சாப்பிட முடியாத கேக்
Posted January 1, 2009
on:- In: Days | Life | Template | Time | Uncategorized
- 4 Comments
புது வருஷக் காலை, அப்பா வெளியே கிளம்பும்போது, ‘டெய்லி காலண்டரெல்லாம் வாங்கிட்டியா?’ என்று விசாரித்தார்.
’ம்ஹும், இல்லைப்பா’ என்றேன், ‘நீங்கதான் எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்களேன்’
‘சரி’ என்று கதவை நோக்கி நடந்தவர், ‘உனக்கு எத்தனை கேக்? ஒண்ணு போதுமா, ரெண்டு வேணும?’ என்றார்.
‘கேக்ல்லாம் வேணாம்பா, கலோரி ஜாஸ்தி’ என்றேன் நான், ‘புது வருஷம்ன்னா கேக் சாப்பிடணும்ன்னு என்ன சட்டமா?’
’இது சாப்பிடற கேக் இல்லைடா, காலண்டர் கேக்’
அப்படி ஒரு வார்த்தையை நான் அதுவரை கேள்விப்பட்டது கிடையாது. நான் திருதிருவென்று விழிக்க, அப்பா விளக்கினார்.
அதாகப்பட்டது, தினசரி காலண்டரின் கீழே ஒவ்வொரு நாளும் நாம் தாள்களைக் கிழித்துப் போடுகிறோமே, அந்தப் பகுதிக்குப் பெயர் ‘கேக்’, கடைக்காரர்கள் அதைச் சாமி படம் போட்ட அட்டையின்மீது வைத்து ஆணி அடித்தால் காலண்டர் விற்பனைக்கு ரெடி.
ஒவ்வொரு வருடமும் புதுப்புது காலண்டர்கள் வாங்குவதில் ஓர் அவஸ்தை, முந்தின வருட காலண்டர் அட்டைகளை என்ன செய்வது? சாமிப் படம் போட்ட அந்த அட்டைகளைக் குப்பையில் வீச மனம் இல்லாமல், அல்லது உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமோ என்கிற பயத்தில் வீடுமுழுக்க அட்டைகளை குப்பை சேர்த்துக்கொண்டிருக்கிறோம், தேவையா?
அதற்காகதான் கடந்த பல வருடங்களாக, அப்பா ‘கேக்’மட்டும்தான் வாங்குகிறார். முந்தின வருடத்தின் தேதிகள் அனைத்தும் தீர்ந்துபோனபிறகு, காலி அட்டையில் அபத்திரமாக நீட்டிக்கோண்டிருக்கும் ஐந்து சிறு ஆணிகளைப் பிடுங்கிவிட்டு, அங்கே 2009 ‘காலண்டர் கேக்’கை வைத்து அடித்துவிட்டால் போதும், அதே காலண்டர் அட்டையைப் பத்து, பதினைந்து வருடங்களுக்குக்கூடப் பயன்படுத்தலாம்.
இதில் இன்னொரு லாபம், முழு காலண்டர் வாங்கினால், அதன் விலை முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ, இந்தக் காலண்டர் கேக் வெறும் பத்து, பன்னிரண்டு ரூபாய்க்குக் கிடைக்கிறது.
இப்படி ஒரு மகா சிக்கனத் திட்டத்தை அப்பா அக்கறையோடு விவரிக்க, நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தக் கேக்கோபதேசத்தின் இறுதியில், எனக்கும் ஒரு ‘2009 கேக்’ வாங்கி அருள்வதாகச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றார் அப்பா.
சில மணி நேரங்களுக்குப்பிறகு அவர் வாங்கி வந்த ‘காலண்டர் கேக்’ பதிப்பகங்கள் வெளியிடும் மலிவு விலைத் திருக்குறள்போல் இருந்தது – கையடக்க சைஸ், வேகமாகப் புரட்டினால் கிழிந்துவிடும்போல் மக்கிப்போன தாள், ஆனால் பளிச் அச்சு, ஓரத்தில் சிவப்பு காலிகோ துணி பைண்டிங்.
ஒரு புத்தகம் படிப்பதுபோல் நான் அந்த கேக்கை ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். 365 நா(தா)ள்களும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் (டெம்ப்ளேட்) – நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், ஆங்கிலத் தேதி, தமிழ்த் தேதி, இஸ்லாமியத் தேதி, கிழமை, சூரிய உதயம், அஸ்தமனம், மேல்நோக்கு, கீழ்நோக்கு, உள்நோக்கு, வெளிநோக்கு, கர்ணம், கௌரி, குளிகை, சூலம், திதி, இன்னும் என்னென்னவோ, ஓரமாகக் கட்டம் கட்டி 12 ராசிகளுக்கும் குட்டி பொம்மைகளுடன் தினசரிப் பலன்கூடக் கொடுத்திருக்கிறார்கள் (மேஷம்: பக்தி, ரிஷபம்: அனுகூலம், மிதுனம்: மகிழ்ச்சி … இப்படி).
டெம்ப்ளேட் ஒன்றாக இருப்பினும், 365 நாள்களுக்குமான தகவல்கள் வெவ்வேறு, யார் இவற்றை உட்கார்ந்து தயாரிப்பார்கள், யார் பொறுமையாக புரூஃப் பார்ப்பார்கள், எழுத்துப் பிழையாக நல்ல நேரமும் கெட்ட நேரமும் மாறிப்போய்விட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?
பெரும்பாலும் எழுத்துகளும் எண்களுமாக நிறைந்திருக்கும் இந்தக் காலண்டர் புத்தகத்தில், ஆங்காங்கே பொம்மைகளும் உண்டு, பொங்கல் என்றால் இரண்டு மாடுகள், சூரியன், கும்பிடும் உழவர், அப்புறம் மே தினத்துக்கு அந்தப் பிரபலமான உழைப்பாளர் சிலை, காந்தி ஜெயந்திக்குச் சிரிக்கும் மகாத்மாவின் கோட்டோவியம் என்று எத்தனை வருடங்களானாலும் இந்தப் படங்கள் மாறுபடுவதில்லை.
இந்தக் காலண்டர் கேக்கைப் பார்த்ததும், நம்மை உடனடியாகக் கவர்வது, அதன் வானவில் வண்ணங்கள்தான். முதல் பக்கத்திலேயே பளபளா நிறங்கள், வழவழப்பு என்று மின்னுகிறது.
ஆனால், இதைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது, அந்த ஜனவரி 1ம் தேதிக்குப்பிறகு, எல்லாத் தாள்களும் கறுப்பு, வெள்ளையில்தான் இருக்கும். இதை நாம் நிஜ வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்துச் சலிப்படைந்தால் அதற்குக் காலண்டர் தயாரிப்பாளர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள்.
எந்தக் காலண்டர் கேக்கிலும் அதைத் தயாரித்த குழுவினரின் பெயர் இடம் பெறுவதில்லை, ’தினம் தினம் கிழித்துத் தீர்க்கப்படும் ஒரு புத்தகத்தில், நம்முடைய பெயர் இடம்பெற்று என்ன புண்ணியம்?’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அதேசமயம், அவர்களுடைய படைப்பு எண்ணற்ற மக்களின் தினசரி முதல் நடவடிக்கையாகவும், அன்றாட நடவடிக்கைகள், திட்டமிடுதலில், சிந்தனையில் உடனடி மாற்றங்களைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. பெரிய பெரிய எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால்கூடச் சாதிக்கமுடியாத விஷயம் இது.
***
என். சொக்கன் …
01 01 2009
4 Responses to "சாப்பிட முடியாத கேக்"

இங்கு கேக் கிடைக்காது………..முளு நாள்காட்டிதான்….
//சாமிப் படம் போட்ட அந்த அட்டைகளைக் குப்பையில் வீச மனம் இல்லாமல், அல்லது உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமோ என்கிற பயத்தில் வீடுமுழுக்க அட்டைகளை குப்பை சேர்த்துக்கொண்டிருக்கிறோம், தேவையா?//
இதுக்குதான் இந்த ஆண்டு நம்ப நமிதா படம் போட்ட நாள்காட்டியை தேடிகிட்டு இருக்கேன்……….ஆண்டு முளுவதும் குலு குலுன்னு இருக்க…


//அதேசமயம், அவர்களுடைய படைப்பு எண்ணற்ற மக்களின் தினசரி முதல் நடவடிக்கையாகவும், அன்றாட நடவடிக்கைகள், திட்டமிடுதலில், சிந்தனையில் உடனடி மாற்றங்களைத் தூண்டுவதாகவும் இருக்கிறது.//
Very true.
Nice post. Enjoyed reading every line…

1 | gchandra
January 1, 2009 at 7:55 pm
// ஆனால், இதைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது, அந்த ஜனவரி 1ம் தேதிக்குப்பிறகு, எல்லாத் தாள்களும் கறுப்பு, வெள்ளையில்தான் இருக்கும். இதை நாம் நிஜ வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்துச் சலிப்படைந்தால் அதற்குக் காலண்டர் தயாரிப்பாளர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள். //
என்ன ஒரு யதார்த்தம்.
ஜன 1ம் தேதி கனிவாக பேசி, கனிவாக பழகி மீத நாட்களில் குடுமிபிடி சண்டையே.. மிஞ்சுகிறது.