மனம் போன போக்கில்

Archive for January 27th, 2009

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

கடைசியாக அந்தக் குரலைக் கேட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், அதை இப்போது நினைத்தால்கூட உள்ளுக்குள் ஏதோ சிலிர்க்கிறது.

எப்போதும் இப்படிதான். அந்த வயதுப் பையன்களின் உடையாத குழந்தைக் குரல்களைக் கேட்கிறபோதெல்லாம் எனக்கு என்னவோ ஆகிவிடுகிறது. சில விநாடிகளுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகிப் போகிறேன். ஏதோ இனம் புரியாத சோகம், அதற்குக் காரணம் என்னவென்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படிதான் ஹைதராபாத் சென்ற புதிதில் ஒருநாள். ஏழெட்டு நண்பர்களுடன் ஹோட்டலில் கும்பலாகப் போய் உட்கார்ந்து ஜாலியாகப் பேசியபடி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தோம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்குக் காத்திருந்தபோது, அதுவரை எங்களுக்கு சப்ளை செய்த சின்னப் பையன் நேராக என்னிடம் வந்து தெலுங்கில், ‘இன்னும் எதுனா வேணுமா சார்?’ என்பதுபோல் ஏதோ கேட்டான். அதுவரை இல்லாத குற்றவுணர்ச்சி, அந்தப்  பையனின் கீச்சுக் குரலைக் கேட்டவுடன் வந்து சேர்ந்தது. இத்தனை நேரமாக, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என்று அந்தச் சிறுவனை விரட்டியது உறுத்தியது.

அங்கு என்றில்லை. எல்லாக் குழந்தைக் குரல்களும் என்னை உலுக்கிப்போட்டுவிடுகிறது. இந்தச் சின்ன வயதில் அவர்கள் வேலை பார்க்க நேர்கிற நிலைக்கு, மறைமுகமாக நானும் ஒரு காரணமோ என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில், எழுதுகிற புத்தி சும்மா இருப்பதில்லை. அவனை(ளை) ஆழ்ந்து கவனிக்கிற ஆசை வருகிறது. ஆனால் என்னதான் கவனித்து எழுதினாலும் நம்மால் ஒரு ரோமத்தையும் பிடுங்கிவிடமுடியாது என்று புரிகிறபோது வருத்தம் அதிகரிக்கிறது.

என்னால் முடிந்தது, அந்தச் சிறுவன் அல்லது சிறுமியின் நலனுக்காக ஒரு மௌனப் பிரார்த்தனை. அது போதும், அதன்பிறகு அடுத்த கீச்சுக் குரலைக் கேட்கிறவரை சேணம் கட்டிய குதிரைபோல் உலக சந்தோஷங்களைத் துளி உறுத்தல் இன்றி அனுபவிக்கலாம்.

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அந்தக் குரல் மறுபடியும் கேட்கிறது. நினைவுகளுக்குள் திரும்பித் தேடுகிறேன்.

ஹைதராபாத். சாலையோர மஞ்சள் நிற விளக்குகளில் நனைந்தபடி எங்கேயும் ஜனக் கூட்டம். தரையில் விரித்து ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்த காவிப்பல் பெண்ணில் தொடங்கி, ஏஸி ஷோ ரூம்கள்வரை எங்கேயும் மக்கள் நின்றிருக்க, இந்தக் குழந்தைக் குரலை எங்கே தேடமுடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அந்தக் குரல் மீண்டும் சத்தமாக ஒலித்தது.

’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

எனக்குப் பத்தடி பின்னால் நின்றிருந்த தீப்பெட்டி பஸ்ஸிலிருந்துதான் அந்தச் சத்தம் வந்துகொண்டிருந்தது. கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்துடன் நேராக அந்த பஸ்ஸை நோக்கி நடக்கிறேன்.

அதே நேரத்தில், மனத்துக்குள் என்னுடைய இன்னொரு உருவம் என்னைவிடப் பெரியதாக எழுந்து நின்று பிடிவாதமாகக் கையசைக்கிறது, ‘ஏய், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அந்தத் தீப்பெட்டி பஸ்ஸிலயா ஏறப்போறே?’

சட்டென்று நின்றுவிடுகிறேன். நிஜமாகவே எனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது. இல்லாவிட்டால் போயும் போயும் தீப்பெட்டி பஸ்ஸில் ஏற நினைப்பேனா?

ஹைதராபாத் வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் நாங்கள் சந்தித்த மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று, அங்கே இருந்த நான்கு வகைப் பேருந்துகள்.

முதலாவதாக, நம் ஊர் டூரிஸ்ட் பஸ்களைப்போல் உசத்தி ரகம் ஒன்று, இளநீல வண்ணத்தில் அவைகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். ஒரு பக்கம்தான் கதவு, மெத்மெத் சீட்கள், கோட் அணிந்த நடத்துனர்கள், அதுவும் பெண்கள்.

இதற்காகவே, துட்டு அதிகமானாலும் பரவாயில்லை என்று இந்த வகை பஸ்களில்தான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்தோம், அல்லது பயணம் செய்ய விரும்பினோம். இதமான சூழல், மிதப்பதுபோல் ஊர்ந்து செல்லும் அதிவேகத் தேர், அடிக்கடி பஸ்ஸை நிறுத்தித் துன்புறுத்தாமல், சில முக்கியமான ஸ்டாப்களில்மட்டும் நின்று செல்வதால், விரைவாகச் சென்று சேரலாம்.

ஆனால், இந்த வகை பஸ்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சல். இதனால், நாம் போகிற இடத்துக்கான பஸ் எப்போது வரும் என்று கடவுளுக்குக்கூடத் தெரியாது. வேறு வழியில்லாமல் நாங்கள் மற்ற மூன்று வகைப் பேருந்துகளிலும் பயணம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இரண்டாம், மூன்றாம் வகைப் பேருந்துகளில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒன்றில் கொஞ்சம் தாராளமான இட வசதி, இன்னொன்றில் கொஞ்சம் – கொஞ்சமே கொஞ்சம் கூட்டம் சேர்ந்துவிட்டால் போதும், மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமில்லை, டிக்கெட் கொடுக்க வருகிறவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் கை சொடுக்கிக் கேட்பார்கள். அவமானமாக இருக்கும்.

அதனாலேயே, நான் முடிந்தவரை இந்தப் பேருந்துகளைத் தவிர்த்துவிடுவேன். கை நிறையக் காசு சம்பாதித்துக்கொண்டிருந்த திமிர், ஆட்டோக்களுக்கு வாரியிறைக்கச் சொன்னது.

ஹைதராபாத் பேருந்துகளின் நான்காவது வகை, ‘நான்காவது தரம்’ என்றுகூடச் சொல்லலாம், ‘தீப்பெட்டி பஸ்’.

பெயர் விநோதமாக இருக்கிறது, இல்லையா? பஸ்கூட அப்படிதான்.

பத்துப் பேர் அமர முடிகிற ஒரு சின்ன வேனைவிடக் கொஞ்சம் பெரிய வண்டி. டிரைவர் முன்னால் இருப்பதுமுதல், சுற்றியுள்ள அத்தனைக் கண்ணாடிகளும் உத்திரவாதமாக உடைந்துபோயிருக்கும். மிச்சமிருக்கும் தகரமும் ’இன்றைக்கோ, நாளைக்கோ’ என்று தத்வார்த்தமாக ஒட்டியிருக்கும், பஸ்ஸைச் சுற்றிலும் ஆந்திராவின் புகழ் பெற்ற வண்ணங்கள் – பெரும்பாலும் மஞ்சள் – பூசி, அதில் நிச்சயமாக ஒரு தெலுங்குப் பட விளம்பரமும், மெடிமிக்ஸ் விளம்பரமும் போட்டிருப்பார்கள்.

தரையிலிருந்து ஓர் அடி உயரத்தில்கூட இல்லாமல் அபாயகரமாக ஓடுகிற இந்த வாகனத்தை ‘பஸ்’ எனச் சொல்வது அநியாயம். ‘தீப்பெட்டி’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்தவர்கள் வாயில் சர்க்கரையைக் கொட்டவேண்டும்.

தீப்பெட்டியிலாவது ஒரு குச்சிக்கும் இன்னொரு குச்சிக்கும் கொஞ்சூண்டு இடைவெளி இருக்கும். ஆனால் இந்த பஸ்களில் எள் விழுந்தால் காணாமல் போய்விடும்.

ஆனால், தீப்பெட்டி பஸ்களில் எப்போதும் மக்கள் கூட்டம். நிரம்பி வழியும். மற்ற மூன்று வகைப் பேருந்துகளைவிட, இவற்றுக்குதான் ஜனங்களின் முழு ஆதரவு. ஒருமுறைகூட இந்த வகை பஸ்களை நான் காலியாகப் பார்த்தது கிடையாது. ராத்திரி நேரத்தில்கூட, மசங்கலாக ஒளிர்கிற ஒரு மஞ்சள் லைட்டைப் போட்டுக்கொண்டு மக்களைத் திணித்தபடி பறந்துகொண்டிருப்பார்கள்.

ஜனங்கள் எந்த நம்பிக்கையில் ஏறுகிறார்கள்? காசு குறைச்சல் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பாதுகாப்பு?

டிரைவர் ஏதோ உற்சாகத்தில் ஒரு திருப்பத்தில் வேகமாகப் போனாரென்றால், சர்வ நிச்சயமாக பஸ் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும். இத்தனை அபத்திரமான ஒரு விஷயத்தை அரசாங்கத்தில் எப்படி அனுமதிக்கிறார்கள்?

இலவசமாகக் கூட்டிப்போனால்கூட, நாங்கள் இந்தப் பேருந்துகளில் ஏறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். அத்தனை சின்ன இடத்தில் இத்தனை ஜனங்கள் மத்தியின் நெருக்கத்தில் அவஸ்தையாக நின்றுகொண்டு பயணம் செய்வதா? நினைத்தாலே வியர்க்கிறது.

இப்படியாக, முக்கால் வருடம் ஓடியிருந்த நிலையில், எங்களுடன் கல்லூரியில் படித்த ராமச்சந்திரன் ஹைதராபாத் வந்தான். ஏதோ பயிற்சித் தேர்வு எழுதுவதற்காக.

ராமச்சந்திரனுக்கு ஆந்திரா புதிது. ஆனால் அவனும், அவன் வீட்டில் எல்லோரும் நன்றாகத் தெலுங்கு பேசுவார்கள். ஆகவே, எங்களைத் தொந்தரவு செய்யாமல், அவனே ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

ஆரம்பத்தில் பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மாலை வீடு திரும்புவதற்காகப் புறப்பட்டபோதுதான், எங்கேயோ அரைகுறையாக விசாரித்துவிட்டு எங்கள் வீட்டுப்பக்கம் வருகிற ஒரு தீப்பெட்டி பஸ்ஸில் ஏறிவிட்டான்.

அன்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராமச்சந்திரனின் தோற்றத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. தலைமுடி அநியாயத்துக்குக் கலைந்திருந்தது. சட்டை பேன்ட்டிலிருந்து பாதி வெளியே வழிந்து கசங்கியிருந்தது, கையில் இருந்த புத்தம் புது பை கிழிந்து போயிருக்க, அதற்குள் ஒரு புத்தகமும் இன்னும் சில ‘அன்றைக்கு வாங்கினவை’களும் கீழே விழுந்துவிடும்போல் தொங்கியிருந்தன, மூன்று நாள் தூங்காதவன்போல், அல்லது மூன்றரை பெக் ’ரா’வாக விழுங்கியவன்போன்ற முகபாவத்துடன் பரிதாபமாக உள்ளே வந்து விழுந்தான் அவன்.

எங்களுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை, ‘என்னாச்சுடா?’ என்று நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அவன் யாரையும் கவனிக்காமல் பாத்ரூமுக்கு ஓடினான், பெரிய சத்தத்துடன் வாந்தி எடுத்தான்.

அடுத்த மூன்று நாள்களுக்கு, அவனுடைய முகத்தில் அதிர்ச்சி விலகவே இல்லை. அரையும் குறையுமாகத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ஊருக்கு ஓடியவன், உடனடியாக அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பைக் வாங்கிவிட்டான், இன்றுவரை அவன் எந்தப் பேருந்திலும் ஏறியிருக்கமாட்டான் என்று நினைக்கிறேன்.

ஏற்கெனவே தீப்பெட்டி பஸ்கள்மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ராமச்சந்திரன் அனுபவம் ஒரு முற்றுப்புள்ளியாகிவிட்டது. இனிமேல் நடந்து போனாலும் சரி, தீப்பெட்டி பஸ்ஸில் ஏறுவதில்லை என்று தீர்மானித்துவிட்டோம்.

அதன்பிறகு, ரோட்டில் நாங்கள் சாதாரணமாக நடந்து போகும்போது அருகே ஒரு தீப்பெட்டி பஸ் ஓடினால்கூட பயமாக இருந்தது. பஸ் கவிழ்ந்து அத்தனை ஜனக்கூட்டமும் எங்கள்மேல் விழுவதுபோன்ற கற்பனையில் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஓரமாக ஒதுங்கிப்போனோம்.

இப்போது என்முன்னே நின்றிருக்கிற தீப்பெட்டி பஸ்ஸைப் பார்த்ததும், எனக்கு ராமச்சந்திரன் ஞாபகம், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருகிறாற்போலிருக்கிறது.

திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தபோது, மறுபடியும் அந்தக் குரல், ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,;’

எனக்குள் இருந்த எல்லா வெறுப்புகளையும் அந்தக் குரல் துடைத்துப்போட்டுவிட்டது. ‘வாயேன் இங்கே’ என்று முகம் தெரியாத அந்தச் சின்னப் பையன் என்னைக் கூப்பிடுவதுபோலிருந்தது. கூட்டத்தின் நடுவே மெதுவாக நடந்து அந்த பஸ்ஸை அடைந்தேன்.

முதல் ஆச்சர்யம், அந்த பஸ் காலியாக இருந்தது.

கொஞ்சநஞ்சமிருந்த தயக்கத்தையும் அழித்துவிட்டு பஸ்ஸில் ஏறினேன். பெரிதாக என்ன ஆகிவிடும்? ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு பயணம் செய்யப்போகிறேன், இதோ நாலு ஸ்டாப் தாண்டினால் வீடு, சௌகர்யமாக இறங்கிவிடப்போகிறேன் என்று என்னைச் சமாதானம் செய்துகொண்டேன்.

தீப்பெட்டி பஸ்களில் மூன்றே சீட்கள். சாதாரணமாக மற்ற பேருந்துகளில் இருப்பதுபோலின்றி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறாற்போல் இருக்கைகளைப் ‘ப’ வடிவத்தில் அமைத்திருந்தார்கள்.

பிரச்னை என்னவென்றால், ‘ப’வுக்கு நடுவே இருக்கிற இடம். அங்கே ஏகப்பட்ட பேர் ஏறி நின்றுகொண்டால், யாரும் யார் முகத்தையும் பார்க்கமுடியாது.

அன்றைக்கு என்னைத்தவிர அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் இரண்டு பேர், ஒருவர் சுவாரஸ்யமாகக் காது குடைந்துகொண்டிருக்க, இன்னொருவர் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். இவர்களில் யாருக்கும், இந்த வண்டி எப்போது புறப்படும் என்று தெரிந்திருக்காது. ஓட்டுனரையும் காணவில்லை.

எனக்கு என்ன ஆச்சு? ஏன் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறேன்? ஆட்டோ பிடித்தால் ‘ஜஸ்ட்’ ஆறரை ரூபாய், ராஜாபோல வீட்டு வாசலில் போய் இறங்கலாம். அதை விட்டு இத்தனை மனிதர்கள் விடுகிற அசுத்தக் காற்றை இவ்வளவு நெருக்கத்தில் சுவாசித்து, இவர்களுடைய வியர்வையில் நான் குளிக்கவேண்டுமா? இறங்கிவிடலாமா?

முடிவு செய்யுமுன் அந்தப் பையனைத் தேடினேன். அவன் கதவுக்கு அருகில் இருந்த கடைசி சீட்டில் இருந்தான்.

உட்காரவில்லை. முழங்காலிட்டு நின்றபடி ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

பஸ்ஸில் அப்போது கூட்டம் இல்லாததால், அந்தப் பையனை நன்கு கவனிக்கமுடிந்தது. அவன் உருவத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத அளவில் சட்டை, பேன்ட், கலைந்த தலை, செருப்பில்லாத கால், முகத்தில் இன்னும் மிச்சமிருக்கிற குழந்தைத்தனம், அதற்குக் கொஞ்சமும் பொருந்தாமல் உரக்கக் கத்திக்கொண்டிருந்ததுதான் உறுத்தியது.

அவன் இன்னும் நிறுத்தாமல் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

இவனுக்கு என்ன சம்பளம் இருக்கும்? அப்பா, அம்மா இருப்பார்களா? வீட்டில் என்ன கஷ்டமோ? படிக்கிற வயதில் இப்படிப் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கத்த நேர்ந்தது கொடுமையில்லையா? அவன் இதையெல்லாம் யோசிப்பானா? இவன் வயதுப் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதைப் பார்க்கும்போது இவனுக்குள் ஏக்கம் வருமா? நான் ஏன் இப்படி இல்லை என்று கேள்வி கேட்டுக்கொள்வானா? அல்லது, இத்தனை கேள்விகளும் என்னுடைய கற்பனையா? இவனுக்கு இதெல்லாம் மரத்துப்போயிருக்குமோ?

ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் இருந்தது. ஒரு பிரம்மாண்டமான அறைமுழுவதையும் குழந்தை விளையாட்டுகளுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.

ஒருபக்கம் பெரிய சைஸில் வீடியோ கேம்கள், இன்னொருபுறம் மின்சாரத்தில் ஓடும் பொம்மைக் கார்கள், மூன்றாவது முலையில் வலைக் கம்பிகளால் அமைத்த ஓர் அறை, அதனுள் முழன்க்கால் உயரத்துக்கு ஏராளமான பிளாஸ்டிக் பந்துகள்.

அந்த வலை அறைக்குள் குழந்தைகள் நுழைவதற்கான ஒரு சின்னத் திறப்பு இருந்தது. அதன்வழியே குழந்தைகள் ‘தொம்’மென்று பிளாஸ்டிக் பந்துகளின்மீது குதிப்பதும், ஒருவர்மேல் ஒருவர் பந்துகளை வீசி எறிந்து விளையாடுவதும், உயரத்தில் இருந்த கூடையில் பந்துகளைப் போடுவதற்கு முயற்சி செய்து விழுவதும் எழுவதும் பார்க்கப் பரவசமான காட்சிகள்.

இப்போது பெங்களூரிலும் இதுபோன்ற விளையாட்டுத் தலங்களை நிறையப் பார்கிறேன், என் மகள் அவற்றில் குதித்துக் கரையேற மறுக்கிற ஒவ்வொருமுறையும், நான் சின்னப் பையனாக இருந்தபோது இதெல்லாம் அறிமுகமாகவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

ஆனால்,  ஹைதராபாத் தீப்பெட்டி பஸ்ஸில் நான் பார்த்த அந்தப் பையன்? அவன் தினமும் பயணம் செய்கிற அதே ‘பஞ்சகுட்டா, ஆமிர்பெட்’ வழியில்தான் இதுபோன்ற விளையாட்டுகள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவன், பஸ்ஸுக்குள் நின்றபடி கத்தமட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறான்.

இப்போது, தீப்பெட்டிக்குள் ஓரளவு கூட்டம் சேர்ந்துவிட்டது. இனிமேல் பஸ்ஸை எடுத்துவிடுவார்கள் என்று தோன்றியது.

பஸ்ஸுக்குள் கூட்டம் நிறைந்துவிட்டதால், அந்தப் பையன் வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான். அவன் முழங்காலிட்டு நின்றிருந்த இடத்தில், இப்போது வேறு இருவர் உட்கார்ந்திருந்தார்கள்.

நான் ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தேன், இன்னும் கூட்டம் சேரவேண்டுமா? எப்போது இந்த பஸ் புறப்படும்?

டிவி நாடகங்களைப்போல், நான் நினைத்த மறுவிநாடி டிரைவர் சீட்டில் ஒரு மீசை ஆசாமி ஏறி உட்கார்ந்தார். கண் மூடிப் பிரார்த்தனைபோல் ஏதோ செய்துவிட்டு பஸ்ஸைக் கிளப்பினார். முழு வண்டியும் ஒருமுறை குலுங்கியது.

நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கீழே உருண்டு விழாமல் சமாளித்தேன். அந்தப் பையன் இன்னும் படியில் நின்றபடி கத்திக்கொண்டிருந்தான்.

பஸ் கிளம்பியதும், அவன் உள்ளே வந்தான். அவனேதான் கண்டக்டர்(ன்) போலிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் சேருமிடத்தின் பெயரைக் கேட்டுக் காசு வாங்கிக்கொண்டான், டிக்கெட் எதுவும் கிடையாது.

இதற்குள், பஸ் வேகம் பிடித்திருந்தது. வண்டியின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக ஆடுவதுபோல் தோன்றியது. முழுசாக வீடு போய்ச் சேருவேனா என்று சந்தேகம் முளைத்தது. ராமச்சந்திரன் மூளை முனையில் எட்டிப் பார்த்துச் சத்தமாக வாந்தி எடுத்தான்.

அடுத்த ஸ்டாப்பில், இன்னும் கூட்டம் சேர்ந்துவிட்டது. நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டால், வீட்டுக்கு நடந்தேகூடப் போய்விடலாம்.

எல்லோரிடமும் காசு வாங்கி முடித்த அந்தப் பையன், ஜன்னல் அருகே வந்தான், கடைசி சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருந்த இடைவெளியில் நிற்க இடம் கேட்டான். பின்சீட்டுக்காரர்கள் முணுமுணுத்தபடி நகர்ந்தார்கள்.

அவன் சிரமமாக உள்நுழைந்து நின்றுகொண்டான், ஆர்வத்துடன் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஆந்திரச் சட்டமன்றத்துக்குச் செய்திருந்த வண்ண விளக்கு அலங்காரங்களைப் பார்க்கையில் அவன் வாய் பிளந்து மூடியது.

எனக்குத் தெலுங்கு அரைகுறை, ஆனாலும் அவனுடன் பேசவேண்டும் என்று தோன்றியது. உடைந்த ஹிந்தியில் அவனைக் கேட்டேன், உன் பேர் என்னப்பா?’

அவன் ஏதோ பதில் சொன்னான். வாகன்ச் சத்தத்தில் தேய்ந்து போய் ஏதோ ‘கான்’ என்று முடிந்ததுமட்டும் கேட்டது. மறுபடி பெயர் கேட்பது அநாவசியம் என்று தோன்றியது.

‘படிக்கிறியா?’

இந்தக் கேள்வியும் தப்பு, ‘படிச்சியா’ என்று கேட்டிருக்கவேண்டும்.

அவன் அழகாகத் தலையசைத்து, ‘ம்ஹூம்’ என்றான், பதிலில் இருக்கிற சோகம், முகத்தில் கொஞ்சமும் தெரியவில்லை.

‘உங்கப்பா என்ன பண்றார்?’

அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கனகார்யமாகக் கத்தத் தொடங்கினான், ‘பஞ்சாகுட்டா., ஆமீர்பேட்., போராபண்டா.,’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இன்னும் அவனிடம் பேசியிருக்கலாமோ?

பேசிதான் என்ன ஆகப்போகிறது? இதோ, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்விடப்போகிறேன், அதன்பிறகு இவன் யாரோ, நான் யாரோ.

அந்தப் பேருந்தின் வெப்பநிலை இப்போது கணிசமாக அதிகரித்திருந்தது. நின்றிருந்தவர்கள் பெரும்பான்மையினர் உட்கார்ந்திருந்த சிறுபான்மையினரை ‘எப்போ எழுந்திருப்பே?’ என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள், இறங்கும்போது வழி விடுவார்களா என்றுகூடச் சந்தேகமாக இருந்தது.

நான் மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்தேன், பஸ் கிளம்பிவிட்டதால் அவன் ஜன்னலில் இருந்து தலையை விலக்கிக்கொண்டு என்னைப் பார்த்தான். பேசுவானா, மாட்டானா என்று நான் யோசிப்பதற்குள் அவனே சிரித்தான், என் கையிலிருந்த புத்தகத்தை நோக்கிக் கை காட்டினான். சந்தோஷமாக எடுத்துக் கொடுத்தேன்.

அது, ’இந்தியாடுடே’ அரசியல் பத்திரிகை. அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. பொம்மை பார்க்கிற ஆர்வம்மட்டும் இருந்தது. சற்றே அசௌகர்யமாகக் கைகளை அமைத்து இடம் பண்ணிக்கொண்டு பக்கம் பக்கமாகத் திருப்பிப் படம் பார்த்தான். சினிமா பக்கத்தைப் புரட்டும்போதுமட்டும் கொஞ்சம் வேகம் குறைச்சல்.

இரண்டு நிமிடங்களுக்குள், அவன் மொத்தப் புத்தகத்தையும் புரட்டிவிட்டான், என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு நட்பாகச் சிரித்தான்.

நான் இறங்கவேண்டிய ஸ்டாப் நெருங்கிக்கொண்டிருந்தது. அவசரமாக எழுந்துகொண்டபோதுதான், எனக்கு அந்த யோசனை தோன்றியது, ‘இங்கே உட்காருப்பா’ என்று என் இடத்தைக் காட்டினேன்.

’ம்ஹூம், வேணாம் சார்’ அவன் கூச்சமாகத் தலை அசைத்து மறுத்தான்.

‘சும்மா உட்காருப்பா, எவ்வளவு நேரம் நின்னுகிட்டே வருவே? உட்காரு’ பிடிவாதமாக அவனை இழுத்து அமரவைத்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

அந்தப் பையனும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்றே ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவன், சமாளித்துக்கொண்டு என் இடத்தில் அமர்ந்தான், ஜன்னல்பக்கம் திரும்பிக் கத்தத் தயாரானான்.

நான் வண்டியிலிருந்து இறங்கியதும், ஜன்னலில் அவன் முகம் பார்த்தேன், கை அசைத்தேன், அவன் கத்தலுக்கு நடுவே ஒரு சின்னப் புன்னகை செய்தான்.

திரும்பி வீடு நோக்கி நடந்தபோதும், அந்தக் குரல் முதுகுக்குப் பின்னால் கேட்டுக்கொண்டே இருந்தது, ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அதுதான், தீப்பெட்டி பஸ்ஸில் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் பயணம். அதன்பிறகு என்றைக்கும் அந்தப் பேருந்துகளில் ஏறவேண்டும் என்று தோன்றவில்லை, அவனையும் மறுபடி சந்திக்கவில்லை.

ஆனால் அந்தக் குரல், கடைசியாக அவன் சிந்திய அந்தக் குழந்தைப் புன்னகை இரண்டும் மறக்கமுடியாதவை.

***

என். சொக்கன் …

27 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2009
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031