Archive for December 17th, 2008
நீரோடை நாடகங்கள்
Posted December 17, 2008
on:- In: Books | Humor | Reviews | Uncategorized
- 7 Comments
பதினான்கு.
சம்பந்தமில்லாமல் ஏன் இந்தப் பதிவைப் பதினான்கு என்கிற வார்த்தையுடன் தொடங்குகிறேன் என்று குழம்பவேண்டாம். நிஜத்தில் இந்த விமர்சனக் கட்டுரை அடுத்த பேராவில்தான் ஆரம்பமாகிறது. தொடக்கத்திலேயே ‘பதின்மூன்று’ என்று அபசகுனமாக வேண்டாமே என்று சும்மா உல்லுலாக்காட்டிக்கு இந்த அறிமுகம்.
பதின்மூன்று என்கிற எண், எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.
அசுத்தமாகவும் பிடிக்காது.
என்னுடைய மெயில் இன்பாக்ஸில்கூட 13 மெயில்கள் இருந்தால், ஒன்றை டெலீட் செய்து 12 ஆக்குவேன். இல்லாவிட்டால் அடுத்தமுறை மெயில் பார்க்கமுடியாமல் ஏதாவது நேர்ந்துவிடும் என்று ஒரு மூட நம்பிக்கை.
தப்புதான், அபத்தம்தான், ஓவர்தான், அசிங்கம்தான், அவமானம்தான், ஆனாலும் விடமுடியவில்லை, என்ன செய்வது?
போகட்டும். இந்தக் கட்டுரைக்கும் பதின்மூன்றுக்கும் என்ன சம்பந்தம்?
எப்போதோ ரா. கி. ரங்கராஜன் ஆனந்த விகடனில் எழுதிய ‘அட்வெஞ்சர்’ நாடகங்களைத் தொகுத்து, ‘விஜி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். விகடன் பிரசுரம், விலை ரூ 70/-.
அந்த ‘விஜி’யில், மொத்தம் பதின்மூன்று நாடகங்கள். ஹும், இன்னொன்றைச் சேர்த்துப் பதினான்கு ஆக்கியிருக்கக்கூடாதா என்கிற ஆதங்கத்துடன்தான் படிக்க ஆரம்பித்தேன்.
பயிற்சியின்மூலம் எழுத்தைச் செதுக்குவது எப்படி என்பதற்கு ரா. கி. ரங்கராஜன் ஒரு பிரமாதமான உதாரணம், அவருடைய எழுத்தில் மேதைமை தென்படாது, பெரிதாக விஷய கனமும் இருக்காது, ஆனால் படிக்க ஆரம்பித்தால் யாராலும் கீழே வைக்கமுடியாது. அப்படி ஒரு ஸ்டைலில் நல்ல விஷயங்களைக் கல்ந்து கொடுக்கும் ஜனரஞ்சக பாணி அவர் குமுதத்தில் சம்பாதித்த சொத்து, அதில் கொஞ்சத்தைக் குமுதத்துக்குக் கொடுத்துவிட்டுதான் ரிடையர் ஆனார்.
உண்மையில், அதன்பிறகுதான் அவருடைய் முழுத் திறமையும், பன்முகத்தன்மையும் வெளிப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. வாரம் ஒரு சிறுகதை என்கிற கணக்கைக் குறைத்துக்கொண்டு பல விஷயங்களைத் தனது ‘ஆட்டோமாடிக்’ எழுத்தில் சுவாரஸ்யமாகச் சொன்னார். குறிப்பாக, ‘நான், கிருஷ்ண தேவராயன்’ நாவலைச் சுயசரிதை பாணியில் எழுதியது, ஆனால் நிஜ சுயசரிதையை ‘அவன்’ என்ற பெயரில் மூன்றாம் மனிதனின் கதைபோலச் சொன்னது, ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ இதழில் அவர் எழுதிவரும் ‘நாலு மூலை’ பத்திகள் போன்றவை, யாரும் தவறவிடக்கூடாத விஷயங்கள்.
மற்றவர்களைப்பற்றித் தெரியாது. நான் தவறவிடுவதில்லை, ரா. கி. ரங்கராஜனின் எழுத்துகளைத் தேடிப் பிடித்துப் படிக்கிறேன், இதைச் சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
சரி, உள் அரசியல் போதும். ‘விஜி’ எப்படி?
நேர்மையான விமர்சனம், ‘சுமார்’. நாடகம் என்ற அளவில், இவை வெறும் துணுக்குத் தோரணங்கள்தான், எஸ். வி. சேகர், கிரேஸி மோகன் கிச்சுகிச்சு நாடகங்களை மேடையில் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆனால் அதையே புத்தகமாகப் படித்தால் திருதிரு என்று விழிப்போம், கிட்டத்தட்ட அதேமாதிரிதான் இந்தப் புத்தகமும்.
ஆனால், அந்த மேடை நாடகக் கிச்சுகிச்சுகளில் கதை என்று ஒரு சமாசாரமே இருக்காது. அப்படியே இருந்தாலும், ஸ்விம் சூட் போட்டியில் கலந்துகொள்ளும் அழகியின் பூணூல் பட்டைபோல லேசாக அலையவிட்டிருப்பார்கள், அதற்குமேல் அதற்கு மரியாதை இல்லை.
அங்கேதான், ரா. கி. ரங்கராஜன் வித்தியாசப்படுகிறார். இந்த நாடகங்களில், நிஜமாகவே கதை இருக்கிறது, நகைச்சுவை நோக்கம் இல்லை என்று தீர்மானித்துவிட்டால், இவற்றை அவர் தாராளமாகச் சிறுகதை வடிவில் எழுதியிருக்கலாம்.
160 எழுத்து எஸ்.எம்.எஸ்., 140 எழுத்து ட்விட்டரெல்லாம் அறிமுகமாவதற்கு முந்தைய தலைமுறை நாடகங்கள் இவை. ஆகவே நிதானமாக, பத்துப் பதினைந்து பக்கங்களில் பொறுமையாகக் கதை சொல்லும் வாய்ப்பு, அதனை அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டு, நீரோட்டமான நடையில் நாடகத்தை விரித்துச் செல்கிறார் ரா. கி. ரங்கராஜன்.
ஆங்காங்கே ‘களுக்’ என்று சிரிக்கத் தோன்றினாலும், கதை என்னப்பா ஆச்சு என்று நினைக்கவைக்கிற அந்தப் பரபரப்புதான் அவருடைய வெற்றி. மிகவும் ரசித்துப் படிக்கவைத்த பொழுதுபோக்கு நாடகங்கள் இவை.
விஜி, பிரசாத், சிவராம், கோமதி என்று நான்கு பிரதான பாத்திரங்கள். அவை எல்லா நாடகங்களிலும் வருகின்றன, ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனி கதை, வெவ்வேறு சுவாரஸ்யமான முடிச்சு, ஆனால் அதை லாஜிக் பிசகாமல் அவிழ்க்கவில்லை, துப்பறியும் சாம்புபோல விறுவிறு நடை, ஆஙகாங்கே அள்ளித் தெளித்த நகைச்சுவை, ‘சுப’ முடிவுதான் நோக்கம் என்பதால், குறையொன்றும் இல்லை.
ஒரே ஒரு ஆச்சர்யம், எப்போதாவது தட்டுப்படுகிற ’அடல்ட்ஸ் ஒன்லி’ வசனங்கள், எனக்குத் தெரிந்து ரா. கி. ரங்கராஜன் இப்படிக் குறும்பு செய்தது இல்லை!
நூலில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்ற இரண்டு விஷயங்கள். இந்நாள் இயக்குனர், அந்நாள் கார்ட்டூனிஸ்ட் சரணின் கலகலப்பான கார்ட்டூன்கள், அப்புறம், பழைய வாடை அடிக்காதபடி, காலத்துக்குத் தகுந்தாற்போல் வசனங்களில் தட்டுப்படும் பெயர்கள், சம்பவங்களை மாற்றியிருக்கிற விக்டன் பிரசுரத்தாரின் கவனம். உதாரணமாக, புத்தகத்தில் ஆங்காங்கே ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங்கெல்லாம்கூட வருகிறார்கள்.
வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதுபோல் தோன்றும் அந்தக் கடைசி நாடகம் (விஜி – பிரசாத் திருமண வைபோகம்) ஒன்றைமட்டும் மறந்துவிட்டுப் பார்த்தால், பதின்மூன்று பன்னிரண்டாகிவிடும், சில மணி நேரங்கள் ஜாலியாகப் பொழுதுபோகும்!
***
என். சொக்கன் …
17 12 2008