திருடனுக்கு நன்றி
Posted December 16, 2008
on:எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.
காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.
சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ?
அது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.
ஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.
அதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.
இன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.
திருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்!
***
என். சொக்கன் …
16 12 2008
8 Responses to "திருடனுக்கு நன்றி"

உங்கள் நண்பர் சொன்னது சரிதான்.
மதன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்:
“வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால்
வரலாற்றிலிருந்து நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.”


Experiance Makes Man…
not all persons… atleast some persons follow the good habit
because of the theif..


பால்காரன் பாலைப் போடாமலே பால போட்டதா சொல்லியிருப்பான்…………ஏன்னா அவனுக்குத்தான் எங்க எப்படி விக்கனும்னு தெரியும்………..எங்க ஏரியாவிலே இதான் நடந்தது………….


This is called positive thinking.


கலக்கல் தல.

1 | ila
December 16, 2008 at 8:38 am
அட!