Archive for January 12th, 2009
மலே மலே மலே … மலேசியா
Posted January 12, 2009
on:- In: Flight Journey | Malaysia | Travel | Uncategorized
- 32 Comments
’கேட் மூடியாச்சா?’
‘ஓ, யெஸ்’
‘ரொம்ப சந்தோஷம்’ என்றவர் சட்டென எழுந்துகொண்டார், பின்வரிசையில் காலியாக இருந்த நான்கு நாற்காலிகளைத் துண்டு போட்டு ரிஸர்வ் செய்து வைத்தார், பள்ளப்பட்டி டவுன் பஸ் கணக்காக.
பெங்களூரிலிருந்து கோலாலம்பூர் வரும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுத்தமாகக் கூட்டம் இல்லை. அநேகமாக ஆறு இருக்கைகளில் ஒருவர் என்கிற விகிதத்தில்தான் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.
இதனால், பெரும்பாலானோர் (நான் இல்லை) ரயில்வே பர்த்போல நீண்டு படுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டு சௌக்கியமாகப் பயணம் செய்தார்கள். அந்த சுகத்தை முழுசாக அனுபவிக்கவிடாமல், கண் மூடித் திறப்பதற்குள் மலேசியா வந்துவிட்டது.
அந்தச் சொற்ப தூரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை, சிறிது நேரம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படித்தேன், அதன்பிறகு, விட்டத்திலிருந்து தொங்கும் தொலைக்காட்சியில் வண்ணமயமான மலேசியச் சுற்றுலா விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.
விமானத்தின் ’பொழுதுபோக்கு அட்டவணை’ப் புத்தகத்தைப் புரட்டியபோது, மூன்று நாள் தாடி பரத் புகைப்படத்துடன் ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ இடம்பெற்றிருந்தது. ஆனால் நிஜத்தில் ஏதோ ஒரு டாகுமென்டரி படத்தை ஒளிபரப்பி போரடித்தார்கள்.
சரி, ஜன்னலுக்கு வெளியே ஏதாவது தெரிகிறதா என்று வேடிக்கை பார்க்கலாம் என்றால், கும்மிருட்டு. வெளிநாட்டு விமானங்களெல்லாம் ராத்திரி நேரத்தில்தான் பறக்கவேண்டும் என்று விதிமுறை போட்டவனை உதைக்கவேண்டும்.
இப்படியாக நான் அலுத்துச் சலித்துக் களைத்த நேரத்தில் கொஞ்சம்போல் தூக்கம் வந்தது. கண்ணை மூடிக் கனவு காண ஆரம்பித்த மறுவிநாடி, விளக்குகளை எரியவிட்டு வரவேற்பு விளம்பரம் போட ஆரம்பித்தார்கள்.
கண்கள் எரிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினோம். அரசாங்க முத்திரை குத்திக்கொண்டு பெட்டி சகிதம் வெளியே வந்தபோது டாக்ஸி காத்திருந்தது.
ஆறு வருடங்களுக்குமுன்னால் பார்த்த கோலாலம்பூர் விமான நிலையம், அதனைப் பிரதான நகரத்துடன் இணைக்கும் சாலை எதுவும் அதற்கப்புறம் அதிகம் மாறியிருப்பதாகத் தெரியவில்லை. அப்போது பார்த்த அதே மோஸ்தரில்தான் இப்போதும் இருக்கிறது.
இந்தமுறை எங்களுக்கு வேலை கோலாலம்பூர் (இதை ஏன் ஆங்கிலத்தில் ‘கோலா லம்பூர்’ என்று பிரித்து எழுதுகிறார்கள்?) மைய நகரத்தில். நான்கு பேர் கக்கத்தில் ஆளுக்கொரு மடிக்கணினியுடன் கிளம்பி வந்திருக்கிறோம். இந்த வாரம்முழுக்க இங்கேதான் வாசம்.
இப்படி ஒரு பயணம் வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும், ஆனால் மிகச் சரியாக இந்த வாரத்தில் வரும் என்பது தெரியாது. இதனால் சென்னை புத்தகத் திருவிழாவுக்குச் செல்ல இருந்த திட்டம் பாழ், இந்த வருடப் பொங்கல் எனக்கு மலேசியாவில்தான் என்று இறைவன் எழுதிவைத்துவிட்டான், என்ன செய்ய?
கோலாலம்பூர் நகரக் கட்டடங்கள் மூன்று வகை. பெரியவை, மிகப் பெரியவை, பிரம்மாண்டமானவை. நடுநடுவே எப்போதாவது தென்படும் ஒற்றை மாடி, இரட்டை மாடிக் கட்டடங்களை மக்கள் புழுவைப்போல் பார்க்கிறார்கள்.
2002ல் கோலாலம்பூர் வந்தபோது, புகழ் பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்க்கவேண்டும் என்று யார் யாரையோ விசாரித்துப் பல் உடைந்தேன். கடைசியில் ஒரு நண்பர் தன்னுடைய குடும்பத்துடன் என்னையும் காரில் போட்டுக்கொண்டு அழைத்துவந்து சுற்றிக்காட்டினார்.
இந்தமுறை அந்த அவஸ்தையே இல்லாமல், இரட்டைக் கோபுரங்களுக்கு இடது பக்கம் இருக்கும் அலுவலகத்தில் வேலை, வலதுபக்கம் இருக்கும் ஒரு விடுதியில் தங்குதல். ஜன்னலைத் திறந்தாலே திகட்டத் திகட்ட இரட்டைக் கோபுர தரிசனம்தான்.
இரட்டைக் கோபுரத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கட்டங்களும், அதைப்பார்த்துக் காப்பியடித்ததுபோல் கண்ணாடி, உலோகக் கலவையில் அசத்துகின்றன. அதற்குப் பக்கத்தில் ஓர் அழகிய நீரூற்று, பச்சைப்பசேல் பூங்கா.
நீரூற்றின் கரையிலும் சரி, பூங்காவின் புல்தரைகளிலும் சரி, மக்கள் ஜோடியாக நின்றபடி எதிராளியைக் தரைக் கீழ் கோணத்திலிருந்து புகைப்படம் எடுத்துத் தரச் சொல்கிறார்கள், ‘பின்னாடி ட்வின் டவர்ஸ் முழுஸ்ஸா வர்றமாதிரி பாத்துக்கோங்க சார்’
எங்களுடைய விடுதிக்கும் ட்வின் டவர்ஸுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம்தான். அந்தச் சொற்ப தொலைவை நடக்கமுடியாதவர்களுக்காக ஒரு பேட்டரி கார் (பெரும்பாலும் காலியாக) அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது. கோட், சூட் சகிதம் நான்கு நான்கு நிமிடப் பயணங்களாக அந்த வண்டியை நாள்முழுக்க ஓட்டுகிற மலேசிய இளைஞரின் பொறுமையை வியக்கிறேன்.
மலேசியக் கட்டடங்களில் கண்ணாடி, உலோகத்துக்கு அடுத்தபடியாக நிறையக் கண்ணில் படுவது சாப்பாட்டுக் கடைகள். ‘ஃபுட் கோர்ட்’ என்று நாகரிகமாகப் பெயர் வைத்து சில ஆயிரம் சதுர அடி பரப்பில் சாதம், சப்பாத்தி, பிட்ஸா, பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் சகல வாடைகளும் கலந்தடித்துக் குழப்புகிறது.
இங்குள்ள மக்களுக்குப் பொரித்த பண்டங்கள் மிகவும் பிடிக்கும்போல, எண்ணைப் பலகாரங்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து விளம்பரப்படுத்தாத கடைகளே இல்லை.
ஆங்காங்கே தென்படும் இந்தியக் கடைகளை ஆசையாகப் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறோம். ஒரு வாஷ் பேசினுக்குமேலே, ‘Eight Steps For Hand Wash’ என்று ஓவியங்களுடன் அக்கறையாக ஒரு செய்முறை விளக்கம் எழுதி ஒட்டியிருக்கிறார்கள், எதற்கு?
விமானத்தில் தூங்காதது இப்போது கண்ணைச் சுழற்றுகிறது, அவசரமாக இன்றைய வேலையை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பிவிட்டோம். ஜன்னல்வழியே மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது, இதோ, ’Publish’ பொத்தானை அழுத்திவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!
***
என். சொக்கன் …
12 01 2009