மனம் போன போக்கில்

நல்ல மனத்துக்காரர்கள்

Posted on: March 4, 2009

எங்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது, கம்பெனியில் கொடுத்தது. ஆனால் நான் இன்னும் அதனை ஓட்டப் பழகவில்லை.

ஒருமுறை கார் ஓட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பத்து நாள் செம மொக்கை போட்டபிறகு, லைசென்ஸ் பரீட்சைக்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ’வரலாறு காணாத தோல்வி’யைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதப்பார்க்கிறேன். இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

கார் ஓட்டுவதற்கான தகுதியோ திறமையோ எனக்குச் சுத்தமாக இல்லாததால், என்றைக்காவது வெளியே ஷாப்பிங், பிக்னிக் அல்லது சுற்றுலாப் போக நினைத்தால், ஒன்று, ஆட்டோவை நாடவேண்டும், இல்லாவிட்டால், வெளியிலிருந்து கார் டிரைவர்களை வாடகைக்குக் கூப்பிடவேண்டும்.

பெங்களூரில் ‘On Call Drivers’க்குக் குறைச்சலே இல்லை. ஆனால், தேவை ஜாஸ்தி என்பதால், நான்கைந்து மணி நேரம் முன்னதாகவே பதிவு செய்யவேண்டும். அதன்பிறகும், திடீரென்று ஃபோன் செய்து, ‘இன்னிக்கு வரமுடியாது சார்’ என்று கழுத்தறுப்பார்கள். திட்டத்தை மாற்றவேண்டியதுதான்.

அதுமட்டுமில்லை, யாரோ ஒரு ஊர், பெயர் தெரியாத டிரைவரை நம்பி எப்படிக் காரில் உட்கார்வது? எங்கேனும் வண்டியை நிறுத்திவிட்டுக் கடைகளுக்கோ, தியேட்டருக்கோ போகவேண்டியிருந்தால், எந்த நம்பிக்கையில் அவரிடம் சாவியைக் கொடுப்பது? நாங்கள் இந்தப் பக்கம் போனதும், அவர் இன்னொரு பக்கம் காரைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதற்காக, சாவியை வாங்கிக்கொண்டு அவரை வெளியே வெய்யிலில் நிற்க வைப்பதும் மனிதத்தன்மை இல்லையே!

இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளால், கொஞ்ச நாள் காரைத் தொடாமலே வைத்திருந்தோம். அப்படிச் சும்மா போட்டுவைத்தால் கார் வயர்களை எலி கடிக்கும், எறும்பு கடிக்கும் என்று சில நண்பர்கள் பயமுறுத்தியதால், வேறு வழிகளை யோசித்தோம்.

வழக்கம்போல், இந்தமுறையும் என் மனைவிதான் ஒரு பிரமாதமான மாஸ்டர் ப்ளானை முன்வைத்தார்.

எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒருவருக்கும், அவருடைய கம்பெனியில் கார் கொடுத்திருக்கிறார்கள், கூடவே சம்பளத்துக்கு டிரைவரும் போட்டிருக்கிறார்கள்.

இந்த டிரைவர், தினமும் அதிகாலையிலேயே சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு எங்கள் அபார்ட்மென்ட் வாசலுக்கு வந்துவிடுவார். அவருடைய ‘பாஸ்’ குளித்துச் சாப்பிட்டுப் படி இறங்கி வரும்வரை சும்மா உட்கார்ந்திருக்காமல், காரைத் திறந்து துடைப்பது, கழுவுவது என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்.

இவருக்கு, வாரத்தில் ஐந்து நாள்கள்தான் வேலை. சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை.

’அதனால், யாரோ ஒரு டிரைவருக்கு அலைவதைவிட, விடுமுறை நாள்களில் இவருடைய ஓய்வு நேரத்தை நாம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே’ என்றார் என் மனைவி, ‘பாவம், அவருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைச்சமாதிரி இருக்கும், நமக்கும் நிம்மதி’

நல்ல யோசனைதான். தலையாட்டிவைத்தேன். மறுநாளே அந்த டிரைவரிடம் இதுபற்றிப் பேசி, அவருடைய சம்மதத்தையும், மொபைல் நம்பரையும் வாங்கிவைத்துவிட்டார் என் மனைவி.

அந்த வார இறுதியில், நாங்கள் ஒரு நண்பர் வீட்டுக்குப் போகவேண்டியிருந்தது. இந்த டிரைவரைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னோம், ‘நாலரை மணிக்கு வரமுடியுங்களா?’

‘வந்துடறேன் சார்’

நான்கு இருபத்தைந்துக்கு அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார், ‘கார் சாவி?’ என்றார்.

இந்த அளவு நேரம்தவறாமை எங்களுக்குப் பழக்கமில்லை. நாங்கள் நிதானமாக ஐந்தே கால் மணிக்குத் தயாராகிக் கீழே வரும்போது, அவர் வண்டியைச் சுத்தமாகத் துடைத்துக் கழுவி வைத்திருந்தார்.

அவருடைய தாய்மொழி கன்னடம். என்றாலும், உடையாத தமிழ் பேசினார், காரை மிகவும் நிதானமாக ஓட்டினார், அநாவசியமாக நம்முடைய குடும்பப் பேச்சுகளில் குறுக்கிடுகிற, அரசியலோ, சினிமாவோ, கிரிக்கெட்டோ பேசி வம்பு வளர்க்கிற பழக்கம் இல்லை, அவசியம் ஏற்பட்டாலொழிய வாய் திறப்பதில்லை, எங்கே, எவ்வளவு தாமதமானாலும் முகம் சுளிக்கவில்லை.

வீடு திரும்பியதும், நாங்கள் வழக்கமாக ‘On Call Drivers’க்குக் கொடுக்கிற தொகையை நிமிட சுத்தமாகக் கணக்கிட்டுக் கொடுத்தோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, முகமெல்லாம் சிரிப்பாக வாங்கிக்கொண்டு, நான்குமுறை கும்பிட்டுவிட்டு விடைபெற்றார்.

அதன்பிறகு, நான் அலுவலகம் போகப் படியிறங்கும்போதெல்லாம், அவர் என்னைப் பார்த்துச் சிரிப்பது வழக்கமாயிற்று. வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால் அவருக்கும் ஒரு கப் ஸ்வீட், காரம் கண்டிப்பாகப் போகும்.

அவருடன் அடிக்கடி வெளியே சுற்றிவந்ததில், அவர் எங்களுடன் மிகவும் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். ஆனாலும், அதே அமைதி, சுலபத்தில் வாய் திறப்பது கிடையாது.

ஒரு விஷயம்மட்டும் அவர் சொல்லாமலே எங்களுக்குப் புரிந்தது. என்னதான் மாதச் சம்பளம் வாங்கினாலும், அது அவருடைய குடும்பத்துக்குப் போதவில்லை. எங்கள்மூலமாகக் கிடைக்கும் இந்தக் கூடுதல் வருமானம் அவருக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

போன வாரம், என் அப்பா இங்கே பெங்களூர் வந்திருந்தார். அவரை வெளியே அழைத்துச் செல்வதற்காக இந்த டிரைவரை அழைத்தோம்.

வழக்கம்போல், சரியான நேரத்துக்கு வந்தார், பத்திரமாக வண்டி ஓட்டினார், கொடுத்த காசைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

அப்போதுதான், பிரச்னை தொடங்கியது. எங்களிடம் பேசிவிட்டுப் படியிறங்கிச் சென்றவரை, அவருடைய ‘பாஸ்’ஸின் மனைவி பார்த்திருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை, டிரைவருக்கு விடுமுறை நாள், அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது அவருடைய சொந்த விருப்பம். அதன்மூலம் அவருக்கு ஐம்பது, நூறு வருமானம் வந்தால், அது அவருடைய செலவுகளுக்குத் தோள் கொடுக்கும் – இந்த விஷயமெல்லாம் அந்த நல்ல மனத்துக்காரருக்குப் புரியவில்லை. நேராகத் தன் கணவரிடம் சென்று வத்தி வைத்துவிட்டார்.

அவரும் நல்ல மனத்துக்காரர்தான். உடனடியாகத் தன்னுடைய நிறுவனத்துக்கு ஒரு ஈமெயில் எழுதியிருக்கிறார், ‘நீங்கள் கொடுத்த டிரைவர் சரியில்லை, அடிக்கடி வெளி ஆள்களுக்குக் கார் ஓட்டப் போய்விடுகிறார்’

மறுநாள், அந்த நிறுவனத்தில் ஒரு விசாரணைக் கமிஷன் நிறுவப்பட்டிருக்கிறது. ‘ஞாயிற்றுக் கிழமைகளில்மட்டும்தான் நான் வெளி நபர்களுக்குக் கார் ஓட்டுகிறேன், அதுவும் எப்போதாவதுதான்’ என்று அவர் சொன்ன பதில், அம்பலம் ஏறவில்லை.

இப்போது, அந்த டிரைவர் எந்த நேரத்தில் தன் வேலை போகுமோ என்று பயந்துகொண்டிருக்கிறார். Technically, அவரும் ஓர் ஐடி நிறுவனத்தின் ஊழியர் என்பதால், யூனியன் சமாசாரமெல்லாம் அவருக்குத் துணை வராது.

இந்த விஷயத்தில் எங்கள் நிலைமைதான் பரிதாபம். ஒருவருக்கு உதவி செய்வதாக நினைத்து, எங்கள் சவுகர்யத்துக்காக அவருடைய உத்தியோகத்துக்கு வேட்டு வைத்துவிட்டோமோ என்று நினைக்க மிகவும் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது 😦

***

என். சொக்கன் …

04 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

36 Responses to "நல்ல மனத்துக்காரர்கள்"

1) அவருக்கு நிறுவனத்தில் என்ன சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தார்களோ, அந்த சம்பளத்தை நீங்கள் கொடுத்துவிடலாம். உமக்கொரு பர்மனெண்ட் டிரைவராவார்.

2) உங்கள் ஐடி கம்பெனியில் சொல்லி அதே சம்பளத்துக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிடலாம். எப்படியும் உங்களுடைய இன்னொரு பக்கத்து வீட்டுக்கு பார்ட் டைம் வேலைக்கு அவர் போவார். அப்போது கல்தா கொடுத்துவிடலாம்.

3)பணி துண்டிப்புக் கால இழப்பீடு என்று நிறுவனம் என்ன தருமோ அதை மனிதாபிமான அடிப்படையில் தந்துவிட்டு ரெகுலராக பார்ட் டைம் வேலை தரலாம்.

4) மொத்தமாக பட்டை நாமம் சாத்தலாம். பக்கத்து வீட்டுப் பெண்மணியை ஞான ஆசிரியராகக் கொண்டு உலகம் பயிலலாம்.

வழிகளுக்கா பஞ்சம்?

தலைப்பில் உள்ள பிழையைச் சரி செய்யவும்.

goinchami, writerpara,

நன்றி!

//தலைப்பில் உள்ள பிழையைச் சரி செய்யவும்//

’மனது’ என்பதை ‘மனத்து’ என்று திருத்தியாகிவிட்டது. ’எடிட்’ செய்த நல்ல மனத்துக்கு நன்றி 😉

தங்கள் வலைப்பதிவை ஆரம்பம் முதல் வாசித்து வருகிறேன். தங்கள் நூல்கள் கூகிள் தேடு உள்பட அனைத்தையும் வாங்கி படித்துள்ளேன். என் வேலைக்கான நேர்முக தேர்வில் / கலந்துரையாடல் வைக்கப்பட்ட போது தங்கள் கூகிள் தேடு நூலில் படித்த கூகுளின் வளர்ச்சி பற்றி ஏன் இந்தியாவில் அது போன்று இளைஞர்கள் முன்னேற முடிவதில்லை என்று கலந்து கட்டி அடித்ததில் பாராட்டு பெற்று எனக்கு நல்ல வேலை கிடைத்தது. அதற்கு உங்கள் கூகிள் தேடு நூல் ஒரு காரணம். நன்றாக எழுதுகிறீர்கள். நன்றி.

அப்புறம் ஒரு குறை 😦 . உங்கள் நூல்களில் உள்ள அளவு நீங்கள் பதிவுகளில் எழுதுவதில்லை. சொந்த கதைகளையே எழுதுகிறீர்கள். நீங்கள் நூல்களில் எழுதுவதை போல் வாழ்வில் வென்றவர்கள் பற்றி சில சிறிய கட்டுரைகள் பதிவிலும் எழுதலாமே. எனது வேண்டுகோள் இது.

Anandhan,

நன்றி 🙂

//கலந்து கட்டி அடித்ததில் பாராட்டு பெற்று எனக்கு நல்ல வேலை கிடைத்தது//

ஆஹா, கேட்க சந்தோஷமாக இருக்கிறது 🙂

//உங்கள் நூல்களில் உள்ள அளவு நீங்கள் பதிவுகளில் எழுதுவதில்லை. சொந்த கதைகளையே எழுதுகிறீர்கள். //

உண்மைதான். வேண்டுமென்றேதான் அப்படி மாற்றி எழுதுகிறேன். நூலில் எழுதியதையே இங்கும் எழுதினால், வெற்று விளம்பரமாகத் தோன்றும், வலைப்பதிவு என்பதற்கு ஒரு Value-add இருக்கவேண்டுமில்லையா? 🙂

//நீங்கள் நூல்களில் எழுதுவதை போல் வாழ்வில் வென்றவர்கள் பற்றி சில சிறிய கட்டுரைகள் பதிவிலும் எழுதலாமே//

’ஜெயித்த கதை’களுக்கு அச்சு ஊடகத்தில் உள்ள தேவை அதிகம், இணையத்தில் அது குறைவு என்று நினைக்கிறேன்.

என்றாலும், உங்கள் கருத்து நியாயமானதே – அவ்வப்போது நீங்கள் குறிப்பிடுவதுபோன்ற படைப்புகளையும் தர முயற்சி செய்கிறேன்!

Hi,

I read your book ‘ ANNAndhu Paar’ recently.
First of all, i would like to appreciate you for writing the book in an very organized way (Ofcourse, it wouldnt have been difficult for you as you are already an organizer 🙂 by profession)

Until reading your book, i doubted being carried away by Candidate’s speech and voting them. But after reading ‘Anna’s’ quotes, i was simply excited 🙂 . Thanks for the beautiful narration.

I just felt one thing little confused; In the annexure part describing ‘Anna’s life by years, you have given as ‘Married his wife Mrs.Rani’. Isnt that one becomes wife only after marriage? can you marry your wife 🙂

I will be reading your other books very soon. 🙂

இதுக்கு எங்கூருல வகுத்தெரிச்சலும்பாங்க.

சொக்கரே,

உண்மையில் ஆச்சர்யமாயிருக்கு அதே சமயத்தில் சந்தேகமாகவும் உள்ளது.

மாத சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒருவரை வாரயிறுதியில் வேலைக்கு பயன்படுத்துவதை நீங்கள் எப்படி சரியென்று சொல்லமுடியும்.?

உங்கள் நிறுவனத்தில் முழுநேரம் வேலை செய்யும் ஒரு பொறியாளர் வாரயிறுதியில்,வேறொரு நிறுவனத்தில் வேலை செய்தால் அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா.? அல்லது ஞாயிறு அன்று வேறு நிறுவனத்திற்க்கு வேலை செய்வது அவரது சொந்தவிருப்பம் என்று விட்டுவிடும் பெருந்தன்மைக்காரரா…?

Vaandu, Ila, அரவிந்தன்,

நன்றி 🙂

//Married his wife Mrs.Rani’. Isnt that one becomes wife only after marriage? can you marry your wife//

உண்மைதான். அவருடைய மனைவி பெயர் ராணி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்பதால், ‘மனைவி ராணி’யை அவர் இந்த ஆண்டில் மணந்தார் என்பதுபோல் குறிப்பிட்டிருந்தோம். எனினும், இன்னும் தெளிவாக்கியிருக்கலாம், அடுத்த பதிப்பில் சரி செய்துவிடலாம் 🙂

//மாத சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒருவரை வாரயிறுதியில் வேலைக்கு பயன்படுத்துவதை நீங்கள் எப்படி சரியென்று சொல்லமுடியும்.?//

நிச்சயமாக அதில் தவறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். என் ஓய்வு நேரத்தில் நான் என்ன செய்கிறேன் என்பது என்னுடைய சுதந்தரம் அல்லவா? நான் வேலை செய்யும் நிறுவனத்தின் ரகசியங்களை வெளியே விற்றால் தவறு, அங்கே கற்றுக்கொண்ட புது விஷயங்களைப் பயன்படுத்திச் சம்பாதித்தால் தவறு, மற்றபடி பகுதி நேர / கூடுதல் வேலை என்பது உலகெங்கும் உள்ள விஷயம்தானே?

of course, இந்த டிரைவருக்குக் கார் ஓட்டப் பயிற்சி அளித்ததே அந்த நிறுவனம்தான் என்று இருந்தால், அவர் அந்தத் திறமையைப் பயன்படுத்தி வார இறுதியில் சம்பாதிப்பது தவறாகச் சொல்லலாம்!

//உங்கள் நிறுவனத்தில் முழுநேரம் வேலை செய்யும் ஒரு பொறியாளர் வாரயிறுதியில்,வேறொரு நிறுவனத்தில் வேலை செய்தால் அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா?//

ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அப்படிச் செய்கிறவர்களும் எங்கள் அலுவலகத்திலேயே இருக்கிறார்கள் 🙂

ஆனால் ஒன்று, இவை எல்லாம் என் சொந்தக் கருத்துகள்மட்டுமே, இந்த விஷயத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை.

இதுபற்றித் தொடர்ந்து யோசித்ததில் தோன்றிய இன்னொரு விஷயம்,

அந்த இன்னொரு (பகுதி நேர) வேலை, முதலாவது (சம்பள) வேலையுடன் Conflict Of Interest உருவாக்குமானால், அது தவறுதான். அப்படி இல்லாதவரை, அந்த டிரைவர் சனி, ஞாயிறுகளில் தனி நபர்களுக்கோ, டூரிஸ்ட் நிறுவனங்களுக்கோ கார் ஓட்டினால் தவறு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன் – இதுபற்றிய தெளிவான சட்ட நெறிமுறை என்ன என்று எப்படித் தெரிந்துகொள்வது?

ஏன் கேட்கிறேன் என்றால், ஒருவேளை சட்டப்படி அந்த டிரைவர் செய்தது தவறு என்றால், நான் இப்போது கதை, கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுகிறேன், அதற்கு வருகிற சன்மானம், ராயல்டி தொகையெல்லாம் சட்ட மீறலாகச் சம்பாதிப்பது என்று ஆகிவிடும், இல்லையா?

//ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அப்படிச் செய்கிறவர்களும் எங்கள் அலுவலகத்திலேயே இருக்கிறார்கள் //
But offer letter paarunga, should have been mentioned as the employee should not work on any companies irrelevant of timing. அப்படின்னு ஒன்னு இருக்கும். HR papers பார்த்தா தெரியும்

//மாத சம்பளத்துக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒருவரை வாரயிறுதியில் வேலைக்கு பயன்படுத்துவதை நீங்கள் எப்படி சரியென்று சொல்லமுடியும்.?//

கிட்டத்தட்ட இது போல் ஒரு விவாதம் சில மாதங்களுக்கு முன்னர் வந்த போது நான் கூறிய உதாரணம் சொக்கன் தான் !!!!

எப்படி ஒரு நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் பணியிலிருக்கும் சொக்கனோ சுஜாதாவோ பணி நேரம் தவிர பிறநேரங்களில் புத்தகம் எழுதுவது தவறில்லையோ அதே போல் ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக இருப்பவர் பணி நேரம் தவிர பிற நேரங்களில் வேறு பணி செய்வது தவறில்லை

//உங்கள் நிறுவனத்தில் முழுநேரம் வேலை செய்யும் ஒரு பொறியாளர் வாரயிறுதியில்,வேறொரு நிறுவனத்தில் வேலை செய்தால் அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா.? அல்லது ஞாயிறு அன்று வேறு நிறுவனத்திற்க்கு வேலை செய்வது அவரது சொந்தவிருப்பம் என்று விட்டுவிடும் பெருந்தன்மைக்காரரா…?
//

முழு நேர பிரதமாரக இருந்த நேரு புத்தகம் எழுதவில்லையா. வாஜ்பாய் கவிதை எழுதவில்லையா

நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய போது, எங்கள் வீட்டு வாகன ஓட்டுனர் இது போல் வேறு எங்காவது ஒரு நாள் இரு நாள் பணி புரிந்து நான் கூடுதல் வருமானம் பார்ப்பதை நான் தடுத்ததில்லை.

இது போல் சில விட்டு கொடுக்கும் நடவடிக்கைகளால் அடிக்கடி ஓட்டுனரை மாற்ற வேண்டாம் !! ஓட்டுனரும் 19 லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டு 20 லிட்டர் பில்லை காட்ட மாட்டார் !!! என்பது எனது தனிப்பட்ட அனுபவம்

//அங்கே கற்றுக்கொண்ட புது விஷயங்களைப் பயன்படுத்திச் சம்பாதித்தால் தவறு,//
ஏன் ??
அலுவலகத்தில் கணினி பயின்றவர்கள் வீட்டில் உறவினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் தவறா. நீங்கள் கூறியபடி அலுவலக ரகசியங்களை அனுப்பினால் தான் தவறு

//of course, இந்த டிரைவருக்குக் கார் ஓட்டப் பயிற்சி அளித்ததே அந்த நிறுவனம்தான் என்று இருந்தால், அவர் அந்தத் திறமையைப் பயன்படுத்தி வார இறுதியில் சம்பாதிப்பது தவறாகச் சொல்லலாம்!//
அப்படி என்றால் கூட தவறில்லை என்பது என் கருத்து.
அந்த நிறுவனத்திற்கு அவரது திறமை தேவைப்படும் போது “டிமிக்கி” கொடுத்து விட்டு உங்களுக்கு ஓட்டினால் தான் தவறு

//அந்த இன்னொரு (பகுதி நேர) வேலை, முதலாவது (சம்பள) வேலையுடன் Conflict Of Interest உருவாக்குமானால், அது தவறுதான். அப்படி இல்லாதவரை, அந்த டிரைவர் சனி, ஞாயிறுகளில் தனி நபர்களுக்கோ, டூரிஸ்ட் நிறுவனங்களுக்கோ கார் ஓட்டினால் தவறு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன் – //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

கார் கொடுத்து, டிரைவரையும் நியமிக்கிற அளவுக்கு இருக்கிற நிறுவனம் என்றால், அந்த நிறுவனத்துக்கு என்று சில சட்டதிட்டங்கள் இருக்கும். அந்த சட்டதிட்டத்துக்கு ஒப்புக்கொண்டவர்கள் தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்து சம்பளம் பெற இயலும். ஊழியர்கள், எந்த நிலையிலும், பிற வகையில் வேலை செய்து உபரி வருமானம் ஈட்டக்கூடாது என்று அந்த நிறுவனத்தின் சட்டமாக இருப்பின்,( இது போன்ற கட்டுப்பாடுகளை நிறுவனம் ஏற்படுத்தலாமா என்பது வேறு விவாதம்) அதை அந்த டிரைவர் மீறியிருக்கக் கூடாது. அப்படி ஒரு சட்டம் இருப்பது தெரியாது என்று அந்த ஊழியர் சொல்லமுடியாது. ignorance of the law excuses no one.

நீங்கள் நினைத்திருந்தால், ஒரு வேளை சிக்கல் வராமல் செய்திருக்கலாம். அதாவது, இது போல எக்ஸ்ட்ரா வேலை செய்வதால், அவருக்கு பிரச்சனை ஏற்படுமா என்பதை அவரிடமே ஒரு முறைக்கு இருமுறை விசாரித்து விட்டு வேலைக்கு அமர்த்தி இருந்தால், குறைந்த பட்சம், குற்ற உணர்ச்சி ஏற்படுவதையாவது தவிர்த்திருக்கலாம் 🙂 .

//இதுபற்றிய தெளிவான சட்ட நெறிமுறை என்ன என்று எப்படித் தெரிந்துகொள்வது?//

இது குறித்து பொது சட்டம் கிடையாது என்றே நினைக்கிறேன்

நீங்கள் முழு நேரப்பணியாளராக பணிபுரியும் நிறுவனத்தின் சட்டம் என்னவோ அது உங்களுக்கு பொருந்தும்

உதாரணமாக என்னை (தமிழக அரசு மருத்துவரை) எடுத்துக்கொண்டால்
நான் தனியாக பிராக்டிஸ் செய்வதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கிறது. (அதே நேரம் மத்திய அரசில் பணி புரியும் மருத்துவர்களுக்கு தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி இல்லை)

அதே போல் புத்தகம் எழுதுவது பற்றிய தமிழக அரசு விதிகள்

Provided that a Government servant may publish occasionally books on literature, short story, novel, drama, essay and poetry without obtaining the prior permission of any higher authority, subject to the condition that he/she does not use his/her time and official position to influence the promotion of the sale of such books and that such books do not contain matters of political aspects, objectionable matter and views against the policy of the Government.
(b) Permission to publish a book shall ordinarily be given, subject to the condition that the Government servant does not use his time and official influence for promoting the sale of copies of the book:
Provided that any member of the teaching or the academic staff of all Government Educational and Research Institutions inclusive of Technical Educational Institutions, may publish books on professional and academic subjects without obtaining the prior permission of any higher authority, subject to the condition that he/she does not use his/her time and official influence for promoting the sale of copies of such articles or books, as the case may be, and that such publications do not relate to any acts and policies of the Government and the provisions of clause (d) shall not apply to such publisher.

(c) Permission to accept remuneration on “royalty basis” from the publishers shall be given in all cases except in the case of text-books for use in educational institutions. In the case of text-books, permission to accept remuneration shall be given subject to the conditions that the Government servant retains no interest in the sale of copies of the book and that he receives only a lump-sum as remuneration from the publisher;
Provided that any member of the teaching or the academic staff of all Government Educational and Research Institutions who writes books on professional and academic subjects, may receive remuneration on royalty basis irrespective of the fact whether the books are text-books or general books:
Provided further that a Government servant who writes books on literature, short story, novel, drama, essay and poetry shall immediately report to the prescribed authority the remuneration he receives from the publisher.
Explanation – For determining whether a book is a text-book or is a general book, the chief consideration shall be whether it is being submitted to the Text-book Committee, in the case of text-books for elementary and secondary schools and whether it is a book written according the syllabus prescribed by the University and his being submitted to the appropriate University Body for approval, in case of textbooks for colleges. A general book which may later happen to be approved as a text-book shall not be deemed to be a text-book for purposes of this clause.
(d) while applying to the Government for permission to publish a book which relates to acts or policies of Government, the Government servant shall submit to the Government for scrutiny a manuscript copy thereof.
(e) No Government servant who is member of the Text-Book Committee shall write or edit any textbook for use in recognised school during his membership of the Committee.

Explanation – A recognised school shall mean a school maintained by or opened with the sanction of the Government or to which recognition has been accorded under the Tamil Nadu Educational Rules or under the rules framed under the Tamil Nadu Elementary Education Act,1920(Tamil Nadu Act VIII of 1920).

Rule 10. Unauthorised communication of information – (1) No Government servant shall, except in accordance with any general or special order of the Government or in the performance in good faith of the duties assigned to him, communicate, directly or indirectly any official document or any part thereof or information to any Government servant or any other person to whom he is not authorised to communicate such document or information.
(2) Sub-rule (1) shall apply to the Government Pleaders, Public Prosecutors and other officials who are not full-time officers, but are engaged by the Government to do specified work without prejudice to the regular exercise of their professions in other respects; but sub-rule (1) shall not apply to the Special Public Prosecutors and Pleaders engaged to do Government work generally in specified local areas or specially in any particular case or class of cases.

Rule 11. Connection with Press, Television or Radio –
(1) No Government servant shall, except with the previous sanction of the Government, own wholly or in part, or conduct or participate in the editing or managing of any newspaper or other periodical publication.
(2) No Government servant shall, except with the previous sanction of the Government or of any authority or officer empowered by them in this behalf, or in the bonafide discharge of his duties contribute any article or write any letter either unanimously or in his own name or in the name of any other person to any newspaper or other Periodical Publications;
Provided that no such sanction shall be required if such contribution or writing is of a purely literary, artistic or scientific character.
(3) No Government servant shall except with the previous sanction of the Government or of any authority or officer empowered by them in this behalf, or in the bonafide discharge of his duties, participate in a television programme or radio broadcast;
Provided that no such sanction shall be required if such television programme or radio broadcast, is of a purely literary, artistic or scientific character, or if the Government servant concerned has responsibility at the policy making level or at the implementation level for the subject of the television programme or radio broadcast.
(4) A Government servant who is invited or who wishes to participate in a television programme or to deliver a radio broadcast talk and has to obtain the previous sanction under sub-rule (3) shall intimate the Government through the proper channel, the particulars relating to the television programme or the subject of the radio broadcast talk and if so required shall submit the full material relating to the television programme or the full text of the radio broadcast talk for their approval before participating in the television programme or before the radio broadcast talk is delivered.
(5) The provisions of sub-rules (3) and (4) shall apply mutadis mutandis to the playing of prepared ‘recitals’ or gramaphone records.
(6) In respect of television programme or radio broadcasts, the powers of the Government shall be exercised by –
(i) the heads of departments in respect of Government servants serving in their respective departments.
(ii) all collectors in respect of Government servants belonging to Group ‘C’ and ‘D’ under their administrative control;
(iii) the District Educational Officers or the Inspectress of Girls Schools, as the case may be, in respect of teachers in Government Schools; Secondary and Training Schools;
(iv) the Principals of Government Colleges in respect of Government servants employed in such colleges; and
(v) All heads of offices of the Agricultural Department who are officers belonging to Groups A and B in respect of Government servants under their control.
(7) This rule shall apply to Government Pleaders, Public Prosecutors and other officials who are not full-time officers, but are engaged by the Government to do specific work without prejudice to the regular exercise of their profession in other respects but this rule shall not apply to the Special Public Prosecutors and Pleaders engaged to do Government work generally in specified local areas or specially in any particular case or class of cases.
Rule 12. Criticism of Government – (1) No Government servant shall in any radio broadcast or in any document published unonymously or in his own name or in the name of any other person or in any communication to the press or in any public utterance, make any statement of fact or opinion –
(i) which has the effect of an adverse criticism of any Current or recent policy or action of the Central Government or a State Government, or
(ii) which is capable of embarrassing the relations between this State Government and any other Government; or
(iii) which is capable of embarrassing the relations between the Central Government and the Government of any foreign State;
Provided that nothing in this rule shall apply to any statement made or views expressed by a Government servant in his official capacity or in the due performance of the duties assigned to him :
Provided further that in the case of any Government servant nothing contained in this rule shall apply to bonafide expression of views by him as an office bearer of any recognised association of Government servants for the purpose of safeguarding the conditions of service of Government servants or for securing an improvement thereof.
(2) A Government servant shall not, except in the discharge of his official duties, preside over, or take part in the organisation of or occupy a prominent position at or address, any non-official meeting or conference at which it is likely that speeches may be made or resolutions may be proposed or passed criticising the action of the Government or requesting the Government to take certain action other than to make grants admissible under Government rules or orders in support of educational or similar institutions.
Explanation – Regularly convened meetings for the transaction of their legitimate business, of district boards, municipal councils and similar bodies established by law or created by the Government and of associations of Government servants recognised by the Government and of committees or branches of such bodies or associations and meetings called by the Sheriff of Madras are not “non-official” meetings for the purposes of this rule.
(3) A Government servant who intends to publish any document or to make any communication to the press or to deliver any public utterance containing statements in respect of which any doubt as to the application of the restrictions imposed by this rule may arise, shall submit to the Government a copy of draft of the document which he intends to publish or of the utterance which he intends to deliver, and shallthereafter act in accordance with such orders as may be passed by the Government.
(4) This rule shall apply to the Government Pleaders, Public Prosecutors and other officials who are not full-time officers but are engaged by the Government to do specified work without prejudice to the regular exercise of their professions in other respects; but this rule shall not apply to the Special Public Prosecutors and Pleaders engaged to do Government work generally in specified local areas or specially in any particular case or class of cases.
http://www.tngda.com/2007/11/regulations-for-publishing-book.html

இதே போல் உங்கள் நிறுவன விதிகள் ஏதாவது இருந்தால் அது உங்களுக்கு பொருந்தும் !!!

//ஏன் கேட்கிறேன் என்றால், ஒருவேளை சட்டப்படி அந்த டிரைவர் செய்தது தவறு என்றால், நான் இப்போது கதை, கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுகிறேன், அதற்கு வருகிற சன்மானம், ராயல்டி தொகையெல்லாம் சட்ட மீறலாகச் சம்பாதிப்பது என்று ஆகிவிடும், இல்லையா?//

உங்கள் நிறுவன விதிகள் ஏதாவது இருந்தால் அது உங்களுக்கு பொருந்தும் !!!

தமிழக அரசு விதிகள் மேலே உள்ளன.

அதன் சாராம்சம் இது தான் “ தொழிற்நுட்பம் பற்றி பேசுவது / எழுதுவது என்றால் எழுதிக்கொள்ளுங்கள் – அரசியம் பேச தடை” என்று கருதுகிறேன்

1. இதை ரொம்ப pedantic-ஆகப் பார்க்க முடியாது/கூடாது என்று நினைக்கிறேன். டிரைவர் தொழிலும் சாஃப்ட்வேர் தொழிலும் ஒன்றல்ல. எழுதப்பட்ட விதிகளின்படி டிரைவர் செய்தது தவறாக இருந்தாலும், டிரைவரின் நிறுவனம் இவ்விஷயத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.

2. நீங்கள் இவரைப் பணியில் அமர்த்திக் கொள்ளுமுன் உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுமதி பெறுவது போல் ஒரு பாவனையாவது செய்திருக்க வேண்டும். செய்திருந்தால் பிரச்னையேயில்லை.

இது தொடங்கிய பல வாரங்களுக்குப் பின்னரே இந்த விஷயம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. Urban alienation என்பது எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. 😦

நீங்கள் சொல்லி இருக்கும் இந்த விஷயம் ஏதோ உறுத்துகிறது:

//இந்த டிரைவருக்குக் கார் ஓட்டப் பயிற்சி அளித்ததே அந்த நிறுவனம்தான் என்று இருந்தால், அவர் அந்தத் திறமையைப் பயன்படுத்தி வார இறுதியில் சம்பாதிப்பது தவறாகச் சொல்லலாம்!//

அதையும் எப்படி சொல்ல முடியும்? கம்பெனி அ வில் ஒரு சிறப்புப் பயிற்சி பெற்று, கம்பெனி ஆ வில் அந்த சிறப்பு வேலை செய்பவன், கமெபெனி ஆ இந்தத் திறமையை எனக்குத் தரவில்லை, எனவே அத்திறமையை நான் விற்கலாம் எனச்சொல்ல முடியுமா? உதாரணமாக, ஒரு எஞ்சினில் கஷ்டமான ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் திறனை நான் இந்தியக்கம்பெனியில் பெற்றேன், அதை துபாய் கம்பெனியில் சிலவேளைகளில் செய்கிறேன், அதை வெளிக்கம்பெனியில் செய்வது – விடுமுறை நாளாக இருந்தாலும் – Unethical தான்.

Conflict of Interest என்பதுதான் ஆதார சுருதி. உங்கள் நண்பர் காரோட்டுவதால் அவர் கம்பெனிக்கு பாதிப்பு (கஸ்டமர் குறைதல், அவர்கள் வண்டி ஆளோட்ட ஆளில்லாமல் க்‌ஷ்டப்படுதல்) ஏற்படுமாயின் (அதைச் சொல்ல வேண்டியது நீங்களோ நானோ இல்லை, அந்த நிறுவனம்தான்) அவர்கள் செய்தது சரியே!

அதே நேரத்தில் லீவு நாளில் காரோட்டுவதால் கஸ்டமர் பேஸ் குறையுமா எனவும் எண்ணத் தோன்றுகிறது! நாம சொல்ல முடியாது 🙂

எனக்குத் தெரிந்தவரை (ஏறக்குறைய 7 வருடங்களுக்கு முன் நான் முதன் முறையாக கம்பெனி மாறும் போது ஏற்பட்ட அனுபவத்தின் போது கொடுக்கப் பட்ட சட்ட ஆலோசனையின் அடிப்படையில்) ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு முழு நேர வேலை பார்ப்பதை தான் இந்திய கம்பெனிகள் தடை செய்கின்றன. ராயல்டி வாங்குவதெல்லாம் மேட்டரே இல்லை. அப்படி பார்த்தால் ஷேர் டிரேடிங் கூட அதிகப்படி வருவாய் ஈட்டும் மூலம் தான். அதை வருமான வரி கணக்கீட்டிற்கு டிக்ளேர் செய்தால் போதும். உங்கள் form 16-ஐ எடுத்துப் பாருங்கள். Other revenue sources என்று ஒரு காலம் இருக்கும். அது சட்ட ரீதியாக தப்பென்றால் அந்த காலத்திற்கு என்ன அவசியம். என்னுடைய நண்பர் ஒருவர் முழு நேர பணியில் இருக்கும் போதே அவரது குடும்பம் நடத்தும் பள்ளியில் முக்கியமான வழிகாட்டியாக இருக்கிறார் (அதற்கு அவருக்கு சம்பளமும் உண்டு என்பது கொசுறு).
இதையெல்லாம் முடிவு செய்வது வேலைக்கு சேரும் போது நீங்கள் கையெழுத்திடும் job agreement மட்டுமே.

டிரைவர் விஷயம் தப்பேயில்லை. உண்மையில் அதை யாரும் நிறுபிக்க முடியாது. நீங்கள் அவரது சேவையை நட்பு ரீதியில் பயன் படுத்தியிருக்கலாம். அவருக்கு நட்பு ரீதியில் அன்பளிப்பும் அளித்திருக்கலாம். உங்கள் neighbourக்கு ஏற்பட்ட புகைச்சல் from அடிவயிறு தான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் அவர் டூரிஸ்ட்களுக்கு வேலை பார்க்க முடியாது என்று கட்டுப் படுத்த கம்பெனிகளுக்கு உரிமை உண்டு. ஏனென்றால் டூரிஸ்டு வண்டிகள் முறையாக நடத்தப்படும் (supposedly) நிர்வாகிக்கப்படும் நிறுவனங்கள். அங்கு பணி செய்வதால் ஏற்படும் பணிச்சுமை காரணமாக கம்பெனிக்கு டிரைவர் கொடுக்கும் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அவரைக் கட்டுப்படுத்த கம்பெனிகளுக்கு உரிமை உண்டு (அப்படி கையெழுத்து வாங்கியிருந்தால்). இல்லாவிட்டால் அதுவும் இல்லை.

உண்மையில் தனியார் நிறுவனங்களில் நாம் நினைப்பது போல தடாலடியாக எல்லாம் ஆட்களை காலி செய்ய முடியாது. (severance clause உண்டு) – எந்த CXOவாவது severance package வாங்காமல் கம்பெனியை காலி செய்ததை பார்த்திருக்கிறீகளா ? ஆனால் கீழ் மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வு கம்மி. இந்த recession காலத்தில் மிகவும் அவசியமானதும் ஆகும். புது வேலைக்கு சேரும் போது கேட்டுக் கொண்டு சேர்தல் உத்தமம். எனக்குத் தெரிந்தவரை பொதுவான வரையரை சர்வீஸில் இருக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாள் சம்பளம் (ஜூனியர் லெவலில், முக்கியமான நிதி சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளில் இல்லாதவர்களுக்கு). 5 வருடம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்திருந்தால் – உடனடியாக service termination செய்யப்படும் போது 75 நாள் சம்பளத்தை severance package-ஆக எதிர்பார்க்கலாம். இது ஒவ்வொரு கம்பெனியின் பாலிசியைப் பொருத்தது.

ILA, புரூனோ, Prakash, Srikanth Meenakshi, பினாத்தல் சுரேஷ், Chandrasekaran Krishnan,

நன்றி!

இத்தனை Expert opinions இந்தச் சாதாரணப் பதிவின்மூலம் கிடைத்தது மிகவும் ஆச்சர்யம், சந்தோஷம், வேறு எந்த ஊடகத்திலும் (கலந்துரையாடல் தவிர) இதுபோன்ற ஓர் உடனடி, கனமான, பல கோணங்களில் இருந்து கிடைக்கும் எதிர்வினைகளைப் பெறமுடியாது என்று நினைக்கிறேன், வலைப்பதிவுகளின் பலம் புரிகிறது – கருத்துகளைப் பகிர்ந்த எல்லோருக்கும் இன்னொரு நன்றி!

இவற்றின் சாரமாக நான் கருதுவது – ஒருவர் வேலைக்குச் சேரும்போது கையெழுத்திடும் ஒப்பந்தத்தைக் கவனிக்கவேண்டும், நிறுவன விதிமுறைகள் / கொள்கைகள் (HR Policies) படிக்கவேண்டும், இவற்றில் ஏதேனும் குழப்பம் இருந்தால் நேரடியாகக் கேட்டு, எழுத்தில் பதில் பெறவேண்டும், இவற்றைச் செய்யாமல் நேரடியாகக் கூடுதல் வருமானத்துக்கு வழி செய்துகொள்கிறேன் என்று தொடங்கினால், ஆபத்து இருக்கலாம்!

இந்த டிரைவர் விஷயத்தில் இப்போதைக்கு அவருடைய வேலைக்குப் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்று அறிகிறேன். சந்தோஷம்.

ஆனால் ஒன்று, இனிமேல் சனி, ஞாயிறுகளிலும்கூட ஒருவரை அவர் சார்ந்த நிறுவனத்தின் பிரதிநிதியாகவே பார்ப்பது நல்லது என்பதைப் புரிந்துகொண்டேன், அதுதான் இதில் மிகப் பெரிய லாபம்!

//இந்த டிரைவர் விஷயத்தில் இப்போதைக்கு அவருடைய வேலைக்குப் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்று அறிகிறேன். சந்தோஷம்.//

🙂 🙂

//ஆனால் ஒன்று, இனிமேல் சனி, ஞாயிறுகளிலும்கூட ஒருவரை அவர் சார்ந்த நிறுவனத்தின் பிரதிநிதியாகவே பார்ப்பது நல்லது என்பதைப் புரிந்துகொண்டேன், அதுதான் இதில் மிகப் பெரிய லாபம்!//

சரி,
இப்பொழுது சிறிது மாற்றி யோசிப்போம்

அந்த பக்கத்து வீட்டுகாருக்கு சீரூந்து ஓட்ட தெரியாது. உங்களுக்கு தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அவருக்கு கடுமையான காய்ச்சல். நீங்கள் அவரது சீருந்தை ஓட்டி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் உங்கள் அலுவலகம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா ??

??

டாக்டர்,

//அவருக்கு கடுமையான காய்ச்சல். நீங்கள் அவரது சீருந்தை ஓட்டி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் உங்கள் அலுவலகம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா ??//

அதற்காக நான் சம்பளம் பெறாதவரை, முடியாது என்றுதான் நினைக்கிறேன் 🙂

விவாதம் இந்த விஷயத்திற்கு வெளியில் செல்கிறது. இருந்தாலும் for a completion sake

//அதற்காக நான் சம்பளம் பெறாதவரை, முடியாது என்றுதான் நினைக்கிறேன் //

சிறிது மாற்றி யோசித்தால்

நீங்கள் (கூடுதல்) வேலை செய்வது தவறில்லை. ஆனால் ஊதியம் பெறுவது தான் தவறு என்று வருகிறதே 🙂 🙂 🙂

இப்பொழுது நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுகாரரின் சீருந்து ஓட்டுனருக்கு பணம் அளித்ததற்கு ரசீது வாங்கியிருந்தாலோ, அந்த பணத்தை உங்களது செலவு கணக்கில் எழுதியிருந்தாலோ தான் தவறு !!!

மற்றப்படி உங்களது சொந்த காசில் அவருக்கு பணம் அளித்திருந்தால் தவறில்லை

இதையே மாற்றி யோசிப்போம்

ஒரு வேளை அந்த ஓட்டுனருக்கு வேறு ஒரு திறமை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் (உதாரணம் தொலைக்காட்சி பழுது பார்க்கும் திறன்). ஞாயிறு அவர் உங்கள் தொலைக்காட்சியை பழுது பார்க்கிறார்.

இதற்கு நீங்கள் பணம் அளிக்க வில்லை

அந்த நிறுவனத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா

எனக்கு தெரிந்து முடியாது !!!

பதிவர் பிரகாஷ் கூறியது போல் “ஊழியர்கள், எந்த நிலையிலும், பிற வகையில் வேலை செய்து உபரி வருமானம் ஈட்டக்கூடாது என்று அந்த நிறுவனத்தின் சட்டமாக இருப்பின், (இது போன்ற கட்டுப்பாடுகளை நிறுவனம் ஏற்படுத்தலாமா என்பது வேறு விவாதம்) அதை அந்த ஊழியர் மீறக்கூடாது.” ஆனால் அப்படி ஒரு சட்டம் பெரும்பாலான நிறுவனக்களில் இல்லை என்றே நினைக்கிறேன்

பிரதமருக்கே அப்படி ஒரு நிபந்தனை இல்லாத போது சாதாரண ஓட்டுனரை இப்படி வதைக்க கூடாதல்லவா

பிகு : அலுவலக நேரத்தில் வலைப்பதிவு எழுதுவது வேறு 🙂 🙂 🙂

புருனோ,

//அலுவலக நேரத்தில் வலைப்பதிவு எழுதுவது வேறு//

அச்சச்சோ, இப்படி அஸ்திவாரத்திலேயே கை வைத்தால் எப்படி? 🙂

சில நிறுவனங்களில் ‘அலுவலகத்தில் செய்யும் வேலையை வெளியில் செய்யக்கூடாது’ என்று விதிகள் இருக்கும். எ.கா.
ஒரு வெப் டிசைனரோ, கேட்CAD டிசைனரோ வெளியில் அதே வேலையை செய்வது விதி மீறலாக இருக்ககூடும்.
சொக்கனும் செய்வதும், சுஜாதா செய்ததும் நிறுவன பணிக்கு தொடர்பில்லைதானே?
( நன்றி – ‘என்.ஹெச்.எம். எழுதி’)

– விபின்

Vibin,

நன்றி 😉

//சொக்கனும் செய்வதும், சுஜாதா செய்ததும் நிறுவன பணிக்கு தொடர்பில்லைதானே?//

உண்மை

few more thoughts !!

http://idlyvadai.blogspot.com/2009/04/2009_15.html

இவரது தாய் அங்கன்வாடியில் பணியாற்றி, அத்துடன் இட்லி கடை நடத்தி இவரைப் படிக்க வைத்துள்ளார்.

இது (தனியாக தொழில் செய்வது !!) தவறா ??

http://specials.rediff.com/getahead/2009/apr/15layofftales.htm

It is always better to have a parallel stream of income even if employed full time, as then financially we need not be at the mercy of any company. Most companies stipulate in the appointment order that the employees are not supposed to be indulging in any other business or employment (even part time), but when giving the boot, it doesn’t even think of giving any advance notification. Our people are happy to import all the hire and fire employee practices of western countries, but without offering the social security system that they enjoy.

புருனோ,

நன்றி 🙂

//இவரது தாய் அங்கன்வாடியில் பணியாற்றி, அத்துடன் இட்லி கடை நடத்தி இவரைப் படிக்க வைத்துள்ளார். இது (தனியாக தொழில் செய்வது !!) தவறா ??//

தர்மப்படி சரி, சட்டப்படி தவறு என்று சொல்வார்களோ? 🙂

//It is always better to have a parallel stream of income even if employed full time, as then financially we need not be at the mercy of any company//

இங்கேதான் நாம் appointment lettersஐக் கவனமாகப் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!

Neengal driver’i kooppidarathukku munnadi, oru vaarthai unga neighbour’idam ithai pathi kettiruntheenganna inthe prechanai vanthirukkathunnu nenaikkiren… athu thaan sarinnum enakku thonuthu…
Melum, ippo unga neighour’idam ithai pathi pesina, avar ithai sari seiyyavum help pannalam…. 🙂

Vibin,

நன்றி 🙂

பிரச்னை இப்போது தீர்ந்துவிட்டது, நாங்களும் அவரைத் தர்ம சங்கடப்படுத்தாமல் வேறு டிரைவரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2009
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
%d bloggers like this: