மனம் போன போக்கில்

Archive for December 25th, 2008

ஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும்.

ஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே  முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.

எங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிறிய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார்.

அவருடைய வண்டியில் எந்நேரமும் ஒரு பை நிறையத் துணிகள் காத்திருக்கும். பக்கத்தில் சூடான நெருப்புப் பெட்டி, சற்றுத் தொலைவில் மரக் கிளையில் தூளி கட்டித் தொங்கும் குழந்தை. அதன்கீழே சோர்வாக அமர்ந்திருக்கும் மனைவி.

அந்த அயர்ன் தொழிலாளியைப் பார்க்கும்போது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவராகத் தோன்றும். அவர் ஆடைகளைத் தேய்க்காமல் வெறுமனே மடித்துக் கொடுத்தால்கூட சந்தோஷமாகக் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம்போல் இருக்கும்.

இந்தக் காலத்தில் இரண்டரை ரூபாய் என்பது ஒரு பெரிய விஷயமா? அந்தத் தொகையை நம்பி ஒரு குடும்பம் பிழைக்கிறது என்றால், நல்ல விஷயம்தானே?

ஆனால், என் மனைவிக்கு அவர்மீது தீவிர விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன.

சில மாதங்களுக்குமுன்னால் ஒருநாள், குளித்துவிட்டு வந்து பீரோவில் மேலாக இருந்த சட்டையை எடுத்து அணிந்தேன். எப்போதும் அதுதான் வழக்கம், எனக்கு ஆடைகளில் வண்ணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது, தோன்றாது.

ஆகவே, சட்டை அடுக்கில் இருக்கும் முதலாவது, பேன்ட் அடுக்கில் இருக்கும் முதலாவது என்றுதான் ’தேர்ந்தெடுத்து’ அணிவேன், அது ராமராஜன் காம்பினேஷனாக இருந்தாலும் சந்தோஷமே (பெரும்பாலும் அப்படிதான் அமையும் 😉

நான் வெளியூர் போகும்போது, என் மனைவி மெனக்கெட்டு உடைகளைப் பொருத்தம் பார்த்து வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவார், விமானத்தில் அவை அலுங்கிக் குலுங்கி வரிசை மாற, நான் வழக்கம்போல் கேனத்தனமாக எதையாவது போட்டுக்கொண்டு போய் நிற்பேன், என் முகம் தெரிந்த யாரும் அதைப் பார்ப்பதில்லை என்பதால், இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

ஆனால் அன்றைக்கு, நான் தேர்ந்தெடுத்த சட்டையில் ஏதோ கோளாறு என்று எனக்கே தோன்றியது, கழற்றி முதுகைப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் சில கோடுகள்.

என் மனைவியிடம் விசாரித்தேன், ‘வாஷிங் மெஷின்ல எதுனா கோளாறா? சரியாத் துவைக்கலை போலிருக்கே’

அவருக்கு எங்கள் வீட்டு இயந்திரங்களைக் குறை சொன்னால் பிடிக்காது, போன நூற்றாண்டில் நாங்கள் வாங்கிய ஷார்ப் டிவிதான் உலகத்திலேயே பெஸ்ட் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறவர் அவர்.

ஆகவே, ‘வாஷிங் மெஷின்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’ என்று சீறலாகப் பதில் வந்தது, ‘எல்லாம் அந்த அயர்ன்காரன் வேலை’

அதாகப்பட்டது, நாங்கள் துணிகளை ஒழுங்காகத் துவைத்து அவரிடம் அனுப்புகிறோம், அவருடைய வண்டியில், மரத்தடியில், குடிசையில் எங்கோதான் அழுக்கு படிந்துவிடுகிறது.

இந்த வாதத்தை (அல்லது ஊகத்தை) என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ’நம் முதுகு அழுக்கு நமக்குத் தெரியாது’ என்பதுபோல் ஒரு பழமொழியைச் சொன்னேன்.

கணவன்மார்களுக்கு அதிபுத்திசாலித் தோற்றத்தைத் தரும் பழமொழிகள் மனைவிகளுக்குப் பிடிப்பதில்லை. ’உனக்கு என்ன தெரியும்? நான் நாலு மாசமாப் பார்க்கறேன், அவன்கிட்டே போற ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காதான் திரும்பி வருது’

எனக்கு எதுவும் தெரியாதுதான். அந்தச் சட்டையைத் துவைக்கப் போட்டுவிட்டு அடுத்தபடியாக இருந்த இன்னொரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினேன்.

இரண்டு நாள் கழித்து, இதேபோல் இன்னொரு அழுக்குச் சட்டை. அப்புறம் ஒருநாள் பேன்ட்டில் சின்ன ஓட்டை.

அவ்வளவுதான். என் மனைவி பொங்கி எழுந்துவிட்டார், ‘இந்தாளுக்கு அக்கறையே இல்லை, சுத்த கேர்லெஸ், இனிமே இவன்கிட்டே துணி அயர்ன் செய்யக் கொடுக்கப்போறதில்லை’ என்றார்.

எங்கள் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் நுட்பம்(?) எங்கள் இருவருக்கும் தெரியாது, அது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பது தெரிந்தாலும், சோம்பேறித்தனம்.

ஆகவே, இதெல்லாம் சும்மா ஒரு வேகத்தில் சொல்வதுதான், நாளைக்கு மறுபடி அவரிடமேதான் துணிகளைக் கொண்டுசெல்வார் என்று நினைத்துக்கொண்டேன்.

வழக்கம்போல், நான் நினைத்தது தப்பு.

நாங்கள் பேசிய அன்றைய தினமே, என் மனைவி சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்கள் சிலவற்றில் சுற்றி இன்னோர் அயர்ன் காரரைப் பிடித்துவிட்டார், அவரிடம் எல்லாத் துணிகளையும் கொடுத்து வாங்கிவிட்டார்.

இந்தக் கூத்து சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. அதற்குள் நாங்கள் சைக்கிளில் துணி கடத்துவதைக் கவனித்துவிட்ட அந்த அயர்ன் காரர், எங்கள் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.

அவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது, எங்களுக்குக் கன்னடம் சுமாராகதான் தெரியும்.

ஆகவே, அன்றைக்கு நாங்கள் ஆவேசமாக, ஆனால் அதிகப் பிரயோஜனம் இல்லாமல் அவரவர் மொழியில் பேசிக்கொண்டோம். அந்தப் பேச்சின் சாராம்சம்:

அவர்: ஏதோ ஒண்ணு ரெண்டு தப்பு நடந்திருக்கலாம், அதுக்காக நீங்க என் பிழைப்பைக் கெடுக்கக்கூடாது

நாங்கள்: எங்கள் துணி, அதை நாங்கள் யாரிடமும் கொடுப்போம், அதைக் கேட்க நீ யார்?

கடைசியில் அவர் காச்மூச்சென்று ஏதோ கத்திவிட்டுத் திரும்பினார். கோபத்தில் என் மனைவி அடுத்த கட்டச் சதியில் இறங்கினார்.

மறுநாள், இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த அயர்ன் காரரிடம் பேசி, அவரை எங்கள் அபார்ட்மென்டுக்கே இறக்குமதி செய்தாகிவிட்டது. இங்கே அவர் காங்க்ரீட் நிழலில் நின்றபடி இரண்டு மணி நேரத்தில் எல்லா வீட்டு ஆடைகளையும் தேய்த்து முடித்துவிடுகிறார், கணிசமான வருமானம்.

எங்களுக்கும், துவைத்த ஆடைகளைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் நடக்கவேண்டியதில்லை, அவரே வீட்டு வாசலில் வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார், தேய்த்துக் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக்கொள்கிறார்.

சீக்கிரத்தில், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் ஆடைகளைத் தேய்க்கக் கொடுத்தார்கள். தெரு மத்தியிலிருந்த பழைய அயர்ன் காரருக்குப் பெரும் பொருள் இழப்பு.

சில நாள் கழித்து, இரண்டு அயர்ன் காரர்களும் எங்கள் வீட்டு வாசலில் குடுமி பிடிச் சண்டை, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே, நீ இந்த நொடியே வெளியில் ஓடு’ என்று கத்தினார் பழையவர்.

பதிலுக்கு இந்தப் புதியவரும் விட்டுக்கொடுக்கவில்லை, ‘இந்தத் தெரு என்ன உன் பெயரில் எழுதி வைத்திருக்கிறதா? வேணும்ன்னா நீ ஓடிப் போ’ என்று சீறினார்.

சுமார் முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

அதன்பிறகு, பழைய அயர்ன் காரர் எங்களுக்கு ஜென்ம விரோதியாகிவிட்டார். அந்தப் பக்கம் நாங்கள் சாதாரணமாக நடந்து சென்றாலே அவருடைய குடும்பம் முழுக்க (தூளிக் குழந்தை உள்பட) முறைக்கிறது.

இதில் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன பயம் என்றால், தினசரி நான் அலுவலகத்துக்கு அவருடைய தள்ளு வண்டியைக் கடந்துதான் போகவேண்டும். என்றைக்காவது வழி மறித்து அடித்து, உதைத்துவிடுவாரோ?

நல்ல வேளையாக, இதுவரை அப்படி எந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக, எங்கள் தெருவில் இரண்டு அயர்ன் காரர்கள், ஆச்சர்யமான விஷயம், இருவருடைய வண்டிகளிலுமே துணிகள் நிரம்பி வழிகிறது.

***

என். சொக்கன் …

25 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031