Archive for January 14th, 2009
சாப்பாடு சாப்பாடு Everywhere …
Posted January 14, 2009
on:- In: Customer Care | Customer Service | Food | Malaysia | Travel | Uncategorized | Vegetarian
- 20 Comments
அந்த உணவகத்தினுள் நாங்கள் வலது கால் வைத்து இடது காலை நகர்த்துவதற்குள் இருவர் எங்களை வழிமறித்தார்கள், ‘ஹலோ சார், ரிஸர்வேஷன் இருக்கா?’
’அஃப்கோர்ஸ்’ என்றார் எங்களுடன் வந்திருந்த சீனர். அவர் தன்னுடைய பெயரைச் சொல்ல, அவர்கள் தங்களுடைய சித்திரகுப்தப் பேரேட்டில் அவசரமாகத் தேடி முகம் மலந்தார்கள், ‘நன்றி கணவான்களே, உங்களுக்கான இருக்கைகள் தயாராக இருக்கின்றன’
எங்களுக்கு வழிகாட்டிய பெண்ணுக்கு இந்திய முகம், ஆனால் பேச்சில் அது தெரியவில்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் ஒளிந்திருந்த எங்கள் மேஜையைக் காண்பித்துவிட்டு அவர் விலகிக்கொள்ள, எதற்கெடுத்தாலும் ‘அஃப்கோர்ஸ்’ சொல்லும் சீனரிடம் நான் விசாரித்தேன், ‘இங்கே பஃபே லஞ்ச் என்ன விலை?’
‘98 ரிங்கிட்ஸ்’ என்றார் அவர்.
நான் திகைத்துப்போனேன், 98 மலேசிய வெள்ளி என்பது, இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்!
சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா என்று நான் தயங்குவதைப் புரிந்துகொண்டதுபோல், ‘அஃப்கோர்ஸ்’ என்றார் அவர், ‘இந்த ஏரியாவில் இவ்வளவு விலை கொடுத்துதான் சாப்பிடவேண்டும், வேறு வழியில்லை’
ஆயிரத்திருநூறு ரூபாய்க்கு அப்படி என்னதான் சாப்பாடு போடுகிறார்கள்? அந்த அறையை மெல்லச் சுற்றிவந்தேன்.
வழக்கமாக இந்தியாவில் பஃபே உணவு என்றால் நீளமாக ஒரு மேஜை போட்டு நேர் கோடு கிழித்தாற்போல் உணவு வகைகளை வைத்திருப்பார்கள், எல்லோரும் அதே வரிசையில்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாற்போலிருக்கும்.
ஆனால் இங்கே, சின்னச் சின்ன வட்டங்களாக மேஜைகளை அமைத்து, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வகையைச் சேர்ந்த உணவு வகைகளை ஆங்காங்கே தொகுத்திருந்தார்கள். இந்த வட்டத்தில் சூப், அந்த வட்டத்தில் ப்ரெட், இன்னொரு வட்டத்தில் நூடுல்ஸ் இப்படி.
பிரச்னை என்னவென்றால், சகலத்திலும் மாமிச வாடை.
அநேகமாக உலக உயிரினங்கள் அனைத்தும் அங்கே பலவிதமாகச் சமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அவற்றின் நிஜ வாழ்க்கை வடிவத்தில் அப்படியே நறுக்கப்பட்டுக் கிடந்தன.
நெடுநேரம் சுற்றி வந்தும், என்னால் சைவ உணவு எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சாதாரண ரொட்டியில்கூட மேலே கறுப்பாக எதையோ புதைத்துவைத்திருந்தது சந்தேகமூட்டியது.
கடைசியில், எங்களுக்கு வழிகாட்டிய இந்திய(?)ப் பெண்ணைத் தஞ்சமடைந்தேன், ‘அம்மணி, யான் ஒரு தாவர பட்சிணி, எமக்கு உண்ணக்கூடியதாக இங்கு ஏதேனும் கிட்டுமா?’
நல்லவேளையாக, அவர் என்னைப் புழுவைப்போல் பார்க்கவில்லை. ஒருவேளை அப்படிப் பார்த்திருந்தால் உடனடியாக என்னைச் சமைத்து ஒரு தட்டில் துண்டு போட்டிருப்பார்.
‘உங்களுக்கு வேணும்ன்னா, நான் எங்க செஃப்பை வெஜிட்டேரியன் சமைக்கச் சொல்றேன்’
‘கண்டிப்பா வேணும், வெஜிட்டேரியன்ல என்ன கிடைக்கும்?’
‘நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்’
‘எனக்கு ஃப்ரைட் ரைஸ் ஓகே’ என்றேன், நிம்மதியாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.
என்னுடன் வந்திருந்த ஏழு பேரும் ஏற்கெனவே இடுப்புப் பெல்டை நெகிழ்த்திக்கொண்டு ஒரு கட்டு கட்டத் தொடங்கியிருந்தார்கள். நான்மட்டும் பரிதாபமாக காலித் தட்டுடன் காத்திருந்தேன்.
கால் மணி நேரம் கழித்து, நான் கேட்ட வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் வந்தது. அதன் உச்சியில், அழகாக ஒரு முட்டை.
‘ஐயையோ, நான் முட்டை கேட்கலையே’
‘இது காம்ப்ளிமென்டரி சார்’ என்று ஜோக்கடித்தார் அந்த சர்வர் பெண் (சர்வி?), எனக்கு முட்டையும் ஆகாது என்று ஆரம்பத்திலேயே சொல்லாதது என் தப்புதான்.
என் புத்தியை நொந்துகொண்டு, அவருக்குப் பிரச்னையை விளக்கினேன், அவரும் புரிந்ததுபோல் தலையைத் தலையை ஆட்டினார், கொண்டு வந்த உணவைத் தட்டோடு திரும்பக் கொண்டு சென்றுவிட்டார்.
ஏழு நிமிடக் காத்திருப்புக்குப்பிறகு, மீண்டும் ஃப்ரைட் ரைஸ் வந்தது, இந்தமுறை அதன் உச்சியில் முட்டை இல்லை.
அதற்குபதிலாக, முட்டையை உடைத்து ஃப்ரைட் ரைஸ்மீது ஊற்றியிருந்தார்கள்.
நான் சொன்னதை அந்தப் பெண் என்ன புரிந்துகொண்டதோ, உள்ளே சென்று என்ன சொல்லிவைத்ததோ, கடவுளுக்குதான் வெளிச்சம்.
‘இந்த ஃப்ரைட் ரைஸும் எனக்கு ஆகாது’ என்று திருப்பிக் கொடுத்தேன், முட்டை, மாமிசம் இல்லாத உணவுதான் எனக்கு வேண்டும் என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக விளக்கிச் சொன்னேன்.
‘ஓகே சார்’ என்று எப்போதும்போல் புன்னகைத்தார் அவர். உணவுத் தட்டைப் பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்.
இதற்குள் என்னுடன் வந்திருந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள், ‘அச்சச்சோ, நீங்க வெஜிட்டேரியனா’ என்று என்னிடம் பரிதாபமாகக் கேட்டபடி எல்லோரும் ஐஸ் க்ரீமை மொசுக்க, நான் தூரத்திலிருக்கும் சமையலறைக் கதவையே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த அறையில், சுமார் அரை டன் உணவு இருந்திருக்கும். ஆனால் அவற்றில் நான் சாப்பிடக்கூடியது எதுவும் இல்லை. கொடுமை!
இவ்வளவு விலை கொடுத்துப் பட்டினி கிடக்கவேண்டும் என்று யார் அழுதார்கள்? இந்த பிஸினஸ் லஞ்ச் களேபரமெல்லாம் இல்லாவிட்டால் நான் பக்கத்திலிருக்கும் ஃபுட் கோர்டுக்குப் போய், சென்னா மசாலா தொட்டுக்கொண்டு சந்தோஷமாக சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்தபிறகு, எனக்கான ஃப்ரைட் ரைஸ் வந்தது. அவசரமாக அதன் தலையில் குத்தி உடைத்துப் பார்த்தேன். உள்ளே, சிக்கன் துண்டுகள்!
98 வெள்ளிக்கு, நேற்று மதியம் நான் சாப்பிட்டது வெறும் ஐஸ் க்ரீம்தான்!
***
என். சொக்கன் …
14 01 2008
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவு: