மனம் போன போக்கில்

ஊர்ந்து போகும் தேரு

Posted on: January 17, 2009

சில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது.

’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள்.

கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக் கதையை நம்பி யார் பணம் போட்டார்களோ என்று வேதனையாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

ஆனால், ’டைம்’க்காக இளையராஜா இசைத்த பாடல்களை, இன்றைக்கும் கேட்கச் சலிப்பதில்லை, முக்கியமாக சுஜாதா பாடிய, ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ என்ற பாட்டு.

ஆரம்பத்தில் ‘இத்தனை மெது(Slow)வாக ஒரு பாட்டா?’ என்று சலிப்பாகதான் இருந்தது. ஆனால் இரண்டு முறை கேட்பதற்குள், அந்தப் பாடல் என்னை முழுமையாக வசீகரித்துவிட்டது.

காதல்வயப்பட்ட பெண்ணின் உணர்வுகளை இயல்பாகச் சொல்லும் திரைப் பாடல்கள் தமிழில் அதிகம் இல்லை, ஒன்று, கதாநாயகியைக் குறும்புப் பெண்ணாகச் சித்திரித்து காடு, மேடெல்லாம் ஓட விட்டு, இயற்கையை ரசிக்கச் சொல்லி அலைக்கழிப்பார்கள், இல்லாவிட்டால் அநியாயத்துக்கு வெட்கப்பட வைத்து, கதாநாயகன் காலில் விழும்படியான வழிபாட்டுப் பாட்டுகளைப் பாடவைப்பார்கள்.

இந்தப் பாடல் அந்த இரண்டு வகைகளிலும் சேராமல் தனித்து நிற்கிறது. மென்மையும், கம்பீரமும் கலந்த ஒரு காதலாக, ஆண்டாள் பாசுரத்துக்கு நவீன வார்த்தைகள், இசை கொடுத்தாற்போல.

சுஜாதாவின் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு அழுகை வருவதுபோலிருக்கும், ஆனால் அழமுடியாது, அதேசமயம் சிரிக்கவும் முடியாது, மகிழ்ச்சிப்படவும் தோன்றாது. எளிமையான வரிகளை(பழநிபாரதி?)க் காயப்படுத்தாத ராஜாவின் இசை ஓர் ஆனந்தத் தாலாட்டாக இருப்பினும், தூங்கக்கூட முடியாது, பாடல் ஒலித்து முடிந்ததும், திரும்ப இன்னொருமுறை கேட்கவேண்டும் என்று நினைப்பேன், ஆனால் ’மனசுமுழுக்க நிறைந்திருக்கிற இந்தக் கனம், அவஸ்தை போதும், மறுபடி இதைக் கேட்காமல் விலகி ஓடிவிடவேண்டும்’ என்றும் தோன்றும், அப்படி ஓர் இனம் புரியாத இம்சைக்கு ஆளாக்கிவிடுகிற விநோதமான பாடல் இது.

’டைம்’க்குப்பிறகு, இளையராஜா நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டார், அதில் எத்தனையோ நல்ல, மிக நல்ல, அற்புதமான பாடல்களெல்லாம் வந்திருக்கின்றன, ஆனால் ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’க்கு இணையான ஓர் உணர்வுபூர்வமான பாடல் நான் இதுவரை கேட்கவில்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இரண்டு நாள் முன்புவரை.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நந்தலாலா’ இசைத் தொகுப்பில், ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊருஎங்கும் தேரு போகுது’ என்று ஒரு பாடல். கிட்டத்தட்ட ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ மெட்டுச் சாயலிலேயே அமைந்துள்ளது, சில சமயங்களில் அதன் காப்பிதான் இது என்றுகூடத் தோன்றுகிறது.

வித்தியாசம் என்னவென்றால், இது காதல் பாட்டு இல்லை, குழந்தைப் பாட்டு.

பாடல் வரிகளும் சரி, மெட்டு, பின்னணி இசையும் சரி, நிஜமாகவே ஒரு தேர் மெல்லமாக ஊர்ந்து செல்வதுபோலவும், அதன்பின்னே நாமும நான்கரை நிமிடங்கள் பயணிப்பதுபோலவும் ஓர் உணர்வை உண்டாக்குகின்றன.

நந்தலாலாத் தேர் செல்லும் பாதை, சமதளமாக இல்லை, அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள் குறுக்கிடுகின்றன, அங்கெல்லாம் மெட்டும் இசையும் ஏறி, இறங்குகிறது, சடன் ப்ரேக் போட்டு நிற்கிறது,  மறுபடியும் மெல்ல வேகம் பிடித்து ஊர்ந்து செல்கிறது.

இந்த பாணிக்கு ஓர் உதாரணம் சொல்வதென்றால், ’அஞ்சலி’ படத்தில், ‘வேகம் வேகம் போகும் போகும்’ என்கிற பாட்டு. அதைக் கேட்கும்போதே அதிரடி வேகத்தில் செல்லும் ஒரு வாகனத்தில் நாம் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றும்.

இதேபோல் இன்னொரு பாட்டு, ‘ஓரம்போ, ஓரம்போ’, தாறுமாறாக வளைந்து செல்லும் சைக்கிள் பயணத்தை இசையாகவும் மெட்டாகவும், பாடுகிற பாணியாகவும் மொழிபெயர்த்திருப்பார் இளையராஜா.

’அஞ்சலி’யில் விண்வெளிப் பயணம், ‘ஓரம்போ’வில் சைக்கிள் பயணம், ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஜாகிங் பயணம், ‘நந்தலாலா’வில் சுகமான தேர்ப் பயணம்.

கடந்த இரண்டு தினங்களில் இந்தப் பாட்டைக் குறைந்தபட்சம் நூறு தடவையாவது கேட்டுவிட்டேன், அசைந்து அசைந்து நடந்து வரும் ஒரு தேராக ஏராளமான குழந்தைப் பருவ நினைவுகளைக் கிளறியபடி இந்தப் பாடல் மனத்தில் அழுந்தப் பதிந்துவிட்டது. ஒவ்வொருமுறை பாடல் முடியும்போதும் ‘ஐயோ, தேரிலிருந்து இறங்கவேண்டுமே!’ என்று வருத்தமாக இருக்கிறது.

’நந்தலாலா’வில் இந்தப் பாடல்மட்டுமில்லை, அநேகமாக எல்லாமே குழந்தைப் பாடல்கள்தான், ராஜா அடித்து ஆடியிருக்கிறார்.

’குழந்தைப் பாடல்’கள் என்றால், ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா’ ரகம் இல்லை, குழந்தைகளின் மன உணர்வுகளை இசையில், மெட்டில், ஒலிகளில் வெளிப்படுத்துகிற நுணுக்கமான கலை இது. அரை டவுசர் பருவத்துக்கே மீண்டும் நம்மைக் கூட்டிச் சென்றுவிடக்கூடியது.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள், எளிமையான, உணர்வுபூர்வமான மெட்டுகளுக்கு, ஆடம்பரம் இல்லாத இசைச் சட்டை போட்டு உட்காரவைத்திருக்கும் ராஜாவின் தந்திரத்தை நீங்களும் ரசிக்கலாம்.

ஒரே குறை, நம் மண்ணின் மெட்டுகளாகத் தோன்றுகிறவற்றுக்கு அதீதமான மேற்கத்திய இசைக் கோர்ப்பு சேர்த்ததுதான்  கொஞ்சம் உறுத்துகிறது, பலாச்சுளையை சீஸில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல.

***

சில பின்குறிப்புகள்:

1.  இயக்குனர் மிஷ்கின் ’நந்தலாலா’ பாடல்களில் சிலவற்றைமட்டுமே படமாக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனக்குத் தேவை இரண்டு பாடல்கள்தான் என்று தெரிந்தும்கூட, ராஜாவை இன்னும் வேலை வாங்கி நிறைய நல்ல பாட்டுகளை வாங்கியிருக்கிறார், அவருக்கு நன்றி!

2. ’நந்தலாலா’ பாடல்களில் ஓர் அதிசயம், அநேகமாக எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட இல்லை (நான் கவனித்தவரையில்).

3. தமிழ்த் திரைக் கலைஞர்களில், இளையராஜா அளவுக்குத் தனது கலைத் திறமையின் சகல சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்துகிற / நிரூபிக்கிற வாய்ப்புக் கிடைத்தவர்கள் அநேகமாக யாருமே இல்லை. ஓர் திரை இசையமைப்பாளராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்ட இளையராஜா, பணம், புகழ், ரசிகர்கள், பாராட்டுகள், விருதுகள் என எல்லாமே நிறைய சம்பாதித்துவிட்டார், அதன்பிறகும் தொடர்ந்து பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்க அவருக்கு எது ஊக்கம்? திரும்பத் திரும்ப அதே சூழ்நிலைகள், அதே பல்லவி, அனுபல்லவி, சரணக் கட்டமைப்பு என்று போரடிக்காதா?

அடுத்தபடியாக, ஒருகாலத்தில் நிஜமான ‘ராஜா’வாக இருந்த இளையராஜா, இப்போது பத்தோடு பதினொன்றுதான். உணர்ச்சிவயப்படாமல் யோசித்தால், அவர் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கிற ரசிகர்களைத்தவிர, மற்றவர்கள் ராஜாவைப் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிப் பார்க்கிறார்? தன்னுடைய சொந்த மகன், மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத் துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர் வருந்துவாரா? பிரபல்யம் என்பது தரத்துக்கான அளவுகோல் இல்லைதான். என்றாலும், தான் ராஜாவாக வாழ்ந்த வீட்டில் இன்னொருவர் கொடி பறப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்காதா? அதற்கும் இசைதான் அவருக்கு மருந்தா?

இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

***

என். சொக்கன் …

17 01 2009

27 Responses to "ஊர்ந்து போகும் தேரு"

//இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.//

ஜீனியஸ்களைப்பற்றி புத்தகம் எழுதும் ஒரு ஜீனியஸின் சுயசரிதை எப்போது கிடைக்கும்?
😀

//உணர்ச்சிவயப்படாமல் யோசித்தால், அவர் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கிற ரசிகர்களைத்தவிர, மற்றவர்கள் ராஜாவைப் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.//

வருத்தம் ஆனால் உண்மை 😦

நந்தலாலாவும் சரி நான் கடவுளும் சரி, காட்சிப்படுத்தலில் தான் இருக்கிறது பாடல் நிற்பதுவும் நடப்பதுவும் பறப்பதும். நிச்சயம் பின்னணி இசைக்காகவாவது இப்படங்களைப் பார்த்துவிடவேண்டும்.

ஒரு பாலத்தின் மீது ரெண்டு கைகளை வீசிக்கொண்டு குச்சியைத் தூக்கி எறியும் காட்சிப்படுத்தல் (கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்:-)) மூலமே சூப்பர் ஹிட் ஆகக்கூடிய பாடல்கள் இரண்டிலுமே இல்லை.

சுயசரிதை? வரட்டும் பார்க்கலாம். இளையராஜாவின் இசை தவிர்த்த மற்ற முயற்சிகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை 🙂

ஆதித்தன்,

ராஜாவின் பயக்ரஃபியை வேறு யார் எழுதினாலும் காமெடி ஆகிவிடும், அவரே தத்துவ அலசல்கள் இன்றி இயல்பாக எழுதுவதும் கஷ்டம் 😦

பினாத்தல் சுரேஷ்,

//ஒரு பாலத்தின் மீது ரெண்டு கைகளை வீசிக்கொண்டு குச்சியைத் தூக்கி எறியும் காட்சிப்படுத்தல்//

ம்ஹூம், மூளை (?) இயங்க மறுக்குதே, சொல்லிடுங்க ப்ளீஸ்!

நந்தலாலாவில் உங்க ஃபேவரிட் எது? எனக்கு இந்தப் பாட்டும் ‘கை வீசி நடக்கிற காற்று’ம்

தேரு பிடிக்காதவங்க இருப்பாங்களா? இதுதான் நம்பர் 1 பேவரைட்.

ஒரு சின்ன க்ளூ வேணா கொடுக்கறேன்:

கண்ணுக்குள் இமையாக இருப்பவள் ஜோ ஜோ பண்ணும் பாட்டு.

//டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். //

என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் 😉

உங்கள் பதிவின் விஷயங்கள் என் சிந்தனையோட்டத்தோடு ஒத்திசைகின்றன, ராஜா ரசிகன் என்ற ஒரே அலைவரிசை தான் காரணமோ,

சிறப்பானதொரு அலசல்

//இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.//

ராஜாவின் சுயசரிதை வெறும் சுயசரிதை இல்லாது திரையுலகின் இசை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கண நூலாகத் தான் இருக்கும் போல.

பினாத்தல் சுரேஷ்,

நீங்களும் புதிர் போட ஆரம்பிச்சுட்டீங்களா, கானா பிரபா ஹெல்ப் பண்ணுவாரா? 🙂

கானா பிரபா,

//உங்கள் பதிவின் விஷயங்கள் என் சிந்தனையோட்டத்தோடு ஒத்திசைகின்றன, ராஜா ரசிகன் என்ற ஒரே அலைவரிசை தான் காரணமோ//

🙂 அப்படிதான் இருக்கவேண்டும், பல ராஜா ரசிகர்களுடன் இந்த ஒற்றுமையைக் கண்டிருக்கிறேன்!

//திரையுலகின் இசை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கண நூலாக//

முழுக்க முழுக்க உண்மை! இசைக்குமட்டுமில்லை, திரைத் தமிழுக்கும்தான்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன், ’மயிலு’ படத்தின் பாடல் பதிவுக் காட்சி, கார்த்திக் ஒரு வரியைப் ‘பயிரு’ என்று பாடுகிறார், ராஜா திருத்துகிறார், ‘அது பயிரு இல்லை, பயறு’

கார்த்திக் குழம்ப, இவர் விளக்கம் தருகிறார், ‘பயிரு என்றால் விதைப்பது, பயறு என்றால்தான் தானியம்’

இந்த வித்தியாசம் யாருக்குத் தெரியும்? அவர் பாட்டுக்குப் பாடிவிட்டுப் போகட்டும் என்று இல்லாமல், திருத்திச் சரி செய்யவேண்டும் என்று இவருக்கு ஏன் (அல்லது எப்படித்) தோன்றுகிறது?

அதைவிட முக்கியம், இப்படிக் கஷ்டப்பட்டுப் பதிவு செய்த ‘மயிலு’ படம், இனி எப்போதும் வெளியாகாது, அந்தப் பாடல்கள் வீணாகிப் போகவேண்டியதுதான் என்று தெரிய வரும்போது, அவர் மனம் என்ன நினைக்கும்?

நமக்கெல்லாம் ஒரு பத்திரிகைக் கட்டுரை அல்லது கதை அச்சாகாமல் நிராகரிக்கப்பட்டாலே ஜெகத்தினைக் கொளுத்திடுவோம் என்று துடிக்கத் தோன்றுகிறது, ஆனால் அவருடைய எத்தனை அற்புதமான பாடல்கள் யாரும் கேட்காமல் காணாமல் போயிருக்கின்றன, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர் எப்படி உணர்வார், எவ்வாறு தன்னை ஆறுதல்படுத்திக்கொள்வார்?

இப்படி இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன, எழுதினால் அதுவே தனிப் புத்தகமாகிவிடும் – How a genius thinks என்பதைப் புரிந்துகொள்ள நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, ராஜாதான்!

நான் கடவுள் திரைப்படத்தின் ’கண்ணில் பார்வை’ பாடல்பற்றிய ஓர் அலசல்:

http://www.dhool.com/predicate/?p=28

அருமையான அலசல்….சூப்பராக பிரிச்சு மேய்ஞ்சிருக்கிங்க ;)))

எனக்கு ந்ந்தலாலாவில் பிடிச்ச பாட்டு தாலாட்டு கேட்க நானும்+கைவீசி+ஊர்ந்து இப்படி தான் என்னோட வரிசை ;))

\\’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன்\\

நீங்க மட்டும் இல்ல நானும் தான். அந்த பாடம் துவங்க விழாவிற்காக போட்ட போஸ்டரில் ராசாவை முழுசாக பெருசாக போட்டுயிருப்பாங்க அதை பார்த்தே ஆகா படம் பிச்சிக்கும் டான்னு நினைச்சேன்.

\1. இயக்குனர் மிஷ்கின் ’நந்தலாலா’ பாடல்களில் சிலவற்றைமட்டுமே படமாக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனக்குத் தேவை இரண்டு பாடல்கள்தான் என்று தெரிந்தும்கூட, ராஜாவை இன்னும் வேலை வாங்கி நிறைய நல்ல பாட்டுகளை வாங்கியிருக்கிறார், அவருக்கு நன்றி!\\

ஏன் அப்படி வச்சாரு அதை எப்படி ராசாக்கிட்ட சொன்னாருன்னு என்பதை பத்தி மிஷ்கின் பாடல் வெளியிட்டு விழாவில் சொல்லியிருக்காரு

இங்க போயி பாருங்கள் 7 clip பாருங்கள்

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/17243.html

\திரும்பத் திரும்ப அதே சூழ்நிலைகள், அதே பல்லவி, அனுபல்லவி, சரணக் கட்டமைப்பு என்று போரடிக்காதா?\\

இசை தான் எல்லாமேன்னு இருக்குற அவருக்கு எப்படி தல போரடிக்கும் அப்படி அடிச்சிட்டா நமக்கு எப்படி இந்த மாதிரி உணர்வுள்ள பாட்டுகள் கிடைக்கும்.

\\தன்னுடைய சொந்த மகன், மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத் துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர் வருந்துவாரா?\\\

இப்படி கேட்ட நீங்களே

\\\ஓர் திரை இசையமைப்பாளராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்ட இளையராஜா, பணம், புகழ், ரசிகர்கள், பாராட்டுகள், விருதுகள் என எல்லாமே நிறைய சம்பாதித்துவிட்டார்,\\\

இப்படி சொல்லியிருக்கிங்க

எப்படி வருத்தப்படுவார்…..நிச்சயமாக வருந்தமாட்டாரு என்பது தான் என்னோட கருத்து 😉

\\தான் ராஜாவாக வாழ்ந்த வீட்டில் இன்னொருவர் கொடி பறப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்காதா?\\

தல

தெலுங்க பத்திரைக்கையில் கொடுத்த பேட்டியில் ராசாக்கிட்ட கேள்வி இது தான்

Q:Whats your advice to upcoming ( new) Music directors

Raja:I told you that still I am learning. Then how can I advice one? I am learning by doing mistakes. Mistakes are my GURU

இன்னும் நான் கத்துக்கிட்டு தான் இருக்கேன்னு சொல்லாற மனுஷன் எப்படி தன்னோட வீட்டுல கொடி பறப்பதை பார்த்து கவலைப்படுவர்.!!!

\\இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.\\

ஆகா…ஆசையை கிளப்பிவிட்டுட்டிங்களே!!!!…..தல கானா அவர்கள் சொன்னதுக்கு ஒரு ரீப்பிட்டே ;))

\\அதைவிட முக்கியம், இப்படிக் கஷ்டப்பட்டுப் பதிவு செய்த ‘மயிலு’ படம், இனி எப்போதும் வெளியாகாது, ?\\

தல

என்ன சொல்லறிங்க!!!??? மயிலு வராதா!!!?? அய்யோ ஏன் தல தெரிஞ்சல் சொல்லுங்கள் தல.

\\அந்தப் பாடல்கள் வீணாகிப் போகவேண்டியதுதான் என்று தெரிய வரும்போது, அவர் மனம் என்ன நினைக்கும்\\

தல

நந்தலாலா மிஷ்கின்கின் ரெண்டாவது படம் முதலிலேயே போயி 2 பாட்டை போட்டுக்கிட்டு வந்துட்டார் ஆனா திடிரென்னு அது முடியல…தயாரிப்பு திரு. AM ரத்னம் அவரோட புள்ளை தான் ஹூரோ போஸ்டர் கூட ஒட்டுனாங்க ஆனா முடியமால் போன படம் தான் மீண்டும் மூணாவது படமாக வந்திருக்கு தல.

ஆனால் எனக்கும் அவரோட மனம் என்ன நினைக்கும் என்பதை தெரிஞ்சிக்க விருப்பமாக உள்ளது.

\\இப்படி இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன, எழுதினால் அதுவே தனிப் புத்தகமாகிவிடும் – How a genius thinks என்பதைப் புரிந்துகொள்ள நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, ராஜாதான்!\\

உண்மை…உண்மை ;))

சமீபத்தில் குமுதம் அரசு கேள்வி பதில் கூட இப்படி ஒரு கேள்வி கேட்டாங்க அவருக்கிட்ட

யாரு தமிழ் சினிமாவின் ஜீனியஸ்ன்னு

அவரு சொன்ன பதில்

இளையாராஜா

அப்படி ஒரு ஜீனியஸ் வாழும் இதே காலத்தில் நானும் வாழ்க்கிறேன் அவரோட இசையை கேட்க்கிறேன் என்பதில் மிகவும் மிகவும் மன நிறைவாக உள்ளது.

பதிவுக்கு ஒரு மிக பெரிய நன்றி தல 😉

கோபிநாத்,

நன்றி 🙂

உங்களுக்கு எல்லோருமே ‘தல’கள்தானா, உங்களுக்கு ரொம்பதான் தன்னடக்கம் தல 🙂

//ஏன் அப்படி வச்சாரு அதை எப்படி ராசாக்கிட்ட சொன்னாருன்னு என்பதை பத்தி மிஷ்கின் பாடல் வெளியிட்டு விழாவில் சொல்லியிருக்காரு//

அவசியம் பார்க்கிறேன், சுட்டிக்கு நன்றி!

//என்ன சொல்லறிங்க!!!??? மயிலு வராதா!!!?? அய்யோ ஏன் தல தெரிஞ்சல் சொல்லுங்கள் தல.//

‘மயிலு’வுடன் மோசர்பியர் – பிரகாஷ் ராஜ் தொடங்கிய இரண்டு படங்கள் ஏற்கெனவே வெளியாகிப் பெட்டிக்குள் புகுந்துவிட்டன, அதன்பிறகு ‘மயிலு’பற்றி எந்தத் தகவலோ, புகைப்படமோ, செய்தியோ இல்லை, இதை வைத்து நான் ஊகித்ததுதான், அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வரவில்லை. வேறு தகவல் கிடைத்தால் சொல்லுங்கள், சந்தோஷப்படுவேன்!

//நந்தலாலா மிஷ்கின்கின் ரெண்டாவது படம் முதலிலேயே போயி 2 பாட்டை போட்டுக்கிட்டு வந்துட்டார் ஆனா திடிரென்னு அது முடியல. முடியமால் போன படம் தான் மீண்டும் மூணாவது படமாக வந்திருக்கு//

ஞாபகம் இருக்கிறது, ஆனால் இது அபூர்வம் அல்லவா? எல்லா நேரங்களிலும் இப்படி நடப்பதில்லையே 🙂

//ஒருகாலத்தில் நிஜமான ‘ராஜா’வாக இருந்த இளையராஜா, இப்போது பத்தோடு பதினொன்றுதான்.

இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிப் பார்க்கிறார்?//

நீங்கள் சொன்னது போல எனக்கும் இந்த கேள்வி பல தருணங்களில் வந்ததுண்டு. எனக்கு தெரிந்தவரை:

1. இளையராஜா என்றோ ஆசைகளீருந்து மீண்டு ஆன்மீகத்தில் சென்றுவிட்டார்.

2. அவரை போன்ற ஜாம்பவான்கள் எந்தத் துரையை சேர்ந்தவராயிருந்தாலும், அடுத்த / இளைய சமுதாயத்ட்தை உற்சாகப்படுத்தி மகிழ்வார்கள்.

இது என் தாழ்மையான கருத்து.

இவண்,
விஜயசாரதி

விஜயசாரதி,

கருத்துக்கு நன்றி!

நீங்கள் சொல்லும் #1 உண்மையாக இருக்கலாம், ஆனால் #2 நிச்சயமாகத் தெரியவில்லை, எனக்குத் தெரிந்து அவர் புதிய இசையமைப்பாளர்கள் யாரைப்பற்றியும் பேசுவதுகூடக் கிடையாது, அவர்களுடைய பாடல்களைக்கூட அவர் கேட்பதாகத் தெரியவில்லை.

இதற்குக் காரணம், பற்றற்ற நிலையா, அல்லது பலர் நினைப்பதுபோல் வறட்டுப் பிடிவாதமா என்பது தெரியவில்லை 🙂

யுவன் ஷங்கர் ராஜாபற்றி அவர் சில சமயம் மேடைகளில் பேசியிருக்கிறார், அவைகூட, ஒரு தந்தையின் பெருமிதமாகதான் இருக்கிறதேதவிர, ஓர் இசையமைப்பாளராக யுவனை ராஜா அங்கீகரிக்கவோ பாராட்டவோ திட்டவோ இல்லை என்றுதான் நினைக்கிறேன், மற்ற இசையமைப்பாளர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்!

ஆன்மீகவாதியாக இருந்தாலும், ராஜாவுக்குப் பாசம் அதிகம், அதனால்தான் பவதாரிணியும், இப்போது கார்த்திக் ராஜாவின் மகனும் சுருதி தவறிப் பாடினாலும் சகித்துக்கொள்கிறார், மற்றவர்களாக இருந்தால் மேலே பாய்ந்திருப்பார் 😉

நம் பிரச்சினையே, நாம் என்ன சிந்திக்கிறோம் என்பதை விடுத்து, ஒரு செஸ் விளையாட்டு போல, அடுத்தவர் என்ன நினைக்கிற்ர்ர் அல்லது நினைத்திருப்பார் என்று நாம் நினைத்துக் கொள்வதில்தான் என்பது, என் உயர்வான 🙂 சிந்தனை.

உங்களுடைய கருத்தை நான் ஆமோதித்தாலும் சில யதார்தங்களையும் நாம் இங்கே பார்க்கவேண்டும்.

1. சில காலங்களுக்கு முன் ஏஆர் ரஹ்மானிடம் உங்களுக்கு பிடித்த இசையப்பாளர் யார் என்ற கேள்விக்கு டி.ஆர் என்று பதிலளித்தார்.

இது தனிப்பட்ட கருத்து என்று ஒதுக்கி விடமுடியாது. இது சரியென்றால் ராஜாவும் சரியே.

2. உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் தன்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயார்படுத்திக் கொள்வார்கள்.

3. ராஜா, ரஹ்மான் போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்டுவதில்லை.

4. பவதாரிணி விஷயத்தில் நீங்கள் சொல்வது 100/100 உண்மை.

5. மற்ற பாடல்களை கேட்காததற்கு, தன் படைப்புகளில் அதன் தாக்கம் வரக்கூடாது என்ற ஒரு காரணமும் இருக்கலாம்.

6. இந்த இடைவெளிக்கு இன்னொரு முக்கிய காரணம் பத்திரிகை அன்பர்கள் ஒன்றை 321 ஆக எழ்துவதுதான்.

R Sathyamurthy, Vijayasarathy R,

நன்றி!

//ஏஆர் ரஹ்மானிடம் உங்களுக்கு பிடித்த இசையப்பாளர் யார் என்ற கேள்விக்கு டி.ஆர் என்று பதிலளித்தார்//

டி ராஜேந்தரா? ஆச்சர்யமாக இருக்கிறது!

//மற்ற பாடல்களை கேட்காததற்கு, தன் படைப்புகளில் அதன் தாக்கம் வரக்கூடாது என்ற ஒரு காரணமும் இருக்கலாம்//

இருக்கலாம், ஆனால் ராஜா போன்றவர்கள் தன் படைப்பைக் கேட்டுப் பாராட்டியோ, குறை சொல்லியோ, ஆலோசனை கொடுத்தோ ஊக்குவிக்கவேண்டும் என்று இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் நினைக்கலாம் இல்லையா? அந்தக் கடமை சீனியர்களுக்கு உண்டுதானே? 🙂

//இந்த இடைவெளிக்கு இன்னொரு முக்கிய காரணம் பத்திரிகை அன்பர்கள் ஒன்றை 321 ஆக எழ்துவதுதான்//

ரொம்ப உண்மை 🙂 அதனால்தானோ என்னவோ, ராஜா அநேகமாக பத்திரிகைப் பேட்டிகளே தருவதில்லை

dear mr. chokkan, please apologize me for posting in english. i dont have tamil keyboard in the computer which i am browising now, in internet centre.
i fully agree with your views that apart from die hard ilaiyaraja sir’s fans, no other bothers about him. very sad but very true. bhavatharini is not an excellent singer but he uses her for some songs with heavy classical touch, for which she is not qualified. for example dhanam’s kannan vandhu. but i am not here to offend maestro, only he knows who is suitable for a particular song, but to my limited knowledge of music some other singer would done justice to that particular song of dhanam.
another issue is reusing his old tunes, which many maestro fans disapprove, because he once said in an interview that he was serving only pickles and appalam. what prevents raja sir from preventing to give us feast atleast in films of ” naan kadavul” calibre.even nandhalala songs have a heard earlier effect. even though ” amma un pillai naan” of naan kadavul is good some new tune could have been better.
to conclude , i express my sincere apologies if i have offended anybody in my comment, just this is an emotional outpouring from an ardent ilaiyaraja sir’s follower . for me ilaiyaraja is god.

what prevents raja sir from giving us feast atleast in films of ” naan kadavul” calibre.even nandhalala songs have a heard earlier effect. even though ” amma un pillai naan” of naan kadavul is good some new tune could have been better.

typing error in my previous post is regretted.

உங்கள் எழுத்து நடை அந்தப்பாடலின் அழகுணர்ச்சியை அருமையாக விவரிக்கிறது.

கைப்புள்ள எழுதி இருப்பதையும் பாருங்கள் இங்கே. அவருக்கு வேறு பாடல் பிடித்து இருக்கிறதாம். மற்றதெல்லாம் மெதுவா போகுதுன்னுட்டாரு. ;-)) சிலருக்கு சிலது பிடிக்கும் இல்லையா.

உண்மையிலேயே தேரில்தான் நம்மை அழைத்துச் செல்கிறார் இளையராஜா. எல்லா பாடல்களுமே அருமை. என்னை அழ வைத்த ஒரு பாடல், ‘கை வீசி நடக்கிற காற்றே’. இது ஒரு துள்ளிசைப்பாடல் தான். ஆனால் முடிவில்லாமல் விழுகிற அருவியைப்போல தொடர்ந்து செல்கிற இப்பாடலில், இசையின் இன்னுமொரு பரிமாணத்தை நமக்குக் காட்டுகிறார் இசைஞானி!

குறிப்பு : இரண்டு பாடல்கள் மட்டுமே படத்தில் இடம்பெறவில்லை என்று குறுந்தகட்டின் மேலுறையில் எழுதப்பட்டிருந்தது. மீதமுள்ள நான்கு பாடல்களை எப்படிப் படமாக்கி இருக்கிறார் மிஷ்கின் என்று பார்க்க வேண்டும்

-ப்ரியமுடன்
சேரல்

logesh arvindan, msathia, seralathan,

நன்றி!

//கைப்புள்ள எழுதி இருப்பதையும் பாருங்கள் இங்கே. அவருக்கு வேறு பாடல் பிடித்து இருக்கிறதாம். மற்றதெல்லாம் மெதுவா போகுதுன்னுட்டாரு. ) சிலருக்கு சிலது பிடிக்கும் இல்லையா.//

சுட்டிக்கு நன்றி! ‘கை வீசி நடந்திடும் காற்றே’ இன்னொரு அற்புதமான பாட்டு, அந்த flowவே தனி அழகு!

//என்னை அழ வைத்த ஒரு பாடல், ‘கை வீசி நடக்கிற காற்றே’. //

ஏன் அழுதீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் ‘அருவி’ என்று நீங்கள் சொல்வது மிக அழகான உவமை, நன்றி!

[…] தெருவினுள் நுழைந்த விநாடிமுதல் ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் த… மிக மெதுவாக நகர்ந்து […]

raajavai kurai solvathu yara irunthalum enakku kobam varum. raaja tamil cinemaukku varavittal tamil cinemavin nilai enna endru yosithu parthal theriyum

Vijayakumar,

நன்றி!

//raajavai kurai solvathu yara irunthalum enakku kobam varum. raaja tamil cinemaukku varavittal tamil cinemavin nilai enna endru yosithu parthal theriyum//

உண்மைதான். இதெல்லாம் அவருடைய ரசிகர்களின் செல்லக் கோபம்தானே? நிஜமாகக் குறை சொல்லவில்லையே 🙂

[…] This post was mentioned on Twitter by nchokkan, சதீஷ். சதீஷ் said: RT @nchokkan: நவம்பர்ல ’நந்தலாலா’ வருதாம். ஆஹா! ஒரு போஸ்டர் போட்டுக்கறேன் ப்ளீஸ் –> https://nchokkan.wordpress.com/2009/01/17/nandhalala/ […]

25-டிசம்பர்-10 கிருஸ்மஸ் அன்று மயிலு வெளியாக இருக்கிறதாம்.

////ஏஆர் ரஹ்மானிடம் உங்களுக்கு பிடித்த இசையப்பாளர் யார் என்ற கேள்விக்கு டி.ஆர் என்று பதிலளித்தார்//

கடல் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில், குரு போன்ற என்று விழாவிற்கு வந்திருந்த (ராஜ்) கோட்டி பற்றி குறிப்பிட்டார். அவருக்கு டீ.ஆர , கோட்டி ரொம்ப பிடிக்கும் ஏதோ ஒருவகையில் 🙂

//நீங்கள் சொல்லும் #1 உண்மையாக இருக்கலாம், ஆனால் #2 நிச்சயமாகத் தெரியவில்லை, எனக்குத் தெரிந்து அவர் புதிய இசையமைப்பாளர்கள் யாரைப்பற்றியும் பேசுவதுகூடக் கிடையாது, அவர்களுடைய பாடல்களைக்கூட அவர் கேட்பதாகத் தெரியவில்லை.//

இது சமந்தமாக ஒரு சந்தேகம், ராஜா புதிய இசை அமைப்பாளர்களை கேட்காமல் இருக்கலாம், அது சாத்தியம். யார் பாடகர்களை தேர்ந்தெடுப்பார்கள் ? ராஜாவின் இசையில் ரஹ்மான் மற்றும் அவருக்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் அறிமுகபடுத்திய பாடகர்களை பாட வைத்திருக்கிறார்.

அவர்கள் பாடிய பாடலை கேட்டிருப்பாரா ? அல்லது எப்படி அவர்களை பாட தேர்ந்தெடுக்கிறார் ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: