மனம் போன போக்கில்

கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை

Posted on: February 13, 2009

சென்ற புதன்கிழமை, (பெங்களூரு) ஜெயநகரில் உன்னி கிருஷ்ணன் கச்சேரி.

ஆறு மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கச்சேரியைப் பத்து நிமிடம் முன்னதாகவே தொடங்கிவிட்டார் உன்னி. ஆனால் ஒலி ஏற்பாடுகள் அநியாயத்துக்குச் சொதப்பியதால், பத்து நிமிடம் அவரை வெறுமனே சிரித்துக்கொண்டு மேடையில் உட்காரவைத்துவிட்டு ‘ஹலோ மைக் டெஸ்டிங், ஒன், டூ, த்ரீ’ என்று எல்லோருடைய பொறுமையையும் சோதித்தார்கள்.

உன்னி கிருஷ்ணன் ஜம்மென்று ஜிப்பா போட்டுக்கொண்டு, பெயருக்கு ஏற்ற சின்னக் கண்களால் எல்லோரையும் உன்னித்துக்கொண்டிருந்தார். அவருடைய மைக்கிற்குமுன்னால் வெள்ளைவெளேர் ஸ்டாண்டில் ஓர் ஐபாட் கம்பீரமாக உட்கார்ந்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.

ஒருவழியாக மைக், ஸ்பீக்கர் பிரச்னைகள் சரியாகி மீண்டும் அதே தியாகராஜர் கீர்த்தனையுடன் தொடங்கினார் உன்னி கிருஷ்ணன். அடுத்த மூன்று மணி நேரங்களுக்குமேல் உட்கார்ந்த இடத்திலிருந்து எழமுடியாதபடி கட்டிப்போட்டுவிட்டார்.

காரணம், அவருடைய பாட்டுத்திறன்மட்டுமில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பேரையும் தாண்டிக்கொண்டு வெளியே போகவேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருந்தது.

உன்னி கிருஷ்ணனின் குரலில் ஒருவிதமான கெஞ்சல் தொனி எப்போதும் இருக்கிறது. அவர் எந்தப் பாடலைப் பாடினாலும் தெய்வத்திடம் எதற்காகவோ இரங்கிக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. திரை உலகில் அவர் அதிகம் சோபிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பரவாயில்லை, சினிமாவின் இழப்பு, கர்நாடக இசைக்கு லாபம். அன்றைய கச்சேரி முழுவதும், கடவுள் வாழ்த்தில் தொடங்கி துக்கடாக்கள், மங்களம்வரை சகலத்திலும் உன்னி கிருஷ்ணனின் மேதைமை, உழைப்பு தெரிந்தது. சாதாரண துள்ளிசை கீதமாகத் தோன்றுகிறவற்றில்கூட, ஆங்காங்கே நல்ல சங்கதிகள் பொங்கி வந்தன.

முக்கியமாக, எம்.எஸ். அவர்களின் புகழ் பெற்ற ‘குறையொன்றும் இல்லை’ பாடல், உன்னி கிருஷ்ணன் குரலில் முற்றிலும் வேறுவிதமாகக் கேட்டது. அதனை ஒப்பிடவோ, வர்ணிக்கவோ வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது.

ஏழெட்டு வருடங்களுக்குமுன்னால் ஹைதராபாதில் இதே உன்னி கிருஷ்ணனின் இன்னொரு கச்சேரி, ‘குறையொன்றும் இல்லை’ பாடக் கேட்டுச் சீட்டு அனுப்பினோம். அவர் பாடவில்லை.

விழாவுக்குப்பிறகு ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவே அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் விடாமல், ‘குறையொன்றும் இல்லை பாடலியே நீங்க’ என்றார்.

‘அதைத்தான் எல்லோரும் பாடறாங்களே, நானும் எதுக்கு?’ என்றார் உன்னி கிருஷ்ணன்.

அப்போது அதனைத் திமிரான பதில் என்றுதான் நினைக்கத்தோன்றியது. ஆனால் பல வருடங்கள் கழித்து, வெகுஜன எதிர்பார்ப்புகள், மேதைமை இடையே சமநிலைக்குப் போராடும் கலைஞர்களின் சிரமங்களை ஓரளவு புரிந்துகொண்டபிறகு, உன்னி கிருஷ்ணனின் கேள்வியில் இருந்த நியாயம் தெரிந்தது.

அன்றைய கச்சேரியைவிட, அதற்கு வந்திருந்த மக்கள் இன்னும் சுவாரஸ்யம். பெரும்பாலும் தலை நரைத்தவர்கள், அல்லது வழுக்கையர்கள். சுமார் 30% இளைஞர் கூட்டம் இருந்திருக்கலாம். எல்லோரும் ஜோராகத் தாளம் தட்டி ரசித்துக்கொண்டிருந்தார்கள். அநாவசியப் பேச்சுகள், வம்பளப்புகள் இல்லை. கேண்டீன் பஜ்ஜி, போண்டா, மசாலா தோசையும் இல்லை.

ஒரே பிரச்னை, எனக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு தம்பதி. அவர்களுடைய மகள், நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம், கச்சேரியை ரசிக்கிற வயது இல்லை. விளையாடவேண்டும் என்கிற ஆவல், ஆனால் இங்கே எப்படி விளையாடுவது?

அந்தக் குழந்தைக்கு வசதியாக, கைப்பிடிச் சுவர்தான் கிடைத்தது. அதில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது.

பிரச்னை என்னவென்றால், அந்தக் கைப்பிடிச் சுவர் ஒரு முழ உயரம்கூட இல்லை, அதற்குமேல் ஒரு பெரிய கம்பியை நிறுத்திவைத்திருந்தார்களேதவிர, பாதுகாப்பு பூஜ்ஜியம்.

நானும் என்னருகே உட்கார்ந்திருந்த சிலரும் இதைப் பார்த்துப் பதறிக்கொண்டிருக்கையில், அந்தத் தம்பதியர் துளி கலக்கம் இல்லாமல் கச்சேரியில் மூழ்கியிருந்தார்கள். எப்படி முடிகிறது?

நல்லவேளையாக, அந்தப் பெற்றோரைவிட, குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வு அதிகம்போல. அதிகம் எம்பாமல் எகிறாமல் சமர்த்தாக விளையாடிக்கொண்டிருந்தது. நாங்களும் டென்ஷனாகாமல் மறுபடி கச்சேரியில் கவனம் செலுத்த முடிந்தது.

இதுவாவது கொஞ்சம் பரவாயில்லை. சில வருடங்களுக்குமுன்னால் சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி ஒன்றில், கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு தாய் ரொம்ப அவதிப்பட்டுவிட்டார். அதன் அழுகையைச் சமாளிக்கவும் முடியாமல், கச்சேரியைத் தவறவிடவும் மனம் இல்லாமல் அவர் பட்ட பாடு, பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் அழுகையை நிறுத்திவிட்ட குழந்தை, இப்போது சஞ்சய் சுப்ரமணியத்துக்குப் போட்டியாகத் தான் ஒரு மழலை ஆலாபனை நடத்தத் தொடங்கிவிட்டது. ஆனால் அதை ரசிக்க யாரும் தயாராக இல்லை. எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்து ‘உஸ் உஸ்’ என்று சத்தமிட, பாவம் அந்தத் தாய் தவித்துப்போய்விட்டார்.

‘செல்போன்களையும் குழந்தைகளையும் உள்ளே கொண்டுவர வேண்டாம்’ என்று சில சபாக்களில் போர்ட் போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன், செல்போனையாவது ம்யூட் செய்யலாம், குழந்தைகளை என்ன செய்வது?

ஆகவே, குழந்தைகளோடு கச்சேரிக்கு வருகிறவர்களிடம் ரசிகர்கள் ராட்சஸத்தனமாக நடந்துகொள்வது சரியில்லை. பேசாமல் அந்த மாதிரி சமயங்களில் பாடகர்கள் (பாடகிகள் என்றால் இன்னும் விசேஷம்) பெரிய மனது பண்ணி நீலாம்பரி பாடினால் குழந்தை சமர்த்தாகத் தூங்கிவிட்டுப்போகிறது!

இந்த உன்னி கிருஷ்ணன் கச்சேரியில் எந்தக் குழந்தையும் அழவில்லை. மேடையில் அவர் ஒரு மாயக் குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம்.

உன்னி கிருஷ்ணன் பாடும்போது, அவருடைய கைகள் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரைப்போல் பாவம் காட்டுகின்றன. தொடையில் தாளம் தட்டக்கூட முடியாமல், சட்டென்று விரல்களால் அபிநயம் புரியத் தொடங்கிவிடுகிறார்.

இதனால், தொலைவில் இருந்து பார்க்கிறவர்களுக்கு, உன்னி கிருஷ்ணனுக்கும் மைக்கிற்கும் நடுவே கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை உட்கார்ந்திருப்பதுபோலவும், அதை அவர் வருடி வருடிக் கொஞ்சுவதுபோலவும் தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, அவர் உச்சஸ்தாயியில் பாடும்போதுகூடக் கைகளை அளவுக்கு மீறி உயர்த்துவதில்லை, கொனஷ்டைகள் செய்வதில்லை.

கைகளைப்போலவே, உன்னி கிருஷ்ணன் தன் குரலையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அழுகை, அரற்றல், கிண்டல், துள்ளல், எதையும் குரலிலேயே கொண்டுவந்துவிடுகிறார். தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காதுகளில் தேன்.

வழக்கம்போல், தனி ஆவர்த்தனத்தின்போது ரசிகர்கள் எழுந்துபோய் அசிங்கப்படுத்தினார்கள். ’அவ்வளவுதான், கச்சேரி முடிந்துவிட்டது’ என்பதுபோல் கிளம்பிச் சென்ற அவர்களைப் பழிவாங்குவதற்காகவே, தனி-க்குப்பிறகும் எங்களுக்காகச் சில அருமையான பாடல்களைப் பாடினார் உன்னி கிருஷ்ணன்.

கிட்டத்தட்ட மூன்றே கால் மணி நேரக் கச்சேரி. இறுதிவரை பாடகர், பக்கவாத்தியக் கலைஞர்கள் யாரும் உற்சாகம் குறையாமல் விருந்து கொடுத்தார்கள். நன்றி – அவர்களுக்கும், விழாவுக்கு ஏற்பாடு செய்த  ஸ்ரீ ராம லலிதகலா மந்திரா (http://www.srlkmandira.org/) அமைப்பினருக்கும்.

இன்றைக்கு அதே அரங்கத்தில் பாம்பே (மும்பை?) ஜெயஸ்ரீ கச்சேரி. அலுவலக நேரம் ஒத்துழைத்தால் கேட்டுவிட்டு வந்து எழுதுகிறேன்!

***

என். சொக்கன் …

12 02 2009

Advertisements

7 Responses to "கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை"

//அவருடைய மைக்கிற்குமுன்னால் வெள்ளைவெளேர் ஸ்டாண்டில் ஓர் ஐபாட் கம்பீரமாக உட்கார்ந்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.//

தம்புராவில் இருந்து வரும் சுருதியை அதில் ரெக்கார்ட் செய்து கச்சேரி முழுவதும் அதில் இருந்து வருமாறு செய்து இருப்பார். எனக்குத் தெரிந்து டிஎம்கிருஷ்ணா அப்படிச் செய்து பார்த்திருக்கிறேன்.

இலவசக்கொத்தனார்,

நன்றி 🙂

//தம்புராவில் இருந்து வரும் சுருதியை அதில் ரெக்கார்ட் செய்து கச்சேரி முழுவதும் அதில் இருந்து வருமாறு செய்து இருப்பார்//

அப்படியானால் உன்னி கிருஷ்ணனுக்குப் பின்னால் ஒருவர் தம்பூரா மீட்டிக்கொண்டிருந்தாரே, இன்னும் ஸ்ருதிப் பெட்டிவேறு இருந்தது, இவை ஒவ்வொன்றுக்கும் என்ன பயன் என்று தனித்தனியே சொல்லும் அளவுக்கு எனக்கு இசையோ நுட்பமோ தெரியாது 🙂

அப்படியே அரங்கத்தினுள் சென்றது போன்ற உணர்வு.
//சினிமாவின் இழப்பு, கர்நாடக இசைக்கு லாபம்
// 🙂 சரியே

//பெரும்பாலும் தலை நரைத்தவர்கள், அல்லது வழுக்கையர்கள்//

பெரும்பாலும் “தற்கால” இளைஞர்கள் ன்னு சொல்லியிருக்கலாமே 🙂

வெகு சுவாரஸ்யம் !!!

எல்லாம் ஒரே சுருதிதான். More the merrier.

காரணம், அவருடைய பாட்டுத்திறன்மட்டுமில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பேரையும் தாண்டிக்கொண்டு வெளியே போகவேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருந்தது.

-மிகவும் அருமை

எட்வின், சேவியர், இலவசக் கொத்தனார், Saminathan,

நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 451,670 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2009
M T W T F S S
« Jan   Mar »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Advertisements
%d bloggers like this: