Archive for January 3rd, 2009
- In: Books | Fans | Memories | Pulp Fiction | Reading | Uncategorized
- 41 Comments
இரண்டு நாள்முன்னால் ‘மெகா டிவி’ என்ற தொலைக்காட்சியில் பட்டுக்கோட்டை பிரபாகரின் பேட்டி. அவரிடம் சமர்த்தாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பெண் தொகுப்பாளினி, திடுதிப்பென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், ‘உங்க கதை ஒன்றுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைச்சிருக்கே, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’
பட்டுக்கோட்டை பிரபாகர் பதறிப்போய்விட்டார், ’சாஹித்ய அகாதமி விருது இல்லைங்க, சாஹித்ய அகாதமி அமைப்பு நடத்துகிற மாதப் பத்திரிகையில் என்னுடைய கதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது கிடைச்சிருக்கு’
ஒரு பெரிய வரலாற்றுப் பிழை செய்துவிட்டோமே என்று அந்த அம்மணி பதறவில்லை, ‘சரி, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’ என்று அடுத்த கேள்விக்குப் போய்விட்டார்.
அந்த ஒரு சின்னத் தடங்கலைத் தவிர்த்துப் பார்த்தால், பட்டுக்கோட்டை பிரபாகரின் அன்றைய பேட்டி மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரே குறை, அவர் எழுதுவதைப்பற்றியே பேசாமல் திரும்பத் திரும்ப விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா என்றே ஓடிக்கொண்டிருந்ததுதான்.
கல்லூரிக் காலத்தில், நானெல்லாம் ‘பிகேபி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகரின் வெறித்தனமான ரசிகன். அவருடைய கண்ணாடி முகம் போட்ட துண்டு நோட்டீஸைக்கூட விட்டுவைக்காமல் வாங்கிப் படித்துப் பாதுகாத்துக்கொண்டிருந்தேன்.
இவையெல்லாம் தடிமன் அட்டை போட்ட கௌரவமான ‘லைப்ரரி எடிஷன்’கள் கிடையாது, கச்சாமுச்சாவென்று புகைப்படங்களை அள்ளித் தெறித்த ரேப்பர்களுடன் சாணித்தாள் மாத நாவல்கள்தான், ஆனால் அவற்றைப் படித்துவிட்டுத் தூக்கி எறிய மனம் வந்ததே இல்லை.
பலருக்குத் தெரியாத விஷயம், இந்தப் ‘பிசாத்து’ மாத நாவல்களில்தான் இப்போதைய பல பிரபலங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக்கொண்டிருந்தார்கள், உதாரணமாக, இன்றைய ‘நம்பர் 1’ ஓவியர் ஸ்யாம்தான் அன்றைக்குப் பெரும்பாலான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களுக்கு கோட்டோவியங்கள் வரைந்துகொண்டிருந்தார், அவற்றின் அட்டைப்படங்களுக்கு விதவிதமாக ’க்ரைம்’ புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியவர், இப்போது இந்தியாவின் மிகப் பெரிய ஒளிப்பதிவாளராகப் பெயர் வாங்கியிருக்கிற கே. வி. ஆனந்த், உள்ளே துண்டுத் துண்டுக் கவிதைகள் எழுதியவர்களில் ஒருவர், சென்ற ஆண்டு அதிகப் படங்களில் பாட்டெழுதி நிறைய பெயரும் புகழும் சம்பாதித்த நா. முத்துக்குமார்.
இப்படி ஏகப்பட்ட ‘வருங்கால’ வித்தகர்களெல்லாம் உருவாகிக்கொண்டிருந்த அந்த மாத நாவல்களில், நான் கவனித்தது பட்டுக்கோட்டை பிரபாகரைமட்டும்தான். அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயம், அதே கொலை, துப்பறிதல், சுபம் கதைகளில்கூட, ஏதாவது புதுசாக முயன்றுகொண்டிருப்பார், வர்ணனைகளில் புதுமை செய்வார், கதாநாயகியின் பனியன் வாசகங்களில் குறும்பு காட்டுவார், வெறும் வசனங்களிலேயே முழுக் கதையையும் எழுதுவார், நகைச்சுவை பொங்க மாத நாவல் எழுதுவார், இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். அதற்காகவே அவருடைய புத்தகங்களை மறுபதிப்பில்கூட விடாமல் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன்.
இன்னொரு காரணத்துக்காக, நான் ராஜேஷ்குமாரையும் விழுந்து விழுந்து படித்தேன். மேல்பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் அவருடைய நாவல்களில் இருக்கிற கட்டுமானம், அசாத்தியமானது. முதல் பக்கத்திலிருந்து கடைசி ‘முற்றும்’வரை சகலத்தையும் ஒன்றாகக் கோர்த்து முடிச்சுப் போடுவதற்கு எப்படிதான் திட்டமிட்டு உழைத்தாரோ என்று மலைப்பாக இருக்கும்.
சில சமயங்களில் அவருடைய பத்திரிகைத் தொடர்களைத் தொகுத்து ‘ஸ்பெஷல்’ பதிப்புகளாக வெளியிடுவார்கள். அவற்றின் ஒவ்வோர் அத்தியாயக் கடைசி வரிகளில் அவர் கொக்கி போடும் திருப்பங்கள் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யும்.
ராஜேஷ்குமார் இன்னொரு வேலையும் பிரமாதமாகச் செய்வார். 1, 3, 5, 7 வரிசை அத்தியாயங்களில் ஒரு கதை, 2, 4, 6, 8 வரிசையில் அதற்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு கதை என்று தொடர்ந்து, 26வது அத்தியாயத்தில் ஆறு மாதம் முடிந்து தொடருக்கு முற்றும் போடவேண்டிய நேரத்தில் இரண்டு கதைகளையும் பிசிறில்லாமல் இணைப்பார்.
இப்படி ராஜேஷ்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகருமாக நான் வாங்கிக் குவிக்க, படிப்பை முடித்து வேலைக்குச் சேரக் கிளம்பும்போது, என்னிடம் இரண்டு பெட்டிகள் நிறைய மாத நாவல்கள் சேர்ந்திருந்தன. அவற்றை என்ன செய்வது என்று புரியவில்லை, தூக்கி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, கையோடு கொண்டு சென்றால் அப்பா பெல்ட்டைக் கழற்றுவார்.
மனமே இல்லாமல், அவற்றை ஒரு பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டேன், பதிலுக்குக் காசு வாங்கிக்கொண்டேனா, அல்லது இல்லையா என்பதுகூட இப்போது ஞாபகம் இல்லை.
அதன்பிறகு, ஹைதராபாத் வாழ்க்கையில் தமிழ்ப் புத்தகம் படிப்பது அந்நியமாகிப்போனது. கொஞ்சம் கொஞ்சமாக மாத நாவல்களை மறந்தாகிவிட்டது.
இந்தப் பத்தாண்டுகளில் பட்டுக்கோட்டை பிரபாகரைவிடப் பலமடங்கு சிறப்பான கதைசொல்லிகள், இலக்கிய நேர்த்தியாளர்கள், கொஞ்சும் நடைக்காரர்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டார்கள். கதை என்பது வெறுமனே 65 (அல்லது 84, அல்லது 96, அல்லது 128) பக்கங்களை நிரப்புவதற்காக வார்த்தைகளை, சம்பவங்களை, திடுக்கிடும் திருப்பங்களைக் கொட்டுவது அல்ல, அதற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.
ஆனால் இப்போதும், பட்டுக்கோட்டை பிரபாகரின் பல கதைகள் எனக்கு மறக்கவில்லை. அவை உன்னத இலக்கியங்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய எழுத்து, கதை சொல்லும் பாணி இரண்டும் நீக்கமுடியாதபடி மனத்தில் பதிந்துவிட்டது.
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது சொன்னார், ‘தெரிந்தோ தெரியாமலோ Pulp Fiction படிக்காமல் வளர்ந்தவன், எந்த இலக்கியமும் படிக்க லாயக்கில்லை’
நிஜம்தானே?
***
என். சொக்கன் …
03 01 2009