மனம் போன போக்கில்

ஏழு நான்கு இரண்டு எட்டு

Posted on: December 19, 2008

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.

இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே?

ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’

முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.

இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா?

என்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

கட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.

அதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.

இதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.

நல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.

அதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.

தனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், காசோலை எழுதிக் கொடுத்தேன்.

வங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’

அந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’

உடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.

பாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.

திருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்?

வீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா?

நான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.

ஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.

இதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.

என்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.

தப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.

மூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.

அதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.

இந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.

உண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.

அல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.

எத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.

ஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.

உடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You?’

நான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.

அந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.

‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா?’

‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’

‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்?’

எவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.

இந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.

ஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.

அதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.

அவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.

அடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.

இந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா?

இத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.

இப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா? என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்?

இந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.

அது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம்? நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா?

நிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை (?) நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது?

***

என். சொக்கன் …

19 12 2008

Update:

இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!

கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

– என். சொக்கன்

24 Responses to "ஏழு நான்கு இரண்டு எட்டு"

ஐ.சி.ஐ.சி.ஐ இதே வேலையை எல்லோரிடமும் செய்கிறது.

NRI சேவையிலும் இதே குளறுபடிதான். 8 வருடம் வைத்திருந்த வங்கி கணக்கை மூன்று மாதங்களுக்கு முன்புதான் மூடினேன்.

ரொம்ப தொல்லை தரும் வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ.

ஐ ஹேட் தெம்.

நீங்கள் சொல்லும் வங்கி ஐசிஐசிஐ என்றுதான் நினைக்கிறேன். சுத்தமாக வாடிக்கையாளர் திருப்தி பற்றிக் கவலைப்படாத நிறுவனம் அது. அதிகம் சண்டை போட்டு வெறுத்துவிட்டது. என் மகன் பெயரில் ஒரு கணக்கு இருக்கிறது. அதனை எப்படியாவது மூட வேண்டும்.

மற்றபடி இங்கு நான் ஒரு முறை இது போன்ற தவறு செய்ததற்கு அவர்கள் இப்படி அபராதம் விதித்த பொழுது நான் அவர்களிடம் பேசிய உடன் முதன்முறை என்பதால் அதனை செலுத்த வேண்டாம் இனி இப்படி செய்யாதீர்கள் எனச் சொன்னார்கள். அது ஒன்றும் பெரிய தொகை இல்லை. ஆனால் இப்படிச் செய்ததால் அவர்களை விட்டுக் கணக்கை மாற்றாமல் இருக்கிறோம் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

கணேஷ் சந்திரா, இலவசக் கொத்தனார்,

நீங்கள் சொல்வது மிக உண்மை. சின்னத் தொகையை வலியுறுத்துவதால் நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்று இவர்கள் புரிந்துகொள்வதே இல்லை,

கஸ்டமர் கேர்பற்றி ஆயிரம் கதைகள், புத்தகங்கள் இருக்கின்றன, யாரும் படிப்பதாகத் தெரியவில்லை, முக்கியமாக இந்த நேரடிச் சேவை நிறுவனங்கள்,

– என். சொக்கன்,
பெங்களூர்.

வாடிக்கையாளர்களை உள்ளே ஈர்த்து எடுக்கும்வரைதான்
அவர்களின் அன்பும் கவனிப்பும்!!
அப்புறம், கந்துவட்டிக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்!

எனக்கு ஒரு சந்தேகம்!

இப்படி ஏமாற்றிப்பணம் பறிக்கும் வேலையைத்தான்
கஷ்டப்பட்டு MBAக்களில் சொல்லிக் கொடுக்கிறார்களா?

ஆதித்தன்,

பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் வங்கிக் கணக்கை மூடும் வழிமுறைகள் மிக நீண்டவை, சிக்கலானவை, எதற்கு வீண் வேலை என்று கடந்த 8 வருடமாக ஹைதராபாத் பக்கமே போகாத நான், அந்த வங்கிக் கணக்கை அப்படியே வைத்திருக்கிறேன் … இந்த சோம்பேறித்தனத்தை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், நம்மை லைஃப் டைம் கஸ்டமர் என்று நினைத்துவிடுகிறார்கள்.

எம்பிஏ எம்மெல்லே எல்லாம் ஒன்றுதான் 😉

– என். சொக்கன்,
பெங்களூர்.

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கூட இதே நிலைதான்.
வங்கிக்கணக்கை மூடும் வழிமுறைகளை வேண்டுமென்றே சிக்கலாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே நினைகிறேன்.
இதுவும் ஒரு வியாபார தந்திரம் என்று சொல்லப்படும்
திருட்டுத்தனம் தான்.

நான் கூட, பல வருடங்களுக்கு முன், பள்ளியில் படிக்கும்போது ஒரு வங்கிக்கணக்கு வைத்திருந்தேன். SLR2000க்கு மேல் இல்லை. எந்த மலைவிழுங்கி மகாதேவன் ஏப்பம் விட்டானோ?
😀

இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ….!

இனி யாவும் சுகமாக!

அன்புடன் ஹிப்ஸ்…
சிங்கப்பூர் .

நீ வாழ்க. எனக்கும் இதே பிரச்னை. ஆனால் விதி என்னைத் திரும்பத் திரும்ப ஐசிஐசிஐக்கே அழைத்துச் செல்கிறது. ஒன்றுக்கு இரண்டு கணக்குகள். மினிமம் பேலன்ஸ் பிரச்னை பெரும்பிரச்னை. எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டிவிடத் தான் பார்க்கிறேன். ஆனால் அதற்கும் ஏதோ கட்டம் போட்ட ஃபாரம் பில்லப் பண்ணவேண்டும்போலிருக்கிறது. அதானாலேயே தயங்கி, இழுத்தடித்துக்கொண்டிருக்கிறேன். இம்மாத இறுதிக்குள் முடித்துவிடுவேன்.

பி.கு. ஒவ்வொரு போஸ்டுக்குக் கீழேயும் என்.சொக்கன், பெங்களூர், தேதி போட்டு போரடிக்காதே. நீ போடாவிட்டாலும் வேர்ட் பிரஸ் அதைப் பதியவே செய்யும்.

பாரா,

என்ன எழுதினாலும் கடைசியில் ஒரு பதிவுக்காகப் பெயர், தேதி போட்டுப் பழகிவிட்டேன், பெங்களூரை வேண்டுமானாலும் இனிமேல் தவிர்த்துவிடுகிறேன்!

இன்னொரு காரணம், ‘என். சொக்கன்’ என்று தமிழில் எழுதாவிட்டால் அந்தப் பதிவுகள் கூகுள் சர்ச்சில் வருவதில்லை, காரணம் வேர்ட்ப்ரெஸ்ஸில் என் பெயர் ஆங்கிலத்தில் பதிவாகியிருக்கிறது, என்ன செய்ய?

பாரா,

வங்கிக் கணக்கை முடிக்கவும் கட்டம் போட்ட ஃபாரம்கள் நிறையவே உண்டு, நம் காசை நம்மிடம் கொடுக்கவும் ஏகப்பட்ட ப்ரொஸீஜர் வைத்திருக்கிறார்கள் 😦

டெஸ்ட்

அப்பாடா, வேர்ட்ப்ரெஸ் ஆங்கில nchokkan என்ற பெயரை, தமிழில் மாற்றிவிட்டேன் 🙂

சொக்கன் அவர்களே,இந்த வார விகடனில் Imagining India பற்றிய விமர்சனத்தில் முதல் PARA ( நம்ம பா.ரா அல்ல) வே, Smart Card பற்றியும், அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு Bank Account ஆரம்பித்து அனைத்து அரசு சார்ந்த சேவகளையும் அந்த Account மூலம் கையாளும் என்பதும் நந்தனின் கனவுகளாக குறிப்பிட்டு இருந்தார்கள்… நடக்குமா?

ICICI என்கிட்ட நான் அசந்த நேரம் பார்த்து ஒரு மெடிக்ளைம் விற்று அதன் ப்ரிமியம் மாத தவணையாக கடன் அட்டையில் கட்டலாம் என்று என்னை கலகலத்து இப்போ பாலிசி தராமல் கடன் அட்டையில் மட்டும் தவணை தட்டிவிட்டார்கள்.

15 நாளாக துரத்துகிறேன். வங்கி என்னை இன்சூரன்சிடமும், இன்சூரன்ஸ் என்னை வங்கியிடமும் துரத்துகிறார்கள்.

[…] எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே […]

போன வாரம் ஒருவர் விகடன் விற்பனை குளறுபடி பற்றி புலம்ப விகடன் நிருபர் வீடு தேடி வந்திருக்கிறார். வலைப்பதிவுகள் இந்த அளவு கவனிக்கப்படுவது ஆச்சர்யம். இனிமே, என்ன நுகர்வோர் குறைன்னாலும் வலைப்பதிவில புலம்பிடலாம் போல இருக்கே 😉

ராம் மோகன், triplicani, ரவிசங்கர்,

நன்றி!

ரூ.75/- இருந்த என் கணக்கில் ரூ 10,000/- அபராதம் விதித்த வங்கி இருக்கிறது.

***

என். சொக்கன் or நா.சொக்கன்

இதனை பெயர்களில் தலையெழுத்து ப்ற்றி தன் பதிவுகளில் விளக்கிய ரவிசங்கர் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நான் எங்கு சென்றாலும் கணக்கு துவங்குவது ஸ்டேட் பாங்க் அல்லது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் தான்

என்னை பொருத்தவரை இது வரை பிரச்சனை வந்ததே இல்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்த்த காலங்களில் எனது வங்கி “பாண்டியன் கிராம பேங்க்” தான்… என்ன தா.ப.வ கிடையாது.. 🙂 🙂

தா.ப.வ – தானியங்கி பணம் வழங்கி http://www.payanangal.in/2008/03/blog-post_20.html

bmurali80, புருனோ,

நன்றி 🙂

//என். சொக்கன் or நா.சொக்கன்//

என். சொக்கன்தான், ஆங்கிலக் கலப்பு விரும்பிச் செய்தது கிடையாது, ஆனால் இனிமேல் மாற்றிக்கொள்வது சிரமம் 😦

//நான் எங்கு சென்றாலும் கணக்கு துவங்குவது ஸ்டேட் பாங்க் அல்லது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் தான்//

இதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் (முக்கியமாக என் தந்தை). ஆனால் ஏனோ எனக்கு இந்த வங்கிகளில் கண்க்குத் தொடங்கவேண்டும் என்று தோன்றியதே இல்லை – நம் அரசு வங்கிகளைப்பற்றிய இந்த இமேஜை உடனே மாற்றவேண்டிய அவசியம் (அவர்களுக்கு) இருக்கிறது.

எஸ்பிஐ-யின் சில விளம்பரங்கள் இந்த திசையில் முயற்சி செய்கின்றன

தா.ப.வ – தானியங்கி பணம் வழங்கி

உங்கள் எழுத்துக்களைப் போல இதையும் உச்சரிக்கவே சுகமாக இருக்கிறது.

அதென்ன உங்கள் ஆசிரியர் அதிசயமா பின்னூட்டம் போட்டுள்ளார்? ஒரு வேளை நான் மட்டும் ஏற்கனவே பார்க்கவில்லையோ?

//நீங்கள் சொல்லும் வங்கி ஐசிஐசிஐ என்றுதான் நினைக்கிறேன். சுத்தமாக வாடிக்கையாளர் திருப்தி பற்றிக் கவலைப்படாத நிறுவனம் அது. அதிகம் சண்டை போட்டு வெறுத்துவிட்டது. //

தனியார் நிறுவனம் என்றால் சேவை அபாரம், அரசு என்றால் மட்டம் என்று கூறுபவர்களுக்கு இந்த வரி சமர்ப்பணம்

//போன வாரம் ஒருவர் விகடன் விற்பனை குளறுபடி பற்றி புலம்ப விகடன் நிருபர் வீடு தேடி வந்திருக்கிறார். வலைப்பதிவுகள் இந்த அளவு கவனிக்கப்படுவது ஆச்சர்யம். இனிமே, என்ன நுகர்வோர் குறைன்னாலும் வலைப்பதிவில புலம்பிடலாம் போல இருக்கே
//

வலைப்பதிவில் புலம்பினால் கண்டிப்பாக பலன் இருக்கிறது. முக்கியமாக ஐ. சி. ஐ. சி. ஐ வங்கியில் வலைப்பதிவில் புலம்பினால் மட்டுமே பலன் இருக்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: