மனம் போன போக்கில்

Archive for February 8th, 2009

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி.

நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன.

ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. ஆனால் அதை யார் நமக்குச் சொல்லித்தருவார்கள்? வெளிப்படையாகக் கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயத்திலேயே பலர் வாய் திறப்பதில்லை.

இசைபற்றிய நமது கேள்விகள், சந்தேகங்களை அந்தத் துறை சார்ந்த நிபுணர் ஒருவரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதற்கு நண்பர் நெப்போலியன் ஒரு வாய்ப்புத் தருகிறார். மேல் விவரங்கள் இங்கே:

http://neps.in/2009/01/01/learning-art-of-music-howto-questions-invited/

***

என். சொக்கன் …

08 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்று மதியம் ஓர் அவசர வேலையாக ஜெயநகர் போகவேண்டியிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கும் நேரத்தில் என் செல்பேசி ‘ட்விங் ட்விங் எஸ்ஸெமெஸ்’ என்று சங்கீதக் குரலில் அறிவித்தது.

பிரித்துப் பார்த்தால் சென்னை ட்விட்டர் நண்பர் @vickydotin, ‘பெங்களூர் வந்துவிட்டேன், எப்போது எங்கே சந்திக்கலாம்?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள், இன்னொரு ட்விட்டர் நண்பர் @girisubraவும் எங்களுடன் இணைந்துகொண்டார். SMS வழியாகவே சந்திப்புத் திட்டம் முடிவானது. மாலை ஆறு மணிக்கு, எம்ஜி ரோட்டில்.

ஆனால், ஆறு மணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறதே. அதுவரை என்ன செய்வது? வீட்டுக்குப் போய்த் திரும்பச் சோம்பேறித்தனம். வேறு எங்காவது சுற்றலாம் என்று முடிவெடுத்தேன்.

அப்போதுதான், நேற்றைக்கு நண்பர்கள் சொன்ன ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. எம்ஜி ரோட்டுக்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பிரபலமான புத்தகக் கடையில், வருடாந்திரத் தள்ளுபடி விற்பனை. புத்தகங்களெல்லாம் கொள்ளை மலிவில் 40%, 60%, இன்னும் 80%வரைகூட விலை குறைத்து விற்கிறார்களாம். அதைக் கொஞ்சம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தால் என்ன?

கப்பன் பார்க்வரை பஸ் கிடைத்தது. அதன்பிறகு பதினைந்து நிமிட நடராஜா சர்வீஸில் அந்தப் புத்தகக் கடையை எட்டிப் பிடித்தேன்.

அந்தக் கடையில் புத்தகங்கள்மட்டுமில்லை, இசைத் தகடுகள், பொம்மைகள், எழுதுபொருள்கள், அலங்கார சாதனங்கள், கைக் கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பரிசுப் பொருள்கள், இன்னும் என்னென்னவோ கிடைக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்து ‘லைஃப் ஸ்டைல் ஸ்டோர்’ என்று பொதுவாகச் சொல்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் என்பதுதான் எனக்குச் சரியாகப் புரியவில்லை.

மதிய நேரத்திலும், கடைமுழுக்க ஏகப்பட்ட கூட்டம். மூலைச் சுவர் ஒன்றில் பள்ளங்கள் பதித்து, குழந்தைகள் உள்ளே சவுகர்யமாக அமர்ந்துகொள்ளும்படியான பிறை வடிவங்களை உருவாக்கியிருந்தார்கள். பக்கத்தில் அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் அசௌகர்யமாகக் கை கட்டி நின்றபடி, ‘ஏய், பார்த்து உட்காரும்மா, விழுந்துடாதே’ என்று விநாடிக்கு இரண்டு முறை பதறினார்கள்.

நான் நிதானமாகப் புத்தகங்களைப் புரட்டத் தொடங்கினேன். நண்பர்கள் சொன்னது உண்மைதான், பெரும்பாலான புத்தகங்களுக்குக் கணிசமான தள்ளுபடி தரப்பட்டிருந்தது.

எங்களுடைய அலுவலக நூலகத்தை ‘நிரப்பும்’ பொறுப்பு என்னுடையது. ஆகவே, எப்போதும் என் பாக்கெட்டில் ஏழெட்டுப் புத்தகங்களின் பட்டியல் இருக்கும்.

அந்தப் பட்டியலைக் கடை ஊழியர் ஒருவரிடம் கொடுத்து, ‘இந்த புக்ஸ் எல்லாம் வேணும்’ என்றேன்.

அவர் என்னை நம்பமுடியாமல் பார்த்தார். பிறகு, ‘நீங்களே கொஞ்சம் பார்த்து எடுத்துக்குங்களேன் சார்’ என்றார் சங்கடமாக.

‘இல்லைங்க, இதெல்லாம் புது புக்ஸ், நீங்க எதை எங்கே வெச்சிருப்பீங்கன்னு உங்களுக்குதானே தெரியும்?’

‘புது புக்ஸா?’ அவர் முகத்தில் மறுபடி குழப்பம், ‘இங்கே புதுப் புத்தகம் எதுவும் கிடையாது சார், எல்லாமே பழைய ஸ்டாக்தான்’

அவர் அப்படிச் சொன்னதும், நான் திகைத்துப்போய்விட்டேன். இதென்ன கூத்து? ‘எங்களிடம் புதுச் சரக்கு இல்லை, அத்தனையும் பழசுதான்’ என்று எந்தக் கடைக்காரராவது சொல்வாரா? அப்படிச் சொல்கிறவரிடம் ஜனங்கள் வாங்குவார்களா?

இவர் சொல்கிறார். ஜனங்கள் வாங்குகிறார்கள், கடையில் எள் விழுந்தால் நசுங்கிப்போய்விடுகிற அளவுக்குக் கூட்டம்.

நான் மௌனமாகப் புத்தக அலமாரிகளின்பக்கம் திரும்பினேன். எனக்கு ஆர்வம் ஊட்டிய, விலை ஒத்துவரக்கூடிய தலைப்புகளைமட்டும் எடுத்துக் கூடையில் போடத் தொடங்கினேன்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எனக்கு ஒரு சந்தேகம். நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் எல்லாமே, 40% அல்லது 60% தள்ளுபடி வகையைச் சேர்ந்தவை. ஆனால், அந்தத் தள்ளுபடியின்மூலம் புத்தக விலை ரொம்பக் குறைந்ததாகத் தெரியவில்லை. அது எப்படி?

கொஞ்சம் கவனமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ம்ஹூம், தள்ளுபடிக்குப்பிறகும், பெரும்பாலான புத்தகங்களின் விலை நானூற்றைம்பது, ஐநூற்றைம்பது ரூபாய் என்கிற அளவில்தான் இருந்தது.

அவசரமாக அலுவலகத் தோழி ஒருவரைத் தொலைபேசியில் அழைத்தேன், நான் தேர்ந்தெடுத்த ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இணையத்தில் அதன் விலையைத் தேடிக் கண்டுபிடிக்கக் கேட்டுக்கொண்டேன்.

இரண்டு நிமிடம் கழித்து, பதில் வந்தது, ‘ரூ 480/-’

அதே புத்தகம், இந்தக் கடையில் 40% தள்ளுபடி, ஆனால், விலைமட்டும் ரூ 550/-

தள்ளுபடி என்றால் புத்தகத்தின் விலை குறையவேண்டும். இங்கே எழுபது ரூபாய் கூடியிருக்கிறது. எப்படி?

கூடையிலிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வெளியில் எடுத்தேன், அவற்றின் பின் அட்டை விலையைக் கூர்ந்து கவனித்தேன். விஷயம் புரிந்தது.

நான் தேர்ந்தெடுத்திருந்த புத்தகங்கள் அனைத்தும் வெளிநாட்டுப் பதிப்புகள். ஆகவே, அவற்றின் விலை 18 டாலர், 12 யூரோ என்பதுபோல் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்தப் புத்தகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது. அவற்றை இங்கே அதே விலையில் விற்றால் போணியாகாது. ஆகவே, உள்ளூர் விலை ஒன்று நிர்ணயிப்பார்கள். அதை ஒரு சின்ன ஸ்டிக்கராகப் புத்தகத்தின் பின் அட்டையில் ஒட்டுவது வழக்கம்.

உதாரணமாக, ஒரு புத்தகத்தின் விலை 18$, அதன் இந்திய மதிப்பு சுமார் 900 ரூபாய், ஆனால் இந்தியாவில் அதனை விற்பனை செய்கிறவர்கள் 400 ரூபாய்க்கு அதை விற்பதாக முடிவெடுக்கலாம். இந்த விலைதான் புத்தகத்தின் பின் அட்டையில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஆனால், இந்தக் கடைக்காரர்கள், அந்த ஸ்டிக்கரைப் பிய்த்துவிட்டார்கள். உடனே, அந்தப் புத்தகம் 18$ – அதாவது 900 ரூபாய் மதிப்புள்ள புத்தகமாகிவிட்டது.

அடுத்தபடியாக, அதில் 40% தள்ளுபடி என்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள் – அதாவது, 900 ரூபாயில் 360 தள்ளுபடி, மீதி 540 ரூபாய்.

இந்த விவரமெல்லாம், வாங்குகிறவருக்குத் தெரியாது. அவர் ‘ஆஹா, 40% தள்ளுபடி’ என்று மகிழ்கிறார். புத்தகத்தை 540 ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறார். ஆனால், அதே புத்தகம், பக்கத்துக் கடையில் 400 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

இப்படி ஒரு புத்தகம், இரண்டு புத்தகம் இல்லை, அந்தக் கடையில் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டிருந்த பெரும்பான்மைப் புத்தகங்களின் பின் அட்டை ஸ்டிக்கர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்த எனக்கு பகீரென்றது.

நிறைய வாங்கலாம் என்கிற எண்ணத்துடன் அங்கே சென்ற நான், கடைசியில் ஒன்றிரண்டு இந்தியப் புத்தகங்களைமட்டும் (உண்மையான தள்ளுபடியில்) வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஆனால் எனக்கு முன்பும் பின்பும் வரிசையில் நின்றவர்கள் இரண்டாயிரம், ஐயாயிரம் என்று கிரெடிட், டெபிட் கார்ட்களை இஷ்டப்படி தேய்த்துக்கொண்டிருந்தார்கள், பாவம்.

வெளியே ‘80% தள்ளுபடி’ பேனர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல்தான் வந்தது.

விற்பனைத் தந்திரம் என்று நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக இப்படியா திருட்டு வேலை செய்வது? இது சட்டப்படி செல்லுமா? அல்லது, ஏமாற்றா? எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், இனி அந்தக் கடையில் கால் வைப்பதற்குமுன்னால் நான் ரொம்ப யோசிப்பேன்.

அது சரி, இதே கடைக்காரர்கள் நாடுமுழுவதும் ‘ஃப்ரெஷ்’ஷாகக் காய்கறிகளை விற்கிறார்களே, அங்கேயும் இதுபோன்ற ஏமாற்றுகள், தில்லுமுல்லுகள் இருக்குமா? யோசித்துக்கொண்டே எம்ஜி ரோட்டுக்கு பஸ் ஏறினேன்.

அடுத்த இரண்டு மணி நேரம், செம அரட்டை. நண்பர்கள் விக்கி, கிரீஷ் இருவரையும் முதன்முறை நேரில் சந்திக்கிறேன். ஆனால் ஏற்கெனவே ட்விட்டரில் நல்ல அறிமுகம் இருந்ததால், வழக்கமாகத் தமிழர்கள் எங்கு சந்தித்தாலும் பேசிக்கொள்கிற கிரிக்கெட், சினிமாவில் ஜன ரஞ்சகமாகத் தொடங்கி புத்தகங்கள், வேலைச் சூழல், பொருளாதாரச் சரிவு, பெங்களூர், சென்னை வித்தியாசங்கள், ஒற்றுமைகள் என ஒரு ரவுண்ட் வந்தோம்.

எட்டரை மணிக்குப்பிறகும், தொடர்ந்து பேச ஆசையாகதான் இருந்தது. ஆனால் ’ஆளுக்கு ஒரு கப் காபி குடித்துவிட்டு இத்தனை நேரம் மொக்கை போடுகிறான்களே’ என்று கடைக்காரர்கள் எங்களை முறைக்கத் தொடங்கியதால், வேறு வழியின்றி எங்கள் அரட்டையை முடித்துக்கொண்டோம்.

வீடு திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்ததைத் தேடினால், சாலையை இடது, வலதாக மாற்றிப்  போட்டிருந்தார்கள், ‘பஸ் ஸ்டாப் எங்கே போச்சு?’ என்று பதற்றத்துடன் விசாரித்தபோது, ரோட்டின் மத்தியில் கை காட்டினார்கள்.

நான் முதலில், அவர்கள் ஜோக் அடிப்பதாகதான் நினைத்தேன். ஆனால் நிஜமாகவே, அந்தப் பேருந்து நிறுத்தம் சாலைக்கு நடுவே இடம் பெயர்ந்திருந்தது. அங்கே ஏழெட்டு பேர் கடிகாரத்தை முறைத்தபடி பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படி ஒரு புதுமையான யோசனை யாருக்கு வந்ததோ தெரியவில்லை. உலகத்திலேயே, இருபுறமும் பரபரப்பாக டிராஃபிக் ஓடிக்கொண்டிருக்க, நடு மத்தியில் பேருந்து நிறுத்தம் அமைத்த ஒரே நகரம், பெங்களூராகதான் இருக்கவேண்டும்.

போக்குவரத்து நெரிசலைக் கஷ்டப்பட்டுக் கடந்து அந்தச் சாலையின் நடுவே சென்றடைந்தேன். அங்கிருந்த மற்றவர்களைப்போலவே நானும் கையைக் கட்டிக்கொண்டு பஸ் வரும் திசையில் விழி வைத்தேன்.

’நீயெல்லாம் நடுத்தெருவிலதான் நிக்கப்போறே’ என்று எப்போதோ, யாரோ என்னைத் திட்டியிருக்கவேண்டும், இன்றைக்குப் பலித்துவிட்டது.

காத்திருந்த நேரத்தில், அங்கே ஒட்டப்பட்டிருந்த ஒரு நோட்டீஸைக் கவனித்தேன். குழந்தைக் காப்பகம் ஒன்றுக்கான விளம்பரம் அது. ’Baby Crush Time: Morning 9 To Evening 4′ என்று எழுதியிருந்தார்கள்.

அத்தனை நேரம் குழந்தையைப் போட்டு நசுக்கினால் அதற்கு வலிக்காதோ என்று நான் யோசித்து முடிப்பதற்குள், பஸ் வந்துவிட்டது. முண்டியடித்து ஏறிக்கொண்டேன்.

என்னோடு காத்திருந்தவர்கள் எல்லோரும், அதே பஸ்ஸில்தான் ஏறினார்கள். ஒருவர்மட்டும் அங்கேயே தயங்கி நின்றார்.

காரணம், அவர் கையிலிருந்த சிகரெட். அப்போதுதான் அதைக் கொளுத்தி வாயில் வைத்திருந்தார். எனவே, மொத்தத்தையும் வீசி எறிந்து வீணாக்கிவிட்டு பஸ்ஸில் ஏற அவர் விரும்பவில்லை, முழுக்கப் புகைத்துவிட்டு சாவகாசமாக அடுத்த பஸ்ஸைப் பிடித்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.

அதேசமயம், இந்த பஸ்ஸைக் கைவிடவும் அவருக்கு மனம் இல்லை, அடுத்த பஸ் எப்போது வருமோ? யாருக்குத் தெரியும்?

ஆகவே, அவர் தன்னுடைய சிகரெட்டைக் கீழே வீசுவதுபோல் கை உயர்த்தினார், ஆனால் வீசவில்லை.

அரை நிமிடத்துக்குப்பிறகு, டிரைவர் வண்டியைக் கிளப்பி வேகம் எடுப்பதற்கும், அவர் சிகரெட்டை வீசி எறிவதற்கும் சரியாக இருந்தது. விறுவிறுவென்று ஓடி வந்த அவர் எங்கள் பஸ்ஸில் ஏற முயன்றபோது, ஆட்டோமேடிக் கதவு அறைந்து சாத்தப்பட்டது.

நான் ஜன்னல்வழியே திரும்பிப் பார்த்தேன். கீழே இன்னும் அணையாமல் விழுந்து கிடந்த சிகரெட்டை வெறித்துப் பார்த்தபடி அவர் இன்னமும் நடு ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தார்.

***

என். சொக்கன் …

08 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728