குருக்களின் டயரி
Posted March 17, 2009
on:- In: Characters | Customer Care | Customer Service | Customers | God | Life | Memory | People | Religion | Uncategorized
- 15 Comments
சில மாதங்களுக்குமுன்னால் ஒரு மாலை, நங்கையுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்பேசி மணி ஒலித்தது.
என்னுடைய மிகப் பெரிய கெட்ட பழக்கம், தொலைபேசி மணி ஒலித்தால் போச்சு. அந்த விநாடியில் நான் எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு ஃபோனை எடுக்கவேண்டும் என்று தோன்றும். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தாலும்கூட கை நடுங்கும், என்ன விஷயமோ, என்ன அவசரமோ என்று பதைபதைக்கும். விஷயம் அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களே மறுபடி அழைப்பார்கள், பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றாது. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு பெரிய வியாதியாகவே மாறிவிட்டது.
ஆகவே, அன்றைக்கு விளையாடுவதை நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்தேன். மறுமுனையில் ஒரு கரகரப்பான நடுத்தர வயதுக் குரல், ‘ஹலோ, நான்தான் தாமோதரன் பேசறேன், தஞ்சாவூர்லேர்ந்து’ என்றது.
எனக்குத் தஞ்சாவூரில் எந்தத் தாமோதரனையும் தெரியாது. ஆனால், என்னுடைய அநியாய ஞாபக மறதியால் நான் எத்தனை தூரம் பழகியவர்களையும் சுலபத்தில் மறந்துவிடக்கூடும்.
ஆகவே, எதற்கு வம்பு? யாருடன் ஃபோன் பேசினாலும் அவர்களை ரொம்ப நன்றாகத் தெரிந்ததுபோல்தான் அளவளாவுவேன். அதேசமயம், உள்ளுக்குள் ‘யார் இந்த ஆள்?’ என்று ஒரு கூகுள் சர்ச் துளி பிரயோஜனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
ஃபோனில் ஒரு வசதி. சம்பந்தப்பட்ட நபர் ரொம்ப ப்ளேட் போடுகிறார் என்றால், அல்லது அவர் யார் என்று சுத்தமாக ஞாபகம் வராவிட்டால், ‘ஹலோ, ஹலோ’ என்று ஏழெட்டுமுறை சத்தமாகக் கத்திவிட்டு, ‘ஸாரிங்க, நீங்க பேசறது கேட்கலை, சிக்னல் வீக்கா இருக்கு’ என்று இணைப்பைத் துண்டித்துவிடலாம்.
ஆனால், இதுபோன்ற நபர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் பெரிய அவஸ்தை. அவர்கள் யார் என்றே தெரியாமல் நலம் விசாரித்து, அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மையமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.
முக்கியமாக நான் இப்படி மாட்டிக்கொள்வது திருமணங்கள், குடும்ப விழாக்களுக்குச் செல்கிறபோது.
எங்களுடைய மிக நெருங்கிய இருபது அல்லது இருபத்தைந்து உறவுக்காரர்களைத்தவிர மற்ற யாருடைய முகமும் எனக்குச் சுத்தமாக நினைவில் இருக்காது. அவர்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு என்பதுகூட ஞாபகம் வராது, கட்டபொம்மன்போல், ‘மாமனா, மச்சானா’ என்று மூளையைக் குழப்பிக்கொண்டு யோசிக்கவேண்டியிருக்கும்.
என் மனைவி இதில் மிகவும் சமர்த்தர். அவர் குறைந்தபட்சம் நானூற்றைம்பது நண்பர்கள், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டாரின் முகம், பெயர், குடும்ப விவரங்கள், உடல்நிலை (வியாதிகள்), பொழுதுபோக்குகள் என்று சகலத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் பத்து நிமிடத்துக்காவது அவர்களைப் ‘பர்ஸனலாக’ நலம் விசாரிக்கிற திறன் அவருக்கு உண்டு.
நான்தான் பேந்தப் பேந்த விழித்தபடி பக்கத்தில் நின்றிருப்பேன். சம்பந்தப்பட்ட நபர் கடந்து சென்றபிறகு, ‘இவர் யாரு?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வேன்.
இந்த விஷயமெல்லாம் எப்படி என் மனைவியின் மூளைக்குள் தங்குகிறது என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. பல வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறவரைக்கூடச் சட்டென்று நினைவில் கொண்டுவந்து, ‘உங்க வீட்ல சாம்பல் கலர்ல ஒரு பூனைக்குட்டி இருந்ததே, அது சௌக்கியமா?’ என்பதுபோல் நுணுக்கமாக விசாரிப்பது எப்படி?
பல சந்தர்ப்பங்களில், என் மனைவியால் விசாரிக்கப்படும் நபருடன் அவரைவிட நான்தான் அதிகம் பழகியிருப்பேன். ஆனால் என்னைவிட அவர்களைப்பற்றி அவர் அதிகம் தெரிந்துவைத்திருப்பார்.
உதாரணமாக, என் அலுவலக நண்பர்கள் யாருடைய பெயரைச் சொன்னாலும், அவர்களுடைய மனைவி / கணவர் பெயரை என் மனைவியால் சொல்லமுடியும். இன்னும் விசாரித்தால் அவர்கள் திருமணம் எந்த மண்டபத்தில் நடந்தது, அந்தத் திருமணத்துக்கு நாங்கள் ஆட்டோவில் சென்றோமா, டாக்ஸியில் சென்றோமா, கல்யாணப் பந்தியில் பரிமாறிய குலோப் ஜாமூன் லேசாகக் கருகியிருந்ததுவரை சகலத்தையும் விவரிப்பார்.
சரி, இவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதனால்தான் இதையெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்றும் நினைத்துவிடமுடியாது. காரணம், இந்த ஒரு விஷயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியின் ஞாபக சக்தி சராசரியானதுதான். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் என்று எதைப் பார்த்தாலும், படித்தாலும் மிக விரைவில் மறந்துவிடுவார். மனிதர்களை, அவர்களைப்பற்றிய விவரங்களைமட்டும் மறப்பதில்லை.
ஒருவேளை, மனித மூளைக்குள் இதுபோன்ற விஷயங்களுக்காகச் சில தனி செல்கள் இருக்கின்றனவோ? நான் பிறக்கும்போதே அந்த செல்களை எரித்துத் தீர்த்துவிட்டேனோ? டாக்டர் புரூனோவை விசாரிக்கவேண்டும்.
நிற்க. எதையோ பேசத் தொடங்கி எங்கேயோ சென்றுவிட்டேன். மறுபடியும் தஞ்சாவூர் தாமோதரன்.
’என்ன சார் சௌக்யமா?’ அவர் மிகவும் சகஜமாக விசாரித்தபோது என்னுடைய குழப்பங்கள் தொடங்கிவிட்டன. இந்தக் குரலை இதற்குமுன்னால் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா? இல்லையா?
என்னுடைய புத்தகம், அல்லது கட்டுரைகளைப் படித்தவர்கள், அபூர்வமாகச் சில சமயங்களில், அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் பேசி, என்னுடைய நம்பரைக் கேட்டுப் பெற்று நேரடியாகப் பாராட்டுவார்கள், அல்லது திட்டுவார்கள். அதுபோல் இந்தத் தஞ்சாவூர் தாமோதரனும் என்னுடைய வாசகராக இருப்பாரோ?
இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன அடுத்த வாக்கியம் என்னை இன்னும் குழப்பத்தில் தள்ளியது, ‘நாளைக்குப் பவுர்ணமி’
இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?
விதவிதமான கற்பனைகளின் தீவிரத்தில் நான் தலையைப் பிய்த்துக்கொள்வதற்குள் அவரே புதிரை அவிழ்த்துவிட்டார், ’நீங்கதான் அம்மனுக்குப் பவுர்ணமி பூஜை பண்ணனும்ன்னு சொல்லியிருந்தீங்க, அதான் ஃபோன் பண்ணேன்’
அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அம்மன், பூஜை, அச்சச்சோ, இது என் மனைவி டிபார்ட்மென்ட்.
அவர்தான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்று திரும்பியிருந்தார். அங்கே ஏதோ ஓர் அம்மன் கோவிலில் பூஜைக்குப் பணம் செலுத்தியதாகவும் சொல்லியிருந்தார். நான்தான் வழக்கம்போல் மறந்துவிட்டேன்.
‘ஒரு நிமிஷம்’ என்று ஃபோனை என் மனைவியிடம் கொடுத்தேன், ‘யாரோ தஞ்சாவூர்லேர்ந்து பேசறாங்க, பேர் தாமோதரனாம்’
மறு விநாடி என் மனைவியின் முகம் மலர்ந்தது. ஃபோனை வாங்கிக்கொண்டு, ‘சொல்லுங்கோ மாமா’ என்று சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு வாக்கியம் கழித்து, தாமோதரன் வீட்டு நாய்க்குட்டியை நலம் விசாரிப்பாராக இருக்கும்.
அன்றைக்கு நாங்கள் பூங்காவிலிருந்து வீடு திரும்பும்வரை என் மனைவி தாமோதரன் குருக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மனின் பவுர்ணமி பூஜை எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான திட்டம் ஒரு சின்னப் பிசிறு இல்லாமல் தயாராகிவிட்டது.
ஒரு வாரம் கழித்து எங்களுக்கு ஒரு கொரியர் வந்தது. தாமோதரன் குருக்களின் கொட்டைக் கையெழுத்தில் என் பெயர் ‘நாகா’ என்பதற்குப்பதில் ‘நாதா’ என்று எழுதப்பட்டிருந்தது.
மைதா மாவுக் கெட்டிப் பசையில் ஒட்டப்பட்டிருந்த அந்தக் கொரியரைக் கஷ்டப்பட்டுப் பிரித்தோம். உள்ளே இன்னொரு பார்சல், அதைப் பிரித்தால் ஓர் எவர்சில்வர் டிபன் பாக்ஸ், அதற்குள் ஒரு குங்குமப் பொட்டலம், அப்புறம் செங்கல் செங்கல்லாக பத்துப் பதினைந்து ’மைசூர் பா’க்கள்.
‘என்னாச்சு? தாமோதரன் குருக்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப் போட்டியா மைசூர் பா வியாபாரத்தில இறங்கிட்டாரா?’
என்னுடைய கிண்டலை என் மனைவி அங்கீகரிக்கவில்லை, ‘ஸ்வாமி பிரசாதம், குறை சொல்லக்கூடாது’ என்றபடி டிபன் பாக்ஸைப் பூஜை அறைக்குக் கொண்டுசென்றார்.
அன்று இரவுச் சாப்பாட்டுடன் எல்லோருக்கும் அரை மைசூர் பா ஸ்வாமி பிரசாதம். டர்கிஷ் அல்வா அளவுக்குச் சுவையாக இல்லாவிட்டாலும், மொறுமொறுவென்று மொசுக்க நன்றாகதான் இருந்தது.
அடுத்த சில நாள்களுக்கு, என் மனைவி தாமோதரன் குருக்களை மனதாரப் புகழ்ந்துகொண்டிருந்தார், ‘நாம சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் செஞ்சு, பூஜை பண்ணி, பிரசாதம் அனுப்பி, எவ்ளோ நல்ல மனசு பாரேன்!’
‘இத்தனையும் அவர் சும்மாச் செய்யலையே, பைசா பாக்கியில்லாம காசு வாங்கிட்டுதானே செஞ்சார்? இதென்ன பெரிய விஷயம்?’ நான் அலட்சியமாகச் சொன்னேன்.
’காசு கொடுத்தா எல்லாம் கிடைக்குமா? நான்தான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன், அம்மனுக்கு ஒரு பௌர்ணமி பூஜை செஞ்சுட்டு வா பார்க்கலாம்’
அத்துடன் அந்த விவாதம் முடிவடைந்தது. தாமோதரன் குருக்களின் கடமை உணர்ச்சி எங்கள் வீட்டில் எல்லோராலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இரண்டு மாதம் கழித்து, மறுபடி தாமோதரன் குருக்கள் எனக்கு ஃபோன் செய்தார். இந்தமுறை விவரமாக, ‘ஒரு பூஜை விஷயமாப் பேசணும்’ என்றே தொடங்கினார்.
வழக்கம்போல் ஃபோன் என் மனைவியின் கைக்கு மாறியது, ‘மாமா, சௌக்யமா’ என்று அவர் விசாரிக்கத் தொடங்கியதும் நான் வேறு அறைக்கு நகர்ந்தேன்.
தாமோதரன் குருக்களை நான் இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் அவருடைய டயரிமுழுக்க என்னைப்போன்ற பக்தர்களின் தொலைபேசி எண்கள் நிறைந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
பவுர்ணமியோ, பிரதோஷமோ, பிறந்த நாளோ, நட்சத்திரமோ, இன்னும் என்னென்னவோ, வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் யார் யார் என்னென்ன பூஜை செய்யக்கூடும் என்பதை அவர் ஒரு எக்ஸெல் ஷீட்போல எழுதிவைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்தந்தத் தேதியில் அந்தந்த நபர்களை அழைத்துப் பேசினால் பூஜை உறுதியாகிவிடுகிறது. மணி ஆர்டரில் பணம் வந்துவிடும், பூஜை செய்து பிரசாதத்தைக் கொரியரில் அனுப்பிவிடலாம்.
கிட்டத்தட்ட இதே வேலையை நிறைய ‘ஈ-பூஜை’ இணைய தளங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களெல்லாம் NRIகளிடம் கிரெடிட் கார்டில் பணம் வாங்கி ஏர் மெயிலில் பிரசாதம் அனுப்புவார்களாக இருக்கும்.
தாமோதரன் குருக்களால் இவர்களைப் போன்றவர்களுடன் போட்டியிடமுடியாது. ஆனால், என் மனைவியைப் போன்றவர்களால்தான் அவர் வீட்டில் அடுப்பு எரிகிறதோ என்னவோ.
இந்தமுறை அம்மன் பிரசாதம் மைசூர் பா-வா, அல்லது ஜாங்கிரியா தெரியவில்லை. எனக்கென்னவோ அதைத் தீர்மானிக்கப்போவது தாமோதரனின் மகனோ, பேரனோதான் என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
17 03 2009
15 Responses to "குருக்களின் டயரி"

//ஆனால், இதுபோன்ற நபர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் பெரிய அவஸ்தை. அவர்கள் யார் என்றே தெரியாமல் நலம் விசாரித்து, அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மையமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.//
அட, நம்ம கேஸ்! 🙂
எனக்கு இது இருக்கிறது என்று நினைக்கிறேன்:
http://en.wikipedia.org/wiki/Prosopagnosia
மற்றபடி, சுவாரசியமான பதிவு…நன்றி!


//இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?
//
Very nice imagination Sir 🙂 🙂
I think all our memories are directly proportional to our interests.
If we are kind of people who finds peace being alone, our rememberance of people and their interests will be naturally very less.
BTW, i read your book on ‘Google’ sir. Very excellent 🙂


அட ! எல்லா வீட்டுலயும் புருஷங்க நிலமை இதே தானா 😀


/மனைவியைப் போன்றவர்களால்தான் அவர் வீட்டில் அடுப்பு எரிகிறதோ என்னவோ/
கிண்டல் அடிக்கலாம்னு வந்தேன். இந்த வரி பார்த்தவுடன் அமைதியாகிட்டேன். உண்மைதான்


சுவாரசியமான பதிவு 🙂


Anbulla Sokkan,
Vanakkam.
Thanks for sharing these thoughts.
Very lively and reflective.
I agree with your line of reckoning.
Many such priests in many temples assist the Family members through such prayers.
Its value is beyond description.
Thanks for your writing.
I am your fan for the last 10 years.
God Bless you and your kid.
Anbudan,
Srinivasan.


எல்லாம் இறைவனின் மேல் உள்ள நம்பிக்கை தான்….நல்லதே நடக்கட்டும்….வாழ்க வளமுடன்…நல்ல பதிவு…


//நான்தான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன், அம்மனுக்கு ஒரு பௌர்ணமி பூஜை செஞ்சுட்டு வா பார்க்கலாம்’//
நிறைய இடங்களில் ஒருமையில் பேசுவதுபோல் எழுதியிருக்கிறீர்கள்.தவிர்த்து இருக்கலாம்


தலைவா.. நான் சில நாட்களுக்கு முன்னர் உங்களுக்கு தொலைபேசினேன். ‘ஹலோ, ஹலோ’ என்று ஏழெட்டுமுறை சத்தமாகக் கத்திவிட்டு, ‘ஸாரிங்க, நீங்க பேசறது கேட்கலை, சிக்னல் வீக்கா இருக்கு’ என்று இணைப்பைத் துண்டித்து விட்டீர்கள்.
அது ஏன்-னு இப்போ புரியுது.
😉

1 | chinnappaiyan
March 17, 2009 at 5:11 pm
//இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?//
//எனக்கென்னவோ அதைத் தீர்மானிக்கப்போவது தாமோதரனின் மகனோ, பேரனோதான் என்று தோன்றுகிறது.//
:-))))))))))))))))
சரவெடி நகைச்சுவை…
லேபிள்களும் அருமை…