மிஷ்டி தோய்
Posted December 29, 2008
on:- In: Food | Kolkata | Travel | Uncategorized
- 18 Comments
முதன்முறையாக கொல்கத்தா சென்றபோது, சற்றே பெரிய கிராமம்போலிருந்த அதன் தன்மை எனக்குக் கொஞ்சம் பயமூட்டியது.
குறிப்பாக, கொல்கத்தா மழைக் காலங்கள் மிகக் கொடுமையானவை, நான்கு தூறலுக்கே சாலையெல்லாம் சாக்கடையாகிவிடும். தரையடிப் பாலத்தில் இறங்கி ரயில்வே பிளாட்ஃபாரங்களில் ஏற நினைக்கிறவர்களுக்கு நிறைய சகிப்புத்தன்மை தேவைப்படும்.
நகரம்(?)முழுவதுமே, நவீனம் ஆங்காங்கே திட்டுத்திட்டாக எப்போதாவதுதான் தென்பட்டது, மற்றபடி கட்டட அமைப்பில் தொடங்கி, மக்களின் உடை அலங்காரம், பேசும் விதம்வரை சகலமும் கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை நினைவூட்டியது.
கொல்கத்தாவில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிக்குப் பக்கத்தில் ஒரு நீண்ட கடைத்தெரு. ஷாப்பிங் மால்கள் போலின்றி, அத்தனையும் சின்னச் சின்ன பெட்டிக் கடைகள், ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் இடையே ஒரு சின்ன மரத் துண்டு இடைவெளிமட்டும் என்பதால், எங்கே யார் எதை வாங்குகிறார்கள் என்றுகூடச் சரியாகப் புரியவில்லை, அநேகமாக அந்தக் கடைக்காரர்கள் எல்லோரும் இடது பக்கக் கடையிலிருந்து பொருள்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, காசை வலது பக்கக் கடையின் கல்லாப்பெட்டியினுள் போடுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்தக் கடைக்காரர்களும், கஸ்டமர்களும் இளைப்பாறுவதற்காக, ஆங்காங்கே சிறு டீக்கடைகள், மண் கோப்பையில் தேநீர் அருந்தி அதைக் கீழே போட்டு உடைத்துச் செல்லும் கொல்கத்தாவாசிகள்.
அப்புறம், இனிப்புக் கடைகள். ஒவ்வொரு கடையிலும் நூறு, நூற்றைம்பது ரகங்களைச் செங்கல்போல் வரிசையாக அடுக்கிவைத்திருக்கிறார்கள், அத்தனையின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் டயாபடீஸ் வந்துவிடும்போல.
முதல் நாள் இரவு பா. ராகவனுடன் சாட் செய்துகொண்டிருந்தபோது, இந்த விஷயத்தைச் சொன்னேன், ’பெங்காலிங்க ரொம்ப இனிப்பானவங்கபோல’
‘டேய் பாவி, சொல்ல மறந்துட்டேன்’ என்று பதறினார் அவர், ‘கொல்கத்தாவிலே பனங்கல்கண்டு போட்டு ஒரு தித்திப்புத் தயிர் கிடைக்கும், மிஸ் பண்ணிடாதே’
தித்திப்பு, தயிர் இந்த இரண்டு வார்த்தைகளையும் ஒன்றாகக் கேட்ட்தும் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது, ‘அய்யே, அதெல்லாம் வேண்டாம் சார்’
’எனக்காக ஒரே ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாரு, அப்புறம் விடமாட்டே’
சரி, இத்தனை தூரம் சொல்கிறாரே என்று விருந்தினர் விடுதிப் பையனைக் கூப்பிட்டேன், ஹிந்தியில் பனங்கற்கண்டுக்கு என்ன என்று தெரியாததால், ‘மீடா தஹி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.
‘அது மீடா தஹி இல்லை சாப், மிஷ்டி தோய்’ என்று திருத்தினான் அவன். காசை வாங்கிக்கொண்டு ஓடியவன், இரண்டரை நிமிடத்தில் திரும்பி வந்தான். கையில் இரண்டு மண் குடுவைகள்.
ஏற்கெனவே இனிப்புத் தயிர் என்றதும் எனக்கு மனத்தடை ஏற்பட்டுவிட்டது, இப்போது மண் குடுவையைப் பார்த்ததும் மறுபடி முகம் சுளித்தேன், இந்த மண்ணில் இருக்கிற அழுக்கெல்லாம் தயிரில் சேரும், இதைச் சாப்பிட்டால் நம் உடம்பு என்னத்துக்கு ஆகுமோ!
பாராமீது பாரத்தைப் போட்டுவிட்டு அந்த மண் குடுவைகளை வாங்கிக்கொண்டேன், மேலே ரப்பர் பாண்ட் போட்டு இறுகக் கட்டப்பட்டிருந்த பேப்பரை விலக்கினால், பழுப்பு நிறத்தில் தயிர்.
ஆமாம், பழுப்பு நிறம்தான். அதைப் பார்த்தால் சாப்பிடவேண்டும் என்று தோன்றவே இல்லை.
இதில் என்ன இருக்கப்போகிறது, ஏன் பாரா இதை விழுந்து விழுந்து சிபாரிசு செய்கிறார் என்று அலட்சியத்துடன் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டேன்.
அந்த விநோதமான சுவையை நான் அதற்குமுன்னால் அனுபவித்தது கிடையாது. தயிர்தான். ஆனால், அதில் ஏதோ ஒரு வித்தியாசமான இனிப்பு கலந்திருந்தது.
இப்போது எனக்கு வாந்தி வரவில்லை. மறுபடி சாப்பிடவேண்டும்போலிருந்தது.
பெங்களூரில் ‘லஸ்ஸி’ எனப்படும் இனிப்புத் தயிர் (அல்லது மோர்) கிடைக்கிறது. ஆனால் வெறும் தயிரில் சர்க்கரையைக் கொட்டிக் கலக்கிக் கொடுப்பார்கள். அது ஆங்காங்கே இனித்துக்கொண்டு, மற்ற இடங்களில் பல்லிளித்துக்கொண்டு அபத்தமாக இருக்கும். அதைச் சாப்பிடுவதற்கு ஒரு க்ளாஸ் மோரைக் குடித்துவிட்டு ரெண்டு ஸ்பூன் சர்க்கரையைத் தனியே தின்றுவிடலாம்.
ஆனால், ‘மிஷ்டி தோய்’ அப்படி இல்லை. தயிரும் தித்திப்பும் பிரிக்கமுடியாதபடி கலந்திருந்தது. ஒவ்வொரு துணுக்கிலும் தித்திப்பு, அதேசமயம் குறையாத தயிரின் சுவை.
சில துணுக்குகளில், நானும் என் நண்பர் சுமேஷும் மயங்கிப்போனோம். ஐந்தே நிமிடங்களில் அன்றைக்கு வாங்கிவந்த இரண்டு குடுவைகளும் காலி.
அடுத்த பதினைந்து நாள்களில் நாங்கள் சாப்பிட்ட ‘மிஷ்டி தோய்’களுக்குக் கணக்கே இல்லை. ஆரம்பத்தில் இதற்காக விடுதிப் பையனை விரட்டிக்கொண்டிருந்த நாங்கள், பிறகு அங்கேயே நேரில் சென்று சாப்பிட ஆரம்பித்தோம், அந்த அத்தனூண்டு கடைக்குள் நெருக்கியடித்துக்கொண்டு சாப்பிடுவதில் ஒரு தனி சுகம் இருந்தது.
அதன்பிறகு, இரண்டுமுறை கொல்கத்தால சென்றிருக்கிறேன், காளி, ராம கிருஷ்ண மடம், கங்கை நதியை மிஸ் செய்தாலும், ‘மிஷ்டி தோய்’மட்டும் தவறவிடுவதே கிடையாது.
சென்றமுறை கொல்கத்தா பயணம் முடிந்து ஊருக்குக் கிளம்பியபோது, மனைவி, குழந்தைகளுக்கு நாலு ‘மிஷ்டி தோய்’ வாங்கிப்போனால் என்ன என்று யோசித்தேன். விமானத்தில் உடையாதபடி கொண்டுசெல்வதற்கு வசதியாகப் பார்சல் செய்து தருவதாக அந்தக் கடைக்காரன் சத்தியம் செய்தான்.
ஆனால் எனக்குதான் கொஞ்சம் பயம், ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.
ஆகவே, என்னால் மிஷ்டி தோய் சுவையை வீட்டில் வர்ணிக்கதான் முடிந்தது. வாங்கித்தர முடியவில்லை.
அதனால்தானோ என்னவோ, அதன்பிறகு ஒன்றரை வருடங்களில் எனக்குக் கொல்கத்தா போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மிஷ்டி தோய் ருசி மறந்துபோய்விட்டது.
நேற்று மதியம் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தொப்பையைச் சொறிந்துகொண்டிருந்தபோது ஒரு யோசனை, கோரமங்களாவில் ‘DC Books’ கடை புதிதாகத் திறந்திருக்கிறார்களாமே, போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?
செல்ஃபோனில் இளையராஜாவைக் கேட்டபடி நடக்க ஆரம்பித்தேன். இருபது நிமிடத்தில் கோரமங்களா.
‘DC Books’ முகவரியைக் கவனித்தபடி நடந்தேன், விதவிதமாக சிறிய, பெரிய கடைகள் வந்தன, நான் தேடுவதைமட்டும் காணோம்.
அப்போது, ஒரு செக்கச்செவேல் போர்ட், அதில் கொட்டை எழுத்தில் ‘MISHTI’ என்று எழுதியிருந்தது.
ஆச்சர்யத்துடன் அருகே சென்றேன், ’பாரம்பரிய பெங்காலி இனிப்பு வகைகள் இங்கே கிடைக்கும்’ என்று கீழே பொடி சைஸில் குறிப்பிட்டிருந்தார்கள்.
கடைக்கே ‘மிஷ்டி’ என்று பெயர் வைத்திருந்தால், இங்கே நிச்சயமாக மிஷ்டி தோய் கிடைக்கும். கிட்டத்தட்ட உள்ளே ஓடினேன்.
ஆனால், கடைக்குள் நுழைந்தபிறகு ஏதோ கூச்சம், ‘மிஷ்டி தோய்’ என்று சொல்லிக் கேட்கச் சங்கடமாக இருந்தது.
ஒருவேளை, என்னுடைய உச்சரிப்பு தவறாக இருந்தால்? (இப்போது இந்தப் பதிவை எழுதும்போதும் அந்தக் கவலை இருக்கிறது) ’பாரம்பரியம்’ மிகுந்த அந்தக் கடைக்காரர் சிரிக்கமாட்டாரோ?
ஆகவே, என்னுடைய பழைய உத்தியைப் பயன்படுத்தினேன், ‘மீடா தஹி இருக்குங்களா?’
‘மிஷ்டி தோய்தானே?’ என்று என் வயிற்றில் இனிப்புத் தயிர் வார்த்தார் அவர், கண்ணாடிக் கூண்டுக்குள் சுட்டிக்காட்டினார்.
அங்கே மண் குடுவைகளுக்கு பதில் விதவிதமான பிளாஸ்டிக் கிண்ணங்களில் மிஷ்டி தோய், விலைமட்டும் இரண்டு மடங்கு.
அதனால் என்ன? உலகெலாம் Recession என்கிறார்கள், மிஷ்டி தோய் தயாரிப்பாளர்களுக்குமட்டும் அது இருக்கக்கூடாதா? இரண்டு கிண்ணங்கள் வாங்கிக்கொண்டேன்.
பொட்டலம் கட்டும்போது, திடீர் சந்தேகம், ‘இது பழுப்புக் கலரா இருக்கணுமே, ஏன் வெள்ளையா இருக்கு?’
அவர் சிரித்தார், ‘மண் குடுவையில பார்த்தா பழுப்பு நல்லாத் தெரியும், இது ட்ரான்ஸ்பேரன்ட் பிளாஸ்டிக், அதனால உங்களுக்கு வெள்ளையாத் தோணுது’
உண்மையைதான் சொல்கிறாரா, அல்லது கதை விடுகிறாரா என்று புரியவில்லை. கலர் எதுவானாலும் பரவாயில்லை, ருசி அதேமாதிரி இருந்தால் போதும் என்று வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
வீட்டுக்கு வந்து எல்லோரும் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டோம், அதே பழைய ருசி, வெட்கமில்லாமல் சப்புக்கொட்டித் தின்றேன். பிளாஸ்டிக் கிண்ணத்திலோ, ஸ்பூனிலோ ஒரு துளி மிச்சம் வைக்கவில்லை.
ஆனால், அந்த ருசி, என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓடினார்கள்.
அதனால் என்ன? அவர்களுக்கு வாங்கியதையும் எனக்கே எடுத்துக்கொண்டுவிட்டேன், இன்று இரவு சாப்பாட்டுக்குப்பிறகு வெட்டுவதற்கு!
***
என். சொக்கன் …
29 12 2008
18 Responses to "மிஷ்டி தோய்"

// இடது பக்கக் கடையிலிருந்து பொருள்களை எடுத்துக் கொடுத்துவிட்டு, காசை வலது பக்கக் கடையின் கல்லாப்பெட்டியினுள் போடுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன். //
அட.. அட.. அருமை 🙂


செயிண்ட் மார்க்ஸ் ரோட் எம்.ஜி.ரோடைச் சந்திக்கும் முனையருகில் இருக்கும் கே.சி. தாஸ் கடையில் ப்ழுப்பாகவே சிறிய, பெரிய் மண்குடுவைகளில் வேண்டிய அளவு கிடைக்கும். கே. சி. தாஸ் கொல்கத்தாவின் பாரம்பரியமிக்க இனிப்புத் தயாரிப்பாளர்கள்.


///…செயிண்ட் மார்க்ஸ் ரோட் எம்.ஜி.ரோடைச் சந்திக்கும் முனையருகில் இருக்கும் கே.சி. தாஸ் கடையில்…////
இங்கயும் இருக்கு…
இந்திரா நகர்ல அடையாறு ஆனந்தபவன் ஆபோசிட்ல கொஞ்சம் லெப்ட்.
ஒரு பெங்காலி கடை இருக்கும்….
அங்கேயும் இருக்கு…!!!
பெங்கால் நன்பர்கள்ட்ட கேட்டா சொல்வாங்களே ?


inthaanka recpie, veetlayae panni saapadlaam, periya paanaila 🙂
http://www.diwalicelebrations.net/diwali-recipe/mishti-doi.html
PS – Naan inimae thaan try panni paakanum . Mishtiyaa kashtiyaa nu


மிஷ்டி தோய் மாதிரி பதிவும் அருமையாக இனிக்கிறது.
//அத்தனையின் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் டயாபடீஸ் வந்துவிடும்போல. //
“நீரிழிவு வந்துவிடும் போல” என்று எழுதி இருக்கலாமே?
😦


அதெப்படி சாரே! எந்த சப்ஜக்ட் எழுதுனாலும் அப்படியே நம்மளை உள்ள இழுக்கறீங்க!!
reading your writings…its a great experience!!!


மிஷ்டி தோய்க்கு ஆப்போஸிட்டா எங்கிட்டு ஒரு பதிவிருக்கு


குமுதம் ரிப்போர்ட்டர் ‘உ’ தொடரில் ‘மிஷ்டி தோய்’ பற்றி படித்தேன். உங்களின் அனுபவம் படித்ததில் மேலும் ஆர்வம். கிடைத்தால் ருசித்து பார்க்க வேண்டும்.
ஒரு சந்தேகம் , இதனை மிஷ்டி தோய் என்கிறார்களா இல்லை மிஷ்டி டோய் என்கிறார்களா. ரெசிப்பி தேடினால் Mishti Doi என வருகிறது.


[…] வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார மிஷ்டிதோய்யைக் காட்டினார். “சாமி இதெல்லாம் […]


[…] எப்போதோ எழுதிய ஜொள் பதிவு இங்கே : https://nchokkan.wordpress.com/2008/12/29/mishti/ (சந்தடி சாக்கில் போஸ்டர் […]


[…] […]

1 | பினாத்தல் சுரேஷ்
December 29, 2008 at 6:06 pm
அந்தப் பழுப்பு நிறமும், மண் குடுவையும் அசட்டுத் தித்திப்பும் – மாதக்கணக்கில் இருந்திருக்கிறேன் கொல்கொத்தாவில் – என்னை ஈர்க்கவே இல்லை!