மலேசியா: மீதமிருக்கும் குறிப்புகள்
Posted January 21, 2009
on:- In: Books | Food | Language | Malaysia | Translation | Travel | Uncategorized | Vegetarian
- 8 Comments
மலேசியாவிலிருந்து திரும்பி வந்தாகிவிட்டது. ஆனால் எழுத நினைத்த சில குறிப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். ஆகவே இங்கே சுருக்கமாகப் பட்டியல் போட்டுவிடுகிறேன்.
- மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். அதுவும் யோசித்துப் பார்க்க ஜாலியாகதான் இருக்கிறது. உதாரணமாக, நண்பர் முகேஷுடன் காரில் சென்றபோது கோலா லம்பூர்ச் சாலைகளில் நான் பார்த்த சில வார்த்தைகள் – இவை ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கின்றன என்று யோசியுங்கள்: Ekspress, Sentral, Stesen, Klinik, Kolej
- கோலா லம்பூர் விமான நிலையத்துக்கு அதிவேக ரயிலில் சென்றேன், மலிவு விலை (35 வெள்ளி), மிகச் சுத்தமான இருக்கைகள், மற்ற வசதிகள், Non-Stop சேவை என்பதால், ‘சரியாக இருபத்தெட்டு நிமிடத்தில் விமான நிலையம்’ என்று அறிவித்தார்கள், இரண்டு நிமிடம் முன்னதாகவே சென்று சேர்ந்துவிட்டோம்
- அத்தனை பெரிய கோலா லம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏனோ ஏழு மணிக்கே கூட்டம் குறைவு. அதுவும் எங்கள் விமானம் கிளம்பும் வாசலில் ஆள், அரவமில்லாமல் இருட்டிக் கிடந்தது, தனியே உட்கார்ந்திருக்கப் பயமாகிவிட்டது
- மறுபடியும் அசைவ உணவுபற்றிப் புலம்பினால் ‘தடித் தாண்டவராயா’ என்று யாரேனும் அடிக்க வருவார்கள். ஆனாலும், இதைச் சொல்லாமல் இருக்கமுடியாது: வகைக்கு இரண்டாக அத்தனை பளபளப்பு உணவகங்கள் கொண்ட கோலா லம்பூர் விமான நிலையத்தில் சைவச் சாப்பாடு – ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்கூட எங்கேயும் கிடைக்கவில்லை, ராப்பிச்சைக்காரன்போல் ஒவ்வொரு கடை வாசலாக ஏறி, இறங்கித் தோற்றபிறகு, கடைசியாக ஓர் இத்தாலிய உணவகத்தில் தக்காளி, வெங்காய பிட்ஸா கிடைத்தது, ஒரே ஒரு துண்டு இந்திய மதிப்பில் 125 ரூபாய், ஆறி அவலாகப் போன பிட்ஸாவுக்குத் தொட்டுக்கொள்ள பழப் பச்சடி, 250 ரூபாய் … ஏதோ, பசித்த நேரத்தில் இதுவேனும் கிடைத்ததே என்று அவசரமாக விழுங்கிவைத்தேன்
- விமானத்தில் என்னருகே அமர்ந்திருந்த பெரியவர், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார், ‘அங்கே ஏற்கெனவே ஜனவரி 17 பிறந்துவிட்டது, ஆனால் இங்கே இன்னும் ஜனவரி 16தான்’ என்று புலம்பினார், ‘ஒருவேளை இந்தியா போய் இறங்கினால் ஜனவரி 15ஆக இருக்குமோ’ என்று அநியாயத்துக்குப் பதற்றப்பட்டவருக்கு நல்வழி சொல்லித் தேற்றினேன்
- இந்தமுறை, எனக்குத் தமிழ் பேப்பர் கிடைக்கவில்லை, அரை கிலோ எடையிருந்த ஆங்கிலச் செய்தித் தாளைத் தூக்கிப் படித்தாலே கை வலித்தது. ஆனாலும் அதில் ஒரு சுவாரஸ்ய செய்தியைப் படித்துக் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது: மலேசியாவில் வருடத்துக்கு 1000 வெள்ளி(இந்திய மதிப்பில் 12000 ரூபாய்களுக்கு மேல்)வரை புத்தகம் வாங்குவதற்காகச் செலவிட்டால் வருமான வரி விலக்கு உண்டாமே, நம் ஊரிலும் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டுவரக்கூடாதா? மத்திய அரசில் பதிப்பாளர்களுக்கென்று ஒரு லாபி இருந்தால் வேலை நடக்குமோ, என்னவோ
- ஜனவரி 16ம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னால், இந்தியா வந்திறங்கினேன். மலேசியப் பதிவுகள் இத்துடன் முற்றும், நீங்கள் பிழைத்தீர்கள்!
***
என். சொக்கன் …
21 01 2009
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:
8 Responses to "மலேசியா: மீதமிருக்கும் குறிப்புகள்"

ஒரு டிரிப், யு.எஸ் வந்துட்டு போங்களேன்..
நல்ல (சைவ) சாப்பாடு கிடைக்கும்..
ஊர் சுற்றி பார்த்த மாதிரியும் இருக்கும்..
அப்புறம் வந்த வேலையை முடிச்சா செஞ்சுட்டு போங்க.
கிழக்கு முதல் மேற்கு வரை எல்லா ஊருலையும் நம்ம ஆளுங்க இருக்காங்க..


//அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். //
செம வாடை அடிக்குது. 😀


//மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். //
மலாய் மொழி நம் மொழிப்போல் பழமையானது அல்ல. அதனால், ஆங்கிலம், தமிழ், போர்த்துகீஸ் வார்த்தைகள் இந்த மொழியில் நிறைய இருக்கும்..
சில தமிழ் வார்த்தைகள் உதாரணத்துக்கு.
Almari – அலமாரி
Syurga – சொர்க்கம்
Neraka – நரகம்

1 | இலவசக்கொத்தனார்
January 21, 2009 at 10:38 pm
பாயிண்ட் 6 – நம்ம ஊரில் புத்தகங்கள் விற்குமோ இல்லையோ பில் புக் அமோகமாகப் போகும்.
புதரகத்தில், சாரி இனிமே அப்படிச் சொல்லக்கூடாதோ, பராகபுரியில் படிப்பு, வியாபார சம்பந்தப்பட்ட புத்தகங்களுக்கு இது போன்ற வரிவிலக்கு உண்டு.