முன்னாள் அறை
Posted January 17, 2009
on:- In: Change | Courtesy | Customer Care | Customer Service | Fall | Fear | Forget It | Life | Malaysia | Rise And Fall | Rules | Safety | Security | Time | Travel | Uncategorized | Visit
- 3 Comments
விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.
சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.
இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.
நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?
ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.
அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.
கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.
அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.
கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.
ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.
அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.
அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’
‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.
இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.
அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.
ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.
இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.
***
என். சொக்கன் …
17 01 2009
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:
3 Responses to "முன்னாள் அறை"

நம்ம ஊராயிருந்தா அந்தப் புத்தகம் முதலில் திரும்ப கிடைக்குமா என்று பாருங்கள் சத்தியமூர்த்தி 🙂
இன்னொன்னு என்னான்னா சொக்கன் சொன்னாப் போல அப்படி இப்படின்னு விளையாடியிருக்க முடியாது….இன்னாள் அறையாயிருந்தாலும் (முக்கியாமா தண்ணிக்குள்ள) 🙂

1 | R Sathyamurthy
January 18, 2009 at 2:52 pm
நம்ம ஊராயிருந்தால், முன்னாள் அறையாயிருப்பின், முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருப்பார்கள். மலேசியாவாக இருந்ததால் முன்னாள் அறைதான். முகத்தில் இல்லை. லாலி பாப்பிவிட்டார்கள்.
🙂