எல்லாம் வல்ல ஜனார்த்தன்
Posted January 21, 2009
on:- In: Change | Characters | Confidence | Customer Care | Customer Service | Customers | IT | Marketing | People | Technology | Uncategorized
- 12 Comments
முந்தாநாள் காலையில், சிங்கப்பூரிலிருந்து சில பெருந்தனக்காரர்கள் வந்திருந்தார்கள்.
எல்லாம் நம் ஊர்க் காரர்கள்தான். போன தலைமுறையில் அங்கே செட்டிலாகிவிட்டவர்கள். ஏதோ பெரிய தொழில் செய்து சௌக்கியமாக வாழ்கிறார்கள்.
அவர்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்த, இணைய தளம் தேவைப்படுகிறது. அதில் அவர்களின் தயாரிப்புகளைப்பற்றி விரிவாகப் படிக்கும் வசதி, கடன் அட்டை பயன்படுத்தி வாங்கும் வசதி, ஏற்கெனவே வாங்கியவர்கள் குற்றம், குறை சொல்லும் வசதி எனச் சகலமும் வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார்கள்.
’வருக வருக மகா ஜனங்களே’ என்று நாங்கள் அவர்களை வரவேற்று உட்காரவைத்து, வழக்கமான Corporate Presentation(இதற்கு என்ன தமிழ் வார்த்தை?)ஐ நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு விளக்கிச் சொல்லி போரடித்தோம். அவர்களும் புரிந்ததுபோல் தலையைப் பெரிதாக ஆட்டினார்கள்.
பின்னர், அவர்களுடைய தொழில்பற்றி நாங்கள் என்ன புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை விவரித்தோம். கிட்டத்தட்ட இதேமாதிரியான வேறு வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்றும் மேம்போக்காகச் சொன்னோம்.
உடனடியாக, நம்மவர்களுக்குச் சுவாரஸ்யம் பொங்கியது, ’யார் அந்த முந்தைய வாடிக்கையாளர்கள்? அவர்களுக்கு நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்’ என்று கேட்டார்கள்.
‘அச்சச்சோ, அதை வெளியில் சொல்வது நியாயமாக இருக்காது’ என்றார் எங்கள் விற்பனைப் பிரதிநிதி, கழுத்து ’டை’யை இறுக்கிக்கொண்டு, ‘வாடிக்கையாளர்களின் விவரங்களை ஒருபோதும் வெளியில் சொல்வதில்லை என்பதில் நாங்கள் மிகப் பிடிவாதமாக இருக்கிறோம்’ என்று மார் தட்டினார்.
இப்படி ஒரு மர்ம முடிச்சைப் போட்டால், அவர்கள் சும்மா இருப்பார்களா? ‘எங்கள் காதில்மட்டும் ரகசியமாகச் சொல்லுங்களேன் ப்ளீஸ்’ என்று கெஞ்சினார்கள்.
‘ம்ஹூம், சான்ஸே இல்லை’ என்றார் மரியாதைக்குரிய விற்பனைப் பிரதிநிதி, ‘அவர்கள் பெயரை அல்லது தொழில் ரகசியங்களை நாங்கள் உங்களுக்குச் சொன்னால், பின்னர் உங்களுடைய விவரங்களை நாங்கள் வேறு யாரிடமேனும் சொல்லவேண்டியிருக்கும், தயவுசெய்து மன்னியுங்கள்’
இப்படி அவர் சொன்னதும், சிங்கப்பூர் பெருந்தனக்காரர்களுக்கு ரொம்பத் திருப்தி. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டிக்கொண்டதும், எனக்கு ஜெஃப்ரே ஆர்ச்சரின் சிறுகதை ஒன்று ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் ஞாபகம் வந்தது.
அந்தச் சிறுகதையின் பெயர் என்ன என்று நான் யோசித்து முடிப்பதற்குள், வந்தவர்கள் தங்களுடைய தொழில் ரகசியங்களை விவரிக்கத் தொடங்கினார்கள், நாங்கள் பேசுவது மொத்தமும் டிஜிட்டல் ஆடியோவாகப் பதிவாகிக்கொண்டிருந்தபோதும், பலர் அநாவசியமாகக் குறிப்பெழுதிக்கொண்டிருந்தார்கள்.
’ஒரு கஸ்டமர் உங்களுக்கு ஃபோன் செய்யும்போது, அவரைப்பற்றிய விவரங்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?’
‘ரொம்பச் சுலபம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஸ்டமர் நம்பர் இருக்கு, அதை வெச்சு அவங்களோட டீடெய்ல்ஸ் தேடி எடுத்துடுவோம்’
’இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லமுடியுமா?’
‘அதுக்கு நீங்க மிஸ்டர் ஜனார்தன்கிட்டே பேசணும்’ அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
யார் அந்த ஜனார்தன்? வெளியே பீங்கான் குவளையில் நிமிடத்துக்கு ஒரு காபி குடித்துக்கொண்டு காத்திருக்கிறாரே, அவரா?
‘சேச்சே, அவர் எங்க ட்ரைவர்’ என்றார் ஒருவர், ‘ஜனார்தன் ரொம்ப பிஸி, சிங்கப்பூர்ல எங்க கஸ்டமர் டேடா மேனேஜர்’
Customer தெரியும், Data தெரியும், Manager தெரியும், அதென்ன Customer Data Manager? எனக்குப் புரியவில்லை, கொஞ்சம் நோண்டினேன்.
இந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் முந்தைய, இன்றைய வாடிக்கையாளர்களைப்பற்றிய எல்லா விவரங்களையும் பதிவு செய்து, ஒழுங்குபடுத்தி, தேவையான நேரங்களில் வெளியிலெடுத்துத் தருகிற பொறுப்பு எல்லாம் வல்ல ஜனார்தனுடையது. அங்கே அவருடைய தலைமையில் இயங்கும் எட்டு பேர் இந்த விவரங்களை வரிசைப்படுத்தித் தொகுத்திருக்கிறார்கள், தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் தொகுப்பார்கள்.
அப்படியானால், எங்கள் வேலை சுலபமாகிவிட்டது. ஜனார்தன், அவருக்குக் கீழே வேலை பார்க்கும் மென்பொருளாளர்களிடம் பேசினால் போதும், வாடிக்கையாளர் விவரங்கள் எந்த Databaseல் வைக்கப்பட்டிருக்கின்றன, எந்த வடிவத்தில், கட்டமைப்பில் இருக்கின்றன, அவற்றை எங்களுடைய மென்பொருள் எப்படிப் படித்துப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் புரிந்துகொண்டு வேலையைத் தொடங்கிவிடலாம்.
‘ஜனார்தன் ரொம்ப புத்திசாலி’ என்றார் சிங்கப்பூர்ப் பெரியவர், ‘அவருடைய டீம்ல எல்லாப் பசங்களும் நல்ல சுறுசுறுப்பு, எந்தத் தகவல் கேட்டாலும் நொடியில கொண்டாந்துடுவாங்க’
‘அவங்க என்னட டேடாபேஸ், சாஃப்ட்வேர் பயன்படுத்தறாங்க? உங்களுக்குத் தெரியுமா?’
’அதெல்லாம் ஜனார்தனுக்குதான் தெரியும்’ என்றார் மறுபடி, ‘நான் அவரோட நம்பர் தர்றேன், நீங்க அவர்கிட்டயே பேசிக்குங்க’
பிரச்னையில்லை. ஜனார்தனின் மென்பொருளுடன் எங்களுடைய இணைய தளத்துக்கு நேரடித் தொடர்பு (Integration) உருவாக்கிவிட்டால் வேலையில் பாதி முடிந்துவிடும்.
அதன்பிறகு நாங்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டோம். ’வேலை எளிமையானதுதான், சீக்கிரத்தில் செய்துவிடலாம்’ என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காசு விவகாரங்களைப் பேசுவதற்காக மேல் மாடிக்கு அனுப்பிவைத்தோம்.
அத்துடன், அன்றைய கூட்டம் முடிவடைந்தது, எல்லோரும் அவரவர் இருக்கைக்குத் திரும்புவதற்குமுன்னால், எல்லாம் வல்ல ஜனார்தனிடம் ஒரு வார்த்தை பேசிவிடலாமே என்று தோன்றியது.
IP Phone இருக்க பயமேன்? உடனடியாக ஜனார்தனை அழைத்தோம், ‘சுப்ரமண்யம், சுப்ரமண்யம், சண்முகநாதா சுப்ரமண்யம்’ என்று காலர் ட்யூன் ஓடியது.
ஆஹா, பக்தி மயமான ஜனார்தன், டேட்டா மயமான ஜனார்தன், எங்கள் ப்ராஜெக்ட் சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது.
ஜனார்தனுக்குக் கீச்சுக் குரல். எங்கள் நிறுவனத்தின் பெயர் சொன்னதும், ‘தெரியும்ங்க, பாஸ் சொன்னார்’ என்றார் இந்திய ஆங்கிலத்தில், ‘சார் தமிழா?’
‘அட, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’
‘குரல் தெரியுது சார்’ என்றார் பெருமிதத்துடன், ‘நான் திருச்சி, நீங்க?’
‘நாம அப்புறம் நிதானமாப் பேசுவோம் சார், இங்கே என்னோட இன்னும் நாலு பேர் காத்திருக்காங்க’
’அவங்களும் தமிழா?’
நான் கஷ்டப்பட்டு எரிச்சலை அடக்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல ஜனார்தனைக் கோபித்துக்கொண்டால் எங்கள் ப்ராஜெக்ட் அம்பேல்.
பொறுமையாக, நாங்கள் இதுவரை பேசிய விவரங்கள் அனைத்தையும் அவருக்கு விளக்கிச் சொன்னோம், ’நாங்க வடிவமைக்கப்போற Web Siteக்கும் உங்க Customer Databaseக்கும் Integration செய்யணும், அதுபத்தி உங்ககிட்ட பேசலாம்ன்னு கூப்டோம்’
அவர் உற்சாகமாக, ‘ஓ, பேசலாமே’ என்றார், ‘உங்களுக்கு என்ன விவரம் வேணும்ன்னு சொல்லுங்க, நான் ஹெல்ப் பண்றேன்’
நான் தொண்டையைச் செருமிக்கொண்டு கேள்விகளை ஆரம்பித்தேன், ‘நீங்க கஸ்டமர் விவரமெல்லாம் எந்த டேடாபேஸ்ல வெச்சிருக்கீங்க, அதை எப்படி வெளியே எடுக்கறீங்க, SQL Query-ஆ, அல்லது வேற மெத்தட்ஸ் வெச்சிருக்கீங்களா?’
மறுமுனையில் அவரிடம் ஒரு நீண்ட அமைதி. சில விநாடிகளுக்குப்பிறகு, நான் தொலைபேசி இணைப்பு சரியாக இருக்கிறதா என்று சந்தேகப்படத் தொடங்கியபோது, ஜனார்தன் மீண்டும் பேசினார், ‘சார், எனக்கு ஒரு சந்தேகம்’
‘என்னது?’
‘நீங்க ஏதோ டேடாபேஸ்ன்னு சொன்னீங்களே, அப்படீன்னா என்ன?’
நான் ஆடிப்போய்விட்டேன். எல்லாம் வல்ல ஜனார்தனுக்கு டேடாபேஸ் என்றால் என்ன என்பது தெரியாதா? இதென்ன கலாட்டா?
‘சார், உங்க கஸ்டமர் விவரமெல்லாம் நீங்க எங்கே, எப்படிச் சேமித்து வெச்சிருக்கீங்க?’
‘எல்லாத் தகவலும் ஒழுங்கா ப்ரின்ட் செஞ்சு, ஃபைல் போட்டு, ஏரியாவாரியா தனித்தனி கேபினெட்ல பிரிச்சுவெச்சிருக்கோம் சார்’ என்றார் அவர், ‘நம்ம பசங்க ரொம்ப சுறுசுறுப்பு, ஒவ்வொருத்தனும் எந்த கஸ்டமர்பற்றின விவரங்கள் எங்கே இருக்கு-ன்னு மனப்பாடமா வெச்சிருக்கானுங்க, உங்களுக்கு எந்த டீடெய்ல்ஸ் வேணும்ன்னாலும் ரெண்டு நிமிஷத்தில தேடி எடுத்துக் கொடுத்துடுவானுங்க’
அவர் தொடர்ந்து பேச, எங்களுக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பித்திருந்தது.
***
என். சொக்கன் …
21 01 2009
12 Responses to "எல்லாம் வல்ல ஜனார்த்தன்"

Clean Sweep Ignatius! ஞாபகம் வந்து விட்டதா? ராகிரா மொழிபெயர்ப்பின் தலைப்பு : நெற்றிப்பொட்டில் ஒரு துப்பாக்கி.
அபூர்வ சகோதரர்கள் ஜனக்ராஜ் கமல் டயலாக்:
“சம்பவம் நடந்த அன்னிக்கு கார்லே போனியா? சே யெஸ் ஆர் நோ
யெஸ் சார்.
சம்பவம் நடந்த அன்னிக்கு பாட்டு பாடினியா? சே யெஸ் ஆர் நோ
யெஸ் சார்.. ஒரு சந்தேகம் சார்
கேளு
இந்த சம்ப்வம் சம்பவம்னு சொல்றீங்களே.. அது என்ன சார்?


//அவர் தொடர்ந்து பேச, எங்களுக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பித்திருந்தது.//
ஹா ஹா ஹா! கதையின் பாதியிலேயே இப்பிடித்தான் நடந்திருக்கும் என ஊகித்துவிட்டேன்!


lol 😉


Clean Sweep Ignatius காக ஒரு பினாத்தாலாருக்கு ஸ்பெஷல் நன்றி.. 🙂 Twist in the tale ல் ஏற்கனவே படித்திருக்கிறேன்.. ஆனால், சுத்தமாக நினைவில் இல்லை.. இன்று, தேடிப்பிடித்து இன்னொரு முறை படிச்சாச்சு..


//நீங்க ஏதோ டேடாபேஸ்ன்னு சொன்னீங்களே, அப்படீன்னா என்ன?’//
:-))))))))))))))))))
அருமையான நடையில் எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்!!


nalla nagaichuvayaana pathivu, but Janarthan mathiri aatkal irunthaal thaan s/w boni panna midiyuthu , illaya 🙂


பட்டாம் பூச்சி Papillion (spelling ?) என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பு. படமாககூட வந்தது ஸ்டீவ் மக்குயின் டஸ்டின் ஹாஃப்மென் நடித்தது

1 | இலவசக்கொத்தனார்
January 21, 2009 at 9:39 am
வெல்கம் டு தி க்ளப். இதே மாதிரி எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதைப் பத்தி நானும் பதிவு போடறேன். இந்த அளவு அழகா எழுத வராது என்பது இப்போதைக்குப் போட்டுக்கும் டிஸ்கி. 🙂