Archive for December 19th, 2008
ஏழு நான்கு இரண்டு எட்டு
Posted December 19, 2008
on:- In: Bank | Brand | Change | Courtesy | Customer Care | Customer Service | Financial | Pulambal | Rise And Fall | Rules | Uncategorized
- 24 Comments
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.
இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே?
ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’
முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.
இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா?
என்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
கட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.
அதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.
இதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.
நல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.
அதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.
தனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், காசோலை எழுதிக் கொடுத்தேன்.
வங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’
அந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’
உடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.
பாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.
திருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்?
வீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா?
நான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.
ஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.
இதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.
என்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.
தப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.
மூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.
எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.
அதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.
இந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.
உண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.
அல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.
எத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.
ஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.
உடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You?’
நான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.
அந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.
‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா?’
‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’
‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்?’
எவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.
இந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.
ஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.
அதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.
அவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.
அடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.
இந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா?
இத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா? என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்?
இந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.
அது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம்? நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா?
நிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை (?) நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது?
***
என். சொக்கன் …
19 12 2008
Update:
இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!
கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.
– என். சொக்கன்
களிமண், மூளை
Posted December 19, 2008
on:சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?
இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.
களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.
இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.
‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.
‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’
அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!
எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.
ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.
ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.
இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉
#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு
#2. இதென்ன? குலோப் ஜாமூனா?
#3. களிமண்ணில் சார்மினார்
#4. குச்சி ஐஸ்
#5. முயலே முயலே வா வா
#6. ’எலி’மையான பொம்மை
#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!
#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?
#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி
#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!
#11. இதுவும் பயமுறுத்துது
#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?
#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல
#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு
#15. பகடை பகடை
#16. இது தொப்பியா? அல்லது திருவோடா?
முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!
***
என். சொக்கன் …
19 12 2008