சார், ஒரு காபி குடிக்கறீங்களா?
Posted February 11, 2009
on:- In: Customer Care | Customer Service | Customers | Financial | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Technology | Uncategorized
- 11 Comments
இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.
வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’
இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.
தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து கொடுத்தால் போதாதா?
இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்தச் ‘சிறு’ அனுபவம் போதும். அதன்பிறகு இந்த உலகத்தில் எதுவும் யாரும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றாது. எதையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் ஞானிகளைப்போல் காற்றைத் தின்று உயிர்வாழக்கூடத் துணிந்துவிடுவீர்கள்.
நிற்க. காபிக் கம்பெனி அழைக்கிறது, ’இப்ப உங்களுக்கு எக்ஸாக்டா என்ன வேணும் சார்?’
வந்தவர் டை முடிச்சை இறுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார். முக்கால் மணி நேரம் அவர்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அவர்களது டீலர்கள் யார், யார், அவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் நெட்வொர்க் என்னவிதமானது என்றெல்லாம் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் தொகுக்கக்கூடிய, அதேசமயம் பிஸினஸ் பிரம்ம ரகசியங்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான ஓர் இணைய தளம் வேண்டும் என்றார்.
நன்றி ஐயா, தங்கள் சித்தம், எம் பாக்கியம் என்று கும்பிட்டுவிட்டு வேலையில் இறங்கினோம்.
அடுத்த மூன்று நாள்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் தீர்ந்தன. மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டபிறகு, ஒருவழியாக காபி டீலர் நெட்வொர்க் இணைய தளத்திற்கான காகித வரைபடங்கள் தயாராகிவிட்டன.
இப்போது, இந்தக் காகித வரைபடங்களை வைத்துக் கம்ப்யூட்டர் பொம்மைகள் செய்கிற வேலை தொடங்கியது. அதுவும் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு, திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கடைசியில் எல்லாம் முடிந்தது. சகலத்தையும் ‘ஜிப்’ போட்டு இறுக்கி, காபிக்கடைக்காரர்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்தோம்.
உடனடியாக பதில் வந்தது, ‘ஆஹா, பிரமாதம், நாங்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டு செய்திருக்கிறீர்கள். நாங்களே உட்கார்ந்திருந்தால்கூட இத்தனை அழகான ஒரு மாதிரியைச் செய்திருக்கமுடியாது’
பாராட்டெல்லாம் சரி, எப்போது நிஜமான இணைய தளத்துக்கான வேலையைத் தொடங்குவது?
இந்தக் கேள்விக்குதான் பதில் காணோம். ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு, காபிக்கடையிலிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்தான். எத்தனை ‘நிராகரிப்பு’களைப் பார்த்திருப்போம்? அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் பழகிவிட்டோம்.
ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, பத்து நாள் கழித்து இன்னோர் ஈமெயில் வந்தது. ’ஆஹா, ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சா?’ பரபரப்பாகப் பிடித்துப் படித்தோம்.
அன்புடையீர்,
நாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களுடைய டீலர் நெட்வொர்க் இணைய தளத்துக்கான ஒரு மாதிரியை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. எங்கள் எல்லோருக்கும் இந்த வடிவமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது.
எனினும், தவிர்க்கமுடியாத பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, நாங்கள் இந்த ப்ராஜெக்டைத் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
மறுபடி எப்போது தொடங்குவோம் என்று எங்களுக்கே தெரியாது. அப்போது உங்களைதான் முதலில் தொடர்புகொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்.
இப்படிக்கு,
…..
இதைப் படித்ததும், எங்களுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கூரியரில் வரப்போகும் காபிக்கொட்டைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று, இப்படியே போனால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கதான் பயமாக இருக்கிறது. சுபிக்ஷா ஊழியர்களின் சம்பள பாக்கிக்கு மொபைல் ஃபோன் கொடுத்தார்களாமே, அதுபோல, எங்களுக்கும் அடுத்த மாதச் சம்பளத்தைக் காபிக் கொட்டைகளாகதான் தருவார்களோ என்னவோ!
***
என். சொக்கன் …
11 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
11 Responses to "சார், ஒரு காபி குடிக்கறீங்களா?"

இதாவது பரவாயில்லை. காப்பிக்கொட்டையாவது மிஞ்சியது. நாங்கள் பங்கெடுத்த இதே போன்ற ஒரு வேலையில் எங்களை மாதிரியே இன்னும் நாலைந்து நிறுவனங்களை அணுகி எல்லாரும் கொடுத்த மாதிரிகளையும் அலசி ஆராய்ந்து எது உத்தமமோ அதை உள்ளே உள்ள ஆட்களை வைத்தே முடித்துக்கொண்டது. அலசி ஆராய்வது, டிசைன் என்று ஆரம்பகட்ட அனைத்து வேலைகளும் மிச்சம்.
இது எப்படி இருக்கு?


என்ன கொடுமை சரவணன் இது? 🙂
Next time you can try proposing to a Wholesome retail shop. Monthly ration would be met atleast :))


நல்ல வேலை காண்டம் கம்பேனியிலிருந்து design கேட்காம போனாங்க.


இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
EXCELLENT..Cannot control laugh 😀


nalla velai oru listed compani’o illa mutual fund comapnikko proposal koddukala, appadi koduthirundhinganna verum statement thaan vanidirukkum adaum pazhaya paper kada karanukkuthaan potrukkonumunga……enna ellathoda madippum adala badalathulla irukkudhunga sir…….

1 | Sathya
February 11, 2009 at 4:40 pm
//இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்//
:-)))))))))