சறுக்கு மரம்
Posted December 10, 2008
on:- In: Bangalore | Forget It | Kids | Life | Memories | Play | Positive | Rise And Fall | Uncategorized | Visit
- 10 Comments
அந்தச் சறுக்கு மரத்தில் எல்லா வண்ணங்களும் இருந்தன.
இடதுபக்கம் சிவப்பு, முன்னால் வந்தால் பழுப்பு, வலதுபக்கம் பச்சை, நீலம், பின்னே சென்று பார்த்தால் வானவில்லில் மீதமிருக்கும் நிறங்கள் அத்தனையும்.
இவற்றுக்கெல்லாம் நடுவே ஒரு நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்தது. அதில் கால் வைத்துக் குழந்தைகள் மேலே ஏறினால், நான்கு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் சறுக்கிக் கீழே வரலாம்.
நிறத்தில்மட்டுமின்றி, சறுக்கு மரங்களின் வடிவத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்கள்.
சிவப்புச் சறுக்கு மரம், நேரிடையானது, நாம் அன்றாடம் பல பூங்காக்களில் பார்க்கக்கூடியது.
அதிலிருந்து தொண்ணூறு டிகிரி தள்ளியுள்ள பழுப்புச் சறுக்கு மரம், கிட்டத்தட்ட அதேமாதிரியானதுதான். ஆனால் இதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு சறுக்குகள். இணை பிரியாத சிநேகிதர்கள் (அல்லது காதலியர், ‘ஹனிமூன்’ தம்பதியர்) கை பிடித்துக்கொண்டு ஒன்றாகச் சறுக்கலாம்.
பச்சை, நீலம் கலந்த மூன்றாவது சறுக்கு மரம், ஒரு குழாய்போல இருந்தது. அதனுள் நுழையும் குழந்தைகள் சில விநாடிகளுக்கு ஒரு மர்மமான இருட்டை அனுபவித்தபடி சரேலென்று கீழே இறங்கிவரலாம்.
கடைசிச் சறுக்கு மரம்தான் மிக மிக விசேஷம். அது நேராகக் கீழே இறங்காமல், திருகாணிபோல் ஒருமுறை சுற்றி இறங்கியது. அதில் சறுக்கி வரும் குழந்தைகள் பரவசத்தோடு கத்தியதைப் பார்த்தால், மிகச் சிறப்பான அனுபவமாகதான் இருக்கவேண்டும்.
ஒரே இடத்தில் இத்தனை சறுக்கு மரங்களை நான் ஒன்றாகப் பார்த்தது கிடையாது. யாரேனும் கவிஞர் இதைப் பார்த்திருந்தால், ‘சவுக்குத் தோப்புபோல, இதென்ன சறுக்குத் தோப்பு!’ என்று நிறைய ஆச்சர்யக்குறி போட்டுக் கவிதை எழுதியிருப்பார்கள்.
நங்கை அந்தச் சறுக்கு மரங்களில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் மேடையின்மீது அவள் ஏறிக் குதிக்கும் ‘திம் திம்’ சத்தம், இதயத் துடிப்புபோல் நில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது.
சறுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பீரங்கி பொம்மைமீது ஏறி நின்றாள் அவள், ‘அப்பா, நீயும் வா, சறுக்கி விளையாடலாம்’
’அம்மாடி, நான் அதுமேல ஏறினா, போலீஸ் பிடிச்சுடும்’ என்றேன் நான்.
‘இங்கதான் யாரும் இல்லையே, கேமெராகூட இல்லை, நீ பயப்படாம வாப்பா’
நங்கையின் அம்மா சொல்லியிருக்கிறாள், உலகமெங்கும் போலீஸ் இருக்கிறது, அவர்கள் இல்லாத இடங்களில்கூட என்னென்ன தப்பு நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விடீயோ கேமெராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இந்தச் சறுக்கு மரப் பிரதேசத்துக்கு நங்கையின் அம்மா விஜயம் செய்யவில்லை. ஆகவே, போலீஸ், கேமெரா எதுவும் கிடையாது, இஷ்டம்போல் விளையாடலாம். லாஜிக் சரியாக இருக்கிறதா?
லாஜிக் சரிதான். ஆனால், எதார்த்தமாக யோசிக்கவேண்டுமில்லையா?
பதினைந்து கிலோ சிறுமியைத் தாங்கும் பிளாஸ்டிக் சறுக்குத் தோப்பு, என்னுடைய எண்பத்தைந்து கிலோவுக்கு உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான், நங்கை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசியாக, நங்கைக்குப் பொறுமை தீர்ந்துவிட்டது, சரெலென்று சிவப்புச் சறுக்கு மரத்தின் வழியே இறங்கியவள், என்னுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த காவலாளி எங்களைப் பார்த்துச் சிரித்தான், ‘பெரியவங்களும் ஏறலாம் சார், ஒண்ணும் ஆவாது’
அப்போதும், எனக்குத் தயக்கம் தீரவில்லை. பயத்தோடு நூல் ஏணியில் கால் வைத்தேன்.
’நூல் ஏணி’ என்பது, சும்மா பெயருக்குதான், உண்மையில் அது ஒரு கம்பி ஏணி, அதன்மீது வெள்ளைக் கயிறை அலங்காரமாகச் சுற்றிவிட்டிருந்தார்கள்.
அந்தக் கம்பி என்னுடைய எடையைத் தாங்கியது, எகிறி மேலே குதித்துவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, நான் கேட்ட சின்னச் சின்ன சப்தங்கள்கூட அநியாயத்துக்குப் பயமுறுத்தின. சாதாரணமாக நங்கையின் செருப்பு பிளாஸ்டிக்கில் உராயும் ஒலிகூட, ஏதோ உடைவதுபோல் கேட்டது. எந்த விநாடியில் சீதையை விழுங்கிய பூமிபோல் இந்தச் சறுக்குத் தோப்பு இரண்டாகப் பிளந்துகொண்டு விழப்போகிறதோ என்கிற திகிலுடன் அந்த மேடையில் நின்றேன்.
’எதில சறுக்கலாம்பா?’
பழுப்பு இரட்டைச் சறுக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒன்றில் நங்கை, இன்னொன்றில் நான், ரெடி, ஒன், டூ, த்ரீ. நைஸாக வழுக்கிக்கொண்டு மண்ணில் வந்து விழுந்தோம்.
இப்போது, எனக்கு அந்தக் குழாய்ச் சறுக்கு மரத்தைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. முன்பைவிட விரைவாக ஏணியில் ஏறிவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட.
கால் மணி நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை சறுக்கிவிட்டோம். செருப்பு இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓரமாகக் கழற்றிவிட்டு இன்னும் வேகமாக ஏறி, சறுக்க ஆரம்பித்தோம்.
முக்கியமாக, அந்தப் பல வண்ணச் சுழல் சறுக்கு மரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மரத்தில், என்னால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்துவிட்டால், அடுத்த விநாடி யாரோ என்னை விரல் நுனியில் சுருட்டி எடுப்பதுபோல் உடல் வளைந்து, மீண்டும் நீள்கிறது.
சத்தியமாக, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடக்கவேமுடியாது. சுழல் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கினால்மட்டுமே புரிகிற பரவசம் அது.
என்னுடைய விஷயத்தில், இன்னொரு புதிய உற்சாகமும் சேர்ந்துகொண்டிருந்தது. காரணம், சின்ன வயதில்கூட இப்படியெல்லாம் ஓடி விளையாடி எனக்குச் சுத்தமாகப் பழக்கமே இல்லை.
விளையாட்டு என்பதை நான் எப்போதும் செய்தித் தாள்களின் பின் பக்கத்திலோ, தொலைக்காட்சியிலோதான் சந்தித்துப் பழக்கம். மைதானத்தில் இறங்கி ஓடியாடுவதெல்லாம் என்னுடைய குண்டு உடம்புக்குச் சரிப்படாது.
என்ன? ’ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் குண்டு உடம்பு வந்தது’ என்கிறீர்களா? ஏதோ ஒன்று!
ஆனால் இன்றைக்கு, எனக்குள் ஏதோ ஒருவிதமான புது உற்சாகம். நங்கையுடன் சேர்ந்து அந்தச் சறுக்கு மரங்களைச் சில மில்லி மீட்டர்கள் தேய்த்து முடித்தேன், இன்னும் சீ-ஸா, ஊஞ்சல், A, B, C, D வடிவத்தில் அமைந்த கம்பி பொம்மைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடினோம்.
’என்னடீ? நீச்சலடிக்கப் போகலையா?’
நங்கை அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்து, ‘அம்மா’ என்றாள், ‘ஸ்விம்மிங் வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே விளையாடறோம்’
எனக்கும் ஆசைதான். ஆனால் குண்டு உடம்பு நன்றாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. ஆகவே, ’நீ ஸ்விம் பண்ணிட்டு வா, அப்புறம் மறுபடி விளையாடலாம்’ என்றேன்.
நங்கை சமர்த்தாக உடைகளை மாற்றிக்கொண்டாள், தலையின் இரட்டைப் பின்னலை இணைத்து ஒன்றாக மாற்றி பிளாஸ்டிக் தொப்பி (ஷவர் கேப்) மாட்டிக்கொண்டாள். விறுவிறுவென்று அதே பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
நாங்கள் பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்து சேர்வதற்குள், அவள் தண்ணீரில் இறங்கியிருந்தாள்.
அந்த நீச்சல் குளம், வயிறு சிறுத்த பலூன் வடிவத்தில் இருந்தது. பலூனின் உச்சியில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஆழம் குறைவான குட்டிக் குளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.
வேலை நாள் என்பதாலோ என்னவோ, பெரிய குளம், குட்டிக் குளம் இரண்டிலும் மக்களைக் காணோம், நங்கைமட்டும் ஜாலியாகத் தண்ணீருக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள், துணைக்குக் கரையோர ஸ்பீக்கர்களில் வழிந்து வரும் எஃப்.எம். சங்கீதம்.
‘அவதானே விளையாடினா? உனக்கு ஏன் வேர்த்திருக்கு?’ என் மனைவி சந்தேகமாக விசாரிக்கிறாள்.
‘நானும் விளையாடினேன்’, கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால், மீண்டும் குழந்தையாவது சாத்தியம்தான் என்கிற நினைப்பு உள்ளே மகிழ்ச்சியாக உறைந்திருக்கிறது.
என்னுடைய பேச்சை அவள் நம்பியதாகத் தெரியவில்லை. ’இந்தக் குண்டு உடம்புக்கு உட்கார்ந்த இடத்தில் தாயக் கட்டம் ஆடினால்தான் உண்டு’ என்று நினைத்திருக்கக்கூடும்.
நான் புன்னகையோடு டிஜிட்டல் கேமெராவை எடுத்துக்கொண்டேன், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஆடிக்கொண்டிருக்கும் நங்கையைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்.
அவளுடைய பள்ளியில் குழந்தைகளுக்குச் சிறு நடனங்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் முழுப் பாட்டு கற்றுக்கொண்டு மேடையேறி ஆடலாம். அந்த ஆண்டு விழா ஒத்திகையைதான், இப்போது இவள் நீச்சல் குளத்துக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள்.
என்னுடைய ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்ததும், அவளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது, இன்னும் வேகமாக ஆடத் தொடங்கினாள்.
அங்கேதான் தப்பாகிவிட்டது, ஒரு ஸ்டெப் இடம் மாறி வைத்தவள், அப்படியே தலை குப்புற விழுந்தாள்.
அந்த நீச்சல் குளம் மிகச் சிறியது, அதிக ஆழம் இல்லாதது, குழந்தைகள் தவறி விழுந்தாலும், மூழ்கிப் போய்விட வாய்ப்புகள் இல்லை, சமாளித்து எழுந்துவிடலாம்.
ஆனால், அந்த நிமிடப் பரபரப்பில் இதையெல்லாமா நினைக்கத் தோன்றும்? பரபரவென்று குளத்தின் அருகே ஓடித் தண்ணீரில் இறங்கினேன். என் கையிலிருந்த டிஜிட்டல் கேமெரா நழுவி விழுந்தது மூழ்கியது.
நங்கைக்கு நீச்சல் தெரியாது, எனக்கும்தான். ஆனால் அந்தக் குட்டிக் குளத்துக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஒரு விநாடி நேரத்துக்குள் குழந்தையை நெருங்கித் தூக்கிவிட்டேன்.
அவளுடைய முகமெல்லாம் நன்கு சிவந்திருந்தது. கண்களைச் சுருக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நங்கையைவிட, நாங்கள்தான் அதிகம் பதறிப்போயிருந்தோம், ‘என்ன ஆச்சு?’, ‘என்ன ஆச்சு?’ என்று திரும்பத் திரும்ப விசாரித்தால் நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா?
அவள் சில நிமிடங்களுக்கு அழுதாள், ‘சரி துடைச்சுக்கோ, நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றதும், ஸ்விட்ச் போட்டாற்போல் அழுகை நின்றது, ‘நான் ஸ்விம் பண்ணனுமே’
‘வேணாம்மா’ என்று சொல்லதான் விரும்பினேன். ஆனால் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை, ‘ஜாக்கிரதையா விளையாடும்மா, தண்ணியில டேன்ஸெல்லாம் ஆடவேண்டாம்’ என்றுமட்டும் எச்சரித்தேன்.
ஆனால், எந்தக் குழந்தை அப்பா, அம்மா சொல்வதைக் கேட்கிறது? அடுத்த இரண்டு நிமிடங்களில், அவள் மீண்டும் பழையபடி தண்ணீருக்குள் காளிங்க நர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
ஆச்சர்யமான விஷயம், அவளுடைய முகத்தில் பயமோ, கலவரமோ தெரியவில்லை, சற்றுமுன் தலைகுப்புற விழுந்த விபத்தை அவள் முழுவதுமாக மறந்துபோயிருந்தாள். பழைய, உற்சாகமான நங்கையாக மாறியிருந்தாள்.
ஆனால் எங்களுக்கு, இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை, ‘நல்ல வேளை, நல்ல வேளை’ என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். நெஞ்சுக்குள் தடால் தடாலென்று அபத்திரமாக ஏதோ சப்தம் கேட்டது.
இந்தக் களேபரமெல்லாம் நடந்து முழுசாக 24 மணி நேரம்கூட முடியவில்லை, அதற்குள் நங்கை அதைச் சுத்தமாக மறந்துவிட்டாள், ‘ஸ்விம்மிங் எப்படி இருந்தது?’ என்று அவளுடைய தாத்தா ஃபோனில் கேட்டால், ‘ஓ, சூப்பர்’ என்றுமட்டும்தான் பதில் வருகிறது. தவறியும், ‘நான் தண்ணியில விழுந்தேன், பயமா இருந்தது, அழுதேன்’ என்றெல்லாம் சொல்வதில்லை.
பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது.
***
என். சொக்கன் …
10 12 2008
10 Responses to "சறுக்கு மரம்"

என்ன சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் அம்மாவும் அப்பாவும் இப்படி பயப்படுகிறார்களே என்று சின்ன வயசில் தோன்றுவதுண்டு. இன்று நம் பிள்ளைகள் வளர்கையில் நாம் பயப்படுகையில் தான் புரிகிறது “பெற்றவர்களாக” இருப்பதின் சுகமும் சுகமான-வலியும்.. கடைசி வரிகள் அருமை!


//அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட./
இதில பல தத்துவம் இருக்கு. சுலபமா சொல்லிட்டீங்க.


சும்மாவா சொன்னார்கள்
“குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ” என்று?
குழந்தை உலக அறிவு [என்று சொல்லப்படும் சூது உணரும் திறன்] பெறும்வரை ஞானியாகவே வாழ்கின்றது.
மனித மனம், சந்தோஷமான நிகழ்வை எவ்வளவுக்கு எவ்வளவு
ஞாபகம் வைத்துக்கொள்ளுகின்றதோ அதைவிடப் பலமடங்கு
துயரமான நிகழ்வை ஞாபகம் வைத்துக்கொள்கின்றது.
எல்லா அநுபவங்களும் நம் ஆழ்மனதில் பதிகின்றன என்று மனநலமருத்துவர்கள் சொல்லுகின்றார்கள்.
அந்த அநுபவப் பதிவுகளே கர்மவினைகள் என்றும்,
அவையே மறுபிறவிக்கு காரணம் என்றும்
ஆன்மீகவியலாளர்கள் சொல்லுகின்றார்கள்!
நான் சொல்லுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!
“நீருக்குள் விழுந்த உங்கள் டிஜிட்டல் கேமெராவுக்கு என்ன ஆச்சு என்று நீங்கள் சொல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!”


ஆசானே!
டிஜிட்டல் கேமெராக்கும் நான் சொன்ன அநுபவப்பதிவுத் தத்துவத்துக்கும் [லல்லுபிரசாத் யாதவ் போல] பெரிய
தொடர்பு இருக்கிறது.
மனத்தைப் போலவே அதுவும் காட்சிகளைப்பதிகின்றது.
மனமாவது சிலகாலத்தில் சிலவற்றை மறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
டிஜிட்டல் கேமெரா எதையும் மறக்காது [நீங்களாக போய் delete செய்தால் ஒழிய!]
மின்ச்சாரப்பற்றாக்குறை ஏற்பட்டால் செயலிழந்து கிடக்குமே ஒழிய தன் தகவல்களை அழிய விடாது.
மனதிற்கும் டிஜிட்டல் கேமெராவுக்கும் இன்னும் பல தொடர்புகள் உண்டு. இதைப்பற்றி நேரம் கிடைத்தால் ஒரு பதிவு போடலாமா என்று யோசிக்கிறேன்…!
சொல்ல மறந்துவிட்டேன்! குழந்தையின் பெயர் நங்கையா?
நேற்றே கேட்க நினைத்தேன்.
நல்ல தமிழ்ப்பெயர்!


இரண்டுக்கும்தான் 😉


[…] என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் […]

1 | Bee'morgan
December 10, 2008 at 6:51 pm
//
பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது.
//
நிதர்சனமான உண்மை..!
கடைசி வரை பொழுது போக்காகத் தெரிந்தாலும், இந்த வரிகள் மொத்தமாக படித்தபின்பான மனநிலையை மாற்றிவிடுகின்றன..
உங்களைப் பாத்தா ஒரு வகையில் பொறாமையாக் கூட இருக்கு.. எப்படித்தான் உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குதோ.. 😛