மனம் போன போக்கில்

Archive for March 4th, 2009

எங்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது, கம்பெனியில் கொடுத்தது. ஆனால் நான் இன்னும் அதனை ஓட்டப் பழகவில்லை.

ஒருமுறை கார் ஓட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பத்து நாள் செம மொக்கை போட்டபிறகு, லைசென்ஸ் பரீட்சைக்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ’வரலாறு காணாத தோல்வி’யைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதப்பார்க்கிறேன். இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

கார் ஓட்டுவதற்கான தகுதியோ திறமையோ எனக்குச் சுத்தமாக இல்லாததால், என்றைக்காவது வெளியே ஷாப்பிங், பிக்னிக் அல்லது சுற்றுலாப் போக நினைத்தால், ஒன்று, ஆட்டோவை நாடவேண்டும், இல்லாவிட்டால், வெளியிலிருந்து கார் டிரைவர்களை வாடகைக்குக் கூப்பிடவேண்டும்.

பெங்களூரில் ‘On Call Drivers’க்குக் குறைச்சலே இல்லை. ஆனால், தேவை ஜாஸ்தி என்பதால், நான்கைந்து மணி நேரம் முன்னதாகவே பதிவு செய்யவேண்டும். அதன்பிறகும், திடீரென்று ஃபோன் செய்து, ‘இன்னிக்கு வரமுடியாது சார்’ என்று கழுத்தறுப்பார்கள். திட்டத்தை மாற்றவேண்டியதுதான்.

அதுமட்டுமில்லை, யாரோ ஒரு ஊர், பெயர் தெரியாத டிரைவரை நம்பி எப்படிக் காரில் உட்கார்வது? எங்கேனும் வண்டியை நிறுத்திவிட்டுக் கடைகளுக்கோ, தியேட்டருக்கோ போகவேண்டியிருந்தால், எந்த நம்பிக்கையில் அவரிடம் சாவியைக் கொடுப்பது? நாங்கள் இந்தப் பக்கம் போனதும், அவர் இன்னொரு பக்கம் காரைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதற்காக, சாவியை வாங்கிக்கொண்டு அவரை வெளியே வெய்யிலில் நிற்க வைப்பதும் மனிதத்தன்மை இல்லையே!

இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளால், கொஞ்ச நாள் காரைத் தொடாமலே வைத்திருந்தோம். அப்படிச் சும்மா போட்டுவைத்தால் கார் வயர்களை எலி கடிக்கும், எறும்பு கடிக்கும் என்று சில நண்பர்கள் பயமுறுத்தியதால், வேறு வழிகளை யோசித்தோம்.

வழக்கம்போல், இந்தமுறையும் என் மனைவிதான் ஒரு பிரமாதமான மாஸ்டர் ப்ளானை முன்வைத்தார்.

எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒருவருக்கும், அவருடைய கம்பெனியில் கார் கொடுத்திருக்கிறார்கள், கூடவே சம்பளத்துக்கு டிரைவரும் போட்டிருக்கிறார்கள்.

இந்த டிரைவர், தினமும் அதிகாலையிலேயே சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு எங்கள் அபார்ட்மென்ட் வாசலுக்கு வந்துவிடுவார். அவருடைய ‘பாஸ்’ குளித்துச் சாப்பிட்டுப் படி இறங்கி வரும்வரை சும்மா உட்கார்ந்திருக்காமல், காரைத் திறந்து துடைப்பது, கழுவுவது என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்.

இவருக்கு, வாரத்தில் ஐந்து நாள்கள்தான் வேலை. சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை.

’அதனால், யாரோ ஒரு டிரைவருக்கு அலைவதைவிட, விடுமுறை நாள்களில் இவருடைய ஓய்வு நேரத்தை நாம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே’ என்றார் என் மனைவி, ‘பாவம், அவருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைச்சமாதிரி இருக்கும், நமக்கும் நிம்மதி’

நல்ல யோசனைதான். தலையாட்டிவைத்தேன். மறுநாளே அந்த டிரைவரிடம் இதுபற்றிப் பேசி, அவருடைய சம்மதத்தையும், மொபைல் நம்பரையும் வாங்கிவைத்துவிட்டார் என் மனைவி.

அந்த வார இறுதியில், நாங்கள் ஒரு நண்பர் வீட்டுக்குப் போகவேண்டியிருந்தது. இந்த டிரைவரைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னோம், ‘நாலரை மணிக்கு வரமுடியுங்களா?’

‘வந்துடறேன் சார்’

நான்கு இருபத்தைந்துக்கு அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார், ‘கார் சாவி?’ என்றார்.

இந்த அளவு நேரம்தவறாமை எங்களுக்குப் பழக்கமில்லை. நாங்கள் நிதானமாக ஐந்தே கால் மணிக்குத் தயாராகிக் கீழே வரும்போது, அவர் வண்டியைச் சுத்தமாகத் துடைத்துக் கழுவி வைத்திருந்தார்.

அவருடைய தாய்மொழி கன்னடம். என்றாலும், உடையாத தமிழ் பேசினார், காரை மிகவும் நிதானமாக ஓட்டினார், அநாவசியமாக நம்முடைய குடும்பப் பேச்சுகளில் குறுக்கிடுகிற, அரசியலோ, சினிமாவோ, கிரிக்கெட்டோ பேசி வம்பு வளர்க்கிற பழக்கம் இல்லை, அவசியம் ஏற்பட்டாலொழிய வாய் திறப்பதில்லை, எங்கே, எவ்வளவு தாமதமானாலும் முகம் சுளிக்கவில்லை.

வீடு திரும்பியதும், நாங்கள் வழக்கமாக ‘On Call Drivers’க்குக் கொடுக்கிற தொகையை நிமிட சுத்தமாகக் கணக்கிட்டுக் கொடுத்தோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, முகமெல்லாம் சிரிப்பாக வாங்கிக்கொண்டு, நான்குமுறை கும்பிட்டுவிட்டு விடைபெற்றார்.

அதன்பிறகு, நான் அலுவலகம் போகப் படியிறங்கும்போதெல்லாம், அவர் என்னைப் பார்த்துச் சிரிப்பது வழக்கமாயிற்று. வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால் அவருக்கும் ஒரு கப் ஸ்வீட், காரம் கண்டிப்பாகப் போகும்.

அவருடன் அடிக்கடி வெளியே சுற்றிவந்ததில், அவர் எங்களுடன் மிகவும் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். ஆனாலும், அதே அமைதி, சுலபத்தில் வாய் திறப்பது கிடையாது.

ஒரு விஷயம்மட்டும் அவர் சொல்லாமலே எங்களுக்குப் புரிந்தது. என்னதான் மாதச் சம்பளம் வாங்கினாலும், அது அவருடைய குடும்பத்துக்குப் போதவில்லை. எங்கள்மூலமாகக் கிடைக்கும் இந்தக் கூடுதல் வருமானம் அவருக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

போன வாரம், என் அப்பா இங்கே பெங்களூர் வந்திருந்தார். அவரை வெளியே அழைத்துச் செல்வதற்காக இந்த டிரைவரை அழைத்தோம்.

வழக்கம்போல், சரியான நேரத்துக்கு வந்தார், பத்திரமாக வண்டி ஓட்டினார், கொடுத்த காசைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

அப்போதுதான், பிரச்னை தொடங்கியது. எங்களிடம் பேசிவிட்டுப் படியிறங்கிச் சென்றவரை, அவருடைய ‘பாஸ்’ஸின் மனைவி பார்த்திருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை, டிரைவருக்கு விடுமுறை நாள், அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது அவருடைய சொந்த விருப்பம். அதன்மூலம் அவருக்கு ஐம்பது, நூறு வருமானம் வந்தால், அது அவருடைய செலவுகளுக்குத் தோள் கொடுக்கும் – இந்த விஷயமெல்லாம் அந்த நல்ல மனத்துக்காரருக்குப் புரியவில்லை. நேராகத் தன் கணவரிடம் சென்று வத்தி வைத்துவிட்டார்.

அவரும் நல்ல மனத்துக்காரர்தான். உடனடியாகத் தன்னுடைய நிறுவனத்துக்கு ஒரு ஈமெயில் எழுதியிருக்கிறார், ‘நீங்கள் கொடுத்த டிரைவர் சரியில்லை, அடிக்கடி வெளி ஆள்களுக்குக் கார் ஓட்டப் போய்விடுகிறார்’

மறுநாள், அந்த நிறுவனத்தில் ஒரு விசாரணைக் கமிஷன் நிறுவப்பட்டிருக்கிறது. ‘ஞாயிற்றுக் கிழமைகளில்மட்டும்தான் நான் வெளி நபர்களுக்குக் கார் ஓட்டுகிறேன், அதுவும் எப்போதாவதுதான்’ என்று அவர் சொன்ன பதில், அம்பலம் ஏறவில்லை.

இப்போது, அந்த டிரைவர் எந்த நேரத்தில் தன் வேலை போகுமோ என்று பயந்துகொண்டிருக்கிறார். Technically, அவரும் ஓர் ஐடி நிறுவனத்தின் ஊழியர் என்பதால், யூனியன் சமாசாரமெல்லாம் அவருக்குத் துணை வராது.

இந்த விஷயத்தில் எங்கள் நிலைமைதான் பரிதாபம். ஒருவருக்கு உதவி செய்வதாக நினைத்து, எங்கள் சவுகர்யத்துக்காக அவருடைய உத்தியோகத்துக்கு வேட்டு வைத்துவிட்டோமோ என்று நினைக்க மிகவும் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது 😦

***

என். சொக்கன் …

04 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 636,246 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031