Archive for March 9th, 2009
அல்வாத் துண்டு
Posted March 9, 2009
on:- In: Bangalore | Confidence | Corruption | Courtesy | Fall | Fear | Food | Honesty | Integrity | Life | Memories | Positive | Uncategorized
- 18 Comments
டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும்.
இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து, சீக்கிரத்தில் நாங்களும் அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டோம்.
ரொம்ப நாளைக்கு, அந்த அல்வாவின் பெயர்க் காரணமே எங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே துருக்கியில் அப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா, அல்லது ’மைசூர் பாக்’போல சும்மா ஒரு பந்தாவுக்கு ‘துருக்கி அல்வா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களா என்று குழம்பினோம்.
பின்னர், என் கல்லூரித் தோழர், அலுவலக நண்பர் வெங்கடேசன் ஏதோ வேலை விஷயமாக துருக்கி சென்றார். அங்கே இப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா என்று அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னேன்.
வெங்கடேசனின் பூர்வீகம் திருநெல்வேலி. இருட்டுக்கடை அல்வாவைச் சுவைத்து வளர்ந்த அவரையும், இந்தத் துருக்கிக்கடை அல்வா கவர்ந்திருந்தது. பெங்களூரில் சுவைத்த அதே அல்வா துருக்கியிலும் உண்டா என்று ஆவலுடன் ஆராய்ச்சி செய்து, தேடிக் கண்டுபிடித்து வாங்கிவிட்டார்.
ஆனால், Anti Climax, அந்த நிஜமான துருக்கி அல்வா எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதே சதுரம், அதே கெட்டித்தனம், வாயில் போட்டு மெல்லும்போது கிட்டத்தட்ட அதே அனுபவம். ஆனால் சுவை? பெங்களூர் டர்கிஷ் அல்வாவுக்குப் பக்கத்தில்கூட வரவில்லை.
ஆகவே, நாங்கள் மீண்டும் ‘ப்ளூ பெல்’ கடைகளைத் தஞ்சமடைந்தோம். கொஞ்சம் விலை ஜாஸ்தியாக இருந்தாலும், ஒரு விசேஷம் என்றால் டர்கிஷ் அல்வா இல்லாமல் அது நிறைவடையாது என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம்.
நங்கை பிறந்தபோது, அலுவலகத்தில் எல்லோருக்கும் டர்கிஷ் அல்வாதான் வாங்கிக் கொடுத்தேன். அதைச் சாப்பிட்டவர்களில் பெரும்பாலானோர், ‘இது என்ன? எங்கே கிடைக்கும்? எவ்வளவு விலை? எனக்கு ஒரு டப்பா வாங்கிவரமுடியுமா?’ என்று வாயையும் பர்ஸையும் அகலத் திறந்தார்கள்.
எனக்குப் பெருமை தாங்கவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று என் தலைக்குப் பின்னால் நானே ஓர் ஒளிவட்டம் வரைந்துகொண்டேன். கேட்டவர்களுக்கெல்லாம் டர்கிஷ் அல்வா வாங்கிக் கொடுத்தேன் – இலவசமாக இல்லை, காசு வாங்கிக்கொண்டுதான்.
அடுத்த சில தினங்களுக்குள், நான் ‘ப்ளூ பெல்’லின் அதிகாரப்பூர்வமற்ற விற்பனைப் பிரதிநிதியாக மாறியிருந்தேன். என்மூலமாகமட்டும் எங்கள் அலுவலகத்தில் குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து கிலோ அல்வா விற்பனையாகியிருக்கும்.
இப்படியாக ஒருநாள், நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார், ‘நாளைக்கு மாமனார் வீட்டுக்குப் போறேன், எனக்காக அரை கிலோ டர்கிஷ் அல்வா வாங்கிட்டு வரமுடியுமா?’
என் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் அதிவேகத்தில் சுழன்றது, ‘ஓ, தாராளமா’ என்று புன்னகைத்தேன்.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில், அரை கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன். வீட்டுக்குச் சென்று அதை ரெஃப்ரிஜிரேட்டரில் பத்திரப்படுத்தினேன். அதன்பிறகு, அதைப்பற்றிச் சுத்தமாக மறந்துவிட்டேன்.
பிரச்னை, ராத்திரி பதினொரு மணிக்குத் தொடங்கியது.
என்னைப்போன்ற பூசணிக்காய் வயிறன்களுக்கு, மூன்று வேளைச் சாப்பாடு போதாது. ஒழுங்காக டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் பரவாயில்லை, அப்படியில்லாமல் பதினொரு மணி, பன்னிரண்டு மணி என்று ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, டிவி பார்ப்பது என நேரத்தைச் செலவிட்டால், அதற்கேற்பக் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்துவிடும். உலகக் கலாசாரத்தில் இதற்கு ‘Midnight Snacks’ என்று கவித்துவமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அன்று இரவு, வயிற்றைக் கிள்ளும் பசியுடன் ஃப்ரிட்ஜைத் திறந்தேன். சட்டென்று அந்த அல்வா பாக்கெட்தான் என் கண்ணில் பட்டது.
அனிச்சையாகக் கையை நீட்டிவிட்டேன். அப்போதுதான், அது யாருக்கோ வாங்கிய சமாசாரம் என்பது நினைவுக்கு வந்தது.
என் கெட்ட நேரம், ‘ப்ளூ பெல்’ கடைக்காரர்களுக்கு இனிப்பு டப்பாக்களை உறுதியாக மூடி சீல் செய்கிற வழக்கம் இல்லை. சும்மா ரப்பர் பாண்ட் போட்டுச் சுழற்றியிருப்பார்கள், அவ்வளவுதான்.
அதாவது, நான் இந்த ரப்பர் பாண்டை விலக்கிவிட்டு, ஒன்றிரண்டு அல்வாக்களை நீக்கிச் சாப்பிடலாம். மீண்டும் அதைப் பழையபடி பேக் செய்துவிடலாம். விஷயம் யாருக்கும் தெரியாது.
இப்போது என் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காக வாங்கிய பொருளை நான் எடுத்துச் சாப்பிடுவதா? அசிங்கமில்லையா? ஏமாற்று இல்லையா? நம்பியவர்களை ஏமாற்றும் துரோகம் இல்லையா? இது தகுமா? நீதியா? நியாயமா? அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் படங்களின் கதாநாயகிகள் பேசும் வசனங்களைப்போல் எனக்குள் குழப்பக் கேள்விகள் சுற்றிவந்தன.
ஆனால், குழப்பமெல்லாம் என் மனத்துக்குதான். கைகள் சட்டென்று அந்த டப்பாவைப் பிரித்து ஒரு துண்டு அல்வாவை எடுத்து வாயில் போட்டுவிட்டன.
அத்துடன் என் பசி அடங்கிவிட்டது. தன்னிரக்கமும் குற்றவுணர்ச்சியும் தொடங்கிவிட்டது.
மறுநாள் காலை, குறைபட்ட அந்த அல்வா டப்பாவுடன் அலுவலகம் சென்றேன். ஒழுங்காக வண்டி ஓட்டக்கூட முடியாதபடி எனக்குள் ஏகப்பட்ட மனக் குழப்பம்.
ஐநூறு கிராமில் நான் எடுத்துத் தின்ற அல்வாத் துண்டு ஐம்பது கிராம் இருக்குமா? இது 500 இல்லை, 450தான் என்பதை அந்த நண்பர் எடை போட்டுப் பார்த்துவிடுவாரா? எங்கள் அலுவலகத்தில் தராசு எதுவும் இல்லையே!
பேசாமல், இந்த டப்பாவை நானே வைத்துக்கொண்டு, அவருக்கு இன்னொரு புதிய டப்பா அல்வா வாங்கித் தந்துவிடலாமா?
செய்யலாம். ஆனால், இந்த யோசனை தோன்றுவதற்குள் நான் ‘ப்ளூ பெல்’ கடையைத் தாண்டிச் சென்றிருந்தேன். ’யு டர்ன்’ அடித்துத் திரும்பிப் போகலாம் என்றால், போக்குவரத்து நெரிசல், அதற்குமேல் சோம்பேறித்தனம்.
ஆகவே, நான் தொடர்ந்து வண்டி ஓட்டியபடி எனக்கான நியாயங்களை உருவாக்கிக்கொண்டேன்:
- முதல் தவறு, ப்ளூபெல் கடைக்காரன்மேல். அவன் டப்பாவை ஒழுங்காக மூடி சீல் செய்திருந்தால், நான் அல்வாவைத் திருடியிருப்பேனா?
- அடுத்து, அந்த நண்பர் கேட்டவுடன் அல்வா வாங்கிக்கொடுக்க நான் என்ன அவர் வைத்த வேலைக்காரனா? இந்த வேலைக்குக் கூலியாக நான் ஒரு துண்டு அல்வாவை எடுத்துச் சாப்பிட்டால் என்ன தப்பு?
- என் வீட்டிலிருந்து அந்தக் கடை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம். ஆகவே, போக ஒன்றரை, வர ஒன்றரை என மூன்று கிலோ மீட்டர்கள் கூடுதலாகப் பயணம் செய்திருக்கிறேன். அந்த பெட்ரோல் காசுக்கு ஒரு துண்டு அல்வா சரியாப் போச்சு
இப்படி ஆயிரம் அசட்டுச் சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும், எனக்குள் நடுக்கம் தீரவில்லை. ஒருபக்கம் இந்த ஊழலை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது என்கிற நம்பிக்கை, இன்னொருபக்கம், ‘ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால்?’ என்கிற திகில், பலவிதமான அவமானங்களைக் கற்பனை செய்து என்னை நானே வருத்திக்கொண்டேன்.
அன்றைக்கு விபத்து எதுவும் இல்லாமல் நான் ஒழுங்காக அலுவலகம் சென்று சேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். அல்வாப் பாக்கெட்டுடன் படியேறுகையில் அங்கேயே சுருண்டு விழுந்துவிடுவேனோ என்று கலக்கமாக இருந்தது, அந்த டப்பாவுடன் யார் கண்ணிலும் பட அவமானமாக உணர்ந்தேன்.
ஆகவே, அதற்குமேல் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல், நேராக அந்த நண்பரின் மேஜைக்குச் சென்றேன். அல்வா டப்பாவைக் கொடுத்தேன்.
அவர் சட்டென்று எழுந்து, ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று புன்னகைத்தார்.
ஆனால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. நேற்றிரவு சாப்பிட்ட அல்வாத் துண்டின் மிச்சம் இன்னும் வாயில் ஒட்டியிருப்பதுபோலவும், அவர் என் உதட்டையே உற்றுப் பார்ப்பதுபோலவும் தோன்றியது. ‘நானும் கால் கிலோ அல்வா வாங்கி சாப்பிட்டேன்’, என்று அவசியமில்லாமல் பொய் சொன்னேன்.
அவர் பர்ஸைக் கையில் எடுத்தபடி, ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’ என்றார்.
’சரியா ஞாபகமில்லை, அப்புறமா கணக்குப் போட்டுச் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக என் மேஜைக்குத் திரும்பினேன்.
அதன்பிறகு, நானும் அந்த விஷயத்தை எடுக்கவில்லை, அவரும் சுத்தமாக மறந்துவிட்டார். 50 கிராம் அல்வாவைத் திருடியதற்குப் பரிகாரம், 450 கிராம்!
போகட்டுமே, அதனால் கிடைத்த நிம்மதி? அதற்கு விலை உண்டா?
அந்த சந்தோஷத்துடன், அடுத்தவர்களுக்கு அல்வா வாங்கித் தருகிற பழக்கத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். என் தலைக்குப் பின்னே சுழன்றுகொண்டிருந்த ஒளிவட்டமும் சுருண்டு படுத்து மறைந்துவிட்டது.
***
என். சொக்கன் …
09 03 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க