ரங்கநாதன் தேரு
Posted February 23, 2009
on:- In: Chennai | Customers | Train Journey | Travel | Uncategorized | Visit
- 10 Comments
நேற்றிலிருந்து ஒரு வாரம் சென்னையில் ஜாகை. வழக்கம்போல் ’ட்ரெய்னிங்’தான், வேறென்ன?
ஞாயிற்றுக் கிழமை காலை செம டென்ஷனுக்கு நடுவே சதாப்தி எக்ஸ்பிரஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். முதல் இரண்டு மணி நேரம் படு வேகம், அடுத்த மூன்று மணி நேரம் ஆமை வேகம் என்று சதாப்தி செம போர்.
ரயிலில்மட்டுமில்லை, அதன்பிறகு ஹோட்டல் அறையிலும் நாள்முழுக்கச் சும்மா உட்கார்ந்திருந்ததில் வெறுத்துப் போனேன். மாலை நேரத்தில் எங்காவது உலாத்தலாமே என்று வெளியே வந்து, தி. நகரின் உலகப் புகழ் (?) பெற்ற ரங்கநாதன் தெருவைத் தரிசித்துத் திரும்பினேன்.
இந்தப் புனிதப் பயணத்தின் விளைவாக எனக்குள் எழுந்த பத்து கேள்விகளைப் பதிவுலகத்தின் பரிசீலனைக்காகப் பணிவுடன் (எத்தனை ‘ப’!) சமர்ப்பிக்கிறேன்.
ஒன்று
’சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்குள்மட்டும் போகாதே, நசுங்கிவிடுவாய்’ என்று நண்பர்கள் பலர் பயமுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப, அந்தத் தெருவினுள் நுழைந்த விநாடிமுதல் ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகுது’ என்று இளைய ராஜா குரலில் பாடிக்கொண்டுதான் மிக மெதுவாக நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது.
ஆனால் எனக்கென்னவோ ரங்கநாதன் தெருவைவிட, மிச்சமுள்ள தி. நகர் ஷாப்பிங் தெருக்கள்தான் அதிகக் கூட்ட நெரிசல் கொண்டவையாகத் தோன்றின. எல்லோரும் ‘நசுங்க’லுக்குப் பயந்து ரங்கநாதன் தெருவுக்கு வெளியிலேயே ஷாப்பிங்கை முடித்துக்கொண்டுவிடுகிறார்களோ?
இரண்டு
ரங்கநாதன் தெரு என்பதை ஏன் இன்னும் தமிழ் முறைப்படி ‘அரங்கநாதன் தெரு’ என்று மாற்றவில்லை? இதற்காக ஓர் அறப் போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள ஒரு கட்சிகூடவா இல்லை?
மூன்று
ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் மக்கள், தானாக ஓர் ஒழுங்கு அமைத்துக்கொண்டு நடப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இடதுபக்கம் உள்ளே நுழைகிறவர்கள், வலதுபக்கம் வெளியே வருகிறவர்கள், நடுவில் உள்ள சிமெண்ட் மேடு, அவ்வப்போது வரிசை தாண்டி ஓடும் அவசரப் பிறவிகள், நோட்டீஸ் விநியோகிக்கும் பேர்வழிகளுக்கானது.
இந்த ஒழுங்கு ஏன், அல்லது எப்படி வந்தது? Mob Mentality / Social Behaviorபற்றி ஆய்வுகள் செய்யும் Malcolm Gladwell போன்ற எழுத்தாளர்கள், ரங்கநாதன் தெருவைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவார்களா?
நான்கு
கடைக்காரர்களின் ‘வாங்க சார், வாங்க மேடம்’ கூக்குரல்கள், மக்களின் விவாதங்கள், கருத்து மழைகள், இலவச ஆலோசனைகள் போதாது என்று, எல்லாக் கடை வாசலிலும் டிவி வைத்து திராபை டிவிடி ப்ளேயரில் வண்ணமயமான விளம்பரங்களைத் திரும்பத் திரும்ப ‘லூப்’பில் ஒளிபரப்புகிறார்களே, யாருக்குக் கேட்கும் அது? இந்த ஏற்பாட்டால் என்ன பிரயோஜனம்?
ஐந்து
’இந்தமாதிரி ஒரு படத்தை நான் என் லைஃப்ல பார்த்ததே கிடையாது மச்சி’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் கடந்து போனார். எந்தப் படம்? Word Of Mouth Publicity இப்படி வீணாகலாமா?
ஆறு
ரங்கநாதன் தெருவில் அதிகம் தென்படும் பெயர், ‘சரவணா’. ஒரு கடை அண்ணனுடையது, இன்னொன்று தம்பியுடையது, மூன்றாவது அண்ணாச்சி பங்காளியுடையது, நான்காவது அண்ணாச்சியின் சித்தப்பாவின் ஒன்றுவிட்ட ஓர்ப்படியா பேரனுடையது என்று விதவிதமாகக் கதை சொல்கிறார்கள். இந்தக் குழப்பம் எதுவும் ரெகுலராக அங்கே பொருள் வாங்கும் மக்களுக்கு இல்லையா? Are they loyal to every ‘Saravana’ Branded Shop? (யம்மாடி!)
ஏழு
’சரவணா’ புண்ணியத்தில், ரங்கநாதன் தெருவில் எங்கு திரும்பினாலும் நடிகை சிநேகாவின் முகம் தட்டுப்படுகிறது. அந்த அம்மணிக்கு நல்ல முகவெட்டு(?), அழகு, திறமை இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் அவ்வப்போது நடித்தாலும், இன்றுவரை ‘நம்பர் 2 / 3’ இடங்களைக்கூடப் பிடிக்கமுடியாமல் போகக் காரணம் இந்த ‘Over Exposure’தானா?
பெப்ஸியிடம் பல கோடி ரூபாய்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டபிறகும் அதன் விளம்பரத்தில் சில விநாடிகள் முகம் காட்ட மைக்கேல் ஜாக்ஸன் எவ்வளவு தூரம் தயங்கினார் என்பதை யாரேனும் சிநேகாவுக்கு விளக்கிச் சொல்வார்களா?
எட்டு
ரங்கநாதன் தெரு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல ‘குடும்ப’ நிறுவனங்களின் அரவணைப்பில் (ஆக்கிரமிப்பில்?) இருக்கிற ’சென்னை வாடிக்கையாளர்’கள் ‘பிக்பஜார்’, ’Next’, ‘eZone’, ‘SKC’ போன்ற கார்ப்பரேட் சங்கிலி நிறுவனங்களை ஆதரிக்கிறார்களா? இவர்களுடைய சென்னை Vs பெங்களூர் (அல்லது மும்பை அல்லது டெல்லி) விற்பனை விகிதம் என்னவாக இருக்கும்?
கோககோலா, பெப்ஸி போன்ற மார்க்கெட்டிங், விளம்பரங்களுக்குப் புகழ் பெற்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ரங்கநாதன் தெருக் கடை ஒன்றை விலைக்கு வாங்கினால், என்ன செய்வார்கள்? எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்துவார்கள்? யோசித்தால் ஓர் அறிவியல் புனைகதை சிக்கலாம் 😉
ஒன்பது
தி. நகரில் எங்கு பார்த்தாலும் ’பைரேட்’டட் புத்தகக் கடைகள். முன்னூறு, நானூறு ரூபாய்ப் புத்தகங்கள்கூட, ஐம்பது, அறுபது ரூபாய் விலைக்கு சல்லிசாகக் கிடைக்கின்றன. இது எல்லா ஊரிலும் இருக்கிற சமாசாரம்தான். ஆனால், பக்கத்திலேயே தமிழ்ப் புத்தகங்களும் (அவற்றின் ஒரிஜினல் விலையில்) கிடைப்பது புதுசாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு பதிப்பக, விகடன் பிரசுரப் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.
பிரச்னை என்னவென்றால், பைரேட்டட் ஆங்கிலப் புத்தகங்களின் விலை, தடிமன், நேரடித் தமிழ்ப் புத்தகங்களின் விலையைவிட அதிகமாக இருக்கிறது. இது வாங்குபவர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தாதா? ’அத்தனை பெரிய புக் 60 ரூவா, இந்த மெல்லீஸ் புக்கும் 60 ரூவா, என்னய்யா ஏமாத்தறியா?’ என்று அதட்டமாட்டார்களா? கடைக்காரர் பைரேட் விஷயத்தை விளக்கிச் சொன்னால் புரியுமா? ’பேசாமல் தமிழ்ப் புத்தகத்திலயும் பைரேட் செய்யவேண்டியதுதானே?’ என்று யாரேனும் தொடங்கிவிடுவார்களோ?
பத்து
இந்தப் பதிவில் ‘ரங்கநாதன்’ என்கிற வார்த்தை எத்தனைமுறை வருகிறது? யார் அந்த ரங்கநாதன்?
***
என். சொக்கன் …
23 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
10 Responses to "ரங்கநாதன் தேரு"

டிரெயினிங் னா, வந்த வேலையைப் பார்க்க வேண்டியது தானே. இப்படி (அ)ரங்கநாதன் தெருவுக்குள்ள சுத்தி ஸ்னேகாவைப் பார்த்து, கான்சண்ரேஷனை நழுவ விடலாமா சார் 🙂
ஆனாலும் பதிவு நச் 🙂


Mr.Tupil Rangaswamy Iyengar, a retired Civil Servant of the erstwhile Madras Presidency built his house in early ’20s. When civil authorities approached him for his formal approval the humble, religious and self effasive gentleman requested it be named after Lord Ranganatha of Srirangam.
http://en.wikipedia.org/wiki/Ranganathan_Street


//அந்த அம்மணிக்கு நல்ல முகவெட்டு(?), அழகு, திறமை இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் அவ்வப்போது நடித்தாலும்,//
நல்ல முகவெட்டு மட்டும் போதாது. நல்ல உடல்கட்டும் வேண்டும். உடல் காட்டவும் தெரிய வேண்டும்.
//ரங்கநாதன் தெருவின் revenue stream பத்தி விவரம் தெரிஞ்சவுங்க எழுதலாம்.//
வரவேற்கிறேன்.


//இந்த ஒழுங்கு ஏன், அல்லது எப்படி வந்தது? Mob Mentality / Social Behaviorபற்றி ஆய்வுகள் செய்யும் Malcolm Gladwell போன்ற எழுத்தாளர்கள், ரங்கநாதன் தெருவைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவார்களா?//
லாட்டரல் திங்கிங் (எட்வர்ட் டி போனோ?) புத்தகத்தில் படித்தது என்னவென்றால், ஒரு ஒழுங்கும் நாம் செய்யாமலேயே தானே ஒழுங்குகள் (பேட்டர்ன்) ஏற்படுகின்றன.
உதாரணத்திற்கு, உலர்ந்த தரையில், ஒரு சொட்டு நீர் விடுங்கள். பிறகு சொட்டு சொட்டாய் அதை அதிகரியுங்கள். நீர் அதிகமாகி ஓடத்துவங்கும். நீங்கள் ஒன்றும் செய்யாமலேயே நீர் பாதை அமைத்துக் கொள்வதை காணலாம்.

1 | Subbu
February 23, 2009 at 3:35 pm
ங்கொய்யால யார்கிட்ட ரங்கநாதன பத்தி கேக்குர.