கவசக் குறிப்புகள்
Posted December 28, 2008
on:சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சென்னை சென்று திரும்பினார், அவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன், ‘என்னப்பா, எப்படி இருந்தது ட்ரிப்?’
‘எல்லாம் நல்லாதான் இருந்தது, கிளம்பற நேரத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்’
‘அச்சச்சோ, என்னாச்சு?’
‘சிக்னல்ல நிக்கும்போது ஒரு தடிமாடு கார் மேலே வந்து மோதிட்டான், ஒரு லைட் உடைஞ்சுபோச்சு’
‘அடடா, அப்புறம்?’
‘ஒரு மணி நேரம் அவனோட சண்டை போட்டு எழ்நூறு ரூபாய் வாங்கிட்டுதான் விட்டேன்’ என்று பெருமிதமாகச் சொன்னார் நண்பர், ‘ஆனா, இந்த எழ்நூறு ரூபாய் ரிப்பேருக்குப் போதுமான்னு தெரியலை’
அதோடு அந்தப் பேச்சு முடிந்தது. தொலைபேசி இணைப்பைத் துண்டித்தபிறகுதான் யோசித்தேன், இதுபோல் நாம் சென்று எங்காவது மோதும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்குதானே ஆட்டோ இன்ஷூரன்ஸ்? பிறகு எதற்குச் சண்டை? எழ்நூறு ரூபாய்? அது போதுமா என்கிற கவலை?
அந்த நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தாலும், இதேபோல் சண்டை போட்டிருப்பேன், அறுநூறு ரூபாயோ, எண்ணூறு ரூபாயோ வாங்கிக்கொண்டு கவலையோடு திரும்பி வந்திருப்பேன், இன்ஷூரன்ஸ்பற்றிச் சுத்தமாக நினைவு வந்திருக்காது.
நல்ல வேளையாக, அரசாங்கம் மோட்டார் இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால் அப்போதும், அதன் பலன்கள் முழுமையாகச் சென்று சேர முடிவதில்லை, இதுபோல் ரோட்டோரச் சண்டைகளில் எல்லோருடைய நேரமும் மன அமைதியும் கெட்டுப்போகிறது.
இன்னொரு பக்கம், ஜெனரல் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள். என்னென்ன வகைகளில் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் செலுத்தவேண்டியிருக்கும், எப்போது இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது, எங்கே காப்பீடு எடுக்கலாம், அதைப்பற்றி யாரிடம் பேசவேண்டும், மேல் விவரங்கள் எங்கே கிடைக்கும் … இப்படி எந்த விவரமும் தெரியாதவர்கள்தான் நம் ஊரில் அதிகம்.
மேலே சொன்ன இந்த இரு வகையைச் சேர்ந்தவர்களுக்கும், கிழக்கு பதிப்பக வெளியீடான ‘All In All ஜெனரல் இன்ஷூரன்ஸ்’ புத்தகம் மிகவும் பயன்படும். (ஆசிரியர்: ஏ. ஆர். குமார் – 104 பக்கங்கள் – விலை ரூ. 60/-).
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்வரையில் நான் இன்ஷுரன்ஸ்பற்றி ஓரளவு தெரிந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில், ஆயுள் காப்பீடு வேறு, பொதுக் காப்பீடு வேறு என்கிற அடிப்படை விஷயம்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே இதைத் தெளிவாக விளக்கிவிடுகிறார் ஆசிரியர். அவருடைய விளக்கத்தின் சாராம்சம் இதுதான்: நீங்கள் இன்ஷூரன்ஸ்பற்றிக் ‘கேள்விப்பட்டிருக்கலாம்’, ஆனால் அதுமட்டும் போதாது, முழுமையான புரிதல் இருந்தால்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும், அதற்குதான் இந்தப் புத்தகம்.
யாரெல்லாம் பொதுக் காப்பீடு எடுக்கவேண்டும்?
‘பொது’ என்கிற பெயரே சொல்கிறது, எல்லோரும் எடுக்கலாம், எடுக்கவேண்டும் என்று புத்தகம்முழுக்க வலியுறுத்துகிறார் ஏ. ஆர். குமார் – சில சமயம் சற்று அளவுக்கு அதிகமாகவே அழுத்திச் சொல்கிறார், வலிக்கிறது 🙂
நம் ஊரில் ஆயுள் காப்பீடு ரொம்பப் பிரபலம், ஆயுளைக் காக்கிறதோ இல்லையோ, அதில் காசு போட்டால் பின்னால் நமக்கு வேறுவிதமாக்த் திரும்பி வரும், வருமான வரியைச் சேமிக்கலாம் என்கிற காரணத்தால் அநேகமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சம்பாதிக்கும் எல்லோரும் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள்.
ஆனால், பொதுக் காப்பீடு அப்படி இல்லை, அதன் காரண காரியங்களே பெரும்பாலானோருக்குப் புரியாததால், அது ஒரு சவலைப் பிள்ளைபோல் கேட்பாரற்றுக் கிடக்கிறது.
முக்கியமாக, மருத்துவக் காப்பீடு, அதன் மகிமையை ஒருமுறை பார்த்துவிட்டவர்கள், அதன்பிறகு அதற்காகச் செலவழிக்கத் தயக்கமே காட்டமாட்டார்கள். ஏ. ஆர். குமார் ஏகப்பட்ட உதாரணங்களுடன் அதைப்பற்றிப் புட்டுப்புட்டு வைக்கிறார்.
அதேசமயம், இந்தப் புத்தகத்தில் அவர் இன்ஷூரன்ஸ்பற்றி நல்லவிதமாக விளக்குவதைவிட, எப்போதெல்லாம் நமக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்று எச்சரிப்பதுதான் அதிகம். இது வாசகரை மிரட்டும்விதமாக இல்லாமல், ‘கவனமாக இருங்கள், இன்ஷூரன்ஸ் என்பது அமுதசுரபி அல்ல, சில விஷயங்களுக்குதான் நாம் நம்மைக் காப்பீடு செய்துகொள்ளமுடியும்’ என்று வழிகாட்டுவதாக இருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் நான்கு பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் (நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைடட் இந்தியா) இருக்கின்றன. இவைதவிர ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் சமீபகாலமாக சந்தையை மொய்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் அனைத்தின் சரித்திரத்தை புத்தகத்தின் முன் பகுதியிலேயே விரிவாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். வாசிப்பு சுவாரஸ்யம் இருப்பினும், ஜெனரல் இன்ஷுரன்ஸ்பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தப் புத்தகத்தை வாங்கிய ஒருவருக்கு, இந்தக் கதைகள் அலுப்பூட்டலாம், ’இதையெல்லாம் பின்னிணைப்புக்குத் தள்ளியிருக்கலாமே’ என்கிற நினைப்பைத் தவிர்க்கமுடிவதில்லை.
அடுத்தபடியாக, ஜெனரல் இன்ஷூரன்ஸின் வகைகளை விவரிக்கிறார் ஆசிரியர். அவற்றைப் பின்னர் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார்.
முக்கியமாக மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு ஆகிய அத்தியாயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்கள், வழிமுறைகள், செலவாகக்கூடிய தொகை (உத்தேச மதிப்பீடு), எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது என்று விரிவான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது.
வாசிப்பினூடே, பல சுவாரஸ்யத் தகவல்களும் சிக்குகின்றன. உதாரணமாக, ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடக்காவிட்டால், அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம், உங்களுக்குத் தெரியுமா? 🙂
இதைப் படித்ததும், அடுத்தபடியாக காதல் தோல்விக்கு இன்ஷூரன்ஸ் உண்டா என்று ஓர் அத்தியாயத்தை எதிர்பார்த்தேன், காணோம்!
விபத்துக் காப்பீடுபற்றித் தனி அத்தியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் மருத்துவக் காப்பீடுக்கும் என்ன வித்தியாசம் என்பது அத்தனை தெளிவாக விளக்கப்படவில்லை, அல்லது தனியே எடுத்துக்காட்டப்படவில்லை. (வித்தியாசம்: மருத்துவக் காப்பீடு சாதாரண நோய்களுக்கும் கிடைக்கும், விபத்துக் காப்பீடு என்பது ஏதேனும் விபத்து நேர்ந்து அதன்மூலம் மருத்துவ சிகிச்சை எடுத்தால், உறுப்புகளை இழந்தால்மட்டுமே கிடைக்கும்)
இந்த ‘உறுப்புகளை இழப்பது’பற்றிச் சொல்ல ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 69, 70வது பக்கங்களில் ஒரு பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு சின்னப் பகுதி இங்கே
உயிரிழப்பு நேர்ந்தால் – 100 சதவிகிதம்
2 கண்களை இழந்தால் – 125 சதவிகிதம்
2 கைகளை இழந்தால் – 125 சதவிகிதம்
2 கால்களை இழந்தால் – 125 சதவிகிதம்
கட்டை விரலை இழந்தால் – 20 சதவிகிதம்
ஆள்காட்டி விரலை இழந்தால் – 10 சதவிகிதம்
மற்ற விரலை இழந்தால் – 5 சதவிகிதம்
1 கண்மட்டும் இழந்தால் – 50 சதவிகிதம்
முகரும் திறனை இழந்தால் – 10 சதவிகிதம்
ருசிக்கும் திறனை இழந்தால் – 5 சதவிகிதம்
இப்படி நீள்கிற இந்தப் பட்டியலை வாசிக்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நவீன சிறுகதையைப் படிப்பதுபோல் உணர்ந்தேன். எந்த உறுப்பை இழந்தால் எவ்வளவு இழப்பீடு என்று எதன் அடிப்படையில் முடிவு செய்திருப்பார்கள்? ஒருவர் முகரும் திறனை இழப்பதற்கும், பார்க்கும் திறனை இழப்பதற்கும் இடையே ஐந்து மடங்கு வித்தியாசம் எப்படி வருகிறது, ஏன் வருகிறது?
இன்னும் கொடுமை, ருசிக்கும் திறன் அதைவிடக் கீழே கிடக்கிறதே, ஏன்? நாவுக்கு வாழ்க்கையில் மரியாதை அவ்வளவுதானா?
இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு விஷயம் தோன்றியிருக்கலாம், இதை வரிவரியாகக் கொடுக்காமல், Table வடிவத்தில் தந்திருந்தால், இன்னும் சுலபமாகப் பார்க்கலாமே.
புத்தகம்முழுவதும் இந்தக் கேள்வி எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை Table வடிவத்திற்கு மாற்றியிருந்தால், பக்கமும் மிச்சமாகியிருக்கும், எளிதில் Refer செய்வதும் சாத்தியம். அடுத்த பதிப்பில் செய்வார்கள் என நம்பலாம்.
அதேபோல், காப்பீடு எடுக்கவேண்டும் என்று புத்தகம் முழுக்கச் சொன்னாலும், ஒருவேளை ஏதேனும் விபத்து, திருட்டு நேர்ந்தால் இழப்பீடுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்கிற தகவல் குறைகிறது. அதேசமயம், இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் சர்வே, ரீ-சர்வே, பிரச்னைகள் வரும்போது உதவுகிற தீர்ப்பாணையங்களைப்பற்றியெல்லாம் விரிவான குறிப்புகள் இருக்கின்றன.
குறைகள் என்று பார்த்தால், முக்கியமாகச் சில எழுத்துப் பிழைகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், இன்ஷூரன்ஸ் போன்ற முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சொல்கையில், இந்த எழுத்துப் பிழைகள்கூடப் பெரிய பிரச்னையாக அமையக்கூடும்.
45வது பக்கம்: ‘Caseless Hospitalisation’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிறது, இது ‘Cashless’ என்று இருக்கவேண்டும்
79வது பக்கம்: ’10 ஆயிரம் டாலர் (சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்)’ என்று வருகிறது. 10 ஆயிரம் டாலர் என்பது நான்கு லட்சம் ரூபாயைத் தாண்டுமே, தப்பு டாலர் மதிப்பிலா, அல்லது ரூபாய்க் கணக்கிலா?
52வது பக்கம்: ‘பிரசவத்துக்கு எந்த மருத்துவ இழப்பீடும் கிடைக்காது. அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தாலும் அதற்கும் இழப்பீடு கிடைக்காது’ என்று வருகிறது. இது பாலிஸி விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும், எங்கள் அலுவலகத்தில் பலர் தங்களுடைய / தங்கள் மனைவியின் பிரசவத்து(அறுவைச் சிகிச்சை)க்குச் செலுத்திய பணத்தை இழப்பீடாகப் பெற்றிருக்கிறார்கள்
இப்படி அடுத்த பதிப்பில் எளிதாகச் சரி செய்யக்கூடிய ஒரு சில தகவல் பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது ஒரு முக்கியமான புத்தகம். ஜெனரல் இன்ஷூரன்ஸ்பற்றி மிரட்டாமல், விளம்பரம் போடாமல், எல்லோரும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சாதக பாதகங்களை விளக்கி எழுதப்பட்டிருக்கிறது.
முடிக்குமுன், ஆசிரியர் தரும் சில டிப்ஸ்:
1. பாலிசி எடுக்கும்போது ஏதோ ஒரு தேதியில் எடுக்காதீர்கள். உங்களால் மறக்க முடியாத, அல்லது எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு தேதியில் பாலிசியைத் துவக்கினால், அதைப் புதுப்பித்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். உதாரணமாக, உங்கள் பிறந்த நாலன்று அல்லது உங்கள் திருமண நாளன்று நீங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஆரம்பிக்கலாம்
2. ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் பாலிசியைப் புதுப்பித்துக்கொண்டபிறகு பழைய பாலிசியைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்கிற அவசியமில்லை. பழைய பாலிசிகளை எல்லாம் ஒரு ஃபைலில் தனியாகச் சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. ஏனெனில், நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலிசி புதுப்பித்து வருகின்ற தகவல், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் இருந்து திடீரெனக் காணாமல் போகலாம்
அப்படித் ‘திடீரென்று காணாமல் போனால்’, அந்த விபத்துக்கு எந்த நிறுவனமும் காப்பீடு தருவதில்லைபோல 🙂
இந்தப் புத்தகம்பற்றிய கூடுதல் தகவல்கள், ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே க்ளிக்கவும்.
***
என். சொக்கன் …
28 12 2008
1 | ramachandran bk
July 12, 2011 at 11:17 pm
” எங்கள் அலுவலகத்தில் பலர் தங்களுடைய / தங்கள் மனைவியின் பிரசவத்து(அறுவைச் சிகிச்சை)க்குச் செலுத்திய பணத்தை இழப்பீடாகப் பெற்றிருக்கிறார்கள்”
Probably, they should have been covered by group medical coverage, where the terms and conditions are different from individual coverage