Archive for January 18th, 2009
நெரிசல்கள்
Posted January 18, 2009
on:- In: Bangalore | Books | Characters | Kids | Life | Marketing | People | Play | Uncategorized | Visit
- 5 Comments
நேற்றே கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம், குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
ஜுரத்தில் சோர்ந்து படுத்திருந்த குழந்தை, இன்றைக்குப் பழையபடி எல்லோரையும் மிரட்டத் தொடங்கிவிட்டதால், உம்மாச்சியை ஏமாற்றவேண்டாமே என்று கோவிலுக்குக் கிளம்பினோம், கூடவே பக்கத்திலிருக்கும் பூங்காவும் திட்டத்தில் சேர்ந்துகொண்டது.
நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது, கோவில் வாசல் திறந்திருக்கவில்லை. ’நல்லதாப் போச்சு’ என்று பூங்காவினுள் நுழைந்தோம்.
பெங்களூரில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு பூங்காவேனும் இருக்கிறது. காலையில் இரண்டு, மாலையில் இரண்டு எனச் சரியாக தினமும் நான்கு மணி நேரம்மட்டும் திறந்து மூடப்படுவதால், பெரும்பாலான பூங்காக்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.
இந்த விஷயத்தில் மக்களையும் பாராட்டவேண்டும். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பூங்காக்களை அசிங்கப்படுத்துவதில்லை, புல் தரையில்கூட நடப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் இப்படி ஒரு பொறுப்பு எங்கிருந்து வந்ததோ, தெரியவில்லை.
எந்தப் பூங்காவினுள் நுழைந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனக் குறைந்தது ஆறு மொழிகள் கலந்துகட்டிக் கேட்கும். உதாரணமாக இன்றைக்கு என் மனைவி உதிர்த்த ஒரு முத்து, ‘ஒண்ணு இல்லி ரா, இல்லாட்டி அக்கட ஹோகு!’.
கோரமங்களாவில் நாங்கள் சென்ற கோவிலுக்கு எதிரே இரண்டு, இடதுபக்கத்தில் ஒன்று என மொத்தம் மூன்று பூங்காக்கள். அவற்றில் ‘இங்கி-பிங்கி-பாங்கி’ போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து நுழைந்தோம்.
இந்தப் பூங்காவின் மையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்காகப் பரவலாக மணலைப் போட்டு இடம் ஒதுக்கியிருந்தார்கள். அதில் சறுக்கு மரம், சீ-சா, ஊஞ்சல், இன்னும் என்னென்னவோ.
ஏற்கெனவே நிறையக் குழந்தைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்ததால், அநேகமாக எல்லா விளையாட்டுகளுக்கும் க்யூ வரிசை காத்திருந்தது. நங்கை மிகச் சரியாக பத்து விநாடிகளில் ஆர்வம் இழந்து, ‘நாம கோவிலுக்கே போலாம்பா’ என்றாள்.
நங்கையிடம் நான் இதனை அடிக்கடி கவனித்திருக்கிறேன். என்னைப்போலவே, அவளுக்கும் வரிசையில் காத்திருக்கப் பிடிப்பதில்லை, அது எத்தனை முக்கியமான விஷயமாக இருப்பினும், ‘எனக்குத் தேவையில்லை’ என்று திரும்பி வந்துவிடுகிறாள்.
நல்ல வேளையாக, அங்கே சறுக்கிக்கொண்டிருந்த வேறு சில குழந்தைகள் நங்கையை வலிய அழைத்துத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, அவளுக்கு நாங்கள் தேவைப்படவில்லை.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவள் விளையாடிச் சலித்தபிறகு, கோவிலுக்குச் சென்றோம். அங்கேயும் செருப்பு விடும் இடத்தில் தொடங்கி, கடவுள் சன்னிதிவரை சகலத்துக்கும் கூட்டம், க்யூ.
தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரத்தைச் சுவாரஸ்யமாக்கியது, கோவிலின் ஓரமாகக் கண்மூடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணி. தமிழில் கொஞ்சம், தெலுங்கில் கொஞ்சம், சமஸ்கிருதத்தில் மிச்சம் என்று வரிசையாகப் பல பாடல்களை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.
அவருடைய எளிமையான உருவத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கணீர் குரல், அத்தனை கூட்டத்திலும் ஸ்பீக்கரே தேவைப்படாமல் அவர் குரல் எல்லோருக்கும் கேட்டுக்கொண்டிருந்தது.
பின்னர் தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போதும், அந்தப் பெண்மணியைக் கவனித்தேன். நவக்கிரகங்கள் ஒன்பதும் வெவ்வேறு திசைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, அவை ஒவ்வொன்றையும் நேருக்கு நேர் பார்ப்பதுபோல் ஆங்காங்கே நகர்ந்து நின்று வெவ்வேறு பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.
வீடு திரும்பும் வழியில், ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு சிக்னலிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் காத்திருக்கவேண்டியிருந்தது. மக்கள் இந்த நேரத்தை வீணாக்கவேண்டாமே என்று பல குட்டி வியாபாரிகள் முளைத்துவிடுகிறார்கள்.
பெங்களூரில் வார நாள்கள் என்றால் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக மணிக்கணக்காகப் பயணம் செய்கிறவர்கள் அதிகம், வார இறுதியில் குடும்பத்துடன் சொந்த வாகனத்தில் வெளியே சென்று திரும்புகிறவர்களும் அதிகம். இவர்களில் யாரும், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவே முடியாது.
இந்த அபாக்கியவான்களைக் குறிவைத்து, பெங்களூரில் தினந்தோறும் பல லட்ச ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. பொம்மைகள், புத்தகங்கள், தொப்பி, கையுறைகள், சீசனுக்கு ஏற்ப இன்னும் என்னென்னவோ பொருள்கள் இந்தப் போக்குவரத்து சிக்னல் வியாபாரிகளிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம், அவர்கள் நூறு ரூபாய் சொல்லும் பொருளைப் பன்னிரண்டு ரூபாய் என்கிற அளவில் குறைத்துக் கேட்க தைரியம் இல்லாவிட்டால், ஏமாந்துபோவோம். எப்போது பச்சை விழுமோ என்கிற டென்ஷனில் இருக்கிற நம்முடைய பரபரப்பு / பதற்றத்தை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
இன்றைக்கு எங்கள் ஆட்டோவுக்குள் தலையை நுழைத்த ஒரு வியாபாரி, எங்களைப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக நங்கையிடம் பலூனை நீட்டினார், ‘பாப்பா, பலூன் சூப்பரா இருக்கு, அப்பாகிட்டே சொல்லும்மா, வாங்கித் தருவார்’
எனக்குச் சட்டென்று கோபம் வந்தது. எங்கள் மகளுக்கு என்ன தேவை என்று முடிவு செய்ய இந்த ஆள் யார்?
ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகக் குழந்தைகளிடம் நீட்டப்படும் பொருள்களில் பெரும்பாலானவை அவர்களுக்கு உடனே பிடித்துவிடுகின்றன, ‘வாங்கிக் கொடுப்பா’ என்று அவர்கள் கெஞ்ச, அதை மறுக்கமுடியாமல், ஏற்கவும் முடியாமல் பெற்றோர் திண்டாட, குழந்தைகள்மீது கோபப்பட, அவர்கள் கோபித்துக்கொண்டு அழ, ஒரு சிறு குடும்பக் கலவரமே ஏற்பட்டுவிடுகிறது.
தேவையில்லாத பொருள்கள்மீது ஆசைப்படுவது குழந்தைகளின் பிரச்னைமட்டுமல்ல. ஷாப்பிங் மால்களில் கண்ணில் படுவதையெல்லாம் எடுத்து வண்டிக்குள் போட்டுவிட்டுக் கடன் அட்டையைத் தேய்ப்பது ‘வளர்ந்த’ பெரியவர்கள்தானே?
எது எப்படியாகினும், நங்கைக்கு நான் அந்த பலூனை வாங்கித் தரவில்லை, ‘நாளைக்கு ஆஃபீஸ் விட்டு வரும்போது, வேற பலூன் வாங்கிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டேன்.
இதற்கு முதல் காரணம், அந்த வியாபாரி எனது ‘அதிகார’ எல்லையில் குறுக்கிட்டது என் ஈகோவுக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு காரணம், இதுபோன்ற பலூன்களில் நிரப்பப்படும் வாயுக்களால் ஏதோ பிரச்னை என்று சமீபத்தில் படித்திருந்தேன், இந்த பலூனோ, அல்லது அதை நிரப்புகிற வாயு இயந்திரமோ வெடித்து இரண்டு குழந்தைகள் படுகாயப்பட்டிருந்தார்கள்.
எனக்கு விஷயம் முழுசாகத் தெரியவில்லை, யாரோ சொல்லிக் கேட்டதுதான். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் எதற்கு ரிஸ்க்? நங்கைக்கு இனிமேல் ஊதப்படாத பலூன்கள்மட்டுமே வாங்கித் தருவது எனக் கொள்கை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.
இன்றைய மாலைப் பயணம், நெரிசலில் தொடங்கி, நெரிசலில் முடிந்தது. இடையில் தென்றல் காற்றுபோல ஒரு சந்தோஷம், பூங்காவுக்கும் கோவிலுக்கும் இடையில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் அதிசயமாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் கிடைத்தன. பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் (இரண்டு பாகங்கள்), ரொம்ப நாளாக வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த விஷ்ணுபுரமும் பாதி விலைக்கு வாங்கினேன்.
மூன்றும் மிகப் பெரிய புத்தகங்கள், நிச்சயமாக இப்போதைக்கு வாசிக்க முடியப்போவதில்லை. என்றாலும், நினைத்த புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்குவதும் ஒரு சந்தோஷம்தான், அதனால் ஏற்படுகிற புத்தக நெரிசலும்கூட இன்ப அவஸ்தைதான்.
***
என். சொக்கன் …
18 01 2009