மனம் போன போக்கில்

சாப்பாடு சாப்பாடு Everywhere …

Posted on: January 14, 2009

அந்த உணவகத்தினுள் நாங்கள் வலது கால் வைத்து இடது காலை நகர்த்துவதற்குள் இருவர் எங்களை வழிமறித்தார்கள், ‘ஹலோ சார், ரிஸர்வேஷன் இருக்கா?’

’அஃப்கோர்ஸ்’ என்றார் எங்களுடன் வந்திருந்த சீனர். அவர் தன்னுடைய பெயரைச் சொல்ல, அவர்கள் தங்களுடைய சித்திரகுப்தப் பேரேட்டில் அவசரமாகத் தேடி முகம் மலந்தார்கள், ‘நன்றி கணவான்களே, உங்களுக்கான இருக்கைகள் தயாராக இருக்கின்றன’

எங்களுக்கு வழிகாட்டிய பெண்ணுக்கு இந்திய முகம், ஆனால் பேச்சில் அது தெரியவில்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் ஒளிந்திருந்த எங்கள் மேஜையைக் காண்பித்துவிட்டு அவர் விலகிக்கொள்ள, எதற்கெடுத்தாலும் ‘அஃப்கோர்ஸ்’ சொல்லும் சீனரிடம் நான் விசாரித்தேன், ‘இங்கே பஃபே லஞ்ச் என்ன விலை?’

‘98 ரிங்கிட்ஸ்’ என்றார் அவர்.

நான் திகைத்துப்போனேன், 98 மலேசிய வெள்ளி என்பது, இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்!

சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா என்று நான் தயங்குவதைப் புரிந்துகொண்டதுபோல், ‘அஃப்கோர்ஸ்’ என்றார் அவர், ‘இந்த ஏரியாவில் இவ்வளவு விலை கொடுத்துதான் சாப்பிடவேண்டும், வேறு வழியில்லை’

ஆயிரத்திருநூறு ரூபாய்க்கு அப்படி என்னதான் சாப்பாடு போடுகிறார்கள்? அந்த அறையை மெல்லச் சுற்றிவந்தேன்.

வழக்கமாக இந்தியாவில் பஃபே உணவு என்றால் நீளமாக ஒரு மேஜை போட்டு நேர் கோடு கிழித்தாற்போல் உணவு வகைகளை வைத்திருப்பார்கள், எல்லோரும் அதே வரிசையில்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாற்போலிருக்கும்.

ஆனால் இங்கே, சின்னச் சின்ன வட்டங்களாக மேஜைகளை அமைத்து, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வகையைச் சேர்ந்த உணவு வகைகளை ஆங்காங்கே தொகுத்திருந்தார்கள். இந்த வட்டத்தில் சூப், அந்த வட்டத்தில் ப்ரெட், இன்னொரு வட்டத்தில் நூடுல்ஸ் இப்படி.

பிரச்னை என்னவென்றால், சகலத்திலும் மாமிச வாடை.

அநேகமாக உலக உயிரினங்கள் அனைத்தும் அங்கே பலவிதமாகச் சமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அவற்றின் நிஜ வாழ்க்கை வடிவத்தில் அப்படியே நறுக்கப்பட்டுக் கிடந்தன.

நெடுநேரம் சுற்றி வந்தும், என்னால் சைவ உணவு எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சாதாரண ரொட்டியில்கூட மேலே கறுப்பாக எதையோ புதைத்துவைத்திருந்தது சந்தேகமூட்டியது.

கடைசியில், எங்களுக்கு வழிகாட்டிய இந்திய(?)ப் பெண்ணைத் தஞ்சமடைந்தேன், ‘அம்மணி, யான் ஒரு தாவர பட்சிணி, எமக்கு உண்ணக்கூடியதாக இங்கு ஏதேனும் கிட்டுமா?’

நல்லவேளையாக, அவர் என்னைப் புழுவைப்போல் பார்க்கவில்லை. ஒருவேளை அப்படிப் பார்த்திருந்தால் உடனடியாக என்னைச் சமைத்து ஒரு தட்டில் துண்டு போட்டிருப்பார்.

‘உங்களுக்கு வேணும்ன்னா, நான் எங்க செஃப்பை வெஜிட்டேரியன் சமைக்கச் சொல்றேன்’

‘கண்டிப்பா வேணும், வெஜிட்டேரியன்ல என்ன கிடைக்கும்?’

‘நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்’

‘எனக்கு ஃப்ரைட் ரைஸ் ஓகே’ என்றேன், நிம்மதியாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.

என்னுடன் வந்திருந்த ஏழு பேரும் ஏற்கெனவே இடுப்புப் பெல்டை நெகிழ்த்திக்கொண்டு ஒரு கட்டு கட்டத் தொடங்கியிருந்தார்கள். நான்மட்டும் பரிதாபமாக காலித் தட்டுடன் காத்திருந்தேன்.

கால் மணி நேரம் கழித்து, நான் கேட்ட வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் வந்தது. அதன் உச்சியில், அழகாக ஒரு முட்டை.

‘ஐயையோ, நான் முட்டை கேட்கலையே’

‘இது காம்ப்ளிமென்டரி சார்’ என்று ஜோக்கடித்தார் அந்த சர்வர் பெண் (சர்வி?), எனக்கு முட்டையும் ஆகாது என்று ஆரம்பத்திலேயே சொல்லாதது என் தப்புதான்.

என் புத்தியை நொந்துகொண்டு, அவருக்குப் பிரச்னையை விளக்கினேன், அவரும் புரிந்ததுபோல் தலையைத் தலையை ஆட்டினார், கொண்டு வந்த உணவைத் தட்டோடு திரும்பக் கொண்டு சென்றுவிட்டார்.

ஏழு நிமிடக் காத்திருப்புக்குப்பிறகு, மீண்டும் ஃப்ரைட் ரைஸ் வந்தது, இந்தமுறை அதன் உச்சியில் முட்டை இல்லை.

அதற்குபதிலாக, முட்டையை உடைத்து ஃப்ரைட் ரைஸ்மீது ஊற்றியிருந்தார்கள்.

நான் சொன்னதை அந்தப் பெண் என்ன புரிந்துகொண்டதோ, உள்ளே சென்று என்ன சொல்லிவைத்ததோ, கடவுளுக்குதான் வெளிச்சம்.

‘இந்த ஃப்ரைட் ரைஸும் எனக்கு ஆகாது’ என்று திருப்பிக் கொடுத்தேன், முட்டை, மாமிசம் இல்லாத உணவுதான் எனக்கு வேண்டும் என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக விளக்கிச் சொன்னேன்.

‘ஓகே சார்’ என்று எப்போதும்போல் புன்னகைத்தார் அவர். உணவுத் தட்டைப் பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்.

இதற்குள் என்னுடன் வந்திருந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள், ‘அச்சச்சோ, நீங்க வெஜிட்டேரியனா’ என்று என்னிடம் பரிதாபமாகக் கேட்டபடி எல்லோரும் ஐஸ் க்ரீமை மொசுக்க, நான் தூரத்திலிருக்கும் சமையலறைக் கதவையே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த அறையில், சுமார் அரை டன் உணவு இருந்திருக்கும். ஆனால் அவற்றில் நான் சாப்பிடக்கூடியது எதுவும் இல்லை. கொடுமை!

இவ்வளவு விலை கொடுத்துப் பட்டினி கிடக்கவேண்டும் என்று யார் அழுதார்கள்? இந்த பிஸினஸ் லஞ்ச் களேபரமெல்லாம் இல்லாவிட்டால் நான் பக்கத்திலிருக்கும் ஃபுட் கோர்டுக்குப் போய், சென்னா மசாலா தொட்டுக்கொண்டு சந்தோஷமாக சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்தபிறகு, எனக்கான ஃப்ரைட் ரைஸ் வந்தது. அவசரமாக அதன் தலையில் குத்தி உடைத்துப் பார்த்தேன். உள்ளே, சிக்கன் துண்டுகள்!

98 வெள்ளிக்கு, நேற்று மதியம் நான் சாப்பிட்டது வெறும் ஐஸ் க்ரீம்தான்!

***

என். சொக்கன் …

14 01 2008

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவு:

மலே மலே மலே மலேசியா

20 Responses to "சாப்பாடு சாப்பாடு Everywhere …"

:-)) அய்யோ பாவம்!

முதலில் முட்டை மட்டும் வைத்து வந்த ஃப்ரைட் ரைஸை மிஸ் பண்ணி விட்டீர்கள். முட்டையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு சாப்பிட்டிருக்கலாம். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். காமெடியாகத்தான் சொன்னேன்.

கல்லூரிக் காலத்தில் NCC கேம்ப்பில் முதலிலேயே சைவ உணவிற்காக தனியாக பெயர் கொடுத்து விடுவேன். ஆனால் இராணுவத்துடன் இணைந்து நடத்தப்படும் கேம்ப்பில் சைவ சாப்பாடு என்று தனியாக எதுவும் கிடையாது. சாதம், பருப்பு சைவ உணவு. கூட கோழிக் குழம்பு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாமாம். இருக்கிற பசியில் உப்புசப்பில்லாத பருப்பு மட்டும் சேர்த்து சாப்பிடுவது கஷ்டமாகத்தான் இருந்தது.

அப்புறம்? அப்புறம் என்ன… ரோமில் இருக்கும்போது, ரோமனாக இருக்க பழகிக் கொள்ள வேண்டியதுதான். 🙂

Sridhar Narayanan,

//முட்டையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு சாப்பிட்டிருக்கலாம்//

செய்திருக்கலாம், ஒருமுறை அவஸ்தைப்பட்டால்தானே வாழ்க்கை புரிகிறது? :))))))))))))

//கல்லூரிக் காலத்தில் NCC கேம்ப்பில் முதலிலேயே சைவ உணவிற்காக தனியாக பெயர் கொடுத்து விடுவேன்.//

நான் பள்ளி NCC கேம்ப்பில் சைவ உணவுக்குப் பெயர் கொடுத்து 2 வருடம் சமாளித்தேன், எல்லோரும் பரோட்டா, சிக்கன் குருமா சாப்பிட, எனக்குமட்டும் கெட்டிச் சட்னியுடன் ஊத்தப்பம் வரும் 🙂

ஹாஹா.. நான் தலைப்பை கவனிக்கவே இல்லை.. கடைசியில்தான் படித்தேன்.. 🙂 அருமை.!

ஜனகராஜ் கிழக்கு வாசலில் கார்த்திக்கிடம் சொல்வார் “அந்த சீன்லதான்(!) பொன்னுரங்கம் புரிஞ்சுகிட்டேன் – ‘நீயும் நானும் ஒரே ஜாதின்னு’ ” அதே மாதிரி உங்களோட “சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா” வரியிலதான் புரிஞ்சுகிட்டேன், நீங்களும் நம்மாளுன்னு!

என்னை இங்கே ஜப்பனிய ஊழியர்கள் புழுவைப் போலதான் பார்ப்பாங்க (தினமும் ஒரே மெனு – தேங்காய்/கறிவேப்பிலை/காரக்குழம்பு சாதம் + தயிர் சாதம்!) ஆனா நமக்குத்தானே தெரியும் 1700 ரூவாய்க்கு சாப்பிடறது எவ்வளவு பெரிய விஷய்ம்னு 🙂

Bee’morgan, selections,

நன்றி!

//“சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா” வரியிலதான் புரிஞ்சுகிட்டேன், நீங்களும் நம்மாளுன்னு!//

எனக்கு ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு ஆகவே ஆகாது, நொறுக்குத் தீனிமட்டும் கொறித்துவிட்டு வெளியே வந்துவிடுவேன்

Star hotel waiters Ivvlo makka kooda iruppankalaa .

Here I have a default tag line , “No meat , no beef, chicken or fish sauce”.

All chinese and thai places put fish sauce in all food 😦

sujal,

//Star hotel waiters Ivvlo makka kooda iruppankalaa//

மக்கு இல்லைங்க, இவங்களுக்கு வெஜிடேரியன்னா என்னன்னே புரியமாட்டேங்குது

//All chinese and thai places put fish sauce in all food//

ஜப்பான் போயிருந்தபோது சாதத்தின்மீது மீன் துருவலைத் தூவிக் கொடுத்தார்கள் … நல்லவேளை சாப்பிடுவதற்குமுன்னால் ‘அது என்ன?’ என்று விசாரித்தேன் 🙂

அப்பாடா, அந்த தடியன்கிட்ட இருந்து நாம தப்பிச்சிடோம் என்று செத்த மிருகங்கள் நினைத்திருக்கும்.

Strictly Non-Veg,

நல்லாச் சொன்னீங்க :))))))))))))))))))))))))))))))))))))))

// உடனடியாக என்னைச் சமைத்து ஒரு தட்டில் துண்டு போட்டிருப்பார்.//

—பாவாம் சார் நீங்க…

முட்டைதான் வெஜிடேரியன் ஆயிடுச்சே. உங்களுக்குத் தெரியாது என்று அவர்களுக்கும் தெரியாது போல் இருக்கிறது :((

[…] My Books சாப்பாடு சாப்பாடு Everywhere … […]

ஷாஜி, anonymous நண்பரே,

நன்றி!

சொக்கன் அண்ணே,

பஃபே ஸ்டைல் உணவகத்துல எப்போதுமே ஒருப்பக்கம் (1 circle) வெஜி ஃபூட் இருக்கும். ஆனா, அது ஒரு மூளையில இருக்கும். நீங்க தேடித்தான் கண்டுப்பிடிக்கணும்.

நீங்க “நான் வெஜிட்டேறியன்”ன்னு ஒரு தமிழரிடம் சொன்னால் புரிந்துக்கொண்டிருப்பார்கள். இதுவே இந்த டயலோக்கை ஒரு மலாய்க்காரரிடம் சொன்னால், அவர்களுக்கு இதனுடைய அர்த்தம் தெரியாது. சீனரிடம் சொன்னால் அவர்களுக்கு புரியும். ஆனால், அவர்கள் பொறுத்த வரை முட்டை வெஜிட்டேறியந்தான்.. (அனைத்து சீனருக்கும் அல்ல)
இப்போது உங்க நிலை என்ன என்றும், உள்ளே செஃப் என்ன மதம் என்றும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

“Friend Rice with NO chicken, NO egg.. Only Sayur (Vegetable)” என்று சொல்லியிருந்தால் உங்கள் உணவு சரியாக வந்து சேர்ந்திருக்கும். 🙂

மிகவும் சுவையாக இருந்தது.
மலேசியாவில் ஒரு சைவ ஹோட்டல் கூடவா இலலை ?

மை ஃப்ரெண்ட், Saminathan,

நன்றி!

//“Friend Rice with NO chicken, NO egg.. Only Sayur (Vegetable)” என்று சொல்லியிருந்தால் உங்கள் உணவு சரியாக வந்து சேர்ந்திருக்கும். //

நல்லது., அடுத்தமுறை இதை மனப்பாடம் செஞ்சுட்டுப் போயிடறேன் 😉

//மலேசியாவில் ஒரு சைவ ஹோட்டல் கூடவா இலலை ?//

மலேசியாவில் ’சரவண பவன்’கூட இருக்கு, ஒவ்வொருவாட்டியும் அதைத் தேடிப் போகமுடியாதே!

கனடா அமெரிக்காவில் நன்றாக் தேறிவிட்டார்கள். இந்தியர்களை கண்டாலே தாங்கள் வெஜிடேரியனா? முட்டை கடலுணவுகூட சாப்பிட வெஜிடேரியனா என கேட்டு பரிமாறுகிறார்கள் 🙂

சொல்ல மறந்தது நான் சகலமும் சாப்பிடம் சர்வபட்சிணி

கால்கரி சிவா,

நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: