Archive for December 11th, 2008
நொறுக்குத் தீனி – 1
Posted December 11, 2008
on:- In: Rules | Tidbits | Time Management | Uncategorized
- 15 Comments
(முன்குறிப்பு: வாசிக்கும் புத்தகங்கள், பத்திரிகைகளில் சுவாரஸ்யமான பகுதிகள், சம்பவங்கள், குறிப்புகள் தென்பட்டால் டைரியில் குறித்துவைப்பேன், அதில் சிலதைச் சேர்த்து ‘நொறுக்குத் தீனி’ என்ற தலைப்பில் இங்கே பகிர ஆசை – உரிய ஆசிரியர், இதழ் பெயருடன், வாரம் ஒன்று, மாதம் இரண்டு என்றெல்லாம் கணக்கு வைத்துக்கொள்ளாமல்.
அந்த வரிசையில் இது முதல் தொகுப்பு, வரவேற்பு இருந்தால், தொடருவேன்.
– என். சொக்கன், பெங்களூர்)
ஜி. டி. நாயுடு கோவையில் நடத்திவந்த ஹாஸ்டலில் இப்படியொரு விதியை அமல்படுத்தியிருந்தார்: ‘ஒவ்வொரு மாணவரின் எடை, மாத இறுதியில் 5 பவுண்ட்களுக்குமேல் குறைந்திருக்கக்கூடாது, ஒவ்வொரு சமையல்காரரின் எடை, 5 பவுண்ட்களுக்குமேல் ஏறியிருக்கக்கூடாது’
(தகவல்: பா. அச்சுதன் – ஓம் சக்தி – டிசம்பர் 2008)
*********
‘ழ’ உச்சரிப்பு
அழகாய் வருகிறது
குடிகாரனுக்கு
(சு. கணேஷ்குமார் – குமுதம் – 10 டிசம்பர் 2008)
*********
லால் பகதூர் சாஸ்திரியின் உறவினர் ஒருவர் வீடு தேடி வந்தார், ‘என் பையன் உங்க போலீஸ் பரீட்சையெல்லாம் பாஸ் செய்துட்டான், உயரம் கொஞ்சம் கம்மியாம், நீ சொன்னாப் போதும், செலக்ட் ஆயிடும்’
‘போலீஸ் வேலைக்கெல்லாம் இவ்வளவு உயரம், இவ்வளவு மார்பளவுன்னு ரூல்ஸ் இருக்கு, அதை எல்லாம் மாற்ற முடியாது, மாற்றக்கூடாது!’
‘நீ நாலரை அடிகூட இல்லே! நீ போலீஸ் மந்திரி. எம் பையன் ஏதோ அரை அங்குலமோ, ஓரங்குலமோதான் குறைவு. அவன் போலீஸ்காரனாகக் கூடாதா?’
சாஸ்திரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது, ‘அம்மா, போலீஸ் மந்திரின்னா இவ்வளவு உயரம் இருக்கணும்ன்னு விதிமுறைகள் எதுவும் கிடையாது. நான் மூணடியா இருந்தாலும் மந்திரியா இருந்திருப்பேன். ஆனா போலீஸ் உத்தியோகத்துக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை மாத்தக்கூடாது, அந்த அதிகாரம் யாருக்கும் இல்லை’
வந்தவர் சாஸ்திரியின் பேச்சில் சமாதானமானார்.
(’மேதை’ டிசம்பர் 2008 மாத இதழிலிருந்து)
*********
குறிஞ்சித் தேனின் இனிமை, முல்லைப் பாலின் சுவை, மருத நிலத்தின் வளம், நெய்தலின் உழைப்பு, பாலையின் சகிப்புத்தன்மை ஆகியவை சேர்ந்து அமைவதுதான் வாழ்க்கை.
(தொல்காப்பியரின் மணிமொழிகள் – ‘சிந்தனையாளர் தொல்காப்பியர்’ என்ற நூலிலிருந்து – லோ. சுப்ரமணியன் – பிரேமா பிரசுரம் – விலை ரூ 12/-)
*********
கவிஞர் பழமலய் வீட்டு வரவேற்பறையில் காணப்படும் வாசகம்:
வருக – வணக்கம்
அமர்க – அருந்துக
வந்தது எதற்கோ? – முந்தி அதைப் பேசுவோம்
வினை முடிப்பீர் – வேலைகள் உள
நேரம் போற்றுக – நிறைவுடன் செல்க
(தகவல்: அ. யாழினி பர்வதம் – பெண்ணே நீ – டிசம்பர் 2008)