Archive for February 6th, 2009
குரங்கு வாத்தியார்
Posted February 6, 2009
on:ஒருவழியாக, அன்னபூரணிக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. இப்போது பழையபடி குறுந்தகடுகள் சரியாக இயங்குகின்றன, வீட்டிலும் சுமுக நிலைமை திரும்பியிருக்கிறது.
ஆனால் ஒன்று, எனக்குப் பிடிவாதமாகத் திறக்க மறுத்த டிவிடி ப்ளேயர், அதற்கான நிபுணர் கை வைத்ததும், பத்தே விநாடிகளில் ’சட்டென மலர்ந்தது நெஞ்சம்’ என்று ஜானகி குரலில் பாடிக்கொண்டே கண் திறந்தது, இது அநியாயம், அழுகுணி ஆட்டம், சொல்லிவிட்டேன்!
எப்படியோ, இப்போதைக்கு புது ப்ளேயர் அவசியப்படவில்லை. பழசு இன்னும் எத்தனை நாள் / வாரம் / மாதம் தாங்குகிறது என்று பார்க்கவேண்டும்.
முந்தைய பதிவில் டிவிடி ப்ளேயரின் உபயோகங்களைப்பற்றி எழுதியபோது, ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். என் மகள்களுக்கு அன்னபூரணியாகப் பயன்படும் அந்தச் சாதனம், சமீபகாலமாக, எனக்குச் சரஸ்வதியாக இருக்கிறது.
அதுவும், சாதாரண சரஸ்வதி இல்லை. கன்னட சரஸ்வதி.
பெங்களூரில் குடியேறி முழுசாக எட்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுக் கன்னடத்தை உருப்படியாகக் கற்றுக்கொள்ளவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
முன்பு ஹைதராபாதிலும் இதே தப்பைச் செய்து தெலுங்கு பேசக் கற்கும் வாய்ப்பை இழந்தேன். அவ்வப்போது தெலுங்கு நேரடி, தமிழிலிருந்து அங்கே ‘டப்’ ஆகும் படங்களைப் பார்த்ததில், மற்றவர்கள் பேசும் தெலுங்கு ஓரளவு நன்றாகவே புரியும், ஆனால் பேசுவதற்குப் பயம்.
பிரச்னை என்னவென்றால், பெங்களூரில் ஒருவர் கன்னடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அநேகமாக எல்லாக் கடைக்காரர்களும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கொங்கணி, சௌராஷ்டிரா, துளுவில்கூடப் பேசுவார்கள். கன்னடத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாமல் சந்தோஷமாகப் பிழைப்பை ஓட்டிவிடலாம்.
ஆனால், எனக்குமட்டும் ஏதோ உறுத்தல். இந்த ஊரில் வசித்துக்கொண்டு இவர்களுடைய பாஷையைப் புறக்கணிப்பது தப்பு என்று தோன்றியது.
தவிர, நாளைக்கே ஒரு பிரச்னை வந்து கன்னடர்கள் தமிழர்களை அடிக்கத் துரத்துகிறார்கள் என்றால், நன்றாக நாலு வாக்கியம் கன்னடத்தில் பேசத் தெரிந்துகொண்டால் உயிர் பிழைக்கலாமே? 😉
இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, ஐந்தாறு வருடங்களுக்குமுன்னால் நான் கன்னடம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். அப்போதைய எனது அறை நண்பன் ஒருவனும் என்னுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டான்.
என்ன செய்யலாம்? ஹைதராபாதில் செய்ததுபோல் இங்கேயும் சகட்டுமேனிக்குக் கன்னடப் படங்களைப் பார்க்கத் தொடங்கலாமா?
ம்ஹூம், அது சரிப்படாது, கன்னட வெகுஜன சினிமா இன்னும் போன தலைமுறையில்தான் இருக்கிறது. இந்த ஜிகினா வெத்துவேட்டுகளை மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பதைவிட, கன்னடம் கற்றுக்கொள்ளாமலே இருந்துவிடலாம்.
அப்போதுதான், என்னுடைய நண்பன் அவனது பெட்டியைத் தோண்டி ஒரு பொக்கிஷத்தைக் கண்டெடுத்தான். எப்போதோ எதற்காகவோ அவன் வாங்கிவைத்த ‘முப்பது நாள்களில் கன்னடம்’ புத்தகம் அது.
போதாதா? நாங்கள் இருவரும் பேப்பர், பேனா சகிதம் ஆனா, ஆவன்னாவில் தொடங்கி கன்னடத்தை அடக்கி ஆளத் தொடங்கினோம்.
முதல் நாள், கன்னட ‘அ’ எழுதிப் பழகிவிட்டு ஆஃபீஸ் கிளம்பிய தினத்தை மறக்கவேமுடியாது. வழியில் தென்பட்ட பெயர்ப் பலகைகள், சுவர் விளம்பரங்கள், பாத்ரூம் கிறுக்கல்களில்கூட அந்த ‘அ’ தென்படுகிறதா என்று குழந்தை ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு ‘அ’வைக் கண்டறியும்போதும், உள்ளுக்குள் ஏகப்பட்ட பரவசம். ஆஹா, ஆஹா, மன்னிக்கவும், ‘அ’ஹா, ‘அ’ஹா!
மறுநாள், ‘ஆ’ எங்களுக்கு வசப்பட்டது. மலையை உருட்டி விழுங்கிவிட்டவர்கள்போல் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம், இன்னும் இருநூற்றுச் சொச்ச எழுத்துகள்தான். அதன்பிறகு, கன்னடம் எங்கள் கையில்!
இப்படி தினம் ஓர் எழுத்து என்கிற விகிதத்தில் தொடர்ந்த எங்களுடைய இந்தக் கன்னடக் கல்வித் திட்டம், மிகச் சரியாக ஏழு நாள்கள் நீடித்தது. எட்டாவது நாள், இருவருக்கும் ஆஃபீசில் வேலை ஜாஸ்தி, தூக்கம் சொக்கி வீழ்த்திவிட்டது. ஒன்பதாவது நாள், நண்பர்களோடு புதுப்படம், பார்ட்டி, பத்தாவது நாளில் தொடங்கி, இதைப்பற்றிச் சுத்தமாக மறந்துபோய்விட்டோம்.
இரண்டு வாரம் கழித்து, எதேச்சையாக என்னுடைய கன்னட நோட்டைப் புரட்டிப் பார்த்தேன். ஆனாவும் ஆவன்னாவும் ஒன்றுடன் ஒன்று சூப்பர் இம்போஸ் ஆகிச் செமையாகக் குழப்பத் தொடங்கியிருந்தது.
அன்று இரவு, என் நண்பனைக் கேட்டேன், ‘மறுபடி ஆரம்பிக்கலாம் மச்சி’
‘வேண்டாம் விடுடா, நாம கன்னடம் எழுதக் கத்துகிட்டு ஞானபீடம் அவார்டா வாங்கப்போறோம்?’
அத்துடன், எனக்கும் ஆர்வம் போய்விட்டது. ஏதோ ஒரு நம்பிக்கையில், அந்த ‘முப்பது நாள் கன்னட’ப் புத்தகத்தைமட்டும் என் அலமாரியில் பத்திரப்படுத்திவைத்தேன்.
அந்த நேரத்தில்தான், என்னுடைய திருமணம். திருச்சியிலிருந்து கிளம்பி வந்த என் மனைவி, கையோடு கொணர்ந்தது ஒரே ஒரு புத்தகம்: ‘முப்பது நாள்களில் கன்னடம்’.
என்னைப்போலவே, அவரும் அதில் ஆனா, ஆவன்னா எழுத முயன்றிருக்கிறார். சில நாள்களில் ஆர்வம் குறைந்து வெறும் புத்தகமும் ஆர்வமும் குற்றவுணர்ச்சியும்தான் மிஞ்சியிருக்கிறது.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை, ‘நாங்கள் ரொம்பப் பொருத்தமான ஜோடிதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.
சில வருடங்கள் கழித்து, மறுபடியும் எனக்குக் கன்னடம் கற்கிற ஆசை வந்தது. அதற்குக் காரணம், என் மகளுக்காக வாங்கிய ‘ஆரம்பக் கல்வி’ சிடிக்கள்.
A, B, C, D, 1, 2, 3, 4 என்று அசைந்தாடும் பொம்மைகள், பாடல்கள், அனிமேஷன்களைப் பார்த்துக் சின்னக் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது தமிழைக் கற்றுக்கொள்ளமுடியும் என்றால், நாமும் அதேபோல் கன்னடம் கற்றுக்கொண்டால் என்ன?
டக்கரான யோசனை. மார்க்கெட்டில் ஏதாவது ’கன்னடக் கல்வி’ சிடி கிடைக்குமா என்று தேடினேன். அப்படிக் கிடைத்தவர்தான், மங்கண்ணா என்கிற குரங்கு வாத்தியார்.
‘மங்கண்ணா’ என்பது, அந்த சிடியில் வரும் குரங்குக் கதாபாத்திரம். விதவிதமான குழந்தைப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் இந்தக் குரங்குதான், இப்போது எனக்குக் கன்னட ஆசிரியர்.
குழந்தைப் பாடல்கள் என்பதால், ஒவ்வொரு வார்த்தையையும் மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்கள், காட்சிபூர்வமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள். ஒரு பாட்டுக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதிய வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக்கொண்டுவிடமுடிகிறது.
ஏதாவது வார்த்தை புரியாவிட்டால்? பிரச்னையே இல்லை, அதைமட்டும் பேப்பரில் குறித்துக்கொண்டு ஆஃபீசுக்குப் போனால், யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டுவிடலாம். மிகச் சுவாரஸ்யமான விளையாட்டு இது.
சில சமயங்களில் ஒரு பாடல் முக்கால்வாசி புரிந்துவிடும், ஒன்றிரண்டு வார்த்தைகள்மட்டும் அர்த்தம் தெரியாமல் குழப்பியடிக்கும். அப்போது அந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் தெரிந்துகொண்டு பாட்டை முழுக்கத் திரும்பக் கேட்கும்போது உலகமே கூடுதல் வெளிச்சத்துடன் தெரியும்.
அதுமட்டுமில்லை, இந்தப் பாடல்கள்மூலம் வெறும் வார்த்தைகளைமட்டுமின்றி கன்னட மொழி இலக்கணமும் ஓரளவு தெரிந்துகொள்ளமுடிகிறது, அதை மற்ற வார்த்தைகளில் பொருத்திப் பார்த்துப் பயிற்சி செய்வதும் செம ஜாலியாக இருக்கிறது.
மங்கண்ணா குரங்கு வாத்தியார் உபயத்தில், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஓரளவு சுமாரான ‘பட்லர் கன்னடம்’ பேசப் பழகிவிட்டேன். பேருந்து, அரசு அலுவலகங்கள், தபால் நிலையம், ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில்கூட என்னுடைய கன்னடத்தை முயன்று பார்த்துச் சமாளித்துவிட்டேன்.
ஆனால் இதெல்லாம், முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடம்மட்டும்தான். கன்னடம் நன்றாகத் தெரிந்த ஒரு நண்பர் அல்லது உறவினருக்குமுன்னால் கன்னடத்தில் பேசுவதென்றால் ஏகப்பட்ட பயமும் கூச்சமும் என்னைச் சூழ்ந்துகொள்கிறது.
ஏனெனில், என்னுடைய கன்னடத்தில் ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள் இருப்பது எனக்கே தெரியும், அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பதுதான் தெரியாது.
என்ன அவசரம்? மெதுவாகக் கற்றுக்கொள்ளலாம், மங்கண்ணா இருக்க பயமேன்!
***
என். சொக்கன் …
06 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க