நமக்குள் இருக்கட்டும்
Posted December 22, 2008
on:- In: Bangalore | Characters | Corruption | Financial | Honesty | India | Integrity | Life | Money | People | Rules | Uncategorized
- 8 Comments
சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன்.
அன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது.
பிரச்னை என்னவென்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று என்னையும் அழைத்து வந்திருந்தான்.
ஏழரை மணிக்கு நாங்கள் அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலை நெருங்கியபோது, ‘பார்க்கிங் ஃபுல்’ என்று அறிவித்துவிட்டார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.
ஹெல்மெட்டைக் கழற்றியதும், ‘இன்னிக்குக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டப்போறேன்’ என்றான் கிஷோர்.
‘ஏன் அப்படிச் சொல்றே?’ எனக்குக் குழப்பம், ‘இங்கே நோ பார்க்கிங் போர்ட்கூட இல்லை’
‘என்னவோ, எனக்குத் தோணுது’ என்றான் அவன், ‘கண்டிப்பா இன்னிக்குப் போலீஸ் மாமாங்களுக்கு துட்டு அழுதாகணும்’
அவன் குரலில் இருந்த உறுதி எனக்குக் கலவரமூட்டியது, ‘பேசாம வண்டியை வேற் இடத்தில நிறுத்திடலாமா?’
‘ம்ஹும், நேரமில்லை, நீ வா’
கிட்டத்தட்ட ஓடினோம், வேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டோம், தோரணங்கள்போல் நீளும் க்யூக்களில் எது சிறியதோ அதில் நின்று பில் போட்டோம், பணம் கட்டிவிட்டு எஸ்கலேட்டரில் கீழ் நோக்கி ஓட்டமாக இறங்கி வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணோம்.
கிஷோர் தன் வண்டியை நிறுத்தியபோது அங்கே ஏற்கெனவே நான்கைந்து வண்டிகள் இருந்தன. அதனால்தான் கிஷோர் போலீஸ்பற்றிச் சொன்னபோது எனக்கு அலட்சியம், ’எல்லோரும் நிறுத்தறாங்க, நாம நிறுத்தக்கூடாதா?’
இப்போது, அந்த எல்லோரையும் காணவில்லை, எங்கள் வண்டியையும் காணவில்லை. இப்போது என்ன பண்ணுவது?
பக்கத்திலிருந்த பூச்செண்டுக் கடைக்காரர் எங்களைப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார், ‘பதினெட்டாவது க்ராஸ் ரோட்ல ஐசிஐசிஐ ஏடிஎம் இருக்கு, தெரியுமா?’
‘தெரியும்’ என்று தலையசைத்தான் கிஷோர்.
‘அங்கதான் எல்லா வண்டியும் இருக்கும், ஓடுங்க’
அவசரமாகத் தலைதெறிக்க ஓடினோம். கிஷோருக்கு ஏற்கெனவே வழி தெரிந்திருந்ததால் கண்ட ‘மெயின்’, ‘க்ராஸ்’களில் வழிதவறவில்லை.
ஐசிஐசிஐ ஏடிஎம்க்கு எதிரே ஒரு பிரம்மாண்ட வண்டி, தசாவதாரத்தில் கமலஹாசன் முதுகில் கொக்கி மாட்டித் தூக்குவார்களே, அதுபோல பெரிய சங்கிலியெல்லாம் இருந்தது.
ஆனால், இப்போது அந்த வண்டி காலியாக இருந்தது, அதன் சங்கிலியில் மாட்டித் தூக்கப்பட்ட வண்டிகள் அருகே வரிசையாக நின்றிருந்தன.
அவசரமாக அந்த வண்டிகளைச் சரிபார்த்து நிம்மதியடைந்தான் கிஷோர், ‘அதோ அந்த மூணாவது வண்டிதான் என்னோடது’
அந்த வரிசையில் கிஷோரின் வண்டியைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம், திகைப்பு, லேசான திகில்கூட. இந்தப் பயல் கிஷோருக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா? எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான்? ஏதோ மந்திரவாதியின் அருகே நின்றிருப்பதுபோல் அபத்திரமாக உணர்ந்தேன்.
கிஷோர் அந்த டிராஃபிக் கான்ஸ்டபிளை நெருங்கி பேசத் தொடங்கியதும் ’ஏன் சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே?’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா?’
‘அங்க நோ பார்க்கிங் போர்டே இல்லை குரு’ என்றான் கிஷோர்.
‘அந்த இடம் பத்து வருஷமா நோ பார்க்கிங்’
‘சும்மா சொல்லாதீங்க குரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவெல்லாம் முள்ளுக் காடு, தெரியுமா’
‘உங்களோட எனக்கு என்ன பேச்சு?’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் வெண்ணிற உடைக் காவலர், ‘நீங்க சாரைப் பார்த்துட்டு வாங்க’
சார் எனப்பட்டவர், டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர், அல்லது அதனினும் உயர்ந்த பதவியாக இருக்கலாம், ஜீப்புக்குள் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.
அவரிடம் கிஷோர் ஏதோ கன்னடத்தில் சகஜமாகப் பேசினான், தன்மீது தப்பில்லை என்று அவன் எத்தனை நாடகத்தனமாகச் சொல்லி உணர்த்தியபோதும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
கடைசியாக, அவரை சென்டிமென்டில் அடிக்க நினைத்தான் கிஷ்ரோர், ‘உங்க சன்மாதிரி நெனச்சுக்கோங்க சார்’ என்றான்.
அங்கேதான் தப்பாகிவிட்டது. ‘என் மகன் இதுபோல நோ பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு வந்தா, அங்கயே வெட்டிப் போடுவேன்’ என்று கர்ஜித்தார் ‘சார்’.
அதன்பிறகு பேச்சு இன்னும் சூடு பிடித்தது, கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை, ‘கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும்’
இப்போது கிஷோர் கொஞ்சம் இறங்கிவந்தான், தணிந்த குரலில் அவரிடம் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.
உடனடியாக அவர் குரலும் தணிந்தது, அதுவரை மிரட்டிக்கொண்டிருந்தவர், இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.
அடுத்து என்ன? லஞ்சம்தான்.
‘கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ஆயிரம் ஃபைன் ஆவும்’ என்றார் அவர், ‘நீங்க முன்னூறு கொடுத்துடுங்க’
நிஜமாகவே நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினால் ஐநூறு, ஆயிரம் ஃபைன் ஆவுமா? எங்களுக்குத் தெரியவில்லை, யாரிடம், எப்படி அதை உறுதிப்படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை.
கிஷோர் அதை விரும்பவும் இல்லை, அவனுக்கு எட்டு மணி டாக்டர் அவசரம், முன்னூறை எண்ணிக் கொடுத்துவிட்டு வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டான்.
புறப்படும்போது அவர் சொன்னார், ‘சார், இது நமக்குள்ள இருக்கட்டும்’
வரும் வழியெல்லாம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என்ன அநியாயம், நோ பார்க்கிங் ஏரியாவில் போர்டை வேண்டுமென்றே உடைத்து எறிந்துவிட்டுத் தூண்டில் போட்டு ஆள் பிடிப்பது, பிறகு இப்படி எதையோ சொல்லிக் காசு பிடுங்குவது. அரசாங்க அதிகாரிகளே இப்படிச் செய்தால் மக்கள் என்னதான் செய்யமுடியும்?
’இப்ப நீ என்னதான் சொல்றே?’ கிஷோர் எரிச்சலுடன் கேட்டான்.
’கொஞ்சம் முயற்சி செஞ்சா இந்த லஞ்சத்தைத் தடுக்கமுடியாதா?’
‘சத்தியமா முடியாது’
‘அந்த ஆஃபீஸர் வண்டியில டிஜிட்டல் கேமெரா வெச்சா? எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா? மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா?’ நான் அடுக்கிக்கொண்டே போனேன், ‘டெக்னாலஜியைப் பயன்படுத்தி எத்தனை பெரிய தப்பையும் தடுக்கமுடியும்’
‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி வண்டியை நிறுத்தினான் அவன், ‘நாளைக்கு நீ கர்நாடகாவுக்கு முதலமைச்சரா வந்தா, டெக்னாலஜியை நல்லாப் பயன்படுத்து, இப்ப நான் எல்.ஐ.சி. மெடிக்கல் செக்-அப்க்கு ஓடணும்’
அடுத்த சில நாள்களில் கிஷோர் வேறொரு நிறுவனத்துக்கு வேலை மாறிவிட்டான். அதன்பிறகு நாங்கள் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.
சமீபத்தில், என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றிருந்தேன்.
அந்தக் கூடம் கிட்டத்தட்ட, ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு அறையைப்போல் நீண்டிருந்தது. ஆங்காங்கே குஷன் வைத்த நாற்காலிகளில் மக்கள் செய்தித் தாள் படித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் மிக்ஸியோ, கிரைண்டரோ, டிவியோ, ரிமோட்டோ, செல்ஃபோனோ, இன்னும் வேறெதுவோ.
ஓரத்தில் ஓர் அறைக் கதவு திறந்தது, பிரம்மாண்டமான ஒரு டிவியைச் சக்கர மேடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு மின்சார இணைப்புக் கொடுத்து ஸ்விட்சைப் போட்டதும், ஷாருக் கான் சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார், ஆடினார்.
இன்னொருபக்கம், மைக்ரோவேவ் அவன் ரிப்பேராகி வந்திருந்தது. அதைக் கொண்டுவந்த பெண்மணி செவ்வகப் பெட்டிக்குள் தலையை நுழைக்காத குறையாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, அவருடைய கணவர் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றார்.
நெடுநேரம் இப்படிப் பரிசோதித்தப்பிறகு, ’எனக்கென்னவோ இவங்க எதையுமே மாத்தலைன்னு தோணுது’ என்று உரத்த குரலில் அறிவித்தார் அவர்.
எதிரில் நின்ற மெக்கானிக் கதறி அழாத குறை, ‘அம்மா, உள்ளே சர்க்யூட் மாத்தினது வெளியிலிருந்து பார்த்தாத் தெரியாதுங்க’
இப்படி அவர் விளக்கிச் சொல்லியும், அந்தப் பெண்ணுக்குத் திருப்தியாகவில்லை. தனது பழைய ரிப்பேர் ஆகாத மைக்ரோவேவ் அவனைப்போல் இது இல்லை என்றுதான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
கடைசியில் என்ன ஆனது என்று நான் கவனிப்பதற்குள், என் பெயரைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் கேமெராவுடன் ஏழாவது கவுன்டருக்கு ஓடினேன்.
அங்கிருந்த இளைஞர், என்னுடைய கேமெராவைப் பரிசோதித்தார், ‘எல்ஈடி போயிடுச்சுங்க, புதுசா மாத்தணும்’ என்றார்.
‘அது வாரண்டியில கவர் ஆகுமா?’
‘ம்ஹும், ஆகாது’ என்றார் அவர்.
‘புது எல்.ஈ.டி. மாத்தறதுன்னா என்ன செலவாகும்?’
‘ஆயிரம், ஆயிரத்து ஐநூறு’ என்றார் அவர், ‘பரவாயில்லையா?’
வேறு என்ன செய்யமுடியும்? ‘ஓகே’ என்றேன் அரை மனதாக, ‘எப்போ கிடைக்கும்’
’நாளைக்கு இதே நேரம் வாங்க, ரெடியா இருக்கும்’
மறுநாள் நான் புறப்படத் தாமதமாகிவிட்டது, அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவுபடுத்தினார்கள். அதன்பிறகுதான் ஆட்டோ பிடித்துச் சென்றேன்.
இப்போது அந்த இளைஞர் மஞ்சமசேல் என்று ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு உள் அறையில் உட்கார்ந்திருந்தார், என்னைப் பார்த்ததும் புன்னகைத்து, ‘வாங்க சார்’ என்று உள்ளே அழைத்தார்.
அந்த அறை முழுவதும் ஏகப்பட்ட சர்க்யூட்கள், விதவிதமான கேமெராக்கள், மொபைல் ஃபோன்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அம்மணமாகத் திறந்து கிடந்தன.
இதையெல்லாம் எப்படி கவனமாகப் பார்த்துச் சரி செய்வார்கள் என்று நான் ஆச்சர்யப்படுவதற்குள், மஞ்சள் சட்டை இளைஞர் என் கேமெராவைக் கொண்டுவந்தார், ‘செக் பண்ணிக்கோங்க சார்’
நான் கேமெராவை முடுக்கி எங்கோ ஒரு சுவர் மூலையைப் படம் பிடித்தபோது, ‘உள்ள ஃபுல்லா வாட்டர் சார்’ என்றார் அவர், ‘நல்லவேளை மெயின் சர்க்யூட்க்கு எதுவும் ஆகலை, இல்லாட்டி தூக்கி எறியவேண்டியதுதான்’
உடனடியாக, எனக்கு என் ஐபாட் ஞாபகம் வந்தது. அந்தமாதிரி எதுவும் ஆகிவிடாமல் காப்பாற்றினாய், கடவுளுக்கு நன்றி.
கேமெராவை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், ‘பில் எவ்வளவு?’
அவன் நேரடியாக பதில் சொல்லாமல், ‘சார் தமிழா?’ என்றான்.
‘ஆமாம், நீங்க?’
’நானும் தமிழ்தான், திருச்சி’ என்றான் அவன், ‘நீங்க எந்த ஊர்?’
‘சேலம் பக்கத்தில, ஆத்தூர்’ நட்பாகச் சிரித்துவைத்தேன், ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’
‘ஆயிரத்து அற்நூத்தம்பது’ என்றான் அவன், ‘உங்களுக்கு பில் வேணுமா?’
‘ஏன் அப்படிக் கேட்கறீங்க?’
‘பில் வேணாம்ன்னா, உங்களுக்கு வேறவிதமா அட்ஜஸ்ட் பண்ணலாம்’ என்று பல்லிளித்தான் அவன், ‘நீங்க ஆயிரம் ரூபாய் கொடுங்க, போதும்’
நான் திகைத்துப்போனேன், சுற்றிலும் இத்தனை எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு இவன் எப்படி லஞ்சம் கேட்கிறான்?
ஆனால், இவனுக்கு அறுநூறு ரூபாய் குறைத்துக் கொடுப்பது லஞ்சம்தானா? இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும்? கறுப்புப் பணம் என்பது இதுதானா? என்னால் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.
என்னுடைய மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், ‘இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியவேண்டாம் சார், நமக்குள்ள இருக்கட்டும்’ என்றான்.
***
பின்குறிப்பு: கடைசியில் நான் அவனுக்குத் திருட்டுத்தனமாக ஆயிரம் கொடுத்தேனா, அல்லது ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கொடுத்து பில் பெற்றுக்கொண்டேனா? அது அவ்வளவு முக்கியமில்லை.
ஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.
என். சொக்கன் …
22 12 2008
8 Responses to "நமக்குள் இருக்கட்டும்"

இப்பல்லாம் ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைச்சுட்டீங்க.. 🙂
கடைசியில ஒரு பெரிய ஹாஹா ஹா.. உங்கள் புஜபல பராக்கிரமத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு நெனச்சா, மழுப்பிட்டீங்களே.. ! 🙂


//ஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.//
கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் பேராசிரியர் ஒருவர் பணம் தந்து வெற்று குறுந்தகடு வாங்கி வர சொன்னார்
நான் பில் கொடுத்த போது, மீதி பணத்தை மட்டும் வாங்கி அவர் கூறியது “உன்னை நம்பினா பில் தேவைஇல்லை – உன்னை நம்ப வில்லை என்றால் நீ தரும் பில்லை எப்படி நம்புவது”


இந்தியா முழுக்க லஞ்சத்தாவரம் வேர்விட்டு வளர்ந்திருக்கிரது.
அதேவேளையில், “யாருக்குமே பொறுப்பில்லே!”என்று சொல்லியே நீர்மொண்டுகுளிக்கிற அந்நியன்”அம்பிகளும்”
திடீர்திடீரென்று என் சொக்கன்களாகி, பதிவில் சமுதாயத்தை
எச்சரிக்கிறார்கள்.
கதையின் கடைசியில் அந்த லஞ்சம் கேட்டவாலிபரை என் சொக்கன் என்ன செய்தார் என்பதை சீக்கிரத்தில்…,
மிகச் சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்!
மக்கள்சூழ்ந்த ஒரு அரங்கத்தில், கருப்புத்துணியை சட்டை மாதிரி அணிந்து கொண்டு, முகத்தில் பாதியை பெயிண்ட் பூசி மறத்துக்கொண்டு, திடீரென்று தோன்றி,
வீடியோவில் “இதைதான் செஞ்சேன்” என்று போட்டுத்தக்குவார்.
[கண் மறைக்குமளவுக்கு முடி வளர்க்க வேண்டியிருப்பதால, வாசக உடன்பிறப்புக்கள் நம் தலைவருக்கு் சிறிது அவகாசமளிப்பார்கள் என்று நம்புகிறோம்!]
இந்தப்பெரு விழாவிலே அண்ணன் என் சொக்கன் அவர்களின் லஞ்சமளிப்பு [மன்னிக்கவும்! லஞ்சமழிப்பு] சேவையைப் பாராட்டி, பெங்களூர்வாழ் மக்களின் சார்பாக,
மலர்மாலையை நான் அணிவிக்கிறேன் என்பதை இங்கே குறிப்பிட்டு மகிழ்கிறேன்.


//இப்பல்லாம் ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைச்சுட்டீங்க.. //
என்று Bee’morgan சொல்லியிருப்பது முழு உண்மை! உண்மையைத்தவிர வேறேதும் இல்லை.
ஆதலால் இப்பேர்ப்பட்ட குற்றத்தைப் புரிந்த என் சொக்கனுக்கு,
ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளாவது இடவேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில்
அவரை சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இடவேண்டும் என்றும்
என்னுடைய கட்சிக்கார்களான
“காசு குடுத்து புக்கு வாங்காதோர் சங்கத்தின்” சார்பாக
கேட்டுக்கொள்கிறேன்.
இப்படி இவருக்கு வழங்கப்படும் தண்டனையானது
எப்பவாவது இருந்துவிட்டு பதிவு போடும் இவரது குருநாதர் பாரா அவர்களுக்கும் அவர்தம் மாயவலையில் பின்னிப்பிணைந்திருக்கும் கிழக்கு எழுத்தாளர்களுக்கும்
அரிய, பெரிய, உரிய பாடமாக அமையும் என்பதையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.


நமக்குள்ளேயே இருக்கட்டும் சார்! நல்லா இருக்கு. தனியார் கடையில லஞ்சமா? கேள்விப்பட்டதே இல்லீங்க.


ஓசூரில் எல்.ஜி வாஷிங் மெஷின் வாங்கினேன்.. கீழே வைக்கும் பிளாஸ்டிக் ஸ்டேண்டு வாங்கவேண்டும் என்ற போது அது குவாலிட்டியா இருக்காது சார், வீல் வச்ச இரும்பு ஸ்டேண்டு தான் ரொம்ப வருஷம் தாங்கும்.. எண்ணூறு ரூபா ஆகும்… நீங்க மெஷின பாருங்க.. அப்புறம் பேசுவோம் என்று சொல்லி விட்டு நகர்ந்தார் சேல்ஸ்மேன்.. மெஷினை ஆட்டோ ஏற்றும் போது காதருகில் சார் சாயங்காலம் வீட்ல தான இருப்பீங்க, ஸ்டாண்டு எடுத்துட்டு வரேன், டைரக்டா பேக்டரில இருந்து வருது சார், ஐநூறு மட்டும் கொடுங்க போதும். நானே ஃபிட் பண்ணி, மெஷினை மேலே ஏத்தி வச்சுட்டு வரேன்…
கடைசி வரை பரிசாக தருவதாக சொன்ன ரீபோக் வாட்சை தரவே இல்லை…

1 | Bala
December 22, 2008 at 6:26 pm
i enjoyed reading your article and noticed the reality.