன், சுவர் ஓவியங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள்கூட டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனை அறையில் இருந்தவைதான். அந்த அறையை அப்படியே பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து இங்கே பொருத்தியதுபோல் மாற்றியிருந்தார் அவர்.

ஆனால், அந்தப் பழைய மருத்துவமனைக்கு என்ன ஆச்சு? ஏன் அத்தனையையும் தூக்கிக்கொண்டு இந்தக் குறுக்குச் சந்துக்குள் வந்து விழுந்து கிடக்கிறார் இவர்?

சாதாரணமாக டாக்டர் கோவிந்தப்பனிடம் மருத்துவ சமாசாரங்களைப் பேசினாலே கோபப்படுவார், இதையெல்லாம் நான் அவரிடம் கேட்டால் அடித்துத் துரத்திவிடுவார். ஆகவே, பேசாமல் அவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு, ’ஃபீஸ் எவ்வளவு டாக்டர்?’ என்றேன்.

‘ஹண்ட்ரட் ருபீஸ்’

அவருடைய பழைய மருத்துவமனையில் ஏழெட்டு மருத்துவர்கள் இருந்தபோதும், டாக்டர் கோவிந்தப்பன்தான் மிகவும் காஸ்ட்லி. ஒரு கன்சல்டேஷனுக்கு முன்னூறு ரூபாயோ, முன்னூற்றைம்பதோ வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது ஏனோ நூறு ரூபாய் போதும் என்கிறார்.

நான் இந்த விஷயத்தைச் சொன்னபோது, என் மனைவிக்கும் ஆச்சர்யம். அதைவிட, ‘பாவம், அவரோட ஹாஸ்பிடலுக்கு என்ன ஆச்சோ’ என்று கவலைப்படத் தொடங்கிவிட்டாள், ‘ஒருவேளை கடனுக்கு வட்டி ஒழுங்காக் கட்டாம பேங்க்ல இழுத்து மூடியிருப்பாங்களோ?’

அப்போது நாங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்த நேரம். என்னுடைய, அவளுடைய எல்லாக் கனவுகளையும் வங்கி அதிகாரிகள்தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள்.

அவர்கள் சொல்லும் ஈஎம்ஐ கணக்குகளோ, விதிமுறைகளோ எங்களுக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனால், அடுத்த பதினைந்து வருடங்கள் மாதாந்திரத் தொகையைக் ஒழுங்காகக் கட்டாவிட்டால் என்ன ஆகும் என்பதைமட்டும் அவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைத்திருந்தார்கள்.

அதனால்தான் டாக்டர் கோவிந்தப்பனின் மருத்துவமனை வங்கி அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுவிட்டதோ என்று என் மனைவிக்குச் சந்தேகம். இன்றுவரை எங்களால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால், அடுத்தமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கஷ்டப்பட்டு வழி கண்டுபிடித்து கோவிந்தப்பனின் புதிய மருத்துவமனைக்குதான் சென்றோம். அவரும் தூசு படிந்த நாற்காலிகளின்மீது அமர்ந்தபடி எங்களை ஆசிர்வதித்தார்.

அன்றைக்கு வீடு திரும்பும் வழிமுழுக்க, நாங்கள் அவரைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். என்னதான் சினிமா நம்பியார்போல் முறைத்தாலும், ரொம்ப நல்ல மனுஷன், அவருக்கு இந்த வயதில் இப்படி ஒரு வேதனை நேர்ந்திருக்கவேண்டாம்.

மற்ற வேலைகளைச் செய்கிறவர்கள், ஒரு வயதுக்குப்பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் மருத்துவத்துறையில் அந்த அனுபவத்தை வீணடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ, கோவிந்தப்பன் கிட்டத்தட்ட எழுபது வயதிலும் தொடர்ந்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இப்போதெல்லாம், அவருடைய நினைவு தடுமாறுவது எங்களுக்கே நன்றாகத் தெரிகிறது. மருந்துகளின் பெயர் சட்டென்று ஞாபகம் வராமல், ஷெல்ஃபில் தேடி எடுத்து எழுதுகிறார். ஒரு மாத்திரையின் பெயர் எழுதியபிறகு, நெடுநேரம் யோசித்துதான் அடுத்த வரி எழுதலாமா, அல்லது கையெழுத்துப் போட்டு முடித்துவிடலாமா என்று தீர்மானிக்கிறார், வார்த்தைக்கு வார்த்தை வாய் குழறுகிறது, நெஞ்சில் ஸ்டெத் வைத்துப் பரிசோதிக்கும்போது கைகள் நடுங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது.

அந்தச் சிறு அறையின் கீழேதான் அவருடைய வீடு. அந்த வீட்டில் இன்றுவரை ஒரு சின்னப் பூனைகூட ஓடி நாங்கள் பார்த்தது கிடையாது.

அப்படியானால், டாக்டர் கோவிந்தப்பன் தனிமையில் வாழ்கிறாரா? ஏன்? இந்த வயதில் மெடிக்கல் ரெப்ஸ்கூட எட்டிப் பார்க்காத ஒரு புறாக் கூண்டுக்குள் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து சம்பாதிக்கவேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? அல்லது வைராக்கியம்? புரியவில்லை.

சென்ற வார இறுதியில் கடுமையான காய்ச்சல், ஆட்டோ பிடித்து டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கச் சென்றேன்.

வழக்கம்போல என்னை முறைத்து வரவேற்றார் அவர், ‘என்ன ஜுரமா?’ என்றார் அதட்டலாக.

‘ஆமாம் டாக்டர்’

’சரி, உட்காருங்க’ என்றபடி தனது தெர்மாமீட்டரை எடுத்து உதறினார். அதை என் வாயில் நுழைத்துவிட்டுக் கனமான கைக் கடிகாரத்தில் மணி பார்க்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து என்னைப் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபின்னர், கடைசியாக, ‘வைரல் ஃபீவர்தான், ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார்.

‘ஓகே டாக்டர்’

‘நான் ரெண்டு மருந்து எழுதித் தர்றேன், காலை, மதியம், மாலை மூணு வேளையும் தவறாமல் சாப்பிடணும், சரியா’ என்று அதட்டினார் கோவிந்தப்பன், ‘நான் உங்களை ஒரு வாரம் அப்ஸர்வ் செய்யப்போறேன்’

‘ஏன் டாக்டர்? என்னைப்பத்தி எதுனா புத்தகம் எழுதப்போறீங்களா?’என்கிற குறும்புக் கேள்வியைச் சிரமப்பட்டு அடக்கினேன், அவர் தந்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டேன், ‘டாக்டர், சாப்பாடு?’

‘ரெண்டு நாளைக்கு எண்ணெய்ப் பண்டங்கள் வேண்டாம், முடிஞ்சா வெறும் இட்லி, பருப்பு சாதத்தோட நிறுத்திக்கோங்க’ என்றார் அவர், ‘அப்புறம், ராத்திரி நேரத்தில எங்கயும் வெளியே போகவேண்டாம், பெங்களூர்ல ரொம்பக் குளிர்’

‘பார்வை நேரம்: 7 டு 9’ என்று போர்ட் வைத்திருக்கிற ஒரு டாக்டர் இப்படிப் பேசலாமா? ராத்திரி நேரத்தில் நான் வெளியே வரக்கூடாது என்றால் இவர் என்னை எப்படி அப்ஸர்வ் செய்வார்?

’மறுபடி எப்போ வரணும் டாக்டர்?’

‘அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க’ என்றபடி எழுந்துகொண்டார் டாக்டர் கோவிந்தப்பன், ‘ஹன்ட்ரட் ருபீஸ்’

படிகளில் இறங்கும்போது மனைவியை செல்பேசியில் அழைத்தேன், ‘ஒண்ணுமில்லை, சாதாரண வைரல் ஃபீவர்தானாம், மருந்து எழுதிக் கொடுத்திருக்கார், அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கார்’

‘வைரல் ஃபீவருக்கெல்லாம் இன்னொருவாட்டி செக்-அப்க்கு வரச்சொல்ற முதல் டாக்டர் இவர்தான்’ நக்கலாகப் பதில் வந்தது, ’பாவம், மனுஷனுக்கு இன்னொரு நூறு ரூபாய் தேவைப்படுதோ என்னவோ’

இப்போது, அவளுக்கு அவர் ஒரு ’பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்’மாதிரித் தெரியவில்லைபோல!

***

என். சொக்கன் …

08 12 2008

11 Responses to "சிற்றரசர்"

நல்லாதான் இருக்கு.. ஆனாலும்

துப்பறியும் கதை படிக்கும் போது கடைசி நாலு பக்கத்தை யாரோ கிழிச்சு வெச்சிருந்தா எவ்வளவு கோவம் வருமோ அப்படி வருது..

அவரு ஏன் அப்படி ஆனார்னு நீங்க சொல்லவே இல்லை.

ஆர்வம் கொப்பளிக்க படிக்கும் போது இப்படி ஏமாத்த கூடாது. நாளைக்கு பக்கத்துல இருக்குற மெடிக்கல் ஷாப்புக்கு போய், அவர் ஏன் இப்படி ஆனார்னு கேட்டு அப்டேட் பண்ணுங்க.

கணேஷ் சந்திரா,

அதை ஊகிக்கிறது அப்படியொண்ணும் கஷ்டமில்லை, அவர் நடத்திவந்த ஹாஸ்பிடல் இப்பவும் பாழடைஞ்ச மண்டபம்மாதிரிதான் கிடக்குது, வேற யாரும் அங்கே குடியேறலை, இவரும் தனிக்காட்டு ராஜாவா ப்ராக்டிஸ் செஞ்சுகிட்டிருக்கார், அப்படீன்னா ஒரு காரணம்தானே இருக்கமுடியும்? 🙂

எனிவே, மெடிக்கல் ஷாப்காரர்கிட்டே கேட்கிறது நல்ல ஐடியா, அடுத்தவாட்டி ட்ரை பண்றேன்!

– என். சொக்கன்,
பெங்களூர்.

Rompa pavamaa irukku. I hope he gets back his hospital 🙂

வணக்கம்

நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

அன்பு நண்பருக்கு,

நன்றி, இணைப்புக் கொடுத்துள்ளேன்,

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூர்.

அந்த அறைக்கும், ‘நுழைந்தேன்’ என்கிற வார்த்தை பொருத்தமில்லை, ‘புகுந்தேன்’ என்றால்தான் சரியாக இருக்கும்.

😉 :>

இது அனுபவமா, சிறு கதையா..?
எப்படிப் பாத்தாலும் ரொம்ப நல்லா இருக்கு..

இங்கே பெங்களூரில் எல்லா மருத்துவர்களும் தும்மினால்கூட ஊசி போட்டு விடுகிறார்களே! கொழும்பு மருத்துவர்கள் எல்லம் காந்திகள் என்று நினைக்க வைத்துவிட்டார்கள். உங்களுக்கு அந்த அநுபவம் கிடைக்கவில்லையா?
😀

உங்கள் வார்த்தைகளில் கோவிந்தன் ஐன்ஸ்டீன் போல என் மனத்தில் உருவகமாகியுள்ளார். நிஜத்தில் எப்படியிருப்பாரோ? 😉

Sujal, bsubra, Bee’morgan,

நன்றி!

ஆதித்தன்,

இதுவரை பெங்களூரில் எந்த மருத்துவரும் எனக்கு ஊசி போட்டது கிடையாது, நீங்கள் சொல்லும் நேரம் எங்காவது மாட்டிக்கொள்வேனோ என்னவோ :-S

முகில்,

கோவிந்தப்பன் வழுக்கைத் தலை, ஐன்ஸ்டீனுக்குத் தலையெல்லாம் முடியாச்சே!

ஆனால் இருவருக்கும் மீசை கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கும்!

ஏதாவது லோஷன், க்ரீம், ஆயிண்ட்மென்ட் எழுதிக் கொடுத்தால், அதை எப்படி மென்மையாகத் தடவவேண்டும் என்று அவர் கைகளால் நடித்துக் காண்பிப்பார், கிட்டத்தட்ட பரதநாட்டிய முத்திரைபோல் அழகாக இருக்கும்!

– என். சொக்கன்,
பெங்களூர்.

Bee’Morgan,

ப்ளாகில் நான் எழுதுவது எல்லாமே அனுபவம்தான், குறைந்தபட்சம் 95% அனுபவம்.

இதைக் கதையாக மாற்றினால் சுவாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் கற்பனை கலந்தாலும் கலப்பேன், நிச்சயமாகச் சொல்வதற்கில்லை 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 593,269 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: