மனம் போன போக்கில்

பழைய வீடு

Posted on: January 22, 2009

நான்கரை கிலோ மீட்டர்களைக் கடக்க ஒருவருக்கு எத்தனை நேரமாகும்?

சற்றே வேகமாக நடந்தால், நாற்பது நிமிடம், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ,. படுசோம்பேறியாக இருந்தால்கூட நாலு மணி நேரம், அதற்குமேல் ஆகாது.

ஆனால் எனக்கு, முழுசாக மூன்றரை வருடங்கள் ஆனது.

சொந்த வீடு கட்டிக்கொண்டு பிடிஎம் லேஅவுட் வந்தபிறகு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பழைய ஜே.பி. நகர் வீட்டைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளில், ஒருமுறை என்றால் ஒருமுறைகூட அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒருவிதத்தில், நானும் என் மனைவியும் இதனைத் திட்டமிட்டுத் தவிர்த்துவந்திருக்கிறோம் என்றுகூடத் தோன்றுகிறது. காரணம், சோம்பேறித்தனம் இல்லை, ஒருவிதமான வெறுப்பு.

மூன்று வருடம் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கு, அந்த வீட்டின் சொந்தக்காரர்மேல் கொஞ்சமேனும் வெறுப்பு வராவிட்டால்தான் ஆச்சர்யம்.

காரணம், இது ஒரு விநோதமான உறவு. வீட்டுச் சொந்தக்காரரைப் பொறுத்தவரை, வாடகைக்கு இருக்கிறவர் ஒரு பண மெஷின், சமூகப் படிநிலையில் தனக்குக் கீழே இருக்கிற அவரை இவர் கொஞ்சம் அசட்டையாகதான் நினைப்பார்.

ஆகவே, முதல் தேதி ஆனதும் குடித்தனக்காரர் சரியாக வாடகை தந்துவிடவேண்டும், மீதமுள்ள 29 / 30 நாள்களும் கண்ணில் படாமல் மறைந்துவிடவேண்டும். இதுதான் பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், வீட்டில் குடியிருக்கிறவர்கள் அப்படி நினைப்பதில்லை, ‘மாசம் பொறந்தா காசை எண்ணி நீட்டறோம்ல? அதுக்கு நாம கேட்கிறதைச் செஞ்சு  கொடுக்கவேண்டாமா’ என்று அவர்கள் சிறுமை கண்டு பொங்குவார்கள்.

இந்தப் பொதுவிதிக்கு விலக்கான ‘ரொம்ப நல்லவங்கப்பா’ ரக வீட்டுச் சொந்தக்காரர்கள், குடித்தனக்காரர்கள் உண்டு. ஆனால் பெருநகரங்களில் அவர்கள் அதிகம் தென்படுவதில்லை.

எங்கள் வீட்டுச் சொந்தக்காரர், நிச்சயமாக ராட்சஸர் இல்லை. ஆனால் தேவதையாகவும் இல்லை.

எனக்குத் திருமணமாவதற்குமுன்பே, இந்த வீட்டைப் பார்த்து முடிவு செய்துவிட்டேன். சாஸ்திரத்துக்கு இரண்டு பெட்டிகளைக் கொண்டுவந்து உள்ளே வைத்து ரிஸர்வ் செய்தாகிவிட்டது.

அதன்பிறகு நான் விடுமுறையில் போய் திருமணம் செய்துகொண்டு திரும்பினேன், அதே வீட்டின் மாடியில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், என் அப்பா, அம்மா, மனைவி எல்லோரையும் அன்போடு வரவேற்றார், காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

அவர் பேசிய ஓட்டைத் தமிழில் அசந்துபோன என் பெற்றோர், ’ரெண்டு பேரும் சின்னப் பசங்க(?), நீங்கதான் இவங்களை நல்லவிதமாப் பார்த்துக்கணும்’ என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் அவர் எங்களுடன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தார். ஏதேனும் பிரச்னை என்று அவரிடம் போய் நின்றால் உதவி கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல ஆலோசனை கிடைக்கும்.

ஆனால், பேச்சுமட்டும்தான் வெண்ணெய், அவர் எங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடு என்னவோ, வெறும் பச்சைத் தண்ணீர் ரகத்தில்தான் இருந்தது.

அந்த வீட்டில், பகல் நேரத்திலேயே வெளிச்சம் வராது, மூன்று திசைகளிலும் மற்ற வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருப்பதால், எல்லா அறைகளிலும் அதிகாலைமுதல் இரவு தூங்கச் செல்லும்வரை கண்டிப்பாக விளக்குகள் தேவைப்படும்.

வாசல் கதவில் தொடங்கி, புழக்கடை பாத்ரூம்வரை எல்லா மர சமாசாரங்களும், குறைந்தபட்சம் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டவை. மூன்றில் ஒன்று உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

முக்கியமாக, பிரதானப் படுக்கை அறையின் அலமாரிக் கதவைக் காணவே காணோம், ஒருகாலத்தில் அது அங்கே இருந்திருப்பதற்கான அடையாளமாக, இரண்டு ‘கீல்’கள்மட்டும் தொற்றியிருந்தன.

பாத்ரூமில் யார் குளித்தாலும், உடனடியாக அது வெள்ளப் பிரதேசமாகிவிடும், அழுக்குத் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் சரியாக இல்லை.

கடைசியாக, மிகப் பெரிய பிரச்னை, எங்களுக்குத் தண்ணீர் இறைக்கும் மோட்டர் ஸ்விட்சை, அவர்கள் தங்களுடைய வீட்டுக்குள் மறைத்துவைத்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் தண்ணீர்த் தொட்டி வறண்டுவிட்டாலும், படியேறி மேலே சென்று, ‘கொஞ்சம் மோட்டர் போடுங்களேன்’ என்று கெஞ்சவேண்டும்.

ஒருவேளை, அவர்கள் வெளியூர் சென்றிருந்தால்? இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழித்தபடி அவர்கள் சீக்கிரம் திரும்பி வரப் பிரார்த்தனை செய்யவேண்டியதுதான்!

அதெல்லாம் சரி, இப்படி ஒரு ‘சொதப்பல்’ வீட்டை நீ ஏன் தேர்ந்தெடுத்தாய் என்று நீங்கள் கேட்கலாம், ரொம்ப நியாயமான கேள்வி.

ஆனால், கல்யாணத்துக்குமுன்னால், வீடு என்பது வெறும் கதவு, நான்கு சுவர்கள், பாத்ரூம், குழாயைத் திறந்தால் தண்ணீர், அவ்வளவுதானே? அதற்குமேல் வீட்டில் இத்தனை நுட்பங்கள் இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

விளைவு, ட்ரெய்லரைப் பார்த்து மயங்கிப்போய் படத்திற்கு டிக்கெட் வாங்கினவன்போல் இந்த வீட்டில் மாட்டிக்கொண்டுவிட்டேன். அடுத்தடுத்த மாதங்களில், வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றன.

இதுபற்றி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் எத்தனையோமுறை கெஞ்சியிருக்கிறோம், கோபப்பட்டிருக்கிறோம், அவரும் ’செஞ்சுடலாம், செஞ்சுடலாம்’ என்று நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.

ஆனால், கடைசிவரை அவர் எதையும் செய்துதரவில்லை, எங்கள் வீடு நாங்கள் முதல் நாள் பார்த்த அதே குறைகளுடன்தான் எப்போதும் இருந்தது.

கோபப்பட்டு வீடு மாறிவிடலாம் என்றால், 11 மாத ஒப்பந்தம் எங்களைத் தடுத்தது, நடுவில் பிய்த்துக்கொண்டு போனால், நாங்கள் அவரிடம் கொடுத்துவைத்திருக்கிற முன்பணத்திற்கு ஆபத்து வரும்.

ஆகவே, பல்லைக் கடித்துக்கொண்டு நாளை ஓட்டினோம், ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு பிரமாதமான தந்திரம் செய்தார்.

அந்த வீட்டுக்கு நாங்கள் குடிவரும்போது, மாத வாடகை ரூபாய் ஆறாயிரம். பதினொரு மாதங்கள் கழித்து இந்தத் தொகை பத்து சதவிகிதம் உயர்த்தப்படும்.

ஆனால் இப்போது, ‘நான் உங்கள் வாடகையை ஏற்றப்போவதில்லை’ என்றார் எங்கள் வீட்டுக்காரர், ‘இது நான் உங்கள் திருமணத்துக்குக் கொடுத்த பரிசாக இருக்கட்டும்’

எப்போதோ நடந்த திருமணத்துக்கு இப்போது ஏன் பரிசு? நாங்கள் யோசிக்கவேண்டுமில்லையா? மாதம் அறுநூறு ரூபாய் மிச்சமாகிறதே என்கிற சந்தோஷத்தில் தலையைப் பலமாக ஆட்டிவிட்டோம்.

இதனால், முதல் ஒப்பந்தத்தின் முடிவில் இன்னொரு 11 மாத ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. மறுபடியும், நான் என்னையும் அறியாமல் அந்த வலையில் மாட்டிக்கொண்டுவிட்டேன்.

இப்போது, எங்களுக்கு மாதம் அறுநூறு ரூபாய் மிச்சம்தான், ஆனால், கொடுக்கிற ஆறாயிரம் ரூபாய்க்கு அந்த வீடு துளியும் தகுதியில்லை. அதை நாங்கள் அப்போது உணரவில்லை.

ஒருவேளை உணர்ந்திருந்தாலும், பெரிதாக எதையும் செய்திருக்கமுடியாது, நாங்கள் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் அவர் எதையும் செய்து தரப்போவதில்லை, கையாலாகாதவர்களாகச் சும்மா இருக்கவேண்டியதுதான்.

கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த வீட்டின் குறைகளைச் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். வீட்டுக்காரரிடம் நாங்கள் போடுகிற (பிரயோஜனமில்லாத) சண்டைகள் குறைந்துபோயின.

சௌகர்யம் போதாவிட்டாலும், அந்த வீடு ரொம்ப ராசியானது. அங்கேதான் எங்கள் மகள் நங்கை பிறந்தாள், அலுவலகத்தில் முதல் பிரமோஷன் கிடைத்தது, முதல் பத்திரிகைத் தொடர், முதல் புத்தகம் என்று பல சந்தோஷங்கள்.

இதனால், இரண்டாம் ஆண்டின் நிறைவில் எங்களுக்கு வீடு மாறும் எண்ணம் வரவில்லை, ‘நமக்கு இந்த வீடு போதும்’ என்று ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொண்டுவிட்டோம், பத்து சதவிகிதக் கூடுதல் வாடகை கொடுக்கவும் சம்மதித்தோம்.

ஆனால், அந்த மூன்றாவது ஒப்பந்தக் காலம் முடியும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு வேலை செய்தார்.  அதனைச் ’சுத்த அயோக்கியத்தனம்’ என்றுமட்டுமே என்னால் வர்ணிக்கமுடியும்.

முதல் ஆண்டு இறுதியில், அவர் எங்களுடைய வீட்டு வாடகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் எங்களுடைய திருமண(?)ப் பரிசாக, அவர் அந்த வாடகை உயர்வைச் செய்யவில்லை.

இதனால், இரண்டாம் ஆண்டும் தொடர்ந்து நாங்கள் ஆறாயிரம் ரூபாய்மட்டுமே மாத வாடகையாகக் கொடுத்துவந்தோம். மூன்றாம் ஆண்டில் அது பத்து சதவிகிதம் உயர்ந்து 6600 ரூபாய்கள் ஆனது.

இப்போது, பழைய ஒப்பந்தத்தின் விதிமுறையைச் சுட்டிக்காட்டிய எங்கள் வீட்டுக்காரர், ‘அப்போதே நான் உங்களுடைய வாடகையை ஏற்றியிருக்கவேண்டும், மறந்துவிட்டேன், இப்போது அந்தக் கூடுதல் தொகை அறுநூறு ரூபாயை 2 வருடங்களுக்கு மொத்தமாகக் கணக்குப் போட்டுக் கொடுங்கள்’ என்றார்.

அதாவது, 24 * 600 = கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாயை இப்போது நாங்கள் அவருக்குத் தரவேண்டுமாம். ‘இது என்ன அநியாயம்?’ என்று நாங்கள் சண்டைக்குப் போனோம்.

அவரிடம் எப்போது எங்கள் பேச்சு எடுபட்டிருக்கிறது? ’மரியாதையாகக் காசை எண்ணிக் கீழே வை, இல்லாவிட்டால் உன்னுடைய முன்பணத்தில் கழித்துக்கொள்வேன், வீட்டை விட்டு வெளியே போ’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக, அவர் அப்படி முரட்டுத்தனமாகப் பேசுகிற மனிதர் இல்லை. அப்போது அவருடைய மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது, அதுவிஷயமாக ஏதோ பணப் பிரச்னையா தெரியவில்லை, எங்களுக்குக் கொடுத்த திருமணப் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டார்.

அத்துடன், எங்கள் பொறுமை தீர்ந்துபோனது. இந்தப் பணம் போனால் போகட்டும், இனிமேல் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம், உடனடியாக அடுத்த வீடு தேடும் முயற்சிகளில் இறங்கினோம்.

அதுவரை, நான் சொந்த வீடு வாங்குவதுபற்றி யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது, எதற்கு இன்னொருவருக்கு அடிபணிந்து வாழவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.

அடுத்த சில நாள்களில், நாங்கள் ஒரு புதிய வீட்டுக்கான முன்பணம் செலுத்தினோம், பாடுபட்டு வங்கிக் கடன் வாங்கினோம் (ஏன் பாடுபட்டோம் என்பது தனிக் கதை :), அந்த ஒப்பந்த காலம் முடிவதற்குள் புது வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.

எனக்கிருந்த கோபத்துக்கு, எங்களுடைய ‘புதுமனைப் புகுவிழா’வுக்குப் பழைய வீட்டுக்காரரை அழைக்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். என் மனைவிதான் சமாதானப்படுத்தினார், ‘இதை இப்படி யோசிச்சுப் பாரு, அவங்க இப்படி நம்மைப் போட்டுப் படுத்தாட்டி நாம சொந்த வீடு வாங்கியிருக்கமாட்டோம், அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றதா நினைச்சுக்குவோமே’

நாங்கள் வேண்டாவெறுப்பாகக் கொடுத்த பத்திரிகையை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார், ‘இந்த வீடு ரொம்ப ராசி, இங்கே குடியிருந்தவங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிகிட்டுப் போயிருக்காங்க’ என்றார் பெருமையுடன்.

பின்னே? ஒரு வசதியும் செய்து தராமல் காசுமட்டும் கூடுதலாக வேண்டும் என்று பிடுங்கிக்கொண்டே இருந்தால்? எவனுக்குதான் சொந்த வீடு கட்டுகிற ஆசை வராது?

ஒருவழியாக நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்துகொண்டு எங்களுடைய வீட்டுக்குச் சென்றோம். நானும் நான்கைந்து நடை நடந்து, மூன்று ஆண்டுகளுக்குமுன் கொடுத்த முன்பணத்தில் அவர் பிடுங்கியதுபோக மிச்சத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு, அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.

சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து, சமீபத்தில் அந்தப் பழைய தெருவின் வழியே நடந்து போகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே நான் என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை, ஆனால், உள்ளுக்குள் ஏதேதோ கலவை உணர்ச்சிகள், பெரிதாக என்னவோ நிகழப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் நிகழவில்லை. அதே பழைய வீடு, வாசலில் புங்கை மரம், இரும்பு கேட், அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுகூட மாறவில்லை.

கீழ் வீடு, மேல் வீடு என இரண்டு கதவுகளும் சாத்தியிருந்தன. எனக்குப் படியேறத் தோன்றவில்லை. சுத்தமாக ஆர்வம் இல்லை, ஏதேனும் தானாகக் கண்ணில் பட்டால்மட்டும் கவனிக்கத் தயாராக இருந்தேன்.

வருடத்துக்குப் பத்து சதவிகிதம் வாடகை உயர்வு என்கிற கணக்கின்படி பார்த்தால், இப்போது அந்த வீட்டின் வாடகை கிட்டத்தட்ட பத்தாயிரத்தைத் தொட்டிருக்கும், அவ்வளவு காசு கொடுத்து இந்த ஒன்றுமில்லாத வீட்டில் யார் தங்குகிறார்கள்? இத்தனை வருடத்தில் வீட்டுச் சொந்தக்காரர் ஏதேனும் புதிய வசதிகளைச் சேர்த்திருப்பாரா, பழைய பிரச்னைகளைத் தீர்த்திருப்பாரா, எங்களுக்குப்பிறகு அங்கே தங்கியவர்களுடன் வீட்டுச் சொந்தக்காரருக்கு சுமுக உறவு இருந்ததா, அல்லது அவர்களும் வெறுத்துப்போய் புது வீடு கட்டிக்கொண்டார்களா?

பல கேள்விகளுடன் நான் அந்த வீட்டைக் கடந்து நடந்தேன், தெரு முனையைத் தாண்டும்போது, நாங்கள் முன்பு குடியிருந்த கீழ் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

நான் திரும்பிப் பார்க்கவில்லை.

***

என். சொக்கன் …

22 01 2009

9 Responses to "பழைய வீடு"

//‘இந்த வீடு ரொம்ப ராசி, இங்கே குடியிருந்தவங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிகிட்டுப் போயிருக்காங்க’ //

இந்த ஆள் படுத்தற பாட்டுல எவனுக்கும் இன்னொரு வாடகை வீட்டுக்கு போகிற ஆசை வந்திருக்காது!

மறுப்பக்கத்தை பார்த்தவன் என்ற முறையில் – நாலாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு தாஜ்மஹால் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிற tenantசை வைத்து மாராடிக்கும் வீட்டுக்காரர்களை தெரியுமா?

அப்பா அப்பப்பா . முழு மூச்சில் படித்து விட்டேன்.

நீங்க கடன் வாங்க பட்ட பாட்டையும் சீக்கிரம் பாடிடுங்க.

பினாத்தல் சுரேஷ், dYNo, Eswar,

நன்றி 🙂

//நாலாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு தாஜ்மஹால் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிற tenantசை வைத்து மாராடிக்கும் வீட்டுக்காரர்களை தெரியுமா?//

எனக்கு இதுவரை அந்த அனுபவம் இல்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களும் இருந்தால்தானே உலகம் முழுமையடையும்? நீங்கள் ஒரு பதிவு போட்டால் படித்துத் தெரிந்துகொள்வேன் 🙂

//நீங்க கடன் வாங்க பட்ட பாட்டையும் சீக்கிரம் பாடிடுங்க.//

அது ஒரு பெரிய கதை. மூணு பாகமா எழுதினாதான் சரிப்படும் 😉

பெங்களூரில் பெரும்பாலன வீடுகளில் நீங்கள் சொல்லும் நிலைமைதான்.

ஆறு மாதம் குடியிருந்துவிட்டு வீடு காலி செய்தால்கூட “வெள்ளை அடிக்க” என்று 10% முன்பணத்தில் பிடித்தம் செய்கிறார்கள்.
வாடகைக்கு 15-ம் தேதி குடிவந்தாலும் முழு மாச வாடகையை தர வேண்டுமாம்.

சென்னை இந்த விதத்தில் எவ்வளவோ பரவாயில்லை.

சென்னையில் எங்கள் வீட்டில் 16 வருடமாக குடியிருந்த ஒருவர் நாங்கள் வீட்டை விற்கும்போது எங்களிடம் ரூ 23000 பெற்ற விறகே விட்டை காலி செய்தார்.

அவர் கொடுத்து வந்த மாத வாடகை ரூ350 முன்பணம் ரூ2000

வாடகையாக கொடுத்த பணத்தையெல்லாம் காலி செய்யும்போது வாங்கி கொண்டு போய்விட்டார்

மற்றொரு குடித்தனக்காரர் 50 வருடமாக குடியுருந்தார்கள்.அவர்கள் வீட்டை காலி செய்யும்போது 92,000 வாங்கிகொண்டு காலி செய்தார்கள்

பணத்தை வாங்கிகொண்டு அவர்கள் சொன்ன வார்த்தை”நீங்க எல்லாம் நல்லா வசதியாத்தானே இருக்கிங்க ரவுண்டா ரூ 1 இலட்சம் கொடுக்க கூடாதா..?

இந்த கொடுமையை எங்க போய் சொல்ரது

அன்புடன்
அரவிந்தன்

//வழக்கமாக, அவர் அப்படி முரட்டுத்தனமாகப் பேசுகிற மனிதர் இல்லை. அப்போது அவருடைய மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது, அதுவிஷயமாக ஏதோ பணப் பிரச்னையா தெரியவில்லை, எங்களுக்குக் கொடுத்த திருமணப் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டார்.//

பாரபட்சமாக அல்லாமல், அவருடைய நிலையையும் எண்ணி எழுதி இருக்கிறீர்கள். பணம் மனித உணர்வுகளை எப்படி எல்லாம் மாற்றுகிறது?!! இத்தனைக்கும் பணத்தை உருவாக்கியவனே மனிதன் தான்!

//அது ஒரு பெரிய கதை. மூணு பாகமா எழுதினாதான் சரிப்படும் 😉 //

ஐயையோ! இப்பவே நெஞ்சு வலிக்குதே!

நானே எழுதிய பதிவு போல் உள்ளது தங்களது அனுபவங்கள்!! அடியேன் இப்போது நீங்கள் எழுதி உள்ள அனைத்து அனுபவங்களையும் “அனுபவித்து”கொண்டு உள்ளேன்..

முக்கியமாக எனது கழிவறை..கடன் முடிப்பதை விட தண்ணீர் இறைக்க அதிக நேரம் ஆகும்..நான்கு வாளிக்கும் மேல் தண்ணீர் விட்டாலும் எதுவும் உள்ளே போகாது..”ஏழாம் உலகமும்” “ராச லீலா” வும் நினைவுக்கு வர “அதையே” பார்த்து கொண்டே இருக்க வேண்டும்..

அதை விட முக்கியமான விசயம்..எனது வீடும் திருடன் புகுந்த வீடாம்..குடி வந்த பின் ஒரு மாதம் கழித்து ஒரு அச்ட்டையான் உரையாடலில் சிரித்து கொண்டே வீட்டு சொந்தகாரர் சொன்ன போது எனக்கு வந்த உணர்வை என்னவென்று சொல்வது..அன்றைய தூக்கம் பலவிதமான கிலிபிடித்த கனவுகளில் பறிபோனது..

இன்னும் நிறைய உள்ளது..தனிப்பதிவே போடும் அளவு…

நானே எழுதிய பதிவு போல் உள்ளது தங்களது அனுபவங்கள்!! அடியேன் இப்போது நீங்கள் எழுதி உள்ள அனைத்து அனுபவங்களையும் “அனுபவித்து”கொண்டு உள்ளேன்..

முக்கியமாக எனது கழிவறை..கடன் முடிப்பதை விட தண்ணீர் இறைக்க அதிக நேரம் ஆகும்..நான்கு வாளிக்கும் மேல் தண்ணீர் விட்டாலும் எதுவும் உள்ளே போகாது..”ஏழாம் உலகமும்” “ராச லீலா” வும் நினைவுக்கு வர “அதையே” பார்த்து கொண்டே இருக்க வேண்டும்..

அதை விட முக்கியமான விசயம்..எனது வீடு் திருடன் புகுந்த வீடாம்..குடி வந்த பின் ஒரு மாதம் கழித்து ஒரு அசட்டையான உரையாடலில் சிரித்து கொண்டே வீட்டு சொந்தகாரர் சொன்ன போது எனக்கு வந்த உணர்வை என்னவென்று சொல்வது..அன்றைய தூக்கம் பலவிதமான கிலிபிடித்த கனவுகளில் பறிபோனது..

இன்னும் நிறைய உள்ளது..தனிப்பதிவே போடும் அளவு…

அரவிந்தன், ஆதித்தன், rk,

நன்றி!

//சென்னை இந்த விதத்தில் எவ்வளவோ பரவாயில்லை.//

இத்தனை கொடுமைகளைச் சொல்லிவிட்டுப் ‘பரவாயில்லை’ என்கிறீர்களே, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரோ? 🙂

//நீங்க எல்லாம் நல்லா வசதியாத்தானே இருக்கிங்க ரவுண்டா ரூ 1 இலட்சம் கொடுக்க கூடாதா..?//

:-O Shocking!

//ஐயையோ! இப்பவே நெஞ்சு வலிக்குதே!//

கவலைப்படாதீங்க, உரிய இடைவெளி விட்டுதான் எழுதுவேன், ஒரேயடியாக் கழுத்தை நெரிக்கமாட்டேன் 😉

//இன்னும் நிறைய உள்ளது..தனிப்பதிவே போடும் அளவு…//

கண்டிப்பாக எழுதுங்கள் rk!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: