Archive for February 17th, 2009
மகாராணியின் ரயில் வண்டி
Posted February 17, 2009
on:- In: Mysore | Travel | Uncategorized | Visit
- 8 Comments
சென்ற வார இறுதியில் திடீர்ப் பயணமாக மைசூர் கிளம்பினோம்.
இந்த இடங்களையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதுபோல் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ‘சும்மா சுற்றிவிட்டு வரலாமே’ என்று புறப்பட்டது. ஆகவே டென்ஷனின்றி நிம்மதியாகப் போய்த் திரும்ப முடிந்தது.
பெங்களூர் மைசூர் புதிய நெடுஞ்சாலை வெண்ணெயாய் வழுக்குகிறது. அதில் பாய்ந்து செல்கிற வாகனங்களும் காலை வெய்யிலில் புத்தம்புதுசுபோல் பளபளக்கின்றன.
ஆனால், சாலையோரங்கள்? ஒரு சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கி, அதில் இருக்கும் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தின்றுவிட்டு வீசி எறிந்துகொண்டே நடந்து போனால் எப்படி இருக்கும்? அதுபோல சிப்ஸ் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள், பழ ரச டப்பாக்கள், பிஸ்கெட், சாக்லெட் உறைகள் இன்னும் என்னன்னவோ. கர்நாடகாவின் மிக நீளமான குப்பைத் தொட்டி பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையாகதான் இருக்கவேண்டும்.
குப்பைகளை மறக்கடிப்பதற்காகவே, நெடுஞ்சாலையெங்கும் விளம்பரப் பலகைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றை வரிசையாகப் படித்துக்கொண்டுவந்தால் நன்றாகப் பொழுதுபோகிறது. உதாரணமாக ஒரு சின்ன சாம்பிள்: காஃபி டே கடையில் காப்பித் தண்ணியுடன் ஆம்லெட், கார்ன் ஃப்ளேக்ஸ், ஆலு பரோட்டா கிடைக்குமாம், புகழ் பெற்ற (?) ’காடு மனே’ உணவகம் இன்னும் எட்டு கிலோ மீட்டரில் தென்படுமாம், ஏதோ ஓர் எண்ணெயை உணவில் போட்டுச் சமைத்தால் அது கொழுப்பை எதிர்த்துச் சண்டை போடுமாம், மைசூரில் பட்ஜெட் விலையில் தங்குவதற்கு ஒரு டக்கரான புது ஹோட்டல் திறந்திருக்கிறார்களாம், தங்கத்தை இந்தியாவிலேயே மிக மலிவாக விற்கும் நகைக்கடை ஒன்று மைசூரில் அறுபத்தைந்து ஆண்டு காலப் பாரம்பரியத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறதாம், இப்போது ‘காடு மனே’ உணவகம் இன்னும் ஏழு கிலோ மீட்டரில் தென்பட்டுவிடுமாம்.
இப்படியே ஒவ்வொரு கடைக்கும் ஆறு கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் என்று கவுண்ட் டவுன் விளம்பரப் பலகைகள் அமைத்துப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லாதபடி மக்கள் எல்லாக் கடைகளிலும் கூட்டமாகக் குவிந்து ஆதரிக்கிறார்கள்.
‘காமத்’ சாப்பாட்டுக் கடையில் கால் வைக்க இடம் இல்லை. அறுபது ரூபாய் கொடுத்தால் தென்னிந்திய பஃபே, மசாலா தோசை, இட்லி, கேசரி, உப்புமா, காபி, ஜூஸ் என்று எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வயிற்றில் இடம் உள்ளவரை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பாருடன் ஓரத்து மரங்களில் குரங்குகள் ஓடியாடி வேடிக்கை காட்டுகின்றன.
கசப்பான காபியை சப்புக்கொட்டி ருசித்தபடி வெளியே வந்தால், சின்னதாக ஒரு பெட்டிக் கடை. அதில் விதவிதமான சுடுமண் விநாயகர்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள்.
ஒரு விநாயகர், லாப்டாப்பில் மும்முரமாக வேலை(?) பார்க்கிறார், அந்த லாப்டாப்பைத் தாங்கியிருக்கும் டேபிள், அவருடைய வாகனம் மூஞ்சூறு. பக்கத்தில் இன்னொரு விநாயகர் ஆலிலைக் கிருஷ்ணனாகப் படுத்திருக்கிறார், அடுத்து ஆதிசேஷன்மேல் ஆனந்த சயன போஸில் ‘ரங்கநாத’ விநாயகர்.
இன்னும் மூன்று தலை விநாயகர், சிவலிங்கத்தைத் தழுவியபடி மார்க்கண்டேய விநாயகர், பானை வடிக்கும் விநாயகர், மரத்தில் ஏறிக் குறும்பு செய்யும் விநாயகர், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்திருக்கும் விநாயகர், குப்புறப் படுத்தபடி டிவி பார்க்கும் விநாயகர், விதவிதமான வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர்களின் ஆர்க்கெஸ்ட்ரா, .. அத்தனூண்டு மேஜைக்குள் கிட்டத்தட்ட அறுபது, எழுபது வகையான விநாயகர்களைப் பார்க்கமுடிந்தது.
இதில் விசேஷமான விஷயம், அங்கிருந்த எந்த விநாயகரும் இயந்திரத் தயாரிப்பாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு செய்நேர்த்தி, அழகு. ஒவ்வொன்றும் சராசரியாக நாற்பதிலிருந்து எண்பது ரூபாய்க்குள் விலை.
மைசூரின் புண்ணியத்தில், அங்கே போகும் வழியில் உள்ள சென்னபட்னா, மத்தூர், மாண்ட்யா போன்ற பல கர்நாடகக் குட்டி நகரங்கள் பலன் பெறுகின்றன. கொஞ்சம் கவனமாகப் பேரம் பேசத் தெரிந்தால் நியாயமான விலைக்கு நிறைய நல்ல பொருள்களை அள்ளி வரலாம் – முக்கியமாக சென்னபட்னாவின் மர பொம்மைகள் தவறவிடக்கூடாத பொக்கிஷம், அப்புறம் மத்தூரின் விசேஷமான உள்ளங்கை அகல வடை.
பொதுவாக மைசூருக்கு வருகிறவர்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்கும் இடங்கள் ஏழெட்டு உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்றால் சுற்றுலாத் தலங்களைவிட, பிற பயணிகளின் முதுகுகளைதான் அதிகம் தரிசிக்கவேண்டியிருக்கும். ஆகவே, நிறையப் பேர் எட்டிப்பார்க்காத இடமாக, மைசூர் ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே மியூசியத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
இந்தியாவின் மிகப் பழமையான ரயில்கள் சில மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியிருக்கின்றன. குத்துமதிப்பாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் விலையில் அம்மாம்பெரிய நீராவி எஞ்சின்களை இறக்குமதி செய்து இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் – அதே தொகைக்கு இப்போது நல்லதாக ஒரு பைக்கூட வாங்கமுடியாது.
ஆச்சர்யமான விஷயம், கிட்டத்தட்ட நூற்றாண்டு காலப் பழசான இந்த ரயில் எஞ்சின்களின் சில பாகங்கள் இன்னும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பது ரொம்பப் புதுசான ஓர் அனுபவம். ஏதோ ஒரு சிவப்புப் பிடியில் கை வைத்துக்கொண்டு ரயிலை ஓட்டுவதுபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அல்ப ஆசைக்கும் அனுமதிக்கிறார்கள்.
அப்புறம் அந்தக் கால ரயில் பெட்டிகள். பொதுவாக ரயில்வே நிலையங்களில் ஒரு நீளமான மர பெஞ்ச்களைப் பார்த்திருப்போம். கிட்டத்தட்ட அதேமாதிரியான அமைப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று வரிசைகளில் முப்பது பேர் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்கிற ஏற்பாடு.
அங்கிருந்த ஒரு புகைப்படத்தில், ‘டபுள் டெக்கர்’ ரயில்களைப் பார்த்தேன், ‘அட’ என்று ஆச்சர்யப்பட்டபோது என் மனைவி என்னைப் பூமிக்குக் கொண்டுவந்தார், ‘இந்தக் காலத்திலயும் எல்லா ரயிலும் டபுள் டெக்கர்தானே? பாதிப் பேர் லக்கேஜ் வைக்கிற இடத்தில ஏறி உட்கார்ந்துகிட்டுதானே பயணம் செய்யறாங்க?’
மைசூர் ரயில்வே மியூசியத்தில் பழமையான எஞ்சின்கள், பெட்டிகளைவிட ஆச்சர்யம் அளிக்கும் விஷயம், ரயில் பாதைகளின் பரிசோதனைக்காக இயங்கிய ‘Inspection Cars’.
பெரிய எஞ்சினியர்கள், அதிகாரிகளை ஏற்றிச் சென்ற இந்த விசேஷ பெட்டிகளில் படுக்கை அறை, உட்கார்ந்து எழுதுவதற்கான மேஜை, வராண்டா, வேலைக்காரர்கள் தூங்குவதற்கு ஒரு தீப்பெட்டி என சகல வசதிகளும் உண்டு. இதேபோல், ரயில் பாதையில் இயங்கக்கூடிய ஒரு விசேஷ ஜீப்கூட அங்கே நின்றுகொண்டிருக்கிறது.
ரயில்வே அருங்காட்சியகம் என்பதால், டிக்கெட் கொடுக்கும் அறை, குப்பைத் தொட்டியைக்கூட ரயில் பெட்டி, எஞ்சின்போலதான் வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயணம் செய்ய பொம்மை ரயிலும் இருக்கிறது.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி திரும்பும்போதுதான் எதேச்சையாக அந்த போர்டைக் கவனித்தோம், ‘மகாராணி சலூன்’.
இவருக்காகவே தனியாக ஒரு சலூன் வைத்து முடி வெட்டும் அளவுக்கு மகராணிக்கு அத்தனை பெரிய கூந்தலா என்று ஜோக்கடித்தபடி அந்தப் பழைய கட்டடத்தினுள் நுழைந்தால், உள்ளே பிரம்மாண்டமான ரயில் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் காலத்து மவராசன்கள், மவராசிகள் பயன்படுத்திய சொகுசு ரயில்.
அங்கே நின்றுகொண்டிருந்த தாத்தா ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து காண்பித்து எங்களுக்கு விளக்கினார், ‘இந்த பெல் அமுக்கினா ப்ரேக்ஃபாஸ்ட், அந்த பெல் அமுக்கினா லஞ்ச், அதோ அந்த பெல் அமுக்கினா டின்னர் வரும் சார்’
இதென்ன விநோதம்? ஒரு நேரத்தில் ஒருவகையான சாப்பாடுதானே உண்ணமுடியும்? ஒரு பெல் போதாதா? ஏதோ ஞாபகத்தில் மகாராணி காலை நேரத்தில் மறந்தாற்போல் ’டின்னர் பெல்’லை அமுக்கிவிட்டால், சூரியனை ஆஃப் செய்துவிட்டு இரவு உணவைக் கொண்டுவருவார்களோ?
யார் கண்டது, மேதகு மகாராஜாக்கள், மேன்மை தாங்கிய மகாராணிகள், செய்தாலும் செய்வார்கள்.
மகாராணியின் வண்டியில் நீளமான படுக்கை, அலங்கார நிலைக்கண்ணாடி, எழுதும் மேஜை, சீட்டாட்டத்துக்காக ஒரு தனி மேஜை, குளியல் அறை, வெந்நீருக்கு பாய்லர் என்று சகலமும் இருக்கிறது. பக்கத்திலேயே ஊழியர்களுக்கான படுக்கை அறை, அம்மி, குழவி சகிதம் சமையலறை என பெட்டிக்குள் ஒரு குட்டி அரண்மனையையே ஒளித்துவைத்திருக்கிறார்கள்.
அத்தனையையும் வேடிக்கை பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கிவந்தால், பழங்காலத் தொலைபேசிகள், மோர்ஸ் தந்தி அனுப்புவதற்கான கருவிகள், புராதன ரயில் தண்டவாளங்கள், பெட்டிகள், பாலங்களின் மாதிரி வடிவங்கள். 1900ம் வருடக் கடிகாரம் ஒன்று இன்னும் சரியாக நேரம் காட்டிக்கொண்டிருக்கிறது, பக்கத்தில் விளக்கோடு கூடிய அந்தக் கால மின் விசிறி ஒன்று ஏகப்பட்ட சத்தத்துடன் ஓடுகிறது.
இத்தனையையும் எங்களுக்காக விரிவாக விளக்கிச் சொன்ன தாத்தா, நாங்கள் கொடுத்த பத்து ரூபாயைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார். மகாராணிக்காக இல்லாவிட்டாலும், அவருக்காகவேனும் இங்கே கொஞ்சம் கூட்டம் வரலாம்.
அடுத்தபடியாக, மைசூர் மிருகக் காட்சியகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகம். ஆனால் நாலு கிலோ மீட்டர் நடக்கிற வாய்ப்பு என்பதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.
இதற்குமுன் நாங்கள் பார்த்திருந்த அத்தனை மிருகக் காட்சியகங்களையும்விட, மைசூர் ஜூ பலவிதங்களில் சிறப்பாக இருந்தது. நடப்பதற்கு அழகான பாதைகள், தெளிவான இரு மொழி அறிவிப்புகள், மக்கள் கண்ட இடத்தில் பிளாஸ்டிக்கை வீசி எறியாமல் இருப்பதற்காகத் தனியே உணவு உட்கொள்வதற்கான இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.
அதைவிட முக்கியம், பெரும்பாலான மிருகங்களைத் தொலைவில் ஒளித்துவைக்காமல் பக்கத்திலேயே பார்க்கமுடிந்தது. ‘ஜூ என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் அல்ல, கற்றுக்கொள்வதற்கான ஓர் அபூர்வமான வாய்ப்பு, இங்கே உங்கள் குழந்தைகளுக்கு மிருகங்களைப்பற்றி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் கொடுங்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் ஆலோசனை சொல்கின்றன.
வழக்கம்போல், ஜூவினுள் நுழைந்த விநாடியிலிருந்து தென்படும் ஜீவராசிகளையெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறேன். இந்த ஜூரம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தபிறகு, என்னுடைய படங்களில் மிருகங்கள், பறவைகளைவிட கம்பிக் கூண்டுகள்தான் அதிகம் தெரிகின்றன என்பதை உணர்ந்து, கேமெராவை மூடி வைக்கிறேன்.
நாங்கள் சென்ற நேரம் நட்டநடு மத்தியானம் என்பதால், பெரும்பாலான மிருகங்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. மக்கள்தான் அவற்றை உறங்கவிடாமல் சத்தம் போட்டு எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
மிருகக் காட்சியகத்தினுள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் அங்குள்ள சுத்திகரிக்கும் கருவிகளின் லட்சணத்தைப் பார்த்தால், அந்த நீரைக் குடிக்க மனம் வருவதில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்வது நல்லது.
மைசூர் ஜூ-வின் நான்கு கிலோ மீட்டர்கள் சுற்றி வருவதற்குக் குத்துமதிப்பாக மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் அதன்பிறகும், எதையோ தவறவிட்டதுபோன்ற ஓர் உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை.
திரும்பும் வழியில், மீண்டும் காமத் உணவகத்தைக் கடந்து செல்கிறோம். ஆனால் இப்போது அங்கு வாசலில் இருக்கும் சுடு மண் விநாயகர்களைப் பார்த்தால், மைசூரில் கால் மேல் கால் போட்டு நின்ற ஆப்பிரிக்க யானையின் நினைவுதான் வருகிறது!
***
என். சொக்கன் …
17 02 2009