Archive for January 31st, 2009
ஜனாதிபதி வருகை
Posted January 31, 2009
on:- In: மொக்கை | Bangalore | Imagination | Uncategorized
- 3 Comments
ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்காக இன்று அப்போலோவுக்குச் சென்றிருந்தோம்.
வழக்கமாக அப்போலோ ரிசப்ஷனில் பச்சை, நீலம், வெள்ளை யூனிஃபார்ம் வண்ணங்கள்தான் தென்படும். ஆனால் இன்றைக்கு, எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகள், தொப்பிகள்.
‘என்ன விசேஷம்?’ என்று விசாரித்தபோது, பக்கத்திலிருந்த ஒருவர் விளக்கினார், ‘ஜனாதிபதி வர்றாங்க சார், அதான் பாதுகாப்பெல்லாம் பலமா இருக்கு’
ஜனாதிபதி வருகிறார் என்றால், நிஜமாகவே பெரிய விஷயம்தான். ஆனால், டெல்லியில் இருக்கவேண்டிய அந்த அம்மையார், ஏன் வேலை மெனக்கெட்டு பெங்களூருக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும்?
‘ஏய் மக்கு’ என்று தலையில் குட்டினார் என் மனைவி, ‘ஜனாதிபதி வர்றார்ன்னா? பேஷன்டாதான் வரணுமா? ஏதாவது புது ஆபரேஷன் தியேட்டரைத் திறந்துவைக்க வர்றாங்களோ என்னவோ’
இருக்கலாம். யார் கண்டது? அதற்குமேல் விசாரிக்கப் பொறுமையில்லாமல் எங்கள் மருத்துவரைத் தேடினோம்.
அப்போலோ மொத்தமும் ஜூர வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. டாக்டர்கள் டை கட்டி, சூட் போட்டு கம்பீரமாக நோயாளிகளை வரவேற்றார்கள், மற்ற ஊழியர்களும்கூட மிகப் பிரமாதமாக உடுத்தியிருந்தார்கள். ஆங்காங்கே ரொம்ப உறுத்தாதவிதமான அலங்காரங்கள்கூடத் தென்பட்டன. ஓரமாக ஒரு தாற்காலிக போர்ட், ‘Work In Progress – Sorry For The Inconveniences Due To President’s Visit’ என்று அறிவிப்பதுபோல் பெருமையடித்துக்கொண்டது.
ஆனால், அங்கு வந்திருந்த நோயாளிகள் யாரும் ஜனாதிபதி வருகையால் பரவசமடைந்ததாகத் தெரியவில்லை. அவரைக்காட்டிலும், எல்சிடி தொலைக்காட்சியில் ரன் விளாசும் யுவ்ராஜ் சிங்குக்குதான் மரியாதை கொடி கட்டிப் பறந்தது.
எங்கள் மருத்துவர், பத்தாம் எண் அறையில் இருந்தார். மருத்துவ ஆலோசனைக்கான தொகையை நயா பைசா பாக்கியில்லாமல் எண்ணிக் கீழே வைத்தபிறகு, எங்களை உள்ளே அனுமதித்தார்கள்.
‘ஹலோ டாக்டர்’ என்றபடி நாங்கள் நுழைந்ததும், அவருடைய செல்பேசி ஒலித்தது, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்ற அவர் நீலப்பல் தொழில்நுட்பத்தில் ஃபோனைத் தொடாமலே பேசத் தொடங்கினார்.
‘நான்தான்ப்பா, என்ன? எல்லாம் முடிஞ்சதா? Gunல்லாம் ரெடியா இருக்குதானே? நான் இதோ வந்து பார்க்கறேன்’
அவர் பேசப் பேச, எனக்கு பகீரென்றது. வெளியில் ஜனாதிபதி வருகைக்காக எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள், இங்கே இந்த டாக்டர் ’துப்பாக்கி ரெடியா’ என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார். இதென்ன கலாட்டா?
எனக்குள் பரபரவென்று கற்பனைகள் விரிந்தன. தீவிரவாதிகள் ஜனாதிபதியைத் தாக்கத் திட்டம் போடுகிறார்கள், அதற்கு இந்த டாக்டரைப் பிடித்து ப்ளாக்மெயில் செய்து ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள், பக்கத்து அறையில் ஏகே நாற்பத்தேழோ, ஐம்பத்தொன்பதோ தயாராகிக்கொண்டிருக்கிறது, இப்போது நான் என்ன செய்யவேண்டும்? காவல்துறைக்கு ஃபோன் செய்யவேண்டுமா? அல்லது இங்கே இருக்கிறவர்களிடம் விஷயத்தைச் சொல்லலாமா? ஒருவேளை அவர்களும் இந்தச் சதியில் உடந்தையாக இருந்து என்னைப் பிடித்து ஓர் இருட்டு அறையில் அடைத்துவிட்டால்? செல்ஃபோனிலிருந்து அவசர போலீசை அழைக்க வெறும் ‘100’ போதுமா அல்லது ‘080’ சேர்க்கவேண்டுமா? நான் அவர்களை அழைத்து இந்த விஷயத்தைச் சொன்னாலும், உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? நேரம் போதுமா? இந்தச் சதித் திட்டத்திலிருந்து மேன்மைதகு திருமதி பிரதீபா பாடில் தப்பித்துவிடுவாரா? எப்படி?
அந்தச் சில நிமிடங்களுக்குள் ஜெஃப்ரி ஆர்ச்சர் ரேஞ்சுக்கு ஒரு முழு நீள நாவலே மனத்துக்குள் எழுதிப் பார்த்துவிட்டேன். ஒரு கத்துக்குட்டித் துப்பறிவாளனுக்குரிய லாவகத்துடன், டாக்டர் தொடர்ந்து பேசுவதைக் கவனிக்காததுபோல் ஓரக் காதால் கூர்ந்து கேட்டேன்.
அப்போதுதான், எனக்கு விஷயம் புரிந்தது. இது க்ரைம் நாவல் இல்லை, குமுதம் ஒரு பக்கக் கதை.
டாக்டர் சொன்ன ‘Gun’ காது குத்துவதற்கான கருவியாம். பக்கத்து அறையில் யாரோ ஒரு குழந்தைக்குக் காது குத்துவதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் டாக்டர். அதை அரைகுறையாகக் கேட்டு நான் ஜேம்ஸ் பாண்ட் கனவுகளை வளர்த்துக்கொண்டுவிட்டேன்.
போகட்டும், நான் துப்பறிவாளனாக இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்விடும்!
***
என். சொக்கன் …
31 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
அன்னபூரணி
Posted January 31, 2009
on:- In: Confidence | Food | Humor | Kids | Life | Pulambal | Technology | Uncategorized
- 14 Comments
ஒரு வாரமாக வீட்டில் டிவிடி ப்ளேயர் இயங்கவில்லை.
இது ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம், எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இது பெரிய, மிகப் பெரிய விஷயம்தான்.
காரணம், டிவிடி ப்ளேயர் என்பது எங்கள் வீட்டில் வெறுமனே பொம்மை காட்டுகிற சாதனமாக இல்லை. அது ஓர் அன்னபூரணியாகவே இயங்கிவந்திருக்கிறது.
எங்கள் மகள்கள் இருவருக்கும், வாய் என்பது சத்தம் போட்டுக் கத்துவதற்குமட்டுமே உருவாக்கப்பட்ட உறுப்பு என்கிற எண்ணம், அதைப் பயன்படுத்திச் சாப்பிடவும் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் அவ்வளவாக ஏற்பதில்லை.
ஆகவே, சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே அவர்கள் அலறுவார்கள், காத தூரம் ஓடிவிடுவார்கள்.
இட்லி, தோசை, பிட்ஸா, பர்கர், வாழைப்பழம், சப்போட்டா, கார்ன் ஃப்ளேக்ஸ், கடலை உருண்டை, இஞ்சி மொரபா, பாதாம் அல்வா, அரிசிக் கஞ்சி,. இப்படி எதைத் தட்டில் போட்டு நீட்டினாலும், அவர்கள் முகம் சுருங்கிவிடும், ‘ம்ஹூம், வேணாம்’ என்று எதிலும் பற்றற்ற ஞானியரைப்போல் மறுத்துவிடுவார்கள்.
நல்லவேளையாக, அவர்களைச் சாப்பிடச் செய்வதற்கு என் மனைவி ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார். அதுதான் டிவிடி ப்ளேயர் எனும் அன்னபூரணி.
எங்கள் வீட்டில் குத்துமதிப்பாக நூற்றைம்பது அனிமேஷன் படங்கள், பாட்டுகள், பாடங்கள் போன்றவை குறுந்தகடுகளாக இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து டிவிடி ப்ளேயருக்குள் கொடுத்தால், திரையில் படம் தோன்றும், இவர்கள் வாய் தானாகத் திறக்கும்.
உதாரணமாக, மிக்கி மவுஸ் குத்தாட்டம் போடும் காட்சியைத் திரையில் காண்பித்தால், நங்கை மிகச் சரியாக ஒரு வாய் இட்லியை வாங்கிக்கொள்வாள், அதை மெதுவாக அரைக்கத் தொடங்குவாள், ஆனால், விழுங்கமாட்டாள்.
அவளை விழுங்கச் செய்வதற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது: டிவிடி ப்ளேயரின் ரிமோட்டில் உள்ள ‘Pause’ எனும் பொத்தான்.
’இந்தப் பொத்தான்மட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால், என்னால் இந்தக் குழந்தைகளை வளர்த்திருக்கவேமுடியாது’ என்று என் மனைவி அடிக்கடி சொல்வார். அது நூற்று எட்டு சதவிகிதம் உண்மை.
திரையில் ஆடும் மிக்கியை ‘Pause’ செய்தால், அதன் காட்சி உறைந்த மறு மைக்ரோ விநாடியில், நங்கையின் வாயில் இருக்கும் இட்லி விழுங்கப்படும், ‘ம், ப்ளே பண்ணு’ என்பாள் மந்திரம்போல.
‘நீ ஒரு வாய் வாங்கிக்கோ, அப்பதான் ப்ளே பண்ணுவேன்’
அடுத்த வாய் அவள் வாய்க்குள் போகும், ஆனால் அரைக்கமாட்டாள், ‘ப்ளே பண்ணு’ என்பாள் மறுபடி.
மீண்டும் மிக்கி மவுஸ் ஆடத் தொடங்கும், இட்லி அரைக்கப்படும், ஆனால் விழுங்கப்படமாட்டாது, அதற்கு ‘Pause’ பட்டன் தேவைப்படும்.
இப்படியாக, ’திருவிளையாடல்’ படத்தில், ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று சிவாஜி கணேசன் உருவத்தில் சிவபெருமான் பாடியதுபோல, ‘டிவிடி ப்ளேயர் இயங்கினால் சாப்பாடு வாங்கப்படும், அரைக்கப்படும், அதை Pause செய்தால் விழுங்கப்படும்’ என்கிற விதிமுறையை ஒரு நாளைக்கு மூன்று வேளை விடாமல் பின்பற்றிவருகிறாள் நங்கை.
சாப்பாட்டுக்குமட்டுமில்லை, ஹார்லிக்ஸ், பூஸ்ட், அல்லது பச்சைத் தண்ணீர் குடிப்பது, தலை வாருதல் போன்றவைக்கும்கூட டிவிடிக்கள் தேவைப்பட்டன. முக்கியமாக இரட்டைப் பின்னல் பின்னுகிற தருணங்களில் அவளுக்கு மிக மிகப் பிடித்த படம் திரையில் ஓடவேண்டும், இல்லாவிட்டால் வீடு இரண்டாகிவிடும், சில சமயம் மூன்றாக.
அவளைப் பார்த்து, அவளுடைய தங்கைக்கும் இதே பழக்கம் வந்துவிட்டது. இந்த ஒன்றே கால் வயதுக்கு, அவளும் டிவிடி ப்ளேயர் இன்றிச் சாப்பிட மறுக்கிறாள்.
ஆரம்பத்தில் எங்களுக்கு இது மெகா எரிச்சலாக இருந்தது. ஆனால் போகப்போக, சாப்பாட்டுத் தட்டை எடுக்கும்போதே, இன்றைக்கு எந்தக் குறுந்தகடை இயக்கலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். ஏதோ பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைமையில்தான், டிவிடி ப்ளேயர் இயங்க மறுத்துவிட்டது. வீடியோ, ஆடியோ, எம்பி3, புகைப்படத் தொகுப்பு எந்தக் குறுந்தகடை உள்ளே அனுப்பினாலும், ‘No Disk’ என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.
வற்றாத உணவுப் பாத்திரத்தைக் கொண்ட அன்னபூரணி மெஸ்ஸில், இப்போது ஒரு வாரமாக ஸ்ட்ரைக். நாங்கள் என்செய்வோம்? எங்கே போவோம்?
ஒரு நாள், இரண்டு நாள் என்னுடைய மடிக்கணினியை வைத்துச் சமாளித்தேன். அதில் சேமித்துவைத்திருக்கும் டாம் & ஜெர்ரி, டோரா முதலான மேற்கத்திய கார்ட்டூன்களும், தெனாலிராமன், பீர்பால், ராமயாணம் போன்ற உள்ளூர்ப் படைப்புகளும் சாப்பாட்டு நேரத்தில் பயன்பட்டன.
ஆனால், தொலைக்காட்சி அளவுக்குக் கம்ப்யூட்டர் என் மனைவிக்குச் சவுகர்யப்படவில்லை, ‘உடனடியா இந்த டிவிடி ப்ளேயரை ரிப்பேர் செய்யணும்’ என்று என்னை நச்சரிக்கத் தொடங்கினார்.
சோதனைபோல, சென்ற வாரம்முழுக்க எனக்கு மாலை நேரத்தில் ஏதாவது ஒரு வேலை வந்து குறுக்கிட்டது. டிவிடி ப்ளேயரை பழுது பார்க்கக் கொண்டுசெல்வதற்கு நேரமே இல்லை.
இன்று சனிக்கிழமை. எப்படியாவது வெளியே சென்று, ஒரு மெக்கானிக்(?)கைப் பிடித்து அன்னபூரணியின் கைக் கரண்டியைச் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்மானித்தேன்.
ஆனால், அதிகாலை நேரத்தில் எப்படியோ என் வாயிலும் சனி புகுந்துவிட்டது, ‘கடைக்குக் கொண்டுபோறதுக்கு முன்னாடி, நானே ஒருவாட்டி அதைத் திறந்து பார்த்துடறேனே’ என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.
அடுத்த நிமிடம், டிவிடி ப்ளேயர், ஸ்க்ரூ ட்ரைவர், ஸ்பேனர், அழுக்கைத் துடைக்கும் துணி முதலான சமாசாரங்களை என்முன்னே நிரப்பிவிட்டார் மனைவி, ‘எப்படியாவது சரி செஞ்சுடு, அஞ்சோ, பத்தோ பார்த்துப் போட்டுக் கொடுக்கறேன்’ என்றார்.
இந்தச் சாதனங்களில் ஒரு பெரிய ஏமாற்று என்னவென்றால், அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் ’ஸ்க்ரூ’க்கள் எல்லாம், சுலபத்தில் கழற்றக்கூடியவையாகத் தோன்றும். இவற்றைத் திறந்தாலே பிரச்னை சரியாகிவிடும் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம், அசட்டு நம்பிக்கை நமக்குள் உருவாகிவிடும்.
நானும் சுறுசுறுப்பாக அந்த டிவிடி ப்ளேயரின் ஆறு பக்கங்களிலும் இருந்த ‘ஸ்க்ரூ’க்களைக் கழற்ற ஆரம்பித்தேன். கழற்றப்பட்ட ஆணிகள் யார் காலிலும் படாதபடி ஒரு ப்ளாஸ்டிக் பெட்டியில் போட்டு மூடிவைத்தேன்.
ஆனால், பதினெட்டு ஆணிகளைக் கழற்றியபிறகும், அந்த கன செவ்வகப் பெட்டி இடிச்சபுளிபோல் அப்படியேதான் இருந்தது, அதைத் திறக்கமுடியவில்லை.
ஸ்க்ரூக்களைக் கழற்றினால் எல்லாம் கழன்று விழவேண்டும் என்பதுதானே உலக நியதி. இந்த டிவிடி ப்ளேயர்மட்டும் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது?
யோசித்தபடி நான் அதனை எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்தேன், இழுத்துப் பார்த்தேன், ம்ஹூம், ஓர் அசைவில்லை.
ஓரமாக ஒரு சின்ன விரிசல்போல் தெரிந்தது. அதற்குள் ஸ்க்ரூ டிரைவரை நுழைத்துத் தள்ளினேன், லேசாக அசைந்தது.
ஆஹா, அன்னபூரணியின் ஆரோக்கியத்துக்கான சாவி தட்டுப்பட்டுவிட்டது. அந்த விரிசலை இன்னும் பெரிதாக்குவதுபோல் வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன்.
பத்து விநாடிகளுக்குப்பிறகு, ‘பட்’ என்று ஒரு சத்தம் கேட்டது, ஒரு தீப்பெட்டி அளவுத் துண்டு ப்ளாஸ்டிக் உடைந்து என் கையோடு வந்துவிட்டது.
அச்சச்சோ, இந்த டிவிடி ப்ளேயர்முழுக்க இரும்பால் செய்யப்பட்டது என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன், ப்ளாஸ்டிக் எங்கிருந்து வந்தது?
அதுமட்டுமில்லை, இந்த ப்ளாஸ்டிக் துண்டு எவ்வளவு முக்கியம்? இது உடைந்ததன்மூலம் டிவிடி ப்ளேயரின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுமா?
பயத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் மனைவி எங்கே என்று எட்டிப் பார்த்தேன்.
அவர் சமையலறையில் சோளம் விதைத்துக்கொண்டு, ச்சே, வேகவைத்துக்கொண்டிருந்தார். இந்த ப்ளாஸ்டிக் துண்டு உடைந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவசரமாக உடைந்த ப்ளாஸ்டிக்கை என் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.
இப்போதும், எனக்கு நம்பிக்கை தீர்ந்திருக்கவில்லை. எப்படியாவது இந்த டிவிடி ப்ளேயரைத் திறந்துவிட்டால், பிரச்னையைச் சரி செய்துவிடலாம் என்றுதான் பிடிவாதமாகத் தோன்றிக்கொண்டிருந்தது.
உண்மையில், ஒரு டிவிடி ப்ளேயருக்குள் என்னென்ன சமாசாரங்கள் இருக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது. சும்மா சிவப்பு வயர், பச்சை வயர் என்று ஏதாவது விலகியிருக்கும், அதைச் சரியாக வைத்து முறுக்கினால் எல்லாம் ஒழுங்காகிவிடும் என்று அபத்தமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த நம்பிக்கையில் மீண்டும் டிவிடி ப்ளேயரை மேல், கீழ், இட, வலமாகத் திருப்பிப் பார்க்கத் தொடங்கினேன். இப்போது மேலும் சில விரிசல்கள் தென்பட்டன. அவை தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட எஞ்சினியரிங் விரிசல்களா, அல்லது நான் இப்போது உருவாக்கிய எசகுபிசகு விரிசல்களா என்று புரியவில்லை.
மீண்டும் இன்னொரு விரிசலைத் தேர்ந்தெடுத்தேன், அதன்வழியாக ஸ்க்ரூ டிரைவரை நுழைத்து அமுக்கியதும், ‘க்ளிங்’ என்று சப்தம் கேட்டது.
இப்போது எதுவும் உடையவில்லை. ஆனால் ஏதோ உள்ளே கழன்றுகொண்டுவிட்டது தெரிந்தது. டிவிடி ப்ளேயரை ஆட்டிப் பார்த்தால் கலகலவென்று உண்டியல் குலுங்குவதுபோல் சத்தம் கேட்டது.
அத்துடன் என்னுடைய நம்பிக்கைகள் தீர்ந்துவிட்டன, ‘இதைத் திறக்கமுடியலை’ என்று சத்தமாக அறிவித்துவிட்டு எழுந்துகொண்டேன்.
இப்போது, எல்லா ஸ்க்ரூக்களையும் மறுபடிப் பூட்டி, ஒரு பெரிய பையில் அந்த டிவிடி ப்ளேயரைப் போட்டுவைத்திருக்கிறேன். குளித்துச் சாப்பிட்டுவிட்டு இதை வெளியே ரிப்பேருக்குக் கொண்டுசெல்லவேண்டும்.
ஏற்கெனவே ICUவில் இருந்த அன்னபூரணியின் ஆக்ஸிஜன் ட்யூபை உடைத்துப் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல டாக்டராகப் பிடித்து எல்லாவற்றையும் சரி செய்துவிடவேண்டும், அது முடியாவிட்டால், அச்சு அசல் இதேபோல் இன்னொரு டிவிடி ப்ளேயர் வாங்கிவிடவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டரை ஜென்மத்துக்குப் புலம்பல் தாங்கமுடியாது.
நீங்களும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். எங்கள் அன்னபூரணிக்காக இல்லாவிட்டாலும், எனக்காக!
***
என். சொக்கன் …
31 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க