எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு சாஹித்ய அகாதமி விருது
Posted January 3, 2009
on:- In: Books | Fans | Memories | Pulp Fiction | Reading | Uncategorized
- 41 Comments
இரண்டு நாள்முன்னால் ‘மெகா டிவி’ என்ற தொலைக்காட்சியில் பட்டுக்கோட்டை பிரபாகரின் பேட்டி. அவரிடம் சமர்த்தாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பெண் தொகுப்பாளினி, திடுதிப்பென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், ‘உங்க கதை ஒன்றுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைச்சிருக்கே, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’
பட்டுக்கோட்டை பிரபாகர் பதறிப்போய்விட்டார், ’சாஹித்ய அகாதமி விருது இல்லைங்க, சாஹித்ய அகாதமி அமைப்பு நடத்துகிற மாதப் பத்திரிகையில் என்னுடைய கதை ஒன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது கிடைச்சிருக்கு’
ஒரு பெரிய வரலாற்றுப் பிழை செய்துவிட்டோமே என்று அந்த அம்மணி பதறவில்லை, ‘சரி, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க’ என்று அடுத்த கேள்விக்குப் போய்விட்டார்.
அந்த ஒரு சின்னத் தடங்கலைத் தவிர்த்துப் பார்த்தால், பட்டுக்கோட்டை பிரபாகரின் அன்றைய பேட்டி மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரே குறை, அவர் எழுதுவதைப்பற்றியே பேசாமல் திரும்பத் திரும்ப விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா என்றே ஓடிக்கொண்டிருந்ததுதான்.
கல்லூரிக் காலத்தில், நானெல்லாம் ‘பிகேபி’ என்று செல்லமாக அழைக்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகரின் வெறித்தனமான ரசிகன். அவருடைய கண்ணாடி முகம் போட்ட துண்டு நோட்டீஸைக்கூட விட்டுவைக்காமல் வாங்கிப் படித்துப் பாதுகாத்துக்கொண்டிருந்தேன்.
இவையெல்லாம் தடிமன் அட்டை போட்ட கௌரவமான ‘லைப்ரரி எடிஷன்’கள் கிடையாது, கச்சாமுச்சாவென்று புகைப்படங்களை அள்ளித் தெறித்த ரேப்பர்களுடன் சாணித்தாள் மாத நாவல்கள்தான், ஆனால் அவற்றைப் படித்துவிட்டுத் தூக்கி எறிய மனம் வந்ததே இல்லை.
பலருக்குத் தெரியாத விஷயம், இந்தப் ‘பிசாத்து’ மாத நாவல்களில்தான் இப்போதைய பல பிரபலங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக்கொண்டிருந்தார்கள், உதாரணமாக, இன்றைய ‘நம்பர் 1’ ஓவியர் ஸ்யாம்தான் அன்றைக்குப் பெரும்பாலான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களுக்கு கோட்டோவியங்கள் வரைந்துகொண்டிருந்தார், அவற்றின் அட்டைப்படங்களுக்கு விதவிதமாக ’க்ரைம்’ புகைப்படங்கள் எடுத்துத் தள்ளியவர், இப்போது இந்தியாவின் மிகப் பெரிய ஒளிப்பதிவாளராகப் பெயர் வாங்கியிருக்கிற கே. வி. ஆனந்த், உள்ளே துண்டுத் துண்டுக் கவிதைகள் எழுதியவர்களில் ஒருவர், சென்ற ஆண்டு அதிகப் படங்களில் பாட்டெழுதி நிறைய பெயரும் புகழும் சம்பாதித்த நா. முத்துக்குமார்.
இப்படி ஏகப்பட்ட ‘வருங்கால’ வித்தகர்களெல்லாம் உருவாகிக்கொண்டிருந்த அந்த மாத நாவல்களில், நான் கவனித்தது பட்டுக்கோட்டை பிரபாகரைமட்டும்தான். அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்த விஷயம், அதே கொலை, துப்பறிதல், சுபம் கதைகளில்கூட, ஏதாவது புதுசாக முயன்றுகொண்டிருப்பார், வர்ணனைகளில் புதுமை செய்வார், கதாநாயகியின் பனியன் வாசகங்களில் குறும்பு காட்டுவார், வெறும் வசனங்களிலேயே முழுக் கதையையும் எழுதுவார், நகைச்சுவை பொங்க மாத நாவல் எழுதுவார், இப்படி ஏதாவது ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். அதற்காகவே அவருடைய புத்தகங்களை மறுபதிப்பில்கூட விடாமல் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன்.
இன்னொரு காரணத்துக்காக, நான் ராஜேஷ்குமாரையும் விழுந்து விழுந்து படித்தேன். மேல்பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் அவருடைய நாவல்களில் இருக்கிற கட்டுமானம், அசாத்தியமானது. முதல் பக்கத்திலிருந்து கடைசி ‘முற்றும்’வரை சகலத்தையும் ஒன்றாகக் கோர்த்து முடிச்சுப் போடுவதற்கு எப்படிதான் திட்டமிட்டு உழைத்தாரோ என்று மலைப்பாக இருக்கும்.
சில சமயங்களில் அவருடைய பத்திரிகைத் தொடர்களைத் தொகுத்து ‘ஸ்பெஷல்’ பதிப்புகளாக வெளியிடுவார்கள். அவற்றின் ஒவ்வோர் அத்தியாயக் கடைசி வரிகளில் அவர் கொக்கி போடும் திருப்பங்கள் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கச் செய்யும்.
ராஜேஷ்குமார் இன்னொரு வேலையும் பிரமாதமாகச் செய்வார். 1, 3, 5, 7 வரிசை அத்தியாயங்களில் ஒரு கதை, 2, 4, 6, 8 வரிசையில் அதற்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு கதை என்று தொடர்ந்து, 26வது அத்தியாயத்தில் ஆறு மாதம் முடிந்து தொடருக்கு முற்றும் போடவேண்டிய நேரத்தில் இரண்டு கதைகளையும் பிசிறில்லாமல் இணைப்பார்.
இப்படி ராஜேஷ்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகருமாக நான் வாங்கிக் குவிக்க, படிப்பை முடித்து வேலைக்குச் சேரக் கிளம்பும்போது, என்னிடம் இரண்டு பெட்டிகள் நிறைய மாத நாவல்கள் சேர்ந்திருந்தன. அவற்றை என்ன செய்வது என்று புரியவில்லை, தூக்கி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, கையோடு கொண்டு சென்றால் அப்பா பெல்ட்டைக் கழற்றுவார்.
மனமே இல்லாமல், அவற்றை ஒரு பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டேன், பதிலுக்குக் காசு வாங்கிக்கொண்டேனா, அல்லது இல்லையா என்பதுகூட இப்போது ஞாபகம் இல்லை.
அதன்பிறகு, ஹைதராபாத் வாழ்க்கையில் தமிழ்ப் புத்தகம் படிப்பது அந்நியமாகிப்போனது. கொஞ்சம் கொஞ்சமாக மாத நாவல்களை மறந்தாகிவிட்டது.
இந்தப் பத்தாண்டுகளில் பட்டுக்கோட்டை பிரபாகரைவிடப் பலமடங்கு சிறப்பான கதைசொல்லிகள், இலக்கிய நேர்த்தியாளர்கள், கொஞ்சும் நடைக்காரர்கள் எனக்கு அறிமுகமாகிவிட்டார்கள். கதை என்பது வெறுமனே 65 (அல்லது 84, அல்லது 96, அல்லது 128) பக்கங்களை நிரப்புவதற்காக வார்த்தைகளை, சம்பவங்களை, திடுக்கிடும் திருப்பங்களைக் கொட்டுவது அல்ல, அதற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.
ஆனால் இப்போதும், பட்டுக்கோட்டை பிரபாகரின் பல கதைகள் எனக்கு மறக்கவில்லை. அவை உன்னத இலக்கியங்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய எழுத்து, கதை சொல்லும் பாணி இரண்டும் நீக்கமுடியாதபடி மனத்தில் பதிந்துவிட்டது.
சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது சொன்னார், ‘தெரிந்தோ தெரியாமலோ Pulp Fiction படிக்காமல் வளர்ந்தவன், எந்த இலக்கியமும் படிக்க லாயக்கில்லை’
நிஜம்தானே?
***
என். சொக்கன் …
03 01 2009
41 Responses to "எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு சாஹித்ய அகாதமி விருது"

//கதை என்பது வெறுமனே 65 (அல்லது 84, அல்லது 96, அல்லது 128) பக்கங்களை நிரப்புவதற்காக வார்த்தைகளை, சம்பவங்களை, திடுக்கிடும் திருப்பங்களைக் கொட்டுவது அல்ல, அதற்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.//
அருமையான கருத்து.


தலைப்பு பார்த்ததும் பயந்தே போய்விட்டேன்.
பட்டுக்கோட்டை பிரபாகர் மிகுந்த நம்பிக்கை ஊட்டிய எழுத்தாளர். அவர் பெரிய அளவில் பேசப்படாததற்குக் காரணம் விஷுவல் மீடியாவாக இருக்கலாமோ?
அவர் வர்ணனைகளும் நன்றாக இருக்கும்.


You took me to my old college days!
I used to collect those Crime novels, second hand at Re 1/- from Kottai medu.
Similar incidences in each one’s life!


“THIRU P.K.B.” IS ONE OF THE WRITER, WHO HAS REALLY CHANGED THE SHORT STORY/NOVEL VERSION AMONG TAMIL STORY WRITERS….ALSO ONE OF MY FAVORITES…..HE HAS WRITTEN SEVERAL SHORT NOVELS, ADOPTING CLEAR STORY TELLING STYLE…COMPARED TO OTHER WRITERS IN THE SAME TIME(EXCEPTIONS ARE ALWAYS THERE)….HOWEVER, DIALOGUES, SPEED OF THE STORY, INCLUDES THE TECHNOLOGICAL ADVANCEMENTS, TWISTS IN THE PROPER PLACES & WHAT NOT….”THIRU P.K.B.” IS SIMPLY SUPERB…GOOD ARTICLE…


pkp அதிக நேரம் எழுத ஒதுக்காதது சோகமே.
நீங்கள் சுபா வை விட்டு விட்டீர்கள்,
சுபா வும் வர்ணனைகளால் அழகாக தோரணம் கட்டுவார்கள், ஒவ்வொரு கதையும் வித்தியாசமான தளத்தில் இருக்கும்.


//அவை உன்னத இலக்கியங்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய எழுத்து, கதை சொல்லும் பாணி இரண்டும் நீக்கமுடியாதபடி மனத்தில் பதிந்துவிட்டது.//
இது தான் என் நிலைப்பாடும்.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஏதோ பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்று வெளியிடவிருப்பதாக அண்மையில் செய்தி வந்ததே.


பட்டுக்கோட்டை பிரபாகருக்கு இன்னும் சாகித்ய அகாதமி விருது தரப்படாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


இல்லை… ஆனால், அவர் எழுதிய ‘ நில்லுங்கள் ராஜாவே’ மறுபிரசுரமாக பாக்கட் நாவல் வடிவில் வந்தது.
ஆமா, இந்த பிரசன்னாவெயல்லாம் ஏன் உள்ள சேக்கறீங்க ? 🙂


//தவிர, சுபாவின் கதைகள் பல ஆங்கில நாவல்களின் அப்பட்டமான காபி என்று என் கல்லூரி நண்பர்கள் சொல்லக் கேள்வி, நான் சாட்சி பார்த்தது இல்லை!//
எனக்கென்னவோ இது அதிகப்படியாக தோன்றுகிறது.
சுபா, இந்திரா சௌந்திரராஜன், பி.கே.பி, ராஜேஸ்குமார் எழுத்துக்களை 20 வருடங்களாக வாசித்து வருகிறேன்.
எனக்கு தெரிந்து ஆங்கில நாவல்களின் காப்பி உள்ளது போல் தெரியவில்லை
இப்படி பொத்தாம் பொதுவாக கூறுவதற்கு பதில்
இந்த ஆங்கில நாவல் – இந்த தமிழ் நாவல் என்று ஒரு 5 உதாரணங்களை அடுக்கினால் நலம்
எனக்கு தெரிந்து ஆங்கில நாவல்களில் இருந்து அதிகம் காப்பி அடித்த தமிழ் எழுத்தாளர் யாரென்று கூறினால் ஐகாரஸ் பிரகாஷ் கோபித்துக்கொள்வார் 🙂 🙂


இந்திரா சௌந்திரராஜன் ஒரு இருபது வருடம் கழித்து எழுதியிருந்தார் அவரை ரௌலிங்கின் காப்பி என்று கூறியிருப்பார்கள்


// ச்சே, இதையெல்லாம் பரிசோதிக்க ஒரு ரெஃபரன்ஸுக்குக்கூட எங்கயும் போய் நிக்கமுடியாது 😦 //
ஏன் இதை இன்னும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.. இது வரை வந்திருக்கும் மாத, பாக்கெட் நாவல்களில் சற்றேரக்குறைய முழுமையான தரவுதளம் ஏற்படுத்த முடியாதா? இப்போது இல்லாவிட்டாலும், பின்னாளில் திரும்பிப்பார்க்கும் போது நிச்சயம் ரொம்ப நல்லா இருக்குமே.
போன தடவை ஊருக்குப் போயிருந்த போது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிறுத்த பிளாட்பாரத்தில் மாதநாவல் ஒன்று வாங்கினேன்.. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நான் வாங்கியது, ‘ஒரு புளியமரத்தின் கதை’ . நீண்ட நாட்களாக நான் வாங்கவேண்டி காத்திருந்த நூல், இப்படி மாதநாவலாக 10 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.


//சுபா காப்பி அடித்தார் என்று யாரோ சொன்னதை நிச்சயமில்லாத தகவலாகவே இங்கு எழுதினேன், என்னிடம் உதாரணங்கள் இல்லை //
சுபா நாவல்களின் பின்னால் அவர்களின் அபார உழைப்பு தெரியும்.
அவர்களும், பி.கே.பியும் சேர்ந்து நடத்தில் பாக்கெட் நாவலில் அவர்கள் புகுத்திய உத்திகள் பல
சில componentsகளில் வெகுஜன பத்திரிகைகளை விட அவர்கள் முன்னால் நின்றனர் என்று கூட சொல்லலாம்


//மற்றபடி நீங்கள் சொல்லும் ’இன்னோர்’ எழுத்தாளரைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் //
“இன்னோர்”, இன்னார் என்று பூடகமாகவாது சொல்லுமய்யா!
//பேருந்து நிறுத்த பிளாட்பாரத்தில் மாதநாவல் ஒன்று வாங்கினேன்.. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நான் வாங்கியது, ‘ஒரு புளியமரத்தின் கதை’ //
இதற்கு பெயர், ஆங்கிலத்தில், incredible coincidence.
இங்கு வந்து பாருங்கள் ராஜாவே: http://www.sathyamurthy.com/2005/11/21/incredible-coincidence/


வர்ணனைகள் PKPயின் வலிமைகளுள் ஒன்று என்றாலும், புதிய முயற்சியாக ‘தா’ ‘மறுபடி தா’ என்ற இரண்டு நீள்கதைகளை வெறும் உரையாடல்களிலேயே நகர்த்திச்சென்றிருந்தார். நினைவு இருக்கிறது, “இது வானொலி நாடகத்தின் தம்பி” என்ற குறிப்புடன்.
பிளாக்மெயில் என்பதையே ரா.கு திரும்பத் திரும்ப அரைத்துத்தர, அவர் எழுத்து அலுத்த அளவுக்கு பிகேபி அலுக்கவில்லை, கிடைத்தவரை.
சுபா கொஞ்சம் ஓவர்(டோஸ்) என்பது சரியே.
உல்லாச ஊஞ்சல், உங்கள் ஜூனியர், பாக்கெட்நாவல் (பொதுவாகவும், மறுபதிப்புகளுக்காகவும்), கிரைம் நாவல் (ரா.கு), என்று ஒவ்வொரு எழுத்தாளரையும் ஜீ.ஏ பயன்படுத்திக்கொண்டார்.
‘தொட்டால் தொடரும்’ போன்ற சமூக நாவல்களையும் பிறகு பிகேபி செய்துபார்த்திருக்கிறார், சுய திருத்த முயற்சியாக.


தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்


//16 | என். சொக்கன்
ஜனவரி 6, 2009 இல் 10:11 பிற்பகல்
prakash,
தகவலுக்கு நன்றி, நானும் அந்த ‘நில்லுங்கள் ராஜாவே’வைதான் பார்த்த ஞாபகம் …
ச்சே, இதையெல்லாம் பரிசோதிக்க ஒரு ரெஃபரன்ஸுக்குக்கூட எங்கயும் போய் நிக்கமுடியாது //
நில்லுங்கள் ராஜாவே வந்தது பாக்கெட் நாவலில் அல்ல. அது சுஜாதா மற்றும் சத்யா என்ற மாத நாவல்களை வெளியிட்ட குழுமத்தினரின் சுஜாதா மாத நாவலில் 1992 ஆம் ஆண்டு வந்தது.
//17 | புருனோ
ஜனவரி 7, 2009 இல் 3:58 மு.பகல்
//தவிர, சுபாவின் கதைகள் பல ஆங்கில நாவல்களின் அப்பட்டமான காபி என்று என் கல்லூரி நண்பர்கள் சொல்லக் கேள்வி, நான் சாட்சி பார்த்தது இல்லை!//
எனக்கென்னவோ இது அதிகப்படியாக தோன்றுகிறது//
புருனோ, ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த ஸ்லீப்பிங் வித் தி எனிமி படத்தை சுபா தழுவி ஒரு நாவலாக எழுதி 1992ஆம் ஆண்டு சஸ்பென்ஸ் மாத நாவலில் வெளியிட்டார். (Editor – Prabhu Ram Kumar)
//24 | என். சொக்கன்
ஜனவரி 7, 2009 இல் 4:21 பிற்பகல்
புரூனோ,
சுபா, பிகேபி இணைந்து நடத்திய இதழின் பெயர் ’உல்லாச ஊஞ்சல்’ என்று ஞாபகம்!//
இருவரும் இனைந்து தொடங்கிய மாத நாவலின் பெயர் உங்கள் ஜூனியர். எண்பதுகளின் மத்தியில் (1986) ஆரம்பிக்கப் பட்டது. முதல் பத்து மாதங்களுக்கு ஆத்மா என்ற பெயரில் இவர்கள் நடத்தி வந்து பின்னரே “ஆத்மா நாங்கள் தான்” என்று அறிவித்தனர். உல்லாச ஊஞ்சல் பிரபாகர் துவக்கிய தனி நாவல்.


[…] தொடர்புடைய சுட்டிகள்: சொக்கனின் பதிவு […]


[…] […]


என்னைப்பொறுத்த வரை பிகேபி ஒரு நல்ல எழுத்தாளர்..எனக்கு அவரின் நாவல்கள் பிடிக்கும்.


பி.கே.பி எனக்கு மிகவும் பிடித்தவர். என் சிறுவயதில், சமூக நாவல் (அவர் எழுதிய சில)களில், இருக்கும் வாத/விவாதங்கள் இன்றும் படிக்க நன்றாக இருக்கும். இலக்கிய எழுத்தாளர்களைத் தவிர்த்து, இன்றும் ஜனரஞ்சக எழுத்தாளர்களில், வித்தியாசங்களை அறிமுகப்படுத்திய விதத்தில் பி.கே.பி பெஸ்ட்.


n0 one can beat rajeshkumar


No body has talked about Tamilvanan’s novels. He was my first favourite detective writer.


After Sujatha, I enjoyed reading PKP. However, Thamilvanan was my first – I agree with Kumar.
தமிழ்வாணன் தேநீர் மட்டுமே அருந்துவார்!
அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள்:
“100 வயது வரை வாழ்வது எப்படி?”
“மாரடைப்பிலிருந்து தப்புவது எப்படி?”
அவரோ, 50 வயதில் மாரடைப்பால் காலமானார்!
PKP யின் வர்ணனை:
“சோம்பேறிகளை 3 விதமாகப் பிரிக்கலாம்: சோம்பேறி, அதிசோம்பேறி, சுதாகர்”…

1 | bsubra
January 3, 2009 at 3:22 am
Absolutely true.