மனம் போன போக்கில்

பெற்றோர் தினம்

Posted on: December 21, 2008

மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான்.

ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.

வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.

டிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.

’சிக்‌ஷா’ (http://www.siksha.co.in/) என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்?

அந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.

உண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை

ஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு?

ஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே!

இதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.

இன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.

காரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.

நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.

இப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?

இன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.

மேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.

‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:

‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’

இந்தப் பாடலின் அர்த்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.

***

என். சொக்கன் …

21 12 2008

9 Responses to "பெற்றோர் தினம்"

// நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?//

சுவாரஸ்யமான அவதானம். இரண்டு குழந்தைகள் என்பதால் வருடம் நான்கு முறையாவது இந்த இன்ப அவஸ்தை எனக்கும் 🙂 பெரிய தமாஷ் “ 1-கே யில எல்லாரும் திக்கி திக்கி பாடுனாங்க, அதுக்கே ப்ரைஸ் கொடுத்தாங்க.. என் கொழந்தை கொஞ்சம் மறந்ததுக்கே கபோ போ ந்னு சொல்லிட்டாங்க – எல்லாம் பிக்ஸிங்
என்று போஸ்ட் மாட்ச் விவாதம் நடக்கும் பாருங்கள் – அடுத்த முறை அந்த ஸ்கூல் டீச்சர்களை ஜெயிலில்தான் பார்ப்போம் என்று எண்ணவைக்கும் அளவுக்கு!

பினாத்தல் சுரேஷ்,

நல்லவேளையா, நங்கையின் பள்ளி மாண்டிஸோரி முறையைப் பின்பற்றுவதால் போட்டிகள் இல்லை, பரிசுகள் இல்லை, ஆடிய குழந்தைகளுக்கெல்லாம் ஒரு லாலிபாப் தருவதோடு சரி,

அந்த லாலிபாப்பை பெற்றோருக்கும் கொடுத்தால், வாய் மூடி, மௌனியாகி மேட்ச் ஃபிக்ஸிங்பற்றியெல்லாம் பேசமாட்டார்கள் 😉

அட, இந்த லாலிபாப் ஐடியா நல்லாயிருக்கே, இதை வெச்சு யாரேனும் லாலிபாப் தயாரிப்பாளர்கள் விளம்பரம் தயாரித்தால், காபிரைட் என்னுடையது என்பதறிக!

இங்கேயும் பரிசு என்பது லாலிபாப்தான் (காபிரைட் கனவுகளை விட்டொழியுங்கள்:-)). முதல்பரிசு டெய்ரி மில்க் + லாலிபாப்.. அவ்வலவே 🙂

பினாத்தல் சுரேஷ்,

🙂

ஆனால் காபிரைட் கனவுகளை விடமாட்டேன், I Still feel its a good Advt Idea for a lollypop company, may be we can share ;)))))))

//இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன//

பாழாப்போன கடவுள் எப்போ நம்மை நாமாக இருக்கவிட்டார்
நாம் அவருக்கு நன்றி சொல்ல?

நம்மை நாமாக இருக்கவிட்டால்,
அவருடைய ஆட்டத்தில் அவருக்கே சுவாரசியமற்றுப் போய்விடும்.

//அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.//
பெரும்பாலும் பெண்கள்
கணவன் நடனமாடுவதை விரும்புவதைவிட
குழந்தைகள் நடனமாடுவதை அதிகம் விரும்புகைறார்கள்.
வரவேற்கிறார்கள்.

🙂

ஆதித்தன்,

//கடவுள் எப்போ நம்மை நாமாக இருக்கவிட்டார்//

அவர் நாம் நாமாக இருக்க வாய்ப்புக் கொடுத்தார், நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அவரா பொறுப்பு? 🙂

//கணவன் நடனமாடுவதை விரும்புவதைவிட//

அச்சச்சோ, ஏன் இந்தக் கொலை வெறி, நாம ஆடினா பூலோகம் என்னாவும்?

////நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது./////

ஆக நீங்க இதையும் ப்ளாக்ல எழுதணும் பப்பரப்பேன்னு 360 டிகிரி கழுத்தைச் சுத்திச் சுத்தி பராக்கப் பார்த்துருக்கீங்க… என்னவோ போங்க… நான் என்னோட அக்கா குழந்தைங்க ஸ்கூட பங்ஷனை மிஸ் பண்ணுனதே கிடையாது. போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் மனசு ரெஃப்ரஸ் ஆயிரும்.

முகில்,

//ப்ளாக்ல எழுதணும் பப்பரப்பேன்னு 360 டிகிரி கழுத்தைச் சுத்திச் சுத்தி பராக்கப் பார்த்துருக்கீங்க//

இப்போமட்டுமில்லை, எப்பவும் நான் விழாக்களுக்குப்போனா சுத்திப் பார்க்கிறதுதன வழக்கம், முன்பு சிறுகதை மாட்டுமான்ன்னு தேடுவேன், இப்ப பதிவுக்கு மேட்டர் தேடறேன், அவ்ளோதான் வித்தியாசம் 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: