மனம் போன போக்கில்

மலே மலே மலே … மலேசியா

Posted on: January 12, 2009

’கேட் மூடியாச்சா?’

‘ஓ, யெஸ்’

‘ரொம்ப சந்தோஷம்’ என்றவர் சட்டென எழுந்துகொண்டார், பின்வரிசையில் காலியாக இருந்த நான்கு நாற்காலிகளைத் துண்டு போட்டு ரிஸர்வ் செய்து வைத்தார், பள்ளப்பட்டி டவுன் பஸ் கணக்காக.

பெங்களூரிலிருந்து கோலாலம்பூர் வரும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுத்தமாகக் கூட்டம் இல்லை. அநேகமாக ஆறு இருக்கைகளில் ஒருவர் என்கிற விகிதத்தில்தான் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள்.

இதனால், பெரும்பாலானோர் (நான் இல்லை) ரயில்வே பர்த்போல நீண்டு படுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டு சௌக்கியமாகப் பயணம் செய்தார்கள். அந்த சுகத்தை முழுசாக அனுபவிக்கவிடாமல், கண் மூடித் திறப்பதற்குள் மலேசியா வந்துவிட்டது.

அந்தச் சொற்ப தூரமும் எனக்குத் தூக்கம் வரவில்லை, சிறிது நேரம் சென்ற நூற்றாண்டுத் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றைப் படித்தேன், அதன்பிறகு, விட்டத்திலிருந்து தொங்கும் தொலைக்காட்சியில் வண்ணமயமான மலேசியச் சுற்றுலா விளம்பரங்களை ஒளிபரப்பத் தொடங்கினார்கள்.

விமானத்தின் ’பொழுதுபோக்கு அட்டவணை’ப் புத்தகத்தைப் புரட்டியபோது, மூன்று நாள் தாடி பரத் புகைப்படத்துடன் ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ இடம்பெற்றிருந்தது. ஆனால் நிஜத்தில் ஏதோ ஒரு டாகுமென்டரி படத்தை ஒளிபரப்பி போரடித்தார்கள்.

சரி, ஜன்னலுக்கு வெளியே ஏதாவது தெரிகிறதா என்று வேடிக்கை பார்க்கலாம் என்றால், கும்மிருட்டு. வெளிநாட்டு விமானங்களெல்லாம் ராத்திரி நேரத்தில்தான் பறக்கவேண்டும் என்று விதிமுறை போட்டவனை உதைக்கவேண்டும்.

இப்படியாக நான் அலுத்துச் சலித்துக் களைத்த நேரத்தில் கொஞ்சம்போல் தூக்கம் வந்தது. கண்ணை மூடிக் கனவு காண ஆரம்பித்த மறுவிநாடி, விளக்குகளை எரியவிட்டு வரவேற்பு விளம்பரம் போட ஆரம்பித்தார்கள்.

கண்கள் எரிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கினோம்.  அரசாங்க முத்திரை குத்திக்கொண்டு பெட்டி சகிதம் வெளியே வந்தபோது டாக்ஸி காத்திருந்தது.

ஆறு வருடங்களுக்குமுன்னால் பார்த்த கோலாலம்பூர் விமான நிலையம், அதனைப் பிரதான நகரத்துடன் இணைக்கும் சாலை எதுவும் அதற்கப்புறம் அதிகம் மாறியிருப்பதாகத் தெரியவில்லை. அப்போது பார்த்த அதே மோஸ்தரில்தான் இப்போதும் இருக்கிறது.

இந்தமுறை எங்களுக்கு வேலை கோலாலம்பூர் (இதை ஏன் ஆங்கிலத்தில் ‘கோலா லம்பூர்’ என்று பிரித்து எழுதுகிறார்கள்?) மைய நகரத்தில். நான்கு பேர் கக்கத்தில் ஆளுக்கொரு மடிக்கணினியுடன் கிளம்பி வந்திருக்கிறோம். இந்த வாரம்முழுக்க இங்கேதான் வாசம்.

இப்படி ஒரு பயணம் வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும், ஆனால் மிகச் சரியாக இந்த வாரத்தில் வரும் என்பது தெரியாது. இதனால் சென்னை புத்தகத் திருவிழாவுக்குச் செல்ல இருந்த திட்டம் பாழ், இந்த வருடப் பொங்கல் எனக்கு மலேசியாவில்தான் என்று இறைவன் எழுதிவைத்துவிட்டான், என்ன செய்ய?

கோலாலம்பூர் நகரக் கட்டடங்கள் மூன்று வகை. பெரியவை, மிகப் பெரியவை, பிரம்மாண்டமானவை. நடுநடுவே எப்போதாவது தென்படும் ஒற்றை மாடி, இரட்டை மாடிக் கட்டடங்களை மக்கள் புழுவைப்போல் பார்க்கிறார்கள்.

2002ல் கோலாலம்பூர் வந்தபோது, புகழ் பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களைப் பார்க்கவேண்டும் என்று யார் யாரையோ விசாரித்துப் பல் உடைந்தேன். கடைசியில் ஒரு நண்பர் தன்னுடைய குடும்பத்துடன் என்னையும் காரில் போட்டுக்கொண்டு அழைத்துவந்து சுற்றிக்காட்டினார்.

இந்தமுறை அந்த அவஸ்தையே இல்லாமல், இரட்டைக் கோபுரங்களுக்கு இடது பக்கம் இருக்கும் அலுவலகத்தில் வேலை, வலதுபக்கம் இருக்கும் ஒரு விடுதியில் தங்குதல். ஜன்னலைத் திறந்தாலே திகட்டத் திகட்ட இரட்டைக் கோபுர தரிசனம்தான்.

இரட்டைக் கோபுரத்தைச் சுற்றியிருக்கும் மற்ற கட்டங்களும், அதைப்பார்த்துக் காப்பியடித்ததுபோல் கண்ணாடி, உலோகக் கலவையில் அசத்துகின்றன. அதற்குப் பக்கத்தில் ஓர் அழகிய நீரூற்று, பச்சைப்பசேல் பூங்கா.

நீரூற்றின் கரையிலும் சரி, பூங்காவின் புல்தரைகளிலும் சரி, மக்கள் ஜோடியாக நின்றபடி எதிராளியைக் தரைக் கீழ் கோணத்திலிருந்து புகைப்படம் எடுத்துத் தரச் சொல்கிறார்கள், ‘பின்னாடி ட்வின் டவர்ஸ் முழுஸ்ஸா வர்றமாதிரி பாத்துக்கோங்க சார்’

எங்களுடைய விடுதிக்கும் ட்வின் டவர்ஸுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம்தான். அந்தச் சொற்ப தொலைவை நடக்கமுடியாதவர்களுக்காக ஒரு பேட்டரி கார் (பெரும்பாலும் காலியாக) அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது. கோட், சூட் சகிதம் நான்கு நான்கு நிமிடப் பயணங்களாக அந்த வண்டியை நாள்முழுக்க ஓட்டுகிற மலேசிய இளைஞரின் பொறுமையை வியக்கிறேன்.

மலேசியக் கட்டடங்களில் கண்ணாடி, உலோகத்துக்கு அடுத்தபடியாக நிறையக் கண்ணில் படுவது சாப்பாட்டுக் கடைகள். ‘ஃபுட் கோர்ட்’ என்று நாகரிகமாகப் பெயர் வைத்து சில ஆயிரம் சதுர அடி பரப்பில் சாதம், சப்பாத்தி, பிட்ஸா, பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் சகல வாடைகளும் கலந்தடித்துக் குழப்புகிறது.

இங்குள்ள மக்களுக்குப் பொரித்த பண்டங்கள் மிகவும் பிடிக்கும்போல, எண்ணைப் பலகாரங்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து விளம்பரப்படுத்தாத கடைகளே இல்லை.

ஆங்காங்கே தென்படும் இந்தியக் கடைகளை ஆசையாகப் பார்த்தபடி தொடர்ந்து நடக்கிறோம். ஒரு வாஷ் பேசினுக்குமேலே, ‘Eight Steps For Hand Wash’ என்று ஓவியங்களுடன் அக்கறையாக ஒரு செய்முறை விளக்கம் எழுதி ஒட்டியிருக்கிறார்கள், எதற்கு?

விமானத்தில் தூங்காதது இப்போது கண்ணைச் சுழற்றுகிறது, அவசரமாக இன்றைய வேலையை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்பிவிட்டோம். ஜன்னல்வழியே மழை அடித்துப் பெய்துகொண்டிருக்கிறது, இதோ, ’Publish’ பொத்தானை அழுத்திவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …

12 01 2009

Advertisements

32 Responses to "மலே மலே மலே … மலேசியா"

புத்ரஜெயா கண்டிப்பா பாருங்க, காஜாங் சென்று குச்சியில் குத்தியிருக்கும் கடலைமா தோய்த்த சிக்கனை ருசியுங்கள்,
லிட்டில் இண்டியா போனா ராஜாவின் ஆதியோடந்தமா இருக்கும் எம்பி3 வாங்கலாம்.

வணக்கம்.. வாழ்த்துக்கள்..

உங்க பதிவு படித்ததும் நிறைய விளக்கணும் போல இருக்கே…

//ஆறு வருடங்களுக்குமுன்னால் பார்த்த கோலாலம்பூர் விமான நிலையம், அதனைப் பிரதான நகரத்துடன் இணைக்கும் சாலை எதுவும் அதற்கப்புறம் அதிகம் மாறியிருப்பதாகத் தெரியவில்லை.//

ஆறு வருடத்துக்கு முன் நீங்கள் வந்து இறங்கிய KLIA இப்போது நிறைய மாற்றங்களுடன் இருக்குமே? பயணிகள் அதிகரிப்பினால் LCCT கட்டப்பட்டுள்ளதே..

//கோலாலம்பூர் (இதை ஏன் ஆங்கிலத்தில் ‘கோலா லம்பூர்’ என்று பிரித்து எழுதுகிறார்கள்?) //

Kuala Lumpur என பிரித்து எழுதுப்படுவதில் காரணம் இருக்கிறது.. Kuala என்றால் இரண்டு நதிகளை இணைப்பது (confluence).. Lumpur என்றால் சேறு (Muddy).. கோம்பாக் நதி மற்றும் கிள்ளான் நதி இணையும் இடம்தான் Kuala Lumpur. இரண்டும் வேறு வேறு வார்த்தைகள் எனில் பிரித்துதானே எழுத வேண்டும்?

இந்த இணையும் நதிகளை நீங்கள் சுல்தான் அப்துல் சாமாட் கட்டத்தின் அருகில் பார்க்கலாம். இந்த இரண்டு நதியும் இணையும் நடுவில் இந்த கட்டடம் உள்ளது..

//கோலாலம்பூர் நகரக் கட்டடங்கள் மூன்று வகை. பெரியவை, மிகப் பெரியவை, பிரம்மாண்டமானவை. //

City Centerல இருந்தா இப்படித்தான் இருக்கும் கட்டடங்கள். 🙂

//அந்தச் சொற்ப தொலைவை நடக்கமுடியாதவர்களுக்காக ஒரு பேட்டரி கார் (பெரும்பாலும் காலியாக) அங்கும் இங்கும் போய் வந்துகொண்டிருக்கிறது. கோட், சூட் சகிதம் நான்கு நான்கு நிமிடப் பயணங்களாக அந்த வண்டியை நாள்முழுக்க ஓட்டுகிற மலேசிய இளைஞரின் பொறுமையை வியக்கிறேன்.//

இது மட்டுமல்ல. Feeder Bus, Shutter Busக்களும் அதிகம்.. இப்படி பல வசதிகள் இருந்தால் மக்கள் சொந்த வாகனங்களை சிட்டி செண்டரில் பயன்படுத்துவது குறையலாம் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றன.

//மலேசியக் கட்டடங்களில் கண்ணாடி, உலோகத்துக்கு அடுத்தபடியாக நிறையக் கண்ணில் படுவது சாப்பாட்டுக் கடைகள். //

அழகாக வண்ணமயமாக தெரியணுமில்ல. இரவில் பல வித வண்ண விளக்குகள் எறியுமே. 🙂

//‘ஃபுட் கோர்ட்’ என்று நாகரிகமாகப் பெயர் வைத்து சில ஆயிரம் சதுர அடி பரப்பில் சாதம், சப்பாத்தி, பிட்ஸா, பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் சகல வாடைகளும் கலந்தடித்துக் குழப்புகிறது.//

Medan Selera என்றழைக்கப்படும் Food Court சாதாரணமாக பிஸி ஏரியாவில் அல்லது அலுவலக கட்டடங்களின் அருகில் கட்டப்பட்டிருக்கும். இது முழுக்க முழுக்க அரசாங்கம் கட்டுப்பாட்டில் உள்ளவை. வியாபாரம் செய்பவர்களுக்கு இடத்துக்கு தகுந்த வாடகை வசூலிக்கப்படும். இந்த மாதிரி ஃபூட் கோர்ட்டின் advantages என்னவென்றால் எல்லா வித மதத்தினரும் ஒரே இடத்தில் உணவருந்தலாம். இந்திய, மலாய், சீன மற்றும் வெஸ்டர்ன் என அனைத்து வகை உணவுகளும் அந்தந்த மதத்தினரால் ஸ்பெஷலாக சமைக்கப்பட்டிருக்கும்.

சாப்பிடுவதுக்கு ஒவ்வொரு இடமாக தேடி போவதுக்கு பதிலாக ஒரே இடத்தில் எல்லாம் கிடைத்தால் வசதிதானே?
ஆமா. நீங்க நாசி கண்டார் சாப்பிட்டு இருக்கீங்களா?

//இங்குள்ள மக்களுக்குப் பொரித்த பண்டங்கள் மிகவும் பிடிக்கும்போல, எண்ணைப் பலகாரங்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து விளம்பரப்படுத்தாத கடைகளே இல்லை.//

பெரும்பாலும் அது Ayam Goreng அல்லது பொறித்த கோழியாக மட்டுமே அது இருக்கும். அதனையும் தாண்டி தவ்ஹூ வகைகள், மற்றும் ரோஜாக் வகைகளும் இதே கண்ணாடி பேழைகளில் வைக்கப்ப்பட்டிருக்கும். ஆனால், அது பொறித்த வகைகளை சார்ந்தவை அல்ல.

//கானா பிரபா
ஜனவரி 12th, 2009 at 4:03 பிற்பகல்

புத்ரஜெயா கண்டிப்பா பாருங்க, காஜாங் சென்று குச்சியில் குத்தியிருக்கும் கடலைமா தோய்த்த சிக்கனை ருசியுங்கள்,
லிட்டில் இண்டியா போனா ராஜாவின் ஆதியோடந்தமா இருக்கும் எம்பி3 வாங்கலாம்.//

அண்ணே, இதை Satey என அழகாய் சொல்றதை விட்டுட்டு…
🙂

Sateyக்கு புகழ்பெற்ற இடம் காஜாங். ஆனால், நீங்கள் இருக்கும் இடத்திலும் இவை கிடைக்கும். Taste பண்ணி பாருங்க.

மைபிரண்ட் சொல்றதை நம்பாதீங்க, அவங்க மலேசியா இல்ல 😉

கானா பிரபா, மை ஃப்ரண்ட்,

நன்றி!

குறிப்பாக, மை ஃப்ரண்ட் அள்ளிக் கொட்டுகிற தகவல்கள் ஏகப்பட்ட சுவாரஸ்யம், மிக்க நன்றி!

அது சரி, நீங்க மலேசியா இல்ல-ன்னு கனா பிரபா குற்றம் சாட்டறாரே, அதுபற்றி உங்க கருத்து? நாராயண! நாராயண!

//காஜாங் சென்று குச்சியில் குத்தியிருக்கும் கடலைமா தோய்த்த சிக்கனை ருசியுங்கள்//

😦 நான் தாவரபட்சிணியாச்சுங்களே … என்னைமாதிரி ஆளுங்களுக்கு மலேசியாவில் எதுவும் ஸ்பெஷல் இல்லையா?

//ஆறு வருடத்துக்கு முன் நீங்கள் வந்து இறங்கிய KLIA இப்போது நிறைய மாற்றங்களுடன் இருக்குமே? பயணிகள் அதிகரிப்பினால் LCCT கட்டப்பட்டுள்ளதே..//

அதுபற்றித் தெரியவில்லை. ஆனால் நான் விமானத்திலிருந்து இறங்கி, நடந்து வந்த பாதையில் துளி மாற்றம் இல்லை, 100% அதே அதே 🙂

//இப்படி பல வசதிகள் இருந்தால் மக்கள் சொந்த வாகனங்களை சிட்டி செண்டரில் பயன்படுத்துவது குறையலாம்//

எங்க ஊர்(பெங்களூர்)லயும் சில பகுதிகள்ல இந்த வசதி தேவைன்னு நினைக்கறேன்!

//சாப்பிடுவதுக்கு ஒவ்வொரு இடமாக தேடி போவதுக்கு பதிலாக ஒரே இடத்தில் எல்லாம் கிடைத்தால் வசதிதானே?//

உண்மை, நான் குறையாகச் சொல்லவில்லை, அநேகமாக எல்லா நாடுகளிலும் இருக்கிற ஃபுட் கோர்ட்கள் இங்கே சற்று அதிகம் (எண்ணிக்கை, வெரைட்டி) என்று தோன்றுகிறது.

//ஆமா. நீங்க நாசி கண்டார் சாப்பிட்டு இருக்கீங்களா?//

இல்லை, அது எந்த நாடு? தேவாரத்திலிருந்தோ திருவாசகத்திலிருந்தோ எடுத்தமாதிரி சுத்தத் தமிழ்ப் பெயரா இருக்கே 🙂

முருகன் கோயிலுக்கு போவீங்களா??

ILA,

’பத்துமலை’தானே? போனவாட்டி போனேன், இந்தமுறை நேரம் இருக்காது என்று நினைக்கிறேன், இந்த வெள்ளிக்கிழமையே ஊர் திரும்பவேண்டும்

மென்பொருள் துறையினருக்கு வாழ்வுதான்… ஆனா இப்ப மணி அடிச்சாசி…பூமா தேவி சிரிக்கப் போறா..நீங்க எல்லாம் உள்ள போகப்போறீங்க…

நல்லாப் பாருங்க…மலேசியாவில பூமிபுத்திரர்களுக்கு இந்திய குறிப்பாக தமிழ் அடிமைகள் மகிழ்ச்சியா வேலை செய்யறதப் பாருங்க..

‘Eight Steps For Hand Wash’ என்று ஓவியங்களுடன் அக்கறையாக ஒரு செய்முறை விளக்கம் எழுதி ஒட்டியிருக்கிறார்கள், எதற்கு?

http://www.highlighthealth.com-ல் படித்தது;
The Centers for Disease Control and Prevention (CDC) says that of the two million hospital-acquired infections reported each year, 90,000 are fatal. Keeping hands clean is important both at home and at the hospital. Using a simple technique like hand washing is especially important for cancer patients whose immune systems are weakened and who are more susceptible to illness than the general population.

The CDC recommends:

1. Removing any rings or other jewelry
2. Wetting the hands with warm water
3. Applying soap
4. Rubbing hands together for at least 15 seconds
5. Scrubbing all surfaces, including:
* Backs of your hands
* Between your fingers and fingernails
* Wrists
6. Rinsing your hands
7. Drying thoroughly with a towel
8. Turning off the faucet using a paper towel
வாழ்க வளமுடன்
ராமநாதன்
http://rammalar.wordpress.com

கே.பி.,

வருகைக்கு நன்றி!

//மென்பொருள் துறையினருக்கு வாழ்வுதான்… ஆனா இப்ப மணி அடிச்சாசி…பூமா தேவி சிரிக்கப் போறா..நீங்க எல்லாம் உள்ள போகப்போறீங்க…//

🙂 உங்கள் நல்லெண்ணம் பிரம்மிப்பூட்டுகிறது, வாழ்க!

//நல்லாப் பாருங்க…மலேசியாவில பூமிபுத்திரர்களுக்கு இந்திய குறிப்பாக தமிழ் அடிமைகள் மகிழ்ச்சியா வேலை செய்யறதப் பாருங்க..//

மலேசியா பூலோக சொர்க்கம், அங்கே எல்லா மக்களும், குறிப்பாக இந்தியர்கள், தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று நான் எங்கேயும் எழுதியதாக நினைவில்லையே!

என்னைப் பொறுத்தவரை ஒரு வெளியூர்ப் பயணத் தகவலைப் பகிர்ந்துகொள்கிறேன், அவ்வளவே, மற்றபடி எதற்காகவும் மலேசியாவை உயர்த்தியோ, இந்தியாவை / தமிழகத்தைத் தாழ்த்தியோ பேசுகிற, எழுதுகிற அவசியம், நோக்கம் எனக்கு இல்லை!

ராமநாதன்,

மிகவும் பயனுள்ள தகவல், நன்றி!

//என். சொக்கன்

ஜனவரி 12th, 2009 at 5:36 பிற்பகல்

கானா பிரபா, மை ஃப்ரண்ட்,

நன்றி!

குறிப்பாக, மை ஃப்ரண்ட் அள்ளிக் கொட்டுகிற தகவல்கள் ஏகப்பட்ட சுவாரஸ்யம், மிக்க நன்றி!

அது சரி, நீங்க மலேசியா இல்ல-ன்னு கனா பிரபா குற்றம் சாட்டறாரே, அதுபற்றி உங்க கருத்து? நாராயண! நாராயண!//

சொக்கனண்ணே, நீங்க எவ்வளதுதான் நாராயணா நாராயணான்னு சொன்னாலும், எங்க அண்ணன் -தங்கச்சி பாசத்தை அசைக்க முடியாது.. ஹீஹீஹீ

சரிதானே அண்ணே? 🙂

//:( நான் தாவரபட்சிணியாச்சுங்களே … என்னைமாதிரி ஆளுங்களுக்கு மலேசியாவில் எதுவும் ஸ்பெஷல் இல்லையா?//

அப்போ vegetarian chicken, muttn, fish எல்லாம் கிடைக்கும் இங்கே.. வாங்கிட்டு போய் ஊருல மனைவியை சமைச்சு தர சொல்லுங்க.. ருசியா இருக்கும்.. 100% vegeதான்.. 🙂

//உண்மை, நான் குறையாகச் சொல்லவில்லை, அநேகமாக எல்லா நாடுகளிலும் இருக்கிற ஃபுட் கோர்ட்கள் இங்கே சற்று அதிகம் (எண்ணிக்கை, வெரைட்டி) என்று தோன்றுகிறது.//

ம்ம்.. ஆமா… ஒரு சின்ன இடத்தில் அட்லீஸ்ட் 50-100 varieties.. 🙂 ஆனால், நீங்க வெஜிட்டேறியன் என்பதால் பல வகைகள் ருசிக்க முடியாமல் போய்விட்டதே. 😦

//இல்லை, அது எந்த நாடு? தேவாரத்திலிருந்தோ திருவாசகத்திலிருந்தோ எடுத்தமாதிரி சுத்தத் தமிழ்ப் பெயரா இருக்கே //

http://chitchatmalaysia.blogspot.com/2007/03/nasi-kandar.html

அப்படியே மலேசிய 50 பாருங்க:
http://chitchatmalaysia.blogspot.com/2007/09/50.html

//கானா பிரபா

ஜனவரி 12th, 2009 at 5:03 பிற்பகல்

மைபிரண்ட் சொல்றதை நம்பாதீங்க, அவங்க மலேசியா இல்ல 😉 //

அண்ணே,

நான் மலேசியா இல்ல.. ரைக்டு
நான் மலேசியாவில் இருக்கேன்.. ரைக்டு. 😉

welcome to m’sia……………………

அக்கா மைபிரண்ட் புண்னியத்தில்……….KL அறிமுகம்…..கிடைத்திருக்கும்……………

//தாண்டி தவ்ஹூ வகைகள், மற்றும் ரோஜாக் வகைகளும் இதே கண்ணாடி பேழைகளில் வைக்கப்ப்பட்டிருக்கும்//

ஆனா நாக்குலதான் வைக்க முடியாது!

Satey நல்லா இருக்கும்!

நீங்க பதிவு போட்ட நேரம், எனக்கும் ஒரு மூணு மாச ட்ரிப் வாய்க்கும் போல இருக்கு!

பார்ப்போம்!

காஜாங் நல்ல ஊரு!

அதை பல முறை கடந்திருக்கேன்!

(செரம்பான் – கே.எல், கே.எல்-செரம்பான்) ஆனா இறங்கினதில்லே ஒரு முறை கூட

மை ஃப்ரெண்ட், Dr. Sintok, நாமக்கல் சிபி,

நன்றி!

நாமக்கல் சிபி,

அங்கே போய் ஒரு குறுந்தொடர் எழுதுங்க! அட்வான்ஸ் வாழ்த்துகள்!

உங்கள் எழுத்து மயக்குகிறது 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 526 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 457,514 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
« Dec   Feb »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertisements
%d bloggers like this: